என் மலர்
கன்னியாகுமரி
- தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
- நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தென்தாமரைகுளம் :
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் கன்னியாகுமரி வந்தார். இதையடுத்து மாலையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி சென்றார். அங்கு அவரை தலைமைபதி சார்பில் குருமார்கள் சாமி, தங்க பாண்டியன், ராஜசேகர், அரவிந்த், ஆனந்த், அஜித் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து வடக்கு வாசல் வழியாக பதிக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் அய்யா வைகுண்டரை சாமி தரிசனம் செய்தார். அவருக்கு இனிமம் வழங்கப்பட்டது.
அதன்பின் அவர் பேசியதாவது:-
தே.மு.தி.க. ஆட்சியாக இருந்திருந்தால் இந்த இடத்திலே மாசி 20 அய்யா வைகுண்டர் அவதாரதினத்தன்று பொது விடுமுறை அறிவித்திருப்போம். மாசி 20 பொது விடுமுறையாக அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
இங்கு உருவ வழிபாடு இல்லை. கண்ணாடி வைத்து அதில் நமது முகமே தெரிகிறது. அது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. தலைவர் விஜயகாந்த் சொல்வது போல் இங்கு நமக்குள் மதம், ஜாதி, இனம், மொழி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே இனம், ஒரே குலம் என்பது தான் இங்கு தத்துவம். விஜய காந்த் மீண்டும் அதே கம்பீரத்துடன் இங்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய அய்யாவிடம் பிரார்த்தனை செய்துள்ளேன். ஒரு உயர்ந்த கொள்கை தத்து வத்துடன் இக்கோவில் அமைந் துள்ளது. தமிழ்நாட்டிலேயே எல்லோரும் சமம் என்கிற ஒரு தலமாக நான் இதை பார்க்கிறேன். அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தது மன நிறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பட்டதாரி ஆசிரியர், கல்வியாளர் 2222 பணி காலியிடங்கள்
- கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் பட்டதாரி ஆசிரியர், கல்வியாளர்கள் பணிக்கு 2222 பணி காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக் கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் தொடக்க கல்வியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இளங்கலை 4 வருட பி.ஏ., பி.எஸ்.சி.,பி.எட். அல்லது பி.ஏ., பி.எட்., பி.எஸ்.சி. பி.எட். முடித்திருக்க வேண்டும்.
இதனுடன் கட்டாயம் டெட் பேப்பர்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30-ந்தேதி ஆகும். இத்தேர்வு நடை பெறும் நாள் 07-01-2024. இப்போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடத்தப்படவுள்ளது. இப்போட்டி தேர்வுக்கான அறிமுக வகுப்பு 17-11-2023 காலை 11 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இத்தேர்வுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு trb.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து 30-11-2023-ம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், முதலில் வரும் 80 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், ஸ்மார்ட் போர்டு வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் வாரந்திர மாதிரித் தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மேலும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவள்ளுவர் சிலைக்கு இடையே நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலபணியை யும் பார்வையிட்டார்.
- திருவள்ளுவர் சிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் நின்று குழு போட்டோ எடுத்துக் கொண்டார்.
கன்னியாகுமரி :
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தனிப்படகில் சென்றார். அங்கு வந்த அவரை பள்ளி மாணவிகள் வரவேற்றனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திருவள்ளுவர் சிலையின் கால்பாதம் வரை ஏறி சென்று பார்வையிட்டார். அங்கு விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலபணியை யும் பார்வையிட்டார்.
கீழ்தளத்தில் உள்ள அறப்பீடமண்டபத்தில் எழுதப்பட்டிருந்த சில முக்கியமான திருக்குறளை படித்து மகிழ்ந்தார். பின்னர் திருவள்ளுவர் சிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் நின்று குழு போட்டோ எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சிற்றாறு 2-ல் 67.2 மில்லி மீட்டர் பதிவு
- அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது. நேற்று காலையில் வழக்கம்போல் மாவட்டம் முழுவதும் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
பூதப்பாண்டி, களியல், கன்னிமார், நாகர்கோவில், சுருளோடு, தக்கலை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளி லும் மழை வெளுத்து வாங்கியது. சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 67.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளிய லிட்டு வருகிறார்கள்.மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு, மாம்ப ழத்துறையாறு அணைகள் நிரம்பி வழிவதையடுத்து அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் உள்ள 2025 குளங்களும் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி உள்ளது.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக உள்ளது. அணைக்கு 544 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது. அணைக்கு 315 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 15.81 அடியாக உள்ளது. அணைக்கு 182 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை கடந்த 15 நாட்களாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. நகர மக்களுக்கு முக்கடல் மற்றும் புத்தன் அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை தங்குதடை இன்றி அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள்.
மழைக்கு அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 15, பெருஞ்சாணி 27.6, சிற்றாறு 1-6, சிற்றாறு 2-67.2, பூதப்பாண்டி 2.6, களியல் 6, கன்னிமார் 3.6, நாகர்கோவில் 4.2, சுரு ளோடு 10.6, தக்கலை 58.2, இரணியல் 6, பாலமோர் 11.4, மாம்பழத்துறையாறு 17, திற்பரப்பு 44, கோழிப் போர்விளை 26.2, அடை யாமடை 24, ஆணைக்கிடங்கு 16.6.
- மேல்கூரையை பிரித்து உள்ளே புகுந்து கைவரிசை
- கொள்ளை சம்பவம் குறித்து கோட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஈத்தாமொழி சந்திப்பில் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் காலையில் டீக்கடையும், மாலையில் புரோட்டா கடையும் செயல்பட்டு வருகிறது.
புரோட்டா கடையை வாகையடி தெருவை சேர்ந்த அர்ஜுனும் டீக்கடையை ஆறுமுகம் நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு அர்ஜுன் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார். வழக்கம்போல் ஆறுமுகம் காலையில் கடையை திறக்க இன்று வந்தார்.
கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது. கடையின் மேல் கூரை பிரிக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ.12 ஆயிரம் பணத்தை திருடி சென்றிருந்தனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வர வழைக்கப்பட்டனர். அவர் கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
அர்ஜுன் நள்ளிரவு கடையை பூட்டிக்கொண்டு சென்ற பிறகு கொள்ளை யர்கள் கடையின் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரி மூட்டைகள் மேல் ஏறி கடையின் மேல் கூரை பிரித்து உள்ளே புகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா வின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மூவர் ஜீவ சமாதியில் விஜய் வசந்த் பிரார்த்தனை செய்தார்.
- ஏழு நாட்களும் மூன்று வேளை அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். பின்னர் மூவர் ஜீவ சமாதியில் பிரார்த்தனை செய்தார்.
தொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஏழு நாட்களும் மூன்று வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று கோவிலுக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
- தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
- ராஜேஸ்வரி என்ற மனைவியும் பிரித்தி, நிவேதா ஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.
நாகர்கோவில் :
சுசீந்திரத்தைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 52), தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 2 நாட்கள் விடுமுறையில் வீட்டுக்கு வந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அய்யப்பனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் பிரித்தி, நிவேதா ஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.
- தர்மபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் கணேசன் பரிசுகள் வழங்கினார்
- மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
என். ஜி. ஓ. காலனி, நவ.15-
ஈத்தாமொழி பாரதி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 50-வது ஆண்டு தீபாவளி தின விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் பா.ஜ.க. முன்னாள் குமரி மாவட்ட தலைவரும், தர்மபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான டாக்டர் கணேசன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊர் தலைவர் சுப்பையன், செயலாளர் சிதம்பரதாணு, பொருளாளர் வேலு, துணைத் தலைவர் ஆறுமுகம், இணைச்செயலாளர் வி.டி.ராஜா, பாரதி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் வசந்த், செயலாளர் ஹரிபிரசாத், பொருளாளர் ஜெகன், மன்ற ஆலோசகர் ராஜா, மற்றும் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கருப்பு-சிவப்பு சட்டை அணிந்து போர் வீரர்கள் போல் கலந்து கொள்ள வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- நாம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.
கன்னியாகுமரி:
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டுக்கான ஆயத்த பணிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை இளைஞரணி நிர்வாகிகள் மூலம் நடத்தி வருகிறார்.
இதன் அடுத்த கட்டமாக இப்போது இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இருசக்கர வாகன பிரசாரத்தை கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இருசக்கர வாகன பிரசார தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. இளைஞரணி சார்பில் 2-வது மாநில உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. மத்திய அரசு நமது உரிமைகளை பறித்து வருகிறது. உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.
கருப்பு-சிவப்பு சட்டை அணிந்து போர் வீரர்கள் போல் கலந்து கொள்ள வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள நிர்வாகிகள் மாவட்டம் தோறும் சென்று லட்சக்கணக்கான மக்களை சந்திக்க உள்ளீர்கள்.
நீங்கள் நமது அரசினுடைய கொள்கைகளை, சாதனைகளை எடுத்து கூற வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு இன்னல்களை செய்து உள்ளது. இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். கல்வி உரிமையை விட்டுக்கொடுத்து உள்ளோம். நீட் தேர்வின் அவல நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
நாம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். தற்பொழுது இணையதளம் மூலமாக 9 லட்சம் பேரும், போஸ்ட் கார்டு மூலமாக 10 லட்சம் பேரும் கையெழுத்திட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 50 லட்சத்தை தாண்டி கையெழுத்து வாங்க வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளில் நாம் மத்திய அரசுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி கொடுத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு நமக்கு ரூ.2000 கோடி தான் தந்துள்ளது. நமது உரிமைகளை மீட்க நாம் போராட வேண்டும்.
மதுரையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநாடு எப்படி நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒப்புக்கு செப்பாக மாநாடு நடத்தப்பட்டது. சேலத்தில் நடைபெறும் இளைஞரணி எழுச்சி மாநாடு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அமைய வேண்டும். நமது மாநாடு குறித்து வரலாறே பேச வேண்டும்.
சேலம் மாநாடு மத்திய அரசு திரும்பி பார்க்கும் வகையில் அமைய வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் சொன்னதை மட்டும் இன்றி சொல்லாத பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது.
குறிப்பாக 4 திட்டங்களை நினைவு கூறுகிறேன். இலவச மகளிர் பேருந்து திட்டம் முதல் திட்டமாக கையெழுத்திடப்பட்டது. இதன் மூலமாக ஒரு மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும். ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் மிச்சமாகலாம்.
தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டமான புதுமைப்பெண் திட்டம் மூலமாக அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 31 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன் அடைந்து வருகிறார்கள். பக்கத்து மாநிலங்கள் இந்த திட்டங்களை வியந்து பார்க்கும் அளவிற்கு அரசு செயல்பட்டு வருகிறது.
செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒரு கோடியே 18 லட்சம் மகளிர் இதன் மூலமாக பயன்பெறுகிறார்கள். தற்பொழுது இருசக்கர வாகன பேரணி மேற்கொண்டுள்ள நிர்வாகிகள் 15 நாட்கள் 8,400 கிலோ மீட்டர் பயணம் செய்ய உள்ளீர்கள்.
நீங்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களது குடும்பத்தினர் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். நான் சேலத்தில் உங்களுக்காக காத்திருப்பேன். இந்த பயணம் வெற்றி பயணமாக அமைய வேண்டும். இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள 188 பேரும் தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரை சந்திக்க உள்ளீர்கள். நீங்கள் பொதுமக்களிடம் நமது சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இருந்து புறப்பட்டது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருப்பு-சிவப்பு கலரில் டீ-சர்ட் அணிந்திருந்தனர்.
இருசக்கர வாகன பிரசாரத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். இங்கிருந்து புறப்பட்ட பிரசார பேரணி கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம், நாகர்கோவில் தொகுதிகளுக்கு இன்று செல்கிறது.
நாளை (16-ந்தேதி) நெல்லை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (17-ந்தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரசார பேரணி செல்கிறது.
18-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் 19-ந்தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் 20-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளிலும் வாகன பிரசார பேரணி செல்கிறது.
இதை தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல் வழியாக நவம்பர் 27-ந்தேதி சேலம் சென்று அடைகிறது.
இதே போல் பெரியார் மண்டலத்திலிருந்து தொடங்கும் பிரசார பேரணி திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு செல்கிறது. அண்ணா மண்டலத்தில் இருந்து தொடங்கும் பிரசார பேரணி திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பிரசார பேரணி செல்கிறது.
கலைஞர் மண்டலத்திலிருந்து தொடங்கும் பிரசார பேரணி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி வழியாக சேலம் செல்கிறது.
- மாதவராயர் பாலர்பள்ளி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது
- 51 நலிவுற்ற பெண் முதியோர்களுக்கும் 3 நலிவுற்ற ஆண் முதியோர்களுக்கும் நலத்திட்ட உதவிகள்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தில் அமைந்து உள்ள மாதவராயர் பாலர் பள்ளி மன்றம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி 54 நலிவுற்ற ஏழை முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மன்ற செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இதில் 51 நலிவுற்ற பெண் முதியோர்களுக்கும் 3 நலிவுற்ற ஆண் முதியோர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் நலிவுற்ற ஏழை முதியோர்களுக்கு இலவச வேட்டி-சேலையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாதவராயர் பாலர் பள்ளி குழந்தைகள், மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பழங்கால, தற்கால அளவை முறைகளைப் பற்றி அனந்த சுப்பிரமணியம் எடுத்துரைத்தார்.
- இரண்டாம் அமர்வில் தமிழ் பிராமி, வட்டெழுத்து , கிரந்தம் ஆகிய மொழிகளை நாகராஜன் அறிமுகம்
நாகர்கோவில் :
சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் 2 நாள் தொல்லியல் கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவி ஆண்டே நிஷ்மா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஸ்வரன், துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங், கல்லூரி தாளாளர் டாக்டர் மரியவில்லியம், சிவில் துறை தலைவர் ஜெஸ்சிமோள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக செம்பவளம் ஆய்வு தளம் இயக்குனர் செந்தீ நடராசன் பங்கேற்று கோவில் கட்டிடக்கலை பற்றி விளக்கினார். இரண்டாம் அமர்வில் தமிழ் பிராமி, வட்டெழுத்து , கிரந்தம் ஆகிய மொழிகளை நாகராஜன் அறிமுகம் செய்து பயிற்சி கொடுத்தார். அதன் பின் பழங்கால, தற்கால அளவை முறைகளைப் பற்றி அனந்த சுப்பிரமணியம் எடுத்து ரைத்தார்.
2-ம் நாள் களப்பணியாக பத்மநாபபுரம் தொல்லியல் காட்சியம், திருவதாங்கோடு புனித தோமஸ், பெரியநாயகி அம்மாள் சர்ச்சி கல்வெட்டை மணவர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவில் துறை பேராசிரியர்கள், பேராசிரியர் ஸ்மைலின் சைனி, நூலக அறிவியல் துறை தலைவர் டாக்டர் விஜயகுமார் , தமிழ் மன்ற பொறுப்பாளர் பேராசிரியர் மேரி ஜெனிதா செய்திருந்தனர்.
- இன்று தொடங்கி உள்ள இருசக்கர வாகன பேரணியானது மொத்தம் 13 நாட்கள் பயணித்து வருகிற 27-ந்தேதி முடிவடைகிறது.
- தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி 504 பிரசார மையங்கள், 38 தெருமுனை பிரசாரங்கள் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி:
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த மாநாட்டுக்கான ஆயத்த பணிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை இளைஞரணி நிர்வாகிகள் மூலம் நடத்தி வருகிறார்.
இதன் அடுத்த கட்டமாக இப்போது இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இருசக்கர வாகன பிரசாரத்தை கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த இருசக்கர வாகன பிரசார பேரணியில் 188 மோட்டார் சைக்கிள்கள் செல்கின்றன. இந்த பேரணி 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்ல உள்ளது.
இன்று தொடங்கி உள்ள இருசக்கர வாகன பேரணியானது மொத்தம் 13 நாட்கள் பயணித்து வருகிற 27-ந்தேதி முடிவடைகிறது.
தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி 504 பிரசார மையங்கள், 38 தெருமுனை பிரசாரங்கள் நடைபெற உள்ளது. இருசக்கர வாகன பிரசாரப் பேரணி செல்லும் மாவட்டங்கள் வள்ளுவர், பெரியார், அண்ணா, கலைஞர் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8ஆயிரத்து 647கிலோமீட்டர் பயணித்து சுமார் 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.






