search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளின் இழப்பீட்டு தொகை வங்கி கணக்கிற்கே திரும்பிய அவலம்
    X

    விவசாயிகளின் இழப்பீட்டு தொகை வங்கி கணக்கிற்கே திரும்பிய அவலம்

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.
    • சான்றிதழ்கள் வழங்கினால், வனத்துறையினர் மூலம் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    பையூரில் உள்ள மா ஆராய்ச்சி மூலம் விவசாயிகளுக்கு இதுவரை எவ்வித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் மா சீசன் தொடங்குவதற்கு முன்பு பயிற்சி அளிக்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    இதே போல், மா அறுவடைக்காலங்களில் அதிகளவில் மாங்காய்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மா திருட்டுத்தனமாக அறுவடை செய்து சிலர் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    ஏற்கனவே விளைச்சல் பாதிப்பு உள்ளிட்டவையால் பாதிக்கப்படும் மாவிவசாயிகள், மாங்காய்கள் திருடப்படுவதால், மேலும், இழப்பினை சந்திக்கின்றனர். எனவே, இரவில் மா பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், வியாபாரிகள் விவரங்கள் தொடர்புடைய போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 860 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை அரசு மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தது. 8 வங்கிகளுக்கு ஐ.எப்.எஸ்.சி. கோடு, ஒரே எண்ணாக பதிவு செய்ததால், விவசாயிகளின் வங்கி கணக்கு இழப்பீடு தொகை வராமல், மீண்டும் சென்றுவிட்டது. இதில், அலட்சியமாக செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் மயில்களால் பயிர்கள் சேதம் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதற்கு உரிய இழப்பீட்டை தர வேண்டும். கிருஷ்ணகிரி அணை பாசன கால்வாய்கள் தூர்வாரி பராமரிக்க வேண்டும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றி, தூர்வார வேண்டும். கால்நடை உலர் தீவனங்கள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுகுக வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை வாரத்தின் 3 நாட்கள் விவசாய பணிகளில் ஈடுபடுத்திட அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

    மா விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி கணக்கு சரி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை பெற்று தரப்படும். மயில்களால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து கிராம நிர்வாக அலுவலர், தோட்டக்கலை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழ்கள் வழங்கினால், வனத்துறையினர் மூலம் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×