என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.
    • 17 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பெண் கல்வியை மேம்படுத்துவதற்காக பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் தமிழகத்தில் ஏற்கனவே 11 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மீதமுள்ள 27 புதிய மாவட்டங்களுக்கும் மத்திய அரசின் 100 சதவீத நிதி ஒதுக்கீட்டுடன் திட்டம் விரிவாக்கம் செய்து திட்டத்தை செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், இந்த திட்டம் தொடங்கி செயல்படுத்துவதற்கு ஏதுவாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 17 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சமூகத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் பொருட்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்டம் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகும். இந்த உதவி மையத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனநல ஆலோசனை, மருத்துவ உதவி, காவல் உதவி , சட்ட உதவி, தங்குமிட வசதி, உடனடி மீட்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணிகளை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டும் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணிகள் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பொருட்டும் மேற்கண்ட இரு திட்டங்களுக்கும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கான பயிற்சி 4 துறைகளுக்கு நடத்தப்பட்டு திட்டத்தின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டு செயல்முறைப்படுத்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தும் பொருட்டு இரண்டாம் காலாண்டிற்கு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று செயற்குழு உறுப்பினர்களுடன் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.40 லட்சம் மதிப்பில், 400 செட் டெஸ்க்-பெஞ்சுகள் வழங்கப்பட்டது.
    • மேயர் சத்யா மேசை, நாற்காலிகளை வழங்கினார்.

    ஓசூர்,

    ஓசூர் ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.இவர்களின் நலன் கருதி ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில், 400 செட் டெஸ்க்-பெஞ்சுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு 40 செட் மேசை, நாற்காலிகள் வழங்கப்பட்டது.

    இதையொட்டி பள்ளியில் நேற்று மாலை நடைபெற்ற விழாவிற்கு, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.மாநக ராட்சி நகரமைப்புக்குழு தலைவர் அசோகா, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை நர்மதா தேவி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு, மேசை, நாற்காலி களை வழங்கி விழாவில் பேசினார்.

    மேலும், துணை மேயர் ஆனந்தய்யா, தனியார் நிறுவன அதிகாரிகள் துரைராஜ் கோனி, கிரண் குமார், வட்டார கல்வி அலுவலர் கோவிந்தன், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 3ம் கட்ட கலந்தாய்வு 19-ம்தேதி முதல் நடைபெறும்.
    • கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு 19ம்தேதி முதல் நடைபெறும். இதுகுறித்து தளி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2023-2024ம் கல்வியாண்டிற்கான மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வருகிற 19-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள், கல்லூரிக்கு நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தெற்கு மாநகர பகுதி செயலாளர் பி.ஆர். வாசுதேவன் தலைமை வகித்தார்.
    • பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர தெற்கு அ.தி.மு.க. பகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், மத்திகிரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    தெற்கு மாநகர பகுதி செயலாளர் பி.ஆர். வாசுதேவன் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில், கிருஷ்ண–கிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்றுவார்டு வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, குறித்து ஆலோசனைகளை வழங்கியதுடன், அ.தி.மு.க தொண்டர்களின் கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்து அவர்களுக்கான தேவை யான உதவிகளை செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்ற சங்கர், லட்சுமி ஹேமகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வரும் 23-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • விவசாயிகள் கலந்து தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கிறது.

    மேற்கண்ட கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 19-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
    • இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நீர் தேக்க திட்ட உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2023-2024-ம் ஆண்டிற்கு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து, கிருஷ்ணகிரி நீர்த்தேக்க திட்ட நீர்பாசன சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி அணையில் உள்ள உதவிசெயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 19-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • 5 பிரிவுகளில் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
    • வருகிற 21-ந் தேதி விளையாட்டு அரங்கில், பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், கடந்த 2022-2023-ம் ஆண்டின் முதல் அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 7-ந் தேதி முதல் பிப்ரவரி 27-ந் தேதி வரை பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் பல்வேறு வகையான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வருகிற 21-ந் தேதி மாலை 3.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர் ஆகியோரால் வழங்கப்பட உள்ளன. முதல் அமைச்சர் கோப்பைக்கான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் தவறாது பரிசளிப்பு விழாவில் மாலை 3.30 மணிக்கு கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூக்கி வீசப்பட்ட நாராயணப்பா சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஜோதியப்பா பரிதாபமாக இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள அஞ்செட்டி துர்க்கத்தைச் சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 59). விவசாயி. இவரும் அதே ஊரை சேர்ந்த முன்னாள் சத்துணவு ஊழியர் ஜோதியப்பா (65) என்பவரும் மொபட்டில், கெலமங்கலத்திற்கு நேற்று வந்தனர்.

    பின்னர் அவர்கள் தங்களின் ஊரான அஞ்செட்டி துர்க்கத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கெலமங்கலத்தில் இருந்து ராயக்கோட்டை நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது.

    ஜக்கேரி அருகே ஒன்னுகுறுக்கி பக்கமாக வந்த போது சரக்கு வேன் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாராயணப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். ஜோதியப்பா படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாராயணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஜிங்க் சல்பேட் பயிரின் துத்தநாகச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது.
    • 10 கிலோவுக்கு மானியம் நீங்கலாக ரூ.411 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில், நடப்பு ஆண்டு கார்ப் பருவத்தில் நெற்பயிர் 2000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு அடிப்படையாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் தழை, மணி, சாம்பல், இரும்பு, துத்தநாகம், காப்பர், மாங்கனீசு ஆகியவை ஆகும். அவற்றுள் தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நெற்பயிரில் துத்தநாகச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது.

    இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    நெற்பயிர் மண்ணில் உள்ள தழைச்சத்தினை சரியாக உறிஞ்சி எடுக்கவும், அதன் பயன்பாட்டுத்திறன் அதிகரிக்கவும், துத்தநாக சத்து மிகவும் அவசியம். பயிர் நன்கு வளர்ச்சியடையவும், அதிக தூர் கட்டவும், நெற்கதிர்களில் பால் பிடிக்கும் திறன் மற்றும் கருவுறுதல் சரியாக நடைபெறவும் துத்தநாக சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக நெற்பயிர் சாகுபடி செய்வதால் நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி கரையா உப்புக்கள் அளவு அதிகரித்து துத்தநாகச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றது. மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகம் இருந்தால் துத்தநாகச் சத்து பயிருக்கு கிடைக்க இயலா நிலை ஏற்படுகின்றது.

    பயிர் வளர்ச்சி குன்றி, இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறி காணப்படும். பின்னர் காய்ந்து விடும். நடு நரம்பினை ஒட்டிய பகுதிகள் வெண்மை நிறக் கோடுகள் உருவாகி இலைகள் வெளுத்து காணப்படும். இலைத்தாளின் அகலம் குறைந்து சிறுத்து காணப்படும். பயிர்களின் வளர்ச்சி குறைந்து குட்டையாக காணப்படும். நெற்கதிர் தூர்கள் பிடிக்கும் பருவத்தில் துார்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதோடு, மலட்டுத்தன்மையுடன் காணப்படும். விளைச்சல் குறைவு ஏற்படும்.

    ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் கடைசி உழவுக்கு பின் 20 கிலோ மணலுடன் கலந்து பயிர் நடவுக்கு முன்பு ஒருமுறையும், தொடர்ந்து நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நெல் நாற்று நட்ட பின் 15 முதல் 30 நாட்களுக்குள் இரண்டாவது முறையும், 10 கிலோ ஜிங்க் சல்பேட் இட்டு பயிரின் துத்தநாகச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து பயிரின் மகசூல் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக எளிதாக பெறலாம்.

    தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ஜிங்க் சல்பேட் கிலோ ஒன்றுக்கு 25 ருபாய் மானியம் என்ற வீதத்தில் ஒரு நபருக்கு 10 கிலோ முழுவிலை ரூ.661ல் ரூ.250 மானியம் நீங்கலாக ரூ.411 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி துணை மின் நிலையம், சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவர்ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1,2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலை கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூளகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம், கல்லுகுறுக்கி, பூசாரிப்பட்டி, தானம்பட்டி, கொண்டேப்பள்ளி பகுதிகளிலும், அதை சுற்றி உள்ள கிராமங்களிலும் மின்சாரம் இருக்காது.

    அதே போல சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செம்மண் கடத்துவதாக மண்டல துணை வட்டாட்சியர் ஜெயபாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • டிரைவர்கள் டிராக்டர்களை விட்டு ஓடி விட்டனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த நாட்டான் கொட்டாய் அருகே உள்ள மணி நகரில் செம்மண் கடத்துவதாக மண்டல துணை வட்டாட்சியர் ஜெயபாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் உடனடியாக டேம் ரோடு அருகே உள்ள மணி நகரில் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயபால் மற்றும் காவேரிப்பட்டணம் வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் தண்டே குப்பம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருடன் ரோந்து சென்றனர்.

    அப்பொழுது அங்கு உரிய அனுமதியின்றி இரண்டு டிராக்டரில் தலா ஒரு யூனிட் செம்மண் கடத்துவதை பார்த்தனர். உடனடியாக டிராக்டரை தடுத்து நிறுத்திய போது இரண்டு டிராக்டர் டிரைவர்கள் டிராக்டர்களை அப்படியே விட்டு ஓடி விட்டனர். இதனையடுத்து 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காவேரிபட்டினம் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • மாரிசெட்டிஹள்ளி பாறையூர், மலையாண்ட ஹள்ளி, குட்டூர் ரேஷன் கடைகளை ஆய்வு செய்தார்.
    • மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் குடிநீர், கழிப்பறை வசதிகள் குறித்து பார்வையிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகாவில், 135 முழுநேர ரேஷன் கடை, 119 பகுதிநேர ரேஷன் கடை, என மொத்தம், 254 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில், 1 லட்சத்து, 36 ஆயிரத்து, 129 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் கலெக்டர் சரயு கிருஷ்ணகிரி தாலுகாவிற்கு உட்பட்ட மாரிசெட்டிஹள்ளி பாறையூர், மலையாண்ட ஹள்ளி, குட்டூர் ரேஷன் கடைகளை ஆய்வு செய்தார்.

    அப்பகுதி பொதுமக்களிடம், ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா, சரியான நேரத்திற்கு திறக்கப்படு கிறதா என கேட்டறிந்தார்.

    மேலும் கடையில் பொருட்கள் இருப்புகள், கொடுக்கும் பொருட்களுக்கு உரிய ரசீதுகள், கணக்குகள் வைத்திருக்க வேண்டுமென ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கூறினார்.

    தொடர்ந்து காவேரி ப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், சவுட்டஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்த கலெக்டர் சரயு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் குடிநீர், கழிப்பறை வசதிகள், மதிய உணவு சமைக்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள் பூமாலை வணிக வளாகத்தை மறு சீரமைப்பு செய்யுமாறும், பணிகளை விரைந்து முடிக்கவும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அப்போது உதவி திட்ட அலுவலர் ரகு, கிருஷ்ணகிரி வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஸ், வெங்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

    ×