என் மலர்
உள்ளூர் செய்திகள்

பால் உற்பத்தியாளர் காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம்
- பால் விலை லிட்டருக்கு ரூ.10 என கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
- கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம் பொது மேலாளர் சுந்தவடிவேலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல மேலாளர் கொங்கரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் கே.எம்.சந்திரமோகன், பொது மேலாளரிடம் கோரிக்கை மனுவை கொடுத்து பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவி வரு வறட்சி மற்றும் கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளிடம் இருந்து ஆவின் கூட்டுறவு ஒன்றியம் குறைந்த விலைக்கு பால் கொள்முதல் செய்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி ஆவின் கூட்டுறவு ஒன்றிய நிர்வாகம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலை லிட்டருக்கு ரூ.10 என கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் தனியார் பால் கொள்முதல் விலைக்கு இணையாக ஆவின் நிர்வாகம் விவாசயிகளிடம் பால் கொள்முதல் செய்ய முன் வர வேண்டும்.
பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும். தரமான பால் மூலம் பால்கோவா, நெய் போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். ஆவின் விற்பனை கடைகள் மூலம் விற்கப்படும் பால், நெய், வெண்ணெய், பால்கோவா போன்வற்றிற்கு நுகர்வோருக்கு பற்றுச்சீட்டு வழங்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரி அருகில் ஆவின் பாலகம் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நுகர்வோர் சங்க தலைவர் டேனியல் சக்கரவர்த்தி, செயலாளர் எஸ்தர் மேரி, துணை பொது மேலாளர் (உற்பத்தி) நேசகுமார், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) ஜோதி, துணை மேலாளர் (பொறியியல்) பாண்டியன் மற்றும் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.






