என் மலர்
வழிபாடு

ஓசூரில் இன்று சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்ட விழா
- பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா " என்று பக்தி கோஷம் முழங்க தேரை இழுத்துச் சென்றனர்
- தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரசாமி மலைக்கோவில் தேரோட்ட விழா, இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா " என்று பக்தி கோஷம் முழங்க தேரை இழுத்துச் சென்றனர். மேலும், உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா,பல்வேறு துறை அரசு அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
இதில், ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள், மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம்,நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், மாநகராட்சி கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.






