என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.
    • முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.

    ஓசூர் முனீஸ்வர் நகர், ரிங் ரோடு சந்திப்பில் நடந்த இக்கூட்டத்திற்கு மாநகர தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, அமைப்பு செயலாளர் சிங்காரம் மற்றும் கலைமாமணி சிவன் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும் இதில், மாநில, மாவட்ட, மாநகர ,ஒன்றிய நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.விழாவை யொட்டி, ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. முடிவில், மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் நன்றி கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 252 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
    • 3 பேருக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,மார்ச்.7-

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை. சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 252 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து ஊத்தங்கரையை சேர்ந்த குரோஷா என்பவர் செங்கல்பட்டு அருகே நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்ததையடுத்து அவருடைய கணவர் பாதுஷாவிற்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 668-ம், அவருடைய வாரிசுதாரர்களளான அபுபக்கர் சித்திக், அகியா ஆகிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 666 என மொத்தம் 3 பேருக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் மன விரக்கியில் இருந்த சரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்,

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவரது மனைவி தீபிகா.

    குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் மன விரக்கியில் இருந்த சரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்,

    • மத்தூர் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம் எதுவும் இல்லை, கவுண்டனூர் ஊராட்சியில் சாணிப்பட்டி கிராமத்தில் இடம் இருக்கிறது என கூறிவிட்டனர்.
    • எங்கள் மனுக்களை பரிசீலனை செய்து வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    கிருஷ்ணகிரி,

    மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதி திராவிட, பழங்குடியின மக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் 72 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தினசரி கூலி வேலை செய்து, வருவதால் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களின கீழ் 2 சென்ட் இலவச இடம் வழங்கி, வீடு கட்டி தர வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்திருந்தோம்.

    எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க, போச்சம்பள்ளி தாசில்தாருக்கு கடிதம் வந்தது. போச்சம்பள்ளி தாசில்தார், மத்தூர் வருவாய் ஆய்வாளரிடம் விசாரணை நடத்த மனுக்களை ஒப்படைத்தார். 72 மனுக்கள் மீதான விசாரணை முடிந்து, மத்தூர் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம் எதுவும் இல்லை, கவுண்டனூர் ஊராட்சியில் சாணிப்பட்டி கிராமத்தில் இடம் இருக்கிறது என கூறிவிட்டனர்.

    இது தொடர்பாக மீண்டும் போச்சம்பள்ளி தாசில்தாரை நேரில் சந்தித்து முறையிட்டோம். வருவாய் ஆய்வாளரிடம் இருந்து இடம் கிடைக்கவில்லை என்கிற பதில் மட்டுமே வந்தது. எங்களது மனுக்கள் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, எங்கள் மனுக்களை பரிசீலனை செய்து வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    • பொதுமக்களுக்கு குடிநீர், பானகம்,நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வர சாமி மலைக்கோவில் தேரோட்ட விழா, இன்று நடைபெற்றது..

    விழாவை யொட்டி, கடந்த 28-ந் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று வரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில், நாள்தோறும் இரவு சிறப்பு பூஜைகளும் மற்றும் சிம்ம வாகனம், மயில்வாகனம், நந்தி வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்சவங்கள், புஷ்ப அலங்காரங்கள் நடைபெற்றது.நேற்று இரவு சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, பின்னர் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் நிகழ்ச்சியாக, இன்று காலை 10.50 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் , ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு ஆகியோர் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா " என்று பக்தி கோஷம் முழங்க தேரை இழுத்துச் சென்றனர். மேலும், உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா,பல்வேறு துறை அரசு அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். இதில், ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள், மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம்,நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், , மாநகராட்சி கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    தேரோட்டத்தை தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) இரவு தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் விடிய, விடிய நடைபெறுகிறது. மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. ,விழாவையொட்டி ஒசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நூறுநாள் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
    • சம்மந்தப்பட அதிகாரிகளிடம் தொடர்புக்கொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கொண்டப்பநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜி.நாகமங்கலம், கொட்டாயூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கொட்டாயூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்பு உறுதித் திட்டத்தின் கீழ் நடைப்பெற்று வரும் நூறுநாள் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து கிராம மக்கள் ஜி.நாகமங்கலம் கிராமத்தில் சுமார் ரூ.35 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் தேக்க குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்த நிலையில் எப்ப வேண்டுமனாலும் இடித்து விழும் நிலையில் மிகவும் அபத்தான நிலையில் உள்ளது, இதனால் இப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆகையால் இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை அடுத்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக் குமார் ஆபத்தான நிலையில் உள்ள மேல் தேக்க குடிநீர் தொட்டியை நேரில் சென்று பார்வையிட்டர்.

    பின்னர் இது தொடர்பாக சம்மந்தப்பட அதிகாரிகளிடம் தொடர்புக்கொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனை அடுத்து மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டி உள்ளிட்ட செயல்படுத்தப்பட்டுவரும் திட்டம் பணிகளையும் ஆய்வு செய்தார்,

    அப்போது மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்டத் துணைத் தலைவர் சேகர்,கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசுதுரை, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் ஆறுமுகம்,இளைஞர் அணி பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு,வட்டாரத் தலைவர்கள் நஞ்சுண்டன், தனஞ்செயன்,ஆடிட்டர் வடிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்,

    • கிருஷ்ணகிரிக்கு வருகிற 10-ந் தேதி பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகை தருகிறார்.
    • இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜனதா மாநில மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    பா.ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரிக்கு வருகை தருகிறார்.

    பெங்களூருக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

    பின்னர், கிருஷ்ணகிரியில்- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, காணொலி மூலம் தருமபுரி, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

    இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜனதா மாநில மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளியில் புதிதாக பா.ஜனதா கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ள இடம், ஹெலிபேடு ஆகியவற்றை பா.ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கே.பி.ராமலிங்கம், நரேந்திரன், முன்னாள் எம்.பி. நரசிம்மன், மாவட்ட தலைவர்கள் சிவப்பிரகாசம் (கிருஷ்ணகிரி கிழக்கு), நாகராஜ் (கிருஷ்ணகிரி மேற்கு), மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.

    • ஆத்திரம் கொண்ட பெண் சாமியார் போலீஸ் நிலையத்தில் உள்ளிருந்து திடீரென எழுந்து வெளியே நின்று கொண்டிருந்த பூபாலனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
    • தடுக்க வந்த போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரை, வேல்முருகன் தாக்கியுள்ளார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் பார்த்திபன் (வயது21). இவர் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஓமலூர் பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிக்கு செல்வதாக கூறி சென்ற பார்த்திபன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி பார்த்த நிலையில் போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் ஓம் சக்தி கோவிலில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே குப்புசாமி அங்கு உறவினர்களுடன் விரைந்து சென்றார்.

    அங்கு ஓம் சக்தி கோவிலின் சாமியாராக இருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், கருவட்டபாறையை சேர்ந்த கீதா (37) என்பவரை அணுகி மகனை விடுவிக்குமாறு கேட்டுள்ளனர்.

    ஆனால் கோவிலில் இருந்த மகன் வீட்டிற்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குப்புசாமி போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் மகனை மீட்டு தரக்கோரி புகார் அளித்தார். புகாரின் பேரில் அங்கு சென்ற போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் காவலர்கள் பார்த்திபனை மீட்டு போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் போலீஸ் நிலையத்திற்கு சாமியார் கீதா அவருடன் காட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (21) உள்ளிட்டோர் வந்தனர்.

    அதேபோல் குப்புசாமி சாந்தூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் என்பவரை அழைத்து வந்தார். இந்நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வந்த பூபாலன் பெண் சாமியார் கீதாவை பார்த்து, மகனை பெற்றோருடன் ஒப்படைத்து விட வேண்டியது தானே என வினவியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் கொண்ட பெண் சாமியார் போலீஸ் நிலையத்தில் உள்ளிருந்து திடீரென எழுந்து வெளியே நின்று கொண்டிருந்த பூபாலனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    அப்போது அவர்களை தடுக்க வந்த போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரை, வேல்முருகன் தாக்கியுள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வேல்முருகன் மற்றும் பெண் சாமியார் கீதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவத்தால் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
    • விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வரும் பங்குனி மாதம் நடைபெறும் பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு கங்கே மத குலத்தார் (மீனவ சமுதாயம்) சார்பாக பெரிய ஏரியில் தெப்ப உற்சவம் பெற்றது.

    முன்னதாக பேட்டராய சுவாமி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி ,சமேத ஸ்ரீ பேட்டராய சுவாமி உற்சவ மூர்த்திகளை பல்லக்குதேரில் அமர்த்தி வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்து தேவராஜன் ஏரியில் உள்ள உற்சவ மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கங்கே மத குலத்தார் சார்பாக சிறப்பு பூஜைகள் நடத்தி பெரிய ஏரியில் மின்னொளியில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் பேட்டராயசுவாமி உற்சவ சிலைகளை வைத்து ஏரி முழுவதும் வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியில் கர்லா சுற்றுதல், கம்பு மற்றும் கத்தி சுற்றுதல், போன்ற சாகச நிகழ்ச்சிகள் மற்றும் வான வேடிக்கைகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை காண தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுபுற பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. மேலும் தேன்கனிக்கோட்டை தீயனைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா " என்று பக்தி கோஷம் முழங்க தேரை இழுத்துச் சென்றனர்
    • தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரசாமி மலைக்கோவில் தேரோட்ட விழா, இன்று நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா " என்று பக்தி கோஷம் முழங்க தேரை இழுத்துச் சென்றனர். மேலும், உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா,பல்வேறு துறை அரசு அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

    இதில், ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள், மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம்,நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில், மாநகராட்சி கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • தொழிலாளர்கள் தங்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
    • சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை பிற மாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் பாதுகாப்பாக பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு, ஊதியம், குழந்தைகளுக்கான கல்வி அனைத்தும் சம்மந்தப்பட்ட தொழில் நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்துதல் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகிறது. இவை அனைத்தும் வதந்திகள் ஆகும்.

    பிற மாநில தொழிலாள ர்களுக்கு குறைகள் மற்றும் புகார்களை தீர்ப்பதற்கு கிருஷ்ணகிரி கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தலைவரின் தெலைபேசி 9500014446 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

    மேலும், பிற மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முழு நேரம் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் Toll Free No. 1077 அல்லது தொலைபேசி எண். 04343-234444 என்ற எண்ணையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். அறையை தொடர்பு கொள்ளலாம். அதன் தெலைபேசி எண்கள். 9498181214, 9498169703, 9498139505.

    வெளி மாநில தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களும் தங்களது விவரங்களை தமிழ்நாடு அரசு வெளிமாநில தொழிலாளர்களுக்கு என தனியாக உருவாக்கப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் முழுமையாக பதிவு செய்து தங்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளவும், சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கவும் கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை பிற மாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ெரயில் முன் பாய்ந்து அம்மு தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
    • ஊத்தங்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுதெரு பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தை என 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இைடயே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதில் மனமுடைந்த அம்மு தனது மூத்த 3 குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின் தனது கடைசி இரண்டு குழந்தைகளான பெண் குழந்தை சுபிக்ஷா (7), ஆண் குழந்தை பீஷ்மர் (5), ஆகியோருடன் ஊத்தங்கரை அருகேயுள்ள ரெயில் தண்டவாளம் அருகில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் செல்லக்கூடிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் முன் பாய்ந்து அம்மு தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ெரயில்வே துறையினர் மற்றும் கல்லாவி காவல் துறையினர் சம்பவ இடத்தில் விரைந்து வந்தனர். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பீஷ்மர் மற்றும் தாய் அம்மு ஆகியோர் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுத்தனர். மேலும் மகள் சுபிஷாவின் உடல் கிடைக்காததால் தேடி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்தில் இருந்த பெண் குழந்தையின் உடல் தேடும் பணியில் கல்லாவி போலீசார் மற்றும் இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊத்தங்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×