என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேக்காமண்டபம் அருகே மாயமான தொழிலாளி தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்
- மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை
- அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவட்டார் :
திருவட்டார் அருகே தெற்கு கைலாச விளை, மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சித்திரை. இவரது மூத்த மகன் சிங் (வயது 33),கட்டிட தொழிலாளி. 2-வது மகன் ராஜகுமார். 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிங், அடிக்கடி மது குடித்துள்ளார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக சுமார் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சிங்கை தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சிங் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரது தந்தை சித்திரை மற்றும் குடும்பத்தினர் சென்று பார்த்தனர். அங்கு அழுகிய நிலையில் சிங் பிணமாக கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிங் உடலைக் கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






