என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
- மத்தூர் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம் எதுவும் இல்லை, கவுண்டனூர் ஊராட்சியில் சாணிப்பட்டி கிராமத்தில் இடம் இருக்கிறது என கூறிவிட்டனர்.
- எங்கள் மனுக்களை பரிசீலனை செய்து வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கிருஷ்ணகிரி,
மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதி திராவிட, பழங்குடியின மக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் 72 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தினசரி கூலி வேலை செய்து, வருவதால் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களின கீழ் 2 சென்ட் இலவச இடம் வழங்கி, வீடு கட்டி தர வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்திருந்தோம்.
எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க, போச்சம்பள்ளி தாசில்தாருக்கு கடிதம் வந்தது. போச்சம்பள்ளி தாசில்தார், மத்தூர் வருவாய் ஆய்வாளரிடம் விசாரணை நடத்த மனுக்களை ஒப்படைத்தார். 72 மனுக்கள் மீதான விசாரணை முடிந்து, மத்தூர் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம் எதுவும் இல்லை, கவுண்டனூர் ஊராட்சியில் சாணிப்பட்டி கிராமத்தில் இடம் இருக்கிறது என கூறிவிட்டனர்.
இது தொடர்பாக மீண்டும் போச்சம்பள்ளி தாசில்தாரை நேரில் சந்தித்து முறையிட்டோம். வருவாய் ஆய்வாளரிடம் இருந்து இடம் கிடைக்கவில்லை என்கிற பதில் மட்டுமே வந்தது. எங்களது மனுக்கள் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, எங்கள் மனுக்களை பரிசீலனை செய்து வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






