என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாமந்தமலையில் கிராம சபை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில்
நடைபெற்ற போது எடுத்த படம்.
சாமந்தமலையில் கிராம சபை கூட்டம்
- சாமந்தமலை கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.
- கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சாமந்தமலை கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்ப்பது, அனைத்து வீடுகளிலும் திடக் கழிவுகளை தரம் பிரிப்பதை உறுதி செய்தல் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் புதியதாக தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சாலைகள் அப்போது பேசிய கலெக்டர், இந்த ஊராட்சியில் அங்கன்வாடி மையம், வீட்டுமனை பட்டா, பஸ் வசதி, விதவை உதவித்தொகை, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு போன்ற கோரிக்கை வைத்துள்ளீர்கள். தகுதிவாய்ந்த விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இந்த ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் கருத்துரு தயார் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பச்சிகானப்பள்ளி மற்றும் சின்னகுட்டூர் கிராமங்களில் தலா ரூ.3.42 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேப் போல ஓடு வீடுகள், கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த வாக்காளர்களின் உறுதிமொழி ஆகிய 3 உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்த கூட்டத்தில், வேளாண்மை துறை இணை இயக்குநர் முகமதுஅஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தா, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகர், தாசில்தார் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி, பத்ரிநாத், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், பொதுப்பணித்துறை பொறியாளர் (நீர்வளம்) கார்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவர் ராணி சின்னப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் பவானி முனியப்பன், துணைத் தலைவர் மல்லிகா, ஊராட்சி செயலர் முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






