என் மலர்
கிருஷ்ணகிரி
- சிமெண்ட் சாலை, வடிகால்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
- பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை, வடிகால்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித் தார். செயல் அலுவலர் மனோகரன், துணை தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணன், மணிவண்ணன், லிங்கோஜிராவ் ,ஸ்ரீதர், சுமதி ,ரியானா பேகம், நாசிமா, கெளரி சென்னிரா, பிரேமா சேகர் மற்றும் அவைத்தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் இதயத்துல்லா, பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மேலும் நாகராஜ், மஞ்சு, ஆனந்த் ,சல்மான் ,உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
- ஒரு அமைப்பை ஏற்படுத்தி சமூக சேவைகள் செய்து வருகிறார்.
- சுரேஷ், முனிராஜ் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள சப்ரனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி நிரோஷா (32).
இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களை ஒருங்கிணைத்து ஓம் சக்தி மகளிர் மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி சமூக சேவைகள் செய்து வருகிறார்.
இதேபோல குடியரசு தினத்தன்று அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நிரோஷா தலைமையில் சென்ற மகளிர் குழுவினர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் (34), முனிராஜ் (32) ஆகிய 2 பேரும் நிரோஷாவின் வீட்டுக்கு சென்று நீ எப்படி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் கொடுக்கலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் நிரோஷாவுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் தேன்கனி கோட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷ், முனிராஜ் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், முத்திரைத்தாள் தின சிறப்பு முகாம் தொடங்கியது.
- 600-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கிடப்பில் உள்ளன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கடந்த 27-ம் தேதி முத்திரைத்தாள் தின சிறப்பு முகாம் தொடங்கியது.
சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஏற்கனவே தங்களது ஆவணங்களை பதிவு செய்த போது, முத்திரைத்தாள் கட்டணம் சம்பந்தமாக போதிய தொகை செலுத்தாத நிலையில், அவர்களது முத்திரைத்தாள் ஆவணங்கள் சார் பதிவாளர் அலுவலகத்திலேயே கிடப்பில் உள்ளன.
அவ்வாறு கிடப்பில் உள்ள ஆவணங்களை, பதிவு செய்தவர்கள் தற்போது பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை சார்பில் முத்திரைத்தாள் தின சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பாக, ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
அவ்வாறு பத்திரப்பதிவுகள் நடைபெற்று, உரிய முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தாத நிலையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கிடப்பில் உள்ளன.
எனவே தற்பொழுது அரசு அறிவித்துள்ள இந்த சிறப்பு முகாம் வாயிலாக முத்திரைத்தாள் கட்டண குறைபாடுகளை களையும் விதமாக சுமார் 50 சதவீதம் வரை கட்டண குறைப்பு செய்து பொதுமக்கள் பயனடையும் விதமாக ஆவணங்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக முகாம் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெறும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்களுக்கு மற்றும் பயனாளிகளுக்கு தகவல் சென்றடைய போதிய கால அவகாசம் இல்லை என்ற நிலை கருதி, மேலும் இந்த சிறப்பு முகாமை 7 நாட்களுக்கு நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.
எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக ்கொள்ளுமாறு ஓசூர் சார் பதிவாளர் ரகோத்தமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
- மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது கெலமங்கலம் பஸ் நிலைய பகுதியில் சூரியா (24), ராயக்கோட்டை அருகேயுள்ள எச்சம்பல்லி ஜங்சன் பகுதியில் நவீன்குமார் (29), அஞ்செட்டி பஸ் நிலைய பகுதியில் சமியுல்லா (48), மத்திகிரி அருகேயுள்ள காலுகொண்டபல்லியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சிவபிரகாஷ் (48) ஆகியோர் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்று பிடிபட்டனர்.
இதேபோல சிப்காட் காமராஜ் நகர் பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்ற இக்பால் (19), மூக்கபள்ளி இ.எஸ்.ஐ. ரிங் ரோடு பகுதியை சேர்ந்த அபுசுபியான் (20), சூளகிரி அருகேயுள்ள உத்தனபள்ளியில் பெட்டி கடை நடத்திவரும் ரவி (37), காமராஜ் நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் பயஸ் (56) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
காவேரிப்பட்டணம் போலீசார் நடத்திய வேட்டையில் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்ற ரத்தினராம்(30), கிருஷ்ணகிரி தாலுகா பகுதியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே முஹம்மத் சபீர் (38), பெத்ததனப்பல்லியில் பெட்டிக்கடை நடத்தி வரும் வேங்கடசாமி (52), போச்சம்பள்ளி அருகே கல்லாவி ரோடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் முருகேசன் (58), கல்லாவி ஆனந்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (45) ஆகியோரும் சிக்கினர்.
இதேபோல ஊத்தங்கரை கட்டேரி பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சுரேஷ் (29), தேன்கனி கோட்டை பஸ் நிலையம் அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்டு பகுதியில் சின்னராசு (40) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
- மாடுகள் அலங்கரிக்கப்பட்டு விற்பனைக்காக அழைத்து வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
- பாகுபலி என்ற பெயரிலான காளை மாடு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
ஓசூர்,
ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே, 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சப்பளம்மா தேவி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழாவில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் அலங்கரிக்கப்பட்டு விற்பனைக்காக அழைத்து வரப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
நேற்று, கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள ஒயிட்பீல்ட் பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட பாகுபலி என்ற பெயரிலான காளை மாடு அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இதனை பார்த்து பொதுமக்கள் வியந்து ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியை சேர்ந்த முரளி(32) என்பவர் இந்த காளை மாட்டினை வளர்த்து வருகிறார். மற்ற மாடுகளை விட, பாகுபலி காளையை தூய்மையான பகுதியில் வளர்ப்பதாகவும் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு என மாதம் 30,000 ரூபாய் வரை செலவிட்டு பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், பாகுபலி மாட்டினை ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்து வாங்க பலர் முன்வந்தாலும், நான் விற்க விரும்பவில்லை.
தனக்கான அடையாளத்தை பாகுபலி உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார்.
- சமீப காலமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. -
- கோவிந்தம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள குடிமெனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ரங்கபெருமாள். இவரது மனைவி கோவிந்தம்மாள் (48).
இவருக்கு சமீப காலமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதில் மனமுடைந்த கோவிந்தம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரங்கபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் விரைந்து வந்து கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மதுக்கடையின் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது.
- 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் வந்தபள்ளம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள அரசு மதுக்கடையின் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றபோது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் (42), துர்வாசன் (42), மாதப்பன் (49), குமரேசன் (46) என்பது தெரிய வந்தது.
4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமி போரோ (வயது 27). இவர் தற்போது தனது உறவினர்களுடன் ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பெங்களூரு-ஓசூர் சாலையில் இவர் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்தமோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
இது குறித்து லட்சுமி போரோவின் உறவினர் மகாப்தா போரோ கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல பதனபள்ளி பகுதியை சேர்ந்த வெங்கட்டம்மா (வயது 60) என்பவர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகள் தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல பெலகொண்டளாப்பள்ளி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (42) என்பவர் சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி வீணா கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.
- சான்றிதழ்கள் வழங்கினால், வனத்துறையினர் மூலம் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பையூரில் உள்ள மா ஆராய்ச்சி மூலம் விவசாயிகளுக்கு இதுவரை எவ்வித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் மா சீசன் தொடங்குவதற்கு முன்பு பயிற்சி அளிக்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதே போல், மா அறுவடைக்காலங்களில் அதிகளவில் மாங்காய்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மா திருட்டுத்தனமாக அறுவடை செய்து சிலர் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
ஏற்கனவே விளைச்சல் பாதிப்பு உள்ளிட்டவையால் பாதிக்கப்படும் மாவிவசாயிகள், மாங்காய்கள் திருடப்படுவதால், மேலும், இழப்பினை சந்திக்கின்றனர். எனவே, இரவில் மா பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், வியாபாரிகள் விவரங்கள் தொடர்புடைய போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 860 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை அரசு மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தது. 8 வங்கிகளுக்கு ஐ.எப்.எஸ்.சி. கோடு, ஒரே எண்ணாக பதிவு செய்ததால், விவசாயிகளின் வங்கி கணக்கு இழப்பீடு தொகை வராமல், மீண்டும் சென்றுவிட்டது. இதில், அலட்சியமாக செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் மயில்களால் பயிர்கள் சேதம் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதற்கு உரிய இழப்பீட்டை தர வேண்டும். கிருஷ்ணகிரி அணை பாசன கால்வாய்கள் தூர்வாரி பராமரிக்க வேண்டும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றி, தூர்வார வேண்டும். கால்நடை உலர் தீவனங்கள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுகுக வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை வாரத்தின் 3 நாட்கள் விவசாய பணிகளில் ஈடுபடுத்திட அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-
மா விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி கணக்கு சரி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை பெற்று தரப்படும். மயில்களால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து கிராம நிர்வாக அலுவலர், தோட்டக்கலை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழ்கள் வழங்கினால், வனத்துறையினர் மூலம் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரையோர பகுதியில் உள்ள பாறையின் மீது பிரியங்கா பிணமாக கிடந்தார்.
- பாலியல் பலாத்தாரம் செய்து கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் நெரிகம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகள் பிரியங்கா (வயது 22).
மாற்று திறனாளியான இவர் ஒசூர் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை கும்பளம்-வேப்பனப்பள்ளி இடையிலான ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பாறையின் மீது பிரியங்கா பிணமாக கிடந்தார்.
இதை அறிந்த பொதுமக்கள் பேரிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிலர் சேர்ந்து பிரியங்காவை பாலியல் பலாத்தாரம் செய்து கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக முதுகுறுக்கியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- லாக்கரில் இருந்த நகைகளை பார்த்தார். அப்போது அதில் இருந்த 50 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
- போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருடைய மனைவி புஷ்பகலை (வயது 52). இவர் ஓசூர் ஜூஜூவாடி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது நகை மற்றும் தாயாரின் நகை, மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் என மொத்தம் 90 பவுன் நகைகளை கிருஷ்ணகிரியில் கோ-ஆப்ரெட்டிவ் காலனியில் இயங்கி வரும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நகர கிளை லாக்கரில் வைத்து இருந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார். அதன் பின்னர் ஆசிரியை 40 பவுன் நகைகளை வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார்.
மீதம் 50 பவுன் நகையை கூட்டுறவு வங்கி லாக்கரில் ஆசிரியை வைத்து இருந்தார். இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆசிரியையை தொடர்பு கொண்டனர். அப்போது உங்களது வங்கி லாக்கர் திறந்த நிலையில் உள்ளது. எனவே வங்கிக்கு வருமாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை நேற்று முன்தினம் குடியரசு தின விடுமுறை என்பதால் நேற்று காலை வங்கிக்கு சென்று தனது லாக்கரில் இருந்த நகைகளை பார்த்தார். அப்போது அதில் இருந்த 50 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இது பற்றி வங்கி அதிகாரிகளிடம் ஆசிரியை கேட்டார்.
மேலும் இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இது குறித்து ஆசிரியை புஷ்பகலை கூறியதாவது:-
கடந்த மாதம் 29-ந் தேதி வங்கி லாக்கரில் நகைகளை பார்த்து சென்றேன். இந்த நிலையில் அவர்கள் லாக்கர் திறந்த நிலையில் இருப்பதாக கூறினார்கள். தற்போது 50 பவுன் நகைகள் மாயமாகி உள்ளது. கடந்த 29-ந் தேதி முதல் இந்த மாதம் 25-ந் தேதி வரையில் லாக்கரில் நகைகளை வைக்க யாரெல்லாம் சென்றார்கள் என்று பதிவேடு இருக்கும்.
அதை அதிகாரிகள் பார்த்து விசாரிக்க வேண்டும். லாக்கர் அறைக்கு செல்லும் வழியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. எனது நகைகளை மீட்டு தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
- ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.
ஓசூர்,
ஓசூர் டி.வி.எஸ். சாலையில் கொத்தூரில் உள்ள அகஸ்தியா வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி பள்ளியின் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் எம்.நடராஜன் தலைமை தாங்கினார். முதன்மை விருந்தினராக, ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளித் தாளாளர் நடராஜன், ஒலிம்பிக் கொடியையும், பள்ளி முதல்வர் எஸ்.உத்தரியம்மாள், பள்ளிக் கொடியையும் ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர், சப்- கலெக்டர் சரண்யா விழாவில் சிறப்புரையாற்றி, பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.விழாவையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் விழாவில், பள்ளித் துணைத் தாளாளர் சிவானந்தா, செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஓசூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் செயலாளர்களான ஜி. லோகநாதன், ஜெ. வெங்கட்ரமணா மற்றும் பல துறையினைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.






