என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பஸ்சில் இருந்த பெண் ஒருவர் திடீரென தனது 2 பவுன் நகையை காணவில்லை என்று கூச்சலிட்டார்
    • பஸ்சில் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது

    நாகர்கோவில் :

    திங்கள் சந்தையில் இருந்து வெள்ளிச்சந்தை வழியாக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்கு இன்று காலை அரசு பஸ் வந்தது. பஸ்சில் காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் பஸ் வந்தபோது பஸ்சில் இருந்த பெண் ஒருவர் திடீரென தனது 2 பவுன் நகையை காணவில்லை என்று கூச்சலிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

    பெண் பஸ்சில் நகையை தேடி பார்த்தார். எனினும் நகை கிடைக்கவில்லை. இதையடுத்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு அண்ணா பஸ் நிலையத்துக்கு சென்றது. பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பஸ் பஸ் நிலையத்திற்கு செல்வதற்குள் போலீசார் அங்கு வந்தனர். பஸ்சை விட்டு இறங்கிய பயணிகள் அனைவரையும் சோதனை செய்தனர். ஆனால் நகை சிக்க வில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை திருடியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

    ஆனால் சம்பவம் நடந்தபோது நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் என்பதால் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியாகும். எனவே அங்கு தான் புகார் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். கோட்டார், நேசமணி நகர் போலீசார் மாறி மாறி நகை இழந்த பெண்ணை அலைக்கழித்ததால் அந்த பெண் புகார் கொடுக்காமலையே திரும்பி செல்லும் சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே பஸ்சில் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதேபோல் இன்றும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. போலீசார் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • அதிகாரியுடன் குமரி விவசாயிகள் கடும் வாக்குவாதம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் வாணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜோதிபாசு உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    பட்டணம் கால்வாய் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையும் அந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உப்பாக மாறக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    எனவே பட்டணங்கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்திற்கு தண்ணீர் வழங்கிவிட்டு குமரி மாவட்டத்தை புறக்கணிப்பது நியாயமானது கிடையாது. விவசாயிகள் வீதியில் வந்து போராடவும் தயங்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விவசாயிகள் கொதித்து போய் உள்ளார்கள். பேச்சிப்பாறை அணையில் 7 அடி தண்ணீர் இருக்கும்போதே தண்ணீர் வழங்கப்பட்டது. சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் தற்பொழுது அணையில் 40 அடி தண்ணீர் உள்ள போதும் கூட பட்டணம் கால்வாய்க்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும். தோவாளை கால்வாயில், அதிகாரிகள் அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதால் தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. மோட்டார்கள் மூலம் தண்ணீரை பாய்த்து நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. எனவே நெற் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கடுமையான நஷ்டம் அடைந்துள்ளனர். விவசாயிகள் பாதிப்பை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று குமரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தருவதற்கு கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேச்சிப்பாறை அணையை தூர்வார வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஜோதிபாசு கூறுகையில், பட்டணம் கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. பணிகள் தற்பொழுது 70 சதவீதம் முடிவு அடைந்துள்ளது. இன்னும் 20 நாட்களுக்குள் பணிகள் முடிவடைந்து செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏற்கனவே பட்டணங் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கு சிற்றாறு அணைகளில் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து விட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்பொழுது உள்ள தண்ணீரை வைத்து 20 நாட்களுக்கு விநியோகம் செய்ய முடியும்.

    விவசாயிகள் ஏற்கனவே செய்த பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    சில இடங்களில் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதிக்கு பிறகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மட்டுமே தற்பொழுது பயிர்கள் கருகும் சூழலில் உள்ளது. இரணியல் ெரயில்வே பாலத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விட்டனர். அந்த பகுதியில் தண்ணீரை அடைத்துவிட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று மாலை அல்லது நாளைக்குள் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுப்பணித்துறை அதிகாரியுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை
    • அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே தெற்கு கைலாச விளை, மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சித்திரை. இவரது மூத்த மகன் சிங் (வயது 33),கட்டிட தொழிலாளி. 2-வது மகன் ராஜகுமார். 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிங், அடிக்கடி மது குடித்துள்ளார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக சுமார் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சிங்கை தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சிங் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரது தந்தை சித்திரை மற்றும் குடும்பத்தினர் சென்று பார்த்தனர். அங்கு அழுகிய நிலையில் சிங் பிணமாக கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிங் உடலைக் கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகளை சித்தரிக்கும் காட்சிகளை பார்த்து பக்தர்கள் பரவசம்
    • 3 முறைவலம் வந்து திருவிளையாடல் காட்சிகளை சித்தரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிரெயில் நிலையசந்திப்பில் அமைந்து உள்ள குகநாதீஸ்வ ரர்கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் ஆவணி மூலதிருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான ஆவணி மூல திருவிழாகடந்த 19-ந்தேதிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவின் போது ஒவ்வொரு நாட்களும் இரவு 7மணிக்கு சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகளை சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.

    இதனை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். அப்போது தட்டுவாகனத்தில் சிவபெருமான் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க 3முறைவலம்வந்து திருவிளையாடல் காட்சிகளை சித்தரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நால்வர் திருவிழா நடக்கிறது. அப்போது பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட வாகனத் தில் சிவபெருமானுடன் நாயன்மார்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்ஆகிய 4 நாயன்மார்களும் எழுந்தருளி மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி 3முறை வலம் வந்து பானனுக்கு அங்கம் வெட்டியகாட்சி நடக்கிறது.

    ஆவணி மூலத் திருவிழா நிறைவு பெறுவதையொட்டி 29-ந்தேதி காலையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    • காலை 7 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 3 மணி வரை நீடித்தது
    • 3 சன்னதிகள் முன்பும் 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    அவர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவ தற்காக வேண்டி கோவில் உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம். இதற்காக வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் ஆகிய 3 சன்னதிகள் முன்பும் 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆய்வாளர் ஹேமதர் ரெட்டி, கோவில் பக்தர்கள் சங்க நிர்வாகி ஜெயராம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் மதுரையைச் சேர்ந்த சேவகர்கள் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 3 மணி வரை நீடித்தது. இதில் வருமானமாக ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்து 494 வசூல் ஆகி இருந்தது.

    • கைதான 4 பேர் ஜெயிலில் அடைப்பு
    • 10 வினாடிகள் மட்டுமே வீடியோ பதிவாகி இருந்தது.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் படுக்கையறை காட்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பெண்ணின் வீட்டில் செல்போனில் வீடியோ எடுத்து பரப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (37), சுமேஷ் (20), நிகேஷ் (20), பபின் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

    இந்த விவகாரம் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த வாலிபரையும், பெண்ணையும் கண்டித்தனர். பலமுறை கண்டித்தும் அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டனர். சம்பவத்தன்று வாலிபரும், இளம்பெண்ணும் வீட்டிற்குள் இருந்தனர். அப்போது வாலிபர்கள் வீட்டின் வெண்டிலேட்டர் வழியாக செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். படுக்கை அறையில் இருவரும் இருப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. 10 வினாடிகள் மட்டுமே வீடியோ பதிவாகி இருந்தது.

    இந்த வீடியோவை வாலிபர்கள் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வேகமாக சமூக வலைதளங்களில் பரவியது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதில் சுமேஷ், நிகேஷ், பபின் ஆகிய 3 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப் பது தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்பட போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    • மாரி சிவபாலன் என்பவர் மாயமாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மாரி சிவபாலனின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    திருவட்டார் : 

    குலசேகரம் அருகே சுருளோடு பகுதியில் உள்ள தோவாளை செல்லும் சானலில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் மிதந்து வந்தது. அதனை போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிணமாக மிதந்து வந்தவரின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    குமரி மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் தகவல்களையும் சேகரித்து வந்தனர். அப்போது குலசேகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு உதவியாக இருந்த தென்காசி மாவட்டம் கடையம் வெய்க்காலிபட்டி பகுதியை சேர்ந்த மாரி சிவபாலன் என்பவர் மாயமாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக குலசேகரம் போலீசில் புகார் இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாரி சிவபாலனின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வந்த அவர்கள், அங்கிருந்த உடலை பார்த்து அது மாரிசிவபாலன் தான் என உறுதி செய்தனர். அவர் அணிந்து இருந்த சட்டை, கை கடிகாரம் ஆகியவற்றை போலீசார் காண்பித்தனர். அதனை பார்த்த மாரிசிவபாலனின் தங்கை, அது தனது அண்ணனுடையது என தெரிவித்தார்.

    குலசேகரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற உறவினருக்கு துணையாக இருந்த மாரி சிவபாலன், சானலில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்த மாரி சிவபாலனின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

    • பெட்ரோல் பங்கை மூட வலியுறுத்தி போராட்டம்
    • விசைப்படகுகளும், நாட்டு படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறை முகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றன. இந்த நிலையில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் அமைக்கப் பட்டு வந்தது.

    இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி அவர்கள் கடந்த 9-ந் தேதி முதல் 15 நாட்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். இருப்பினும் மீனவர்களின் எதிர்ப்பை மீறி நேற்று பெட்ரோல் பங்க் திறக்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்தும் பெட்ரோல் பங்கை மூட வலியுறுத்தியும் சின்ன முட்டத்தில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 100-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் விசைப்படகு களும், நாட்டுப்படகுகளும் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சின்னமுட் டம் புனித தோமையார் ஆலயம் முன்பு மீனவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்ட மும் நடத்தி வருகிறார்கள். இதனால் சின்னமுட்டத்தில் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது. அங்கு பாது காப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து 16- வது நாளாக சின்ன முட்டத்தில் மீனவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. 

    • சுமார் 5 ஆண்டுகளாக மாணவிகளின் விடுதி பூட்டி கிடக்கிறது.
    • கஞ்சா அடிப்பவர்கள் போதை தலைக்கு ஏறியதும் இந்த விடுதியில் தான் படுத்து தூங்கிறார்கள்

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதன் அருகில் மாணவியர் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த மாணவியர் விடுதி 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

    அரசு மேல்நிலைப்பள்ளி யில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு வெளியூர்களில் இருந்து படிக்க வரும் மாணவிகள் தங்கி படிப்ப தற்காக 2 மாடி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு சில காலம் மட்டும் மாணவிகள் தங்கி படித்தார்கள். அதன்பிறகு பள்ளியில் வெளியூர்களில் இருந்து படிக்க வரும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்ததால், விடுதியில் மாணவிகள் யாரும் தங்கு வது இல்லை. தற்போது பள்ளியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகள் மட்டும் தான் படித்து வருகிறார்கள். இதனால் சுமார் 5 ஆண்டுகளாக மாணவிகளின் விடுதி பூட்டி கிடக்கிறது.

    இந்த நிலையில் மாணவிகளின் விடுதி கேட் உடைக்கப்பட்டு திறந்தே இருக்கிறது. இரவு நேரங்களில் இந்த விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. விடுதியின் உள் பகுதியில் உள்ள கதவு ஜன்னல்கள், அலமாரிகள் உடைக்கப் பட்டு திருடப்பட்டு இருக்கி றது. கேட் எப்போதும் திறந்து இருப்பதால் மது பிரியர்கள் இரவு நேரங்களில் மது அருந்துவதற்கும், சூதாட்டம் நடத்துவதற்கும் இந்த விடுதியை பயன்ப டுத்துகிறார்கள்.

    மேலும் கஞ்சா அடிப்பவர்கள் போதை தலைக்கு ஏறியதும் இந்த விடுதியில் தான் படுத்து தூங்கிறார்கள். இந்த விடுதியில் வைத்து பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறும் முன் அரசு தக்க நடவடிக்கை எடுத்து விடுதியை பாதுகாக்க வேண்டும்.

    பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் இந்த விடுதி சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. ஆனால் இன்று பாழடைந்து மது பிரியர்களின் கூடாரமாக இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு இந்த கட்டிடத்தை சீரமைத்து அரசின் வேறு அலுவலங்க ளுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நோயாளிகளுடன் இருப்பவர்கள் தங்கும் அறையை திறந்து வைக்கிறார்
    • ரூ.1.10 கோடி மதிப்பில் ஆறுதேசம் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

    நாகர்கோவில் :

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதா வது:-

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். அவர் அன்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடை பெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ மனையில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நோயாளிகளுடன் இருப்பவர்கள் தங்கும் அறையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இடைக்கோடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தையும், ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உடையார்விளையில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.

    மேலும் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் ஆயுர்வேத மருந்து செய்நிலைய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.1.10 கோடி மதிப்பில் ஆறுதேசம் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

    28-ந்தேதி (திங்கட்கி ழமை) நடப்போம் நலம் பெறுவோம் என்னும் நோக்கில் பொதுமக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்வ தற்கான தேர்வு செய்யப்பட்ட இடமான கன்னியாகுமரி சூரிய ஆஸ்தமன முனை முதல் பரமாத்மலிங்கபுரம் தபால் நிலையம் வரை ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் தூத்துக்கு டிக்கு செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜய் வசந்த் எம்.பி. அவரின் சொந்த நிதியில் இருந்து லேப்-டாப் பள்ளிக்கு வழங்கினார்
    • பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு பகுதியில் சகாயாமாதா நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் பயன்பாட்டிற்காக விஜய் வசந்த் எம்.பி. அவரின் சொந்த நிதியில் இருந்து லேப்-டாப் பள்ளிக்கு வழங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் தெய்வமலர்வழி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பொன்மனை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜான் போஸ்கே முன்னிலை வகித்தார்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், கவுன்சிலர்கள் சுஜா, ஜாஸ்மின், அமலா புஷ்பம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
    • குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட மேற்கண்ட இனமக்கள் (ஆண்/பெண்) 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர், மிகப்பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த (ஆண்/ பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்து பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப் பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் சென்னைக்கு பரிந்துரை செய்யப்படும்.

    பயனாளிகளுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளாக குழு உறுப்பினர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைதளத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×