search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 சதவீத மானியத்தில்  நுண்ணீர் பாசன திட்டம்
    X

    100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம்

    • மின் மோட்டார் பம்பு செட் புதியதாக அமைத்திட விவசாயி செலவளிக்கும் தொகையில் 50 சதவீதம் (ஜிஎஸ்டி நீங்கலாக) அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
    • ஒரு கன மீட்டருக்கு ரூ.350 என்ற அளவில் ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் வரையிலும் (120 கன மீட்டருக்கு) மானியம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் 50 எக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 50 எக்டேர் பரப்பளவில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் வேளாண்மைத்துறையில் துவரை, தென்னை, கரும்பு போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனமும், ராகி, நிலக்கடலை, உளுந்து, பச்சைபயறு, கொள்ளு, எள்ளு போன்ற பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனம், மழைத் தூவுவான் ஆகிய நுண்ணீர் பாசன கருவிகளும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. பாசன நீரை சிக்கனமான முறையில் பயன்படுத்திடவும்,

    குறைந்த நீரில் அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்திடவும் ஏதுவாக நுண்ணீர் பாசன முறையை புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் நீர் வழங்கும் ஆதார வசதியை ஏற்படுத்துவதற்காக, டீசல் மோட்டார், மின் மோட்டார் பம்பு செட் புதியதாக அமைத்திட விவசாயி செலவளிக்கும் தொகையில் 50 சதவீதம் (ஜிஎஸ்டி நீங்கலாக) அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    தங்கள் நிலத்தில் புதிதாக நீர் தேக்கத் தொட்டி அமைத்திட 50 சதவீத மானியம் என்ற வகையில் ஒரு கன மீட்டருக்கு ரூ.350 என்ற அளவில் ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் வரையிலும் (120 கன மீட்டருக்கு) மானியம் வழங்கப்படும்.

    மேலும், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நீர் கடத்தும் குழாய்கள் அமைத்தல் பணிக்காக இத்திட்டத்தில் விவசாயி செலவிடும் தொகையில் 50 சதவீதம் என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரையில் மானியம் வழங்கப்படும். இந்த துணை நீர் மேலாண்மை திட்டத்தில் பயனாளிகளாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் புதிதாக சொட்டு நிர், தெளிப்பு நீர், மழை தூவுவான் அமைத்திட விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

    எனவே, இதுவரை நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் பயன்பெறாத விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் கூடுதல் பயன்பெறலாம். இதில் பயன்பெற சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரைப்படம், சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உடன் தங்கள் பகுதிக்கு உரிய வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி உடனே பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குறைந்து வரும் நீர் ஆதார நிலைல் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்த குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்றிட்ட அனைவரும் நுண்ணீர் பாசனத் திட்டத்தினையும், துணை நீர் மேலாண்மை திட்டத்தின் மானியத்தினையும் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் விவரங்களுக்கு தலைமையிடம் வாரியாக உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அதன்படி, கிருஷ்ணகிரி மாதையன் - 9488753781, ஆலப்பட்டி முத்துசாமி - 9443363925, மாதேப்பட்டி முனிராஜி - 8344371443, மோரமடுகு சிவராசு - 8248888751, மகாராஜகடை விஜயன் - 8838343514 மற்றும் கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை அலுவலர் பிரியா - 9442559842 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தவறாமல் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×