என் மலர்
கிருஷ்ணகிரி
- ஒரு விண்ணப்பதாரர் தேர்வு எழுத, 5 மையங்களை தேர்வு செய்யலாம்.
- ராணுவ பணிக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேற்று ராணுவத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் ராகுல் பரத்வாஜ் தலைமை தாங்கினார்.
அப்போது, ராகுல் பரத்வாஜ் பேசியதாவது:-
பொதுவாக ராணுவ ஆட்சேர்ப்பில் முதலில் உடல் தகுதி தேர்வும், பின்னர் எழுத்து தேர்வு நடக்கும். தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு முதல் முறையாக ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுவோர், உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
இந்த ஆன்லைன் தேர்வு வருகிற ஏப்ரல் 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நாடு முழுவதும், 176 இடங்களில் நடக்கிறது. இதில் ராணுவ துறையில் 9 பிரிவுகளிலும் மற்றும் அக்னி பாத் தேர்வு 6 பிரிவுகளிலும் தேர்வுகள் நடக்கின்றன. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்
இணையதளத்தில் வரும் 15-ந் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பிரிவிற்கான வயது வரம்பு, கல்வித் தகுதிகள், வழிமுறைகள், மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. விண்ணப்ப கட்டணம் ரூ.500. இதில் ரூ.250 ராணுவம் பங்களிப்பாக வழங்கும். தேர்வு எழுதுவோர் ரூ.250 ரூபாய் செலுத்தினால் போதும். ஒரு விண்ணப்பதாரர் தேர்வு எழுத, 5 மையங்களை தேர்வு செய்யலாம். அதில், ஒரு மையம் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.
மேலும் விவரங்களை, 79961 57222 என்ற செல்போன் எண்ணிலும், மெயில் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இந்த மாவட்டத்தை சேர்ந்த பலர் நாட்டிற்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி உள்ளனர். அதே போல், முன்னாள் ராணுவவீரர்களின் குழந்தைகள், இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிட முன்வர வேண்டும். மேலும், ராணுவத்தில் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை கிடைக்கும்.
ராணுவ பணிக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும், யாராவது வேலை சேர்த்து விடுவதாக பணம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்றிட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுபேதார் மேஜர் மதன்லால், ஹவில்தார் குல்தீப்சிங், கிருஷ்ணகிரி முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பால் விலை லிட்டருக்கு ரூ.10 என கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
- கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம் பொது மேலாளர் சுந்தவடிவேலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல மேலாளர் கொங்கரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் கே.எம்.சந்திரமோகன், பொது மேலாளரிடம் கோரிக்கை மனுவை கொடுத்து பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவி வரு வறட்சி மற்றும் கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளிடம் இருந்து ஆவின் கூட்டுறவு ஒன்றியம் குறைந்த விலைக்கு பால் கொள்முதல் செய்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி ஆவின் கூட்டுறவு ஒன்றிய நிர்வாகம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலை லிட்டருக்கு ரூ.10 என கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் தனியார் பால் கொள்முதல் விலைக்கு இணையாக ஆவின் நிர்வாகம் விவாசயிகளிடம் பால் கொள்முதல் செய்ய முன் வர வேண்டும்.
பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும். தரமான பால் மூலம் பால்கோவா, நெய் போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். ஆவின் விற்பனை கடைகள் மூலம் விற்கப்படும் பால், நெய், வெண்ணெய், பால்கோவா போன்வற்றிற்கு நுகர்வோருக்கு பற்றுச்சீட்டு வழங்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரி அருகில் ஆவின் பாலகம் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நுகர்வோர் சங்க தலைவர் டேனியல் சக்கரவர்த்தி, செயலாளர் எஸ்தர் மேரி, துணை பொது மேலாளர் (உற்பத்தி) நேசகுமார், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) ஜோதி, துணை மேலாளர் (பொறியியல்) பாண்டியன் மற்றும் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
- தி.மு.க. அலுவலகத்தில் 3-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
- மதியழகன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் 3-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், ராஜேந்திரன், அறிஞர், குண.வசந்தரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், நாகராஜ் மற்றும் அன்பரசன், தென்னரசு, நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, கலையரங் கத்தை திறந்து வைத்தார்.
- நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வேளாங் கண்ணி பப்ளிக் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.) கலையரங்கம் திறப்பு விழா மற்றும் கலை விழா நடந்தது. இந்த விழாவிற்கு ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியின் அறங்காவலர் லாசியா தம்பிதுரை தலைமை தாங்கினார். வேளாங்கண்ணி பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் பள்ளியின் நிறுவனரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, கலையரங் கத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கரூர் சின்னசாமி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி., பெருமாள், முன்னாள் எம்எல்ஏ, முனிவெங்கட்டப்பன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முனியப்பன், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ், அதியமான் பொறியியல் கல்லூரி அறங்காவலர் சுரேஷ்பாபு, வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளிகளின் இயக்குநர் விஜயலட்சுமி, அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் தனபால் மற்றும் வேளாங்கண்ணி கல்வி குழும பள்ளிகளில் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொறியாளர் சரவணன், வேலாயுதம், தொழிலதிபர் ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், திருச்சி சரவணகுமார் குழுவினரின் பலகுரல் நிகழ்ச்சி மற்றும் நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியில் பள்ளியின் முதல்வர் அசோக் நன்றி கூறினார்.
- குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
- 84,651 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகைக் காக, கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில், சேலைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது.
தாசில்தார் அலுவலத் திற்கு ஒதுக்கப்பட்ட தலா ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 302 வேட்டி, சேலைகளில், 84,651 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 32 ஆயிரத்து 651 சேலைகள் மட்டும் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முழு ஒதுக்கீட்டிற்கு ஏற்றவாறு கடந்த 4-ந் தேதி 27 ஆயிரம் வேட்டிகளும், 5-ந் தேதி 5 ஆயிரத்து 651 வேட்டிகளும் வரப்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முதல் நிலுவையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மீதமுள்ள இலவச வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அந்த வழியாக வந்த ஒருவர் வெங்கடேஸ்வரனை தள்ளி விட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்று விட்டார்.
- விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த ராஜேஸ் என்பது ெதரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது24). இவர் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் வெங்கடேஸ்வரனை தள்ளி விட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்று விட்டார்.
இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த ராஜேஸ் என்பது ெதரியவந்தது. இதனால் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பிரேம் குமாருக்கும் வாசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- பிரேம் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 7 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி அஞ்சலா. இவரது மகன் வாசு. அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பிரேம் குமாருக்கும் வாசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரேம்குமார் அவருடைய நண்பர்களான வாசுதேவன் (21), சோமு (26) சாரதி (25), வினித் (23), சின்ராஜ் (24) சக்திவேல் (26 )ஆகியோருடன் வாசுவின் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து அஞ்சலா கொடுத்த புகாரின் பேரில் பிரேம் குமார் மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
- பொதுமக்கள் உடல் உஷ்ணத்தை போக்க அதிக அளவு இளநீர் வாங்கி பருகி வருகின்றனர்.
- சூளகிரி பகுதியில் தோட்டத்தில் விளையும் இளநீரை வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி சுற்று வட்டாரங்களில் அதிக அளவு வெயில் மற்றும் வெப்பம் அதிகரிப்பால் விளை நிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக செடி கொடிகள், மரங்களில் உள்ள இலைகள் கருகி வருகிறது.
மேலும் பொதுமக்களுக்கு வரட்டு இருமல், தொண்டை வலி, சளி மற்றும் காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உடல் உஷ்ணத்தை போக்க அதிக அளவு இளநீர் வாங்கி பருகி வருகின்றனர்.
இதனால் சூளகிரி சுற்று வட்டார பகுதியில் தோட்டத்தில் விளையும் இளநீரை அறுவடை செய்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
- இதில் பிரேம்குமாரை வாசு, புகழ் ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
- போலீசார் பிரேம்குமார், சின்ராஜ், வாசு, புகழ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள டி.ஜி.துர்க்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது24). இவரது நண்பர் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக குருபரப்பள்ளியை சேர்ந்த வாசு, புகழ் ஆகியோருடன் எண்ணேக்கொள்புதூர் பகுதி ஆற்றங்கரையோரம் சென்றனர்.
அங்கு பிரேம்குமார், வாசு, புகழ், சின்ராஜ் ஆகியோரு க்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பிரேம்குமாரை வாசு, புகழ் ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இது குறித்து இருதரப்பினர்கள் குருபரப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் போலீசார் பிரேம்குமார், சின்ராஜ், வாசு, புகழ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
- இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
- மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் என்று எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதாவின் 75-வது நாள் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. பேசும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது-. நீர்தேர்வு ரத்து, மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் என்று எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்றார்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர்கள் அமரநாதன், சொக்கலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட இணைச் செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முனிவெங்கடப்பன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர் சாகுல்ஹமீது, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி நன்றி கூறினார்.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 எருதுகள் கலந்துக் கொண்டன.
- எருதுகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர்கள் மூலம் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜவுளி மாநகரில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவினையொட்டி எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக எருதுவிடும் திருவிழா நடத்துவது வழக்கம்,
கடந்த இரண்டு ஆண்டு பெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா பெரும் தொற்றுநோயின் பரவல் காரணமாக தடைப்பெற்று இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் உற்சாகமாக பர்கூர் ஜவுளி மாநகரில் மாபெரும் எருதுவிடும் விழா நடைப்பெற்றது, இந்த விழாவில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, தர்மபுரி, ஓசூர், கந்திலி, கிருஷ்ணகரி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 எருதுகள் கலந்துக் கொண்டன.
எருதுவிடும் விழாவில் கலந்துக் கொண்ட எருதுகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர்கள் மூலம் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார், சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு எருதுவிடும் விழா விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து ஓடிய எருதுகளை மாடுபிடி வீரர்கள் விரட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
இதில் குறிப்பிட்ட தூரத்தினை குறைந்த மணித்துளிகளில் கடந்த எருதுகளுக்கு விழாக்குழுவினர்கள் சார்பில் முதல் பரிசாக ரூ. 2, லட்சத்து 20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.1,50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் பரிசு என மொத்தம் 100 பரிசுகள் இந்த விழாவில் வாரி வழங்கப்பட்டது.
மேலும் இந்த விழாவின்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்தி வழக்கறிஞர் அசோகன், ஊத்தங்கரை முன்னால் முன்னால் சேர்மன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அறிஞர்,ஆடிட்டர் வடிவேல், நகர தலைவர் யுவராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, வார்டு உறுப்பினர், திருமதி மருதாமணி வடிவேல், துணைத்தலைவர் விவேகானந்தன், பேருராட்சி தலைவர் சந்தோஷ்குமார், துணைத்தலைவர் வசந்த், வார்டு உறுப்பினர்கள் ஆகாஸ், கார்த்திகேயன், எருதுவிடும் விழா கமிட்டித் தலைவர் தங்கமணி, தனபாலன், சரவணன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
- போலீசார் டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- லாரி மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு சுமார் 495 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதனையடுத்து லாரி மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனுடைய மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்து 57 ஆயிரம் ஆகும்.
புகையிலை பொருட்களை கடத்தி சென்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரகுராம் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.






