என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 6 வார்டு நிர்வாகிகளிடம், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து கேட்டறிந்தார்.
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தெற்கு பகுதி செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார்.

    ஒசூர், 

    ஒசூர் மாநகர தெற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மத்திகிரியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ,மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி, கலந்துகொண்டு தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 6 வார்டு நிர்வாகிகளிடம், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து கேட்டறிந்தார். மேலும் கட்சிக்கு உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தெற்கு பகுதி செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார்.

    மேலும் இதில், குபேரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணிசெயலாளர் சென்னகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி ஆர்.மன்ற தலைவர் சந்திரன், துணை தலைவர் கிருஷ்ணன் துணை செ யலாளர் சாக்கப்பா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சூளகிரி வட்டார காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • இந்நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் கர்நாடகா முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்று கொண்டதையொட்டி சூளகிரி வட்டார காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட விவசாயி அணி தலைவர் சக்கரளப்பா, நிர்வாகிகள் கஜேந்திரன், ராமன், ரகுபதி ,தி.மு.க நிர்வாகிகள் முனிசந்திரப்பா, மஞ்சு,கேசவன், சித்தராஜ், முனிராஜ், வெங்கடேஷ், நாகேஷ், நாராயணன், கிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மின் மோட்டார் பம்பு செட் புதியதாக அமைத்திட விவசாயி செலவளிக்கும் தொகையில் 50 சதவீதம் (ஜிஎஸ்டி நீங்கலாக) அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
    • ஒரு கன மீட்டருக்கு ரூ.350 என்ற அளவில் ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் வரையிலும் (120 கன மீட்டருக்கு) மானியம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் 50 எக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 50 எக்டேர் பரப்பளவில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் வேளாண்மைத்துறையில் துவரை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனமும், ராகி, நிலக்கடலை, உளுந்து, பச்சைபயறு, கொள்ளு, எள்ளு போன்ற பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனம், மழைத் தூவுவான் ஆகிய நுண்ணீர் பாசன கருவிகளும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. பாசன நீரை சிக்கனமான முறையில் பயன்படுத்திடவும்,

    குறைந்த நீரில் அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்திடவும் ஏதுவாக நுண்ணீர் பாசன முறையை புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் நீர் வழங்கும் ஆதார வசதியை ஏற்படுத்துவதற்காக, டீசல் மோட்டார், மின் மோட்டார் பம்பு செட் புதியதாக அமைத்திட விவசாயி செலவளிக்கும் தொகையில் 50 சதவீதம் (ஜிஎஸ்டி நீங்கலாக) அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    தங்கள் நிலத்தில் புதிதாக நீர் தேக்கத் தொட்டி அமைத்திட 50 சதவீத மானியம் என்ற வகையில் ஒரு கன மீட்டருக்கு ரூ.350 என்ற அளவில் ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் வரையிலும் (120 கன மீட்டருக்கு) மானியம் வழங்கப்படும்.

    மேலும், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நீர் கடத்தும் குழாய்கள் அமைத்தல் பணிக்காக இத்திட்டத்தில் விவசாயி செலவிடும் தொகையில் 50 சதவீதம் என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரையில் மானியம் வழங்கப்படும். இந்த துணை நீர் மேலாண்மை திட்டத்தில் பயனாளிகளாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் புதிதாக சொட்டு நிர், தெளிப்பு நீர், மழை தூவுவான் அமைத்திட விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

    எனவே, இதுவரை நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் பயன்பெறாத விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் கூடுதல் பயன்பெறலாம். இதில் பயன்பெற சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரைப்படம், சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உடன் தங்கள் பகுதிக்கு உரிய வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி உடனே பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குறைந்து வரும் நீர் ஆதார நிலைல் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்த குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்றிட்ட அனைவரும் நுண்ணீர் பாசனத் திட்டத்தினையும், துணை நீர் மேலாண்மை திட்டத்தின் மானியத்தினையும் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் விவரங்களுக்கு தலைமையிடம் வாரியாக உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அதன்படி, கிருஷ்ணகிரி மாதையன் - 9488753781, ஆலப்பட்டி முத்துசாமி - 9443363925, மாதேப்பட்டி முனிராஜி - 8344371443, மோரமடுகு சிவராசு - 8248888751, மகாராஜகடை விஜயன் - 8838343514 மற்றும் கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை அலுவலர் பிரியா - 9442559842 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தவறாமல் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அறிவழகனின் உடலை பார்த்து கதறிஅழுதனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அயலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு அறிவழகன் (வயது23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்தார்.

    இந்த நிலையில் மத்தூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அறிவழகன் வந்தார். நேற்று மாலை தனது அக்கா மகன்கள் மற்றும் உறவினர்களுடன் அறிவழகன் பாம்பாறு தடுப்பணைக்கு சென்றார். அங்கு அவர்கள் தடுப்பணையின் கரையோரமாக நீரில் குளித்து மகிழ்ந்தனர். இதில் நீச்சல் தெரியாத அறிவழகன் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். அப்போது உடன் உறவினர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். அதற்குள் அறிவழகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி இறந்துபோன அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அறிவழகனின் உடலை பார்த்து கதறிஅழுதனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலர் வளர்ப்பு, கலை, கைவினை, இசை, நாடகம் உள்ளிட்ட செயல்பாடுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கோடை மகிழ்ச்சி கொண்டாட்ட சிறப்பு முகாமை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கடந்த 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.

    5 நாட்கள் நடந்த இந்த பயிற்சி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை ஆகியோரின் மேற்பார்வையில் நடந்தது.

    இந்த பயிற்சி முகாமில், குகைக் கலை, பாறை ஓவியம், மலையேற்றம், மாதிரி அகழ்வாராய்ச்சி, தொழிற்துறை வெளிப்பாடு, மலர் வளர்ப்பு, கலை, கைவினை, இசை, நாடகம் உள்ளிட்ட செயல்பாடுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாம் நிறைவு விழாவில், மாணவ, மாணவிகள் படைப்பாற்றலுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி புகைப்படம் எடுத்துக் கொண்டார். தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இம்முகாமின் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கு மற்றும் ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்திலும், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி முகாம், 5 நாட்கள் நடந்தது. பயிற்சி முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரையும், ஓசூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்டக் கல்வி அலுவலர் கோவிந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    இப்பயிற்சி முகாமில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கையுந்துப்பந்து மற்றும் ஜூடோ விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டன. இதில், 120 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அரங்க பயிற்சியாளர்கள், அரசு பள்ளி உடற்கல்வி இயக்குனர் சிதம்பரம், உடற்கல்வி ஆசிரியர் ராகவன், சுரேஷ் பாபு, சுப்பு, முருகன், சீனிவாசன் மற்றும் சந்துரு ஆகியோர் பயிற்சியை அளித்தனர். உடற்கல்வி இயக்குனர் மாதேஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் பவுன்ராஜ் மற்றும் சத்தியநாதன் ஆகியோர் விளையாட்டு பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

    • காலை சிற்றுண்டி வழங்கும் நபரிடம் மையத்தின் சாவியை ஒப்படைப்பதில்லை.
    • நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், 39வது அமைப்பு தின கொடியேற்றம் மற்றும் காலைச் சிற்றுண்டியை அமைப்பாளர்களே வழங்கக்கோரி தமிழக முதல்- அமைச்சரின் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு ஒன்றியத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மஞ்சுளா, கொடி ஏற்றி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். ஒன்றிய பொருளாளர் நீலா நன்றி கூறினார்.பெருந்திரள் முறையீட்டில், காலைச் சிற்றுண்டி தொடர்பாக உணவுப் பொருட்களின் இருப்பு அறை சாவியை மற்றவர்களிடம் கொடுக்கச் சொல்வதால், உணவுப் பொருட்களின் இருப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளது. இதனால் காலை சிற்றுண்டி வழங்கும் நபரிடம் நமது மையத்தின் சாவியை ஒப்படைப்பதில்லை என்பதை தமிழக முதல் அமைச்சருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த பெருந்திரள் முறையீடு நடந்தது வருகிறது. எனவே காலைச் சிற்றுண்டியை தயார் செய்யும் பணியையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    • 4 வயதில் மின்சாரம் தாக்கியதில், 2 கைகளையும் இழந்தவர்.
    • இந்த மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதி. இவர்களது மகன் கீர்த்திவர்மா (வயது 15). 4 வயதில் மின்சாரம் தாக்கியதில், 2 கைகளையும் இழந்தவர். இவர் கிருஷ்ணகிரி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கீர்த்திவர்மா தமிழில் 82, ஆங்கிலத்தில் 79, கணிதத்தில் 93, அறிவியலில் 87, சமூக அறிவியலில் 96 மதிப்பெண்கள் என மொத்தம் 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

    மாணவரை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள். இது குறித்து மாணவன் கீர்த்திவர்மா கூறியதாவது:-

    நடந்துமுடிந்த தேர்வில் நான் 437 மதிப்பெண் பெற்றுள்ளேன். இந்த மதிப்பெண் எடுக்க காரணமாக இருந்த பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

     மாணவரின் தாய் கஸ்தூரி கூறியதாவது:-

    4 வயதில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்கம்பியில் கைகள் பட்டு மின்சாரம் தாக்கியதில் கீர்த்திவர்மா 2 கைகளையும் இழந்தான். எனது கணவரும் விட்டு சென்ற நிலையில், நான் ஆதரவு இன்றி எனது சொந்த ஊரான ஜீனூருக்கு வந்து கூலி வேலை செய்தேன்.

    2 கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் எனது மகன் படித்து நடந்து முடிந்த 10&ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளான். படிப்புடன், ஓவியம் வரைவதிலும் எனது மகன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளான்.

    எனது மகனுக்கு 18 வயது பூர்த்தி ஆன பிறகு தான் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பல்வேறு மருத்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் எனது மகனுக்கு கைகள் பொருத்திட முதல்&அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

     இது குறித்து தகவல் அறிந்ததும் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது முதல அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் உதவி கேட்டுள்ளீர்கள். அதை அரசின் சார்பில் செய்து தருகிறேன். மாவட்ட கலெக்டரை நேரில் அனுப்புகிறேன். தைரியமாக இருங்கள். உடல் நலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தேவையான உதவிகளை அரசின் சார்பில் நிறைவேற்றி தருவேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

    • இதுவரை ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு இடத்தில் கூட புதிய சாலை அமைக்கப்படவில்லை
    • குண்டும் குழியுமான சாலையில் தினம் தோறும் நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் செல்லும் பொதுமக்கள் விபத்துக்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஓசூர்,

    தொழில் நகரமான ஓசூர் பகுதி மாநகராட்சி அந்தஸ்து பெற்று பல ஆண்டுகள் கடந்தும் இன்று வரை நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உரிய அளவில் செய்து கொடுக்கப்படவில்லை என்பது ஓசூர் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வேதனையாக உள்ளது. அந்த அளவுக்கு ஓசூர் பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாத நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் ஓசூர் மாநகராட்சி 41-வது வார்டு ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள 29, 34, 36, 37, 38, 39, 40, 41 என 8 தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் காணப்படுகிறது.

    இது தவிர அப்பகுதியில் , சாக்கடை கால்வாய்கள், பூங்கா ஆகியவை பராமரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கிடக்கிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டும் தண்ணீர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர். அதனை ஏற்ற மாநகராட்சி அதன் பின்பு நடைபெற்ற மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி புதிய சாலைகளை அமைக்க 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

    நிதி ஒதுக்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு இடத்தில் கூட புதிய சாலை அமைக்கப்படவில்லை,

    குண்டும் குழியுமான சாலையில் தினம் தோறும் நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் செல்லும் பொதுமக்கள் விபத்துக்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தேங்கும் குப்பைகள் மற்றும் கழிவு நீரால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலையும் உருவாகி உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், இல்லையெனில் மாநகராட்சி முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அப்பகுதியில் தளி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    • மின் இணைப்பை துண்டித்து யானைகள செல்ல வழிவகை செய்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் ஜவளகிரி ஆகிய வனப்பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன.

    இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து 2 யானைகள் பிரிந்தன. இந்த யானைகள் நேற்று தளி பெரிய ஏரிக்கு சென்று தண்ணீரில் நீந்தியும் குளித்தும் கும்மாளமிட்டன. ஏரியில் 2 யானைகள் முகாமிட்டு இருக்கும் தகவல் சமூக வலைதளங்கள் மூலம் பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் யானைகளை பார்க்க அப்பகுதியில் திரண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் ஏரிக்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் யானைகளின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அப்பகுதியில் தளி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இதுதவிர மின்சார வாரிய துறை ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு யானைகள் செல்லும் வழித்தடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பை துண்டித்து யானைகள செல்ல வழிவகை செய்து வருகின்றனர்.

    மேலும் அந்த யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • கடந்த 16-ந் தேதி இருதருப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    • சென்னப்பாநாயுடு, அஞ்சப்பா ஆகிய 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணப்பாவை கையால் தாக்கியும், கத்தியால் வெட்டியும் உள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சின்னமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 45). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் முனிகிருஷ்ணன் (45), சென்னப்பா நாயுடு (28), அஞ்சப்பா (50) ஆகிய 3 பேரும் கிருஷ்ணப்பாவின் உறவினர்கள். இந்த நிலையில் கிருஷ்ணப்பாவின் நிலம் அருகே முனிகிருஷ்ணனுக்கும் சொந்தமாக நிலம் இருப்பதால் இருவருக்கும் வழித்தடம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இருதருப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணன், சென்னப்பாநாயுடு, அஞ்சப்பா ஆகிய 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணப்பாவை கையால் தாக்கியும், கத்தியால் வெட்டியும் உள்ளனர். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணப்பாவை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அவர் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் முனிகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரிபிரகாஷ்-ஸ்ரீதேவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • ஸ்ரீதேவி கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாரிபிரகாஷ். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது39). இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மாரிபிரகாஷ்-ஸ்ரீதேவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் விரக்தியடைந்த ஸ்ரீதேவி கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது கணவர் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து ஸ்ரீதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று அவர் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.
    • அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.

    கிருஷ்ணகிரி,

    திருச்சி மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது55). கட்டிட மேஸ்திரியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து முத்துவின் உடலை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோன்று தெலுங்கனா மாநிலம் வராங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கொரண்ட பத்ரய்யா (52). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சோமநாதபுரம் பகுதியில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கொரண்டபத்ரய்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×