என் மலர்
கிருஷ்ணகிரி
- அரசு அனுமதியின்றி விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது.
- அச்சிடப்படும் அச்சகத்தின் பதிவு எண் மற்றும் செல்போன் எண் இடம் பெற வேண்டும்.
கிருஷ்ணகிரி,
ஆபத்தான விளம்பர பதாகைகள் தொடர்பாக பொது மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களான பஸ் நிலையங்கள், ஊரக, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய வளைவுகள், பஸ் நிறுத்தங்கள், தனியாருக்கு சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் அரசு அனுமதியின்றி விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது.
விளம்பர பதாகைகள் வைப்பது தொடர்பாக அரசாணை எண்.45 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளபடி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்ற பின்னரே விளம்பர பதாகைகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியாருக்கு சொந்தமான இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் சம்மத கடிதம் பெறப்பட்டிருக்க வேண்டும்.
உரிய அனுமதி பெற்றபின் வைக்கப்படும் விளம்பர பதாகைகளில் வழங்கப்பட்ட அனுமதி ஆணை மற்றும் அனுமதிக்கப்பட்ட காலம் மற்றும் அச்சிடப்படும் அச்சகத்தின் பதிவு எண் மற்றும் செல்போன் எண் இடம் பெற வேண்டும்.
மேலும், கோவில், மசூதி, தேவாலயம் போன்ற மக்கள் வழிப்படும் இடங்கள், வரலாற்று புராதனச் சின்னங்கள், நீர்நிலைகள் அமைத்துள்ள பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி கிடையாது. அரசாணை எண்.45 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை மீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் வைக்கும் நபர்கள் மீது காவல்துறை மற்றம் உள்ளாட்சி மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், ஆபத்தான விளம்பர பதாகைகள் தொடர்பாக பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
- ஆசிரியர் ரோஸ்லின், ஊராட்சி செயலாளர் விவேகனந்தா மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், திம்ஜேப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அலுவலகம் முன்பு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ராயக்கோட்டை வனச்சரகர் பார்தசாரதி, தலைமையில் வனவர் சரவணன், நாராயணன், திம் ஜேப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன், மரக்கன்றுகளை நட்டனர்.
இதில் ராயக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கஞ்சப்பன், பள்ளித் தலைமை ஆசிரியர் ரோஸ்லின், ஊராட்சி செயலாளர் விவேகனந்தா மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள்.
- உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சந்தூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- பொது மக்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு மஞ்சபை வழங்கி, பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
மத்தூர்,
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சந்தூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. காட்டாகரம் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சந்தூர் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்தும், தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குமாறும், பிளாஸ்டிக் பையை முற்றிலும் ஒழித்து பாக்கு மரத்தட்டுகள், வாழை இலை, பேப்பர் கப் போன்றவற்றை பயன்படுத்துவோம், மீண்டும் மஞ்ச பையை எடுப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொது மக்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு மஞ்சபை வழங்கி, பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கவுசல்யா மாதேஷ், கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனை தொடர்ந்து, பர்கூர் பிடிஓ சுப்பிரமணி, பேரணியை துவக்கி வைத்தார். தொழிலதிபர் சண்முகம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி, கந்தவேல், கோவிந்தம்மாள், சண்முகவள்ளி, வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவச மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. மேலும், சுகாதார நிலைய வளாகத்தில் மரகன்றுகள் நடப்பட்டது.
- மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்தநாளுக்காக 100 ரூபாய நாணய மொசைக் ஆர்ட்டை உருவாக்கினேன்.
- அன்றாட பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போது இந்த மொசைக் ஆர்ட்டை இரு மாதங்களில் செய்து முடித்தேன்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் லுாகாஸ் (33). இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்.
திருக்குறள் மற்றும் தமிழ் மீது பற்றுள்ள இவர், ஏற்கனவே ஐஸ் குச்சிகளில் தனித்தனியாக 1,330 திருக்குறள்களை எழுதியும், வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு 5000 காகித துண்டுகளால் அவரது உருவத்தை வரைந்தும் சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, 10 ஆயிரம் காகித துண்டுகள் மூலம் 100 ரூபாய் நாணயத்தில் கருணாநிதி உருவம் இடம் பெற்றுள்ளது போல் மொசைக் ஆர்ட்டை லூகாஸ் உருவாக்கி உள்ளார்.
இந்த மொசைக் ஆர்ட்டில் கீழ் பகுதியில் கருணாநிதி கூறிய இமயமலைக்கு பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும் திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன் என்ற வரிகளை எழுதி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து லூகாஸ் கூறுகையில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்தநாளுக்காக 100 ரூபாய நாணய மொசைக் ஆர்ட்டை உருவாக்கினேன்.
இதற்கு, 10 ஆயிரம் பேப்பர் துண்டுகள் தேவைப்பட்டன. எனது அன்றாட பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போது இந்த மொசைக் ஆர்ட்டை இரு மாதங்களில் செய்து முடித்தேன். இன்னும் பல சாதனைகளை படைப்பேன் என கூறினார்.
- உறவினர்களான ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
- உறவினர்கள் ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேைல பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (22). இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ரம்யாவை அடிக்கடி ராஜ்குமார் அடித்து துன்புறுத்தியுள்ளார். அவருடன் மாமனார் சீனிவாசகுமார் (52) மற்றும் உறவினர்களான ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ரம்யா ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் ரம்யாவின் கணவர் ராஜ்குமார், மாமனார் சீனிவாசகுமார், அவரது உறவினர்கள் ஆஷா, புஷ்பா, ஜெயா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மல்லிநாயனப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கப்படுகிறது.
- பணியினை அசோக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கம்மம்பள்ளி பஞ்சாயத்து சின்னேப்பள்ளி கூட்ரோட்டில் இருந்து சின்னேப்பள்ளி கிராமத்திற்கு செல்லும் வழியில், சின்னேப்பள்ளி ஏரியில் இருந்து வெண்ணம்பள்ளி ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது.
இக்கால்வாயின் குறுக்கில் தரைப்பாலம் உள்ளதால் தண்ணீர் அதிகம் வரும் காலங்களிலும், மழை பெய்யும் போதும் தரைப்பாலத்தின் மீது இரண்டு அடி வரை தண்ணீர் செல்வது வழக்கம். இதனால் கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இதனால் இங்கு புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது. அதே போல், மல்லிநாயனப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணியினை அசோக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, பஞ்சாயத்து தலைவர் சென்றாயப்பன், ஒன்றிய துணை செயலாளர் குமரேசன், அம்மா பேரவை செயலாளர் ரமேஷ்குமார், துணைத் தலைவர் நாராயணகுமார், கவுன்சிலர் சங்கீதா சரவணன், கிளைச் செயலாளர்கள் கோவிந்தராஜ், வெங்கட்ராமன், சுப்ரமணி, சின்ராஜ், பிடிஏ தலைவர் மோகன்ராம், ஊர்கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அர்ஜுனன் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது.
- அவரை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கொட்ட பள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது30). இவர் அதே பகுதியில் செம்மண்ணை வெட்டி டிப்பர் லாரியில் கடத்தி சென்றார். அப்போது அவர் திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் செல்லும்போது மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அர்ஜுனன் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே அவரை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் அர்ஜூனன் மீது வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரியையும், கடத்தி சென்ற செம்மண்ணையும் பறிமுதல் செய்தனர்.
- வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கங்கசத்திரம் பகுதிையைச் சேர்ந்த முரளி (வயது25). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனவேதனை அடைந்த கடந்த 3-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு அங்கசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மாருதி (32). இவருக்கும் பெற்றேருக்கும் அடிக்கடி குடும்பதகராறு இருந்து வந்தது. இதனால் மனவேதனையுடன் இருந்த அவர் கடந்த 28-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நல்லாரம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
- விவசாயிகளுக்கு மா கன்றுகள், பேட்டரி தெளிப்பான் 8 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், தளி மற்றும் வேப்பனபள்ளி ஆகிய வட்டாரங்களில் பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் 52 நீர்வடிப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை அலுவலகத்திலிருந்து சிறப்பு ஆய்வுக்குழுவாக வேளாண்மை துணை இயக்குநர் பூங்கோதை, வேளாண் உதவி இயக்குநர் மணமல்லி, கணக்கு அலுவலர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி, உதவி பொறியாளர் புஷ்பநாதன் ஆகியோர் கொட்டாவூர் நீர்வடிப்பகுதியில் நுழைவுக் கட்டப்பணிகளான உலர்களம் அமைப்பு இயற்கைவள மேம்பாட்டுப் பணிகளான தடுப்பணை, கசிவுநீர் குட்டை, பண்ணை உற்பத்தி திட்டத்தில் விவசாயிகளுக்கு மா கன்றுகள், பேட்டரி தெளிப்பான் 8 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. விசைத் தெளிப்பான் 4 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தீவனப்புல் வெட்டும் இயந்திரம் 2 பயனாளிகளுக்கும், தையல் எந்திரம் 15 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
மேலும், வாழ்வாதார மேம்பாட்டு பணிகளான சுழல் நிதி 5 குழுவிற்கு விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், 4 பயனாளிகளுக்கு சலவை பெட்டி, 2 பயனாளிகளுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
மேலும், கொட்டாவூர் நீர்வடிப்பகுதி தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான மதிவாணன், குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் அந்த நீர்வடிப்பகுதியில் உள்ள மக்களுக்கு என்னென்ன தேவைகள் வேண்டும் என்று கொட்டாவூர் நீர்வடிப்பகுதி சிறப்பு குழுக் கூட்டம் நடத்தி வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோர் நேரடியாக கேட்டறிந்து சிறப்புக்குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், வேப்பனஹள்ளி நீர்வடிப்பகுதியில் பொம்மரசனப்பள்ளி நீர்வடிப்பகுதியில் அம்ரித் சரோவர் பணி (அம்ரித் குளம்) கசிவுநீர் குட்டை ஆய்வு செய்தனர். அப்போது நீர்வடிப்பகுதி அணி உறுப்பினர்கள் பரமானந்தம், பிரபு, சுப்பிரமணி, இனியம், தவ்லத்பாஷா மற்றும் தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.
- ராயக்கோட்டை போலீசார் லிங்கம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
- அவரிடம் இருந்த கஞ்சா 50 கிராம் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் நேற்று மரிக்கம்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் 30 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் அவர் மரிக்கம்பள்ளி சேர்ந்த வேலு (வயது25) தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
இதேபோல் ராயக்கோட்டை போலீசார் லிங்கம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு இதேபோல் சந்தேகத்து இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த லிங்கம்பட்டி ஆனந்த் (29) என்பவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த கஞ்சா 50 கிராம் பறிமுதல் செய்தனர்.
- ராஜ்குமார் செல்போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது.
- இதனை நம்பி ரூ. 5 லட்சத்து 15 ஆயிரத்தை அனுப்பினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசன் (வயது 28), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவருக்கு கடந்த 27 ஆம் தேதி இவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று வந்துள்ளது இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு
லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது அதன்படி கவியரசன் ரூ1000 அனுப்பிய நிலையில் 2000 ரூபாய் கிடைத்தது இதனால் நம்பிக்கை அடைந்த கவியரசன் இப்படியாக ரூ.7லட்சத்து47 ஆயிரத்து 199 ரூபாய் பல்வேறு வங்கி கணக்கு மூலம் அனுப்பி உள்ளார் அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது அறிந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவியரசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் ஊத்தங்கரை பி. மல்லிப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(33) என்பவர் தனது செல்போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது இதனை நம்பி ரூ. 5 லட்சத்து 15 ஆயிரத்தை அனுப்பினார் இதன் பின்னர் இவரும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை
மேலும் கிருஷ்ணகிரி அடுத்த என்னேகோல்புதூர் ஒட்டப்பட்டி சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரிஷ் (27)கடந்த 31ஆம் தேதி இவரது செல்போனுக்கு கமிஷன் அடிப்படையில் வேலைவாய்ப்பு இருப்பதாய் கூறி வந்த மெசேஜை நம்பி ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இவரும் ஏமாற்றம் அடைந்துள்ளார் இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- பயிற்சி வகுப்புகள் முடிந்த நிலையில், மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணல் நடத்தப்பட்டது.
- வெற்றி பெற்ற 109 மாணவ, மாணவியர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை கல்லூரியின் முதல்வர் அனுராதா வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால், வங்கி மேலாண்மை மற்றும் நிதி சேவை வகுப்புகள் நடத்தப்பட்டன.
பயிற்சி வகுப்புகள் முடிந்த நிலையில், மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற 109 மாணவ, மாணவியர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை கல்லூரியின் முதல்வர் அனுராதா வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் குமரன் மற்றும் பயிற்றுநர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.






