search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்டுறவு வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகை மாயம்
    X

    கூட்டுறவு வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 பவுன் நகை மாயம்

    • கடந்த மாதம் 29-ந்தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார்.
    • போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருடைய மனைவி புஷ்பகலை (வயது 52). இவர் ஓசூர் ஜூஜூவாடி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது நகை மற்றும் தாயாரின் நகை, மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் என மொத்தம் 90 பவுன் நகைகளை கிருஷ்ணகிரியில் கோ-ஆப்ரெட்டிவ் காலனியில் இயங்கி வரும் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நகர கிளை லாக்கரில் வைத்து இருந்தார்.

    கடந்த மாதம் 29-ந்தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார். அதன் பின்னர் ஆசிரியை 40 பவுன் நகைகளை வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். மீதம் 50 பவுன் நகையை கூட்டுறவு வங்கி லாக்கரில் ஆசிரியை வைத்து இருந்தார்.

    இந்த நிலையில், கடந்த 25-ந்தேதி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆசிரியையை தொடர்பு கொண்டனர். அப்போது உங்களது வங்கி லாக்கர் திறந்த நிலையில் உள்ளது. எனவே வங்கிக்கு வருமாறு அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை நேற்று முன்தினம் குடியரசு தின விடுமுறை என்பதால் நேற்று காலை வங்கிக்கு சென்று தனது லாக்கரில் இருந்த நகைகளை பார்த்தார்.

    அப்போது அதில் 50 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் ஆசிரியை கேட்டார். மேலும் இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். கூட்டுறவு வங்கி லாக்கரில் 50 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×