search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்: பயிற்சி மருத்துவ மாணவி-மாணவர் சி.பி.சி.ஐ.டி. போலீசில் நேரில் ஆஜர்
    X

    மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்: பயிற்சி மருத்துவ மாணவி-மாணவர் சி.பி.சி.ஐ.டி. போலீசில் நேரில் ஆஜர்

    • கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஹரிஷ், ப்ரீத்தி இருவரும் நாகர்கோவில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் சுகிர்தா. இவர் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேல்படிப்பு படித்து வந்தார்.

    கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்துகொண்ட சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.

    அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பயிற்சி மருத்துவ மாணவன் ஹரிஷ், மாணவி ப்ரீத்தி காரணம் என்று எழுதி வைத்திருந்தார். இதையடுத்து போலீசார் சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக பரமசிவம், ஹரிஷ், ப்ரீத்தி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமசிவம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் பரமசிவத்திற்கு ஆண்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஹரிஷ், ப்ரீத்தி இருவரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் இருவரும் முன்ஜாமீன் பெற்றனர். முன்ஜாமின் பெற்ற இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினார்கள். தூத்துக்குடியில் உள்ள ஹரிஷ் வீட்டிற்கும் கும்பகோணத்தில் உள்ள ப்ரீத்தி வீட்டிற்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஹரிஷ், ப்ரீத்தி இருவரும் நாகர்கோவில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். ஹரிஷ் 2 நாட்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்துகொண்ட சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்து விசாரணை நடத்தப்பட்டது.

    தற்கொலை செய்த சுகிர்தாவிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? எதற்காக அவர் உங்களது பெயரை எழுதி வைத்துள்ளார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் ப்ரீத்தி ஒரு நாள் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடமும் போலீசார் 3 மணி நேரம் விசாரித்தனர். இருவரும் கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராகுமாறு அவர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×