search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட் மானிய விலையில் பெற்று பயன் பெறுங்கள் -அதிகாரி தகவல்
    X

    நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட் மானிய விலையில் பெற்று பயன் பெறுங்கள் -அதிகாரி தகவல்

    • ஜிங்க் சல்பேட் பயிரின் துத்தநாகச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்கிறது.
    • 10 கிலோவுக்கு மானியம் நீங்கலாக ரூ.411 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில், நடப்பு ஆண்டு கார்ப் பருவத்தில் நெற்பயிர் 2000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு அடிப்படையாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் தழை, மணி, சாம்பல், இரும்பு, துத்தநாகம், காப்பர், மாங்கனீசு ஆகியவை ஆகும். அவற்றுள் தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நெற்பயிரில் துத்தநாகச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது.

    இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    நெற்பயிர் மண்ணில் உள்ள தழைச்சத்தினை சரியாக உறிஞ்சி எடுக்கவும், அதன் பயன்பாட்டுத்திறன் அதிகரிக்கவும், துத்தநாக சத்து மிகவும் அவசியம். பயிர் நன்கு வளர்ச்சியடையவும், அதிக தூர் கட்டவும், நெற்கதிர்களில் பால் பிடிக்கும் திறன் மற்றும் கருவுறுதல் சரியாக நடைபெறவும் துத்தநாக சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக நெற்பயிர் சாகுபடி செய்வதால் நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி கரையா உப்புக்கள் அளவு அதிகரித்து துத்தநாகச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றது. மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகம் இருந்தால் துத்தநாகச் சத்து பயிருக்கு கிடைக்க இயலா நிலை ஏற்படுகின்றது.

    பயிர் வளர்ச்சி குன்றி, இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறி காணப்படும். பின்னர் காய்ந்து விடும். நடு நரம்பினை ஒட்டிய பகுதிகள் வெண்மை நிறக் கோடுகள் உருவாகி இலைகள் வெளுத்து காணப்படும். இலைத்தாளின் அகலம் குறைந்து சிறுத்து காணப்படும். பயிர்களின் வளர்ச்சி குறைந்து குட்டையாக காணப்படும். நெற்கதிர் தூர்கள் பிடிக்கும் பருவத்தில் துார்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதோடு, மலட்டுத்தன்மையுடன் காணப்படும். விளைச்சல் குறைவு ஏற்படும்.

    ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் கடைசி உழவுக்கு பின் 20 கிலோ மணலுடன் கலந்து பயிர் நடவுக்கு முன்பு ஒருமுறையும், தொடர்ந்து நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நெல் நாற்று நட்ட பின் 15 முதல் 30 நாட்களுக்குள் இரண்டாவது முறையும், 10 கிலோ ஜிங்க் சல்பேட் இட்டு பயிரின் துத்தநாகச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து பயிரின் மகசூல் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக எளிதாக பெறலாம்.

    தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ஜிங்க் சல்பேட் கிலோ ஒன்றுக்கு 25 ருபாய் மானியம் என்ற வீதத்தில் ஒரு நபருக்கு 10 கிலோ முழுவிலை ரூ.661ல் ரூ.250 மானியம் நீங்கலாக ரூ.411 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×