search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெற்பயிர்கள் கருகியதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
    X

    நெற்பயிர்கள் கருகியதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • அதிகாரியுடன் குமரி விவசாயிகள் கடும் வாக்குவாதம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் வாணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜோதிபாசு உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    பட்டணம் கால்வாய் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையும் அந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உப்பாக மாறக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    எனவே பட்டணங்கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்திற்கு தண்ணீர் வழங்கிவிட்டு குமரி மாவட்டத்தை புறக்கணிப்பது நியாயமானது கிடையாது. விவசாயிகள் வீதியில் வந்து போராடவும் தயங்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விவசாயிகள் கொதித்து போய் உள்ளார்கள். பேச்சிப்பாறை அணையில் 7 அடி தண்ணீர் இருக்கும்போதே தண்ணீர் வழங்கப்பட்டது. சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் தற்பொழுது அணையில் 40 அடி தண்ணீர் உள்ள போதும் கூட பட்டணம் கால்வாய்க்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும். தோவாளை கால்வாயில், அதிகாரிகள் அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதால் தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. மோட்டார்கள் மூலம் தண்ணீரை பாய்த்து நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. எனவே நெற் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கடுமையான நஷ்டம் அடைந்துள்ளனர். விவசாயிகள் பாதிப்பை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று குமரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தருவதற்கு கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேச்சிப்பாறை அணையை தூர்வார வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஜோதிபாசு கூறுகையில், பட்டணம் கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. பணிகள் தற்பொழுது 70 சதவீதம் முடிவு அடைந்துள்ளது. இன்னும் 20 நாட்களுக்குள் பணிகள் முடிவடைந்து செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏற்கனவே பட்டணங் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கு சிற்றாறு அணைகளில் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து விட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்பொழுது உள்ள தண்ணீரை வைத்து 20 நாட்களுக்கு விநியோகம் செய்ய முடியும்.

    விவசாயிகள் ஏற்கனவே செய்த பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    சில இடங்களில் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதிக்கு பிறகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மட்டுமே தற்பொழுது பயிர்கள் கருகும் சூழலில் உள்ளது. இரணியல் ெரயில்வே பாலத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விட்டனர். அந்த பகுதியில் தண்ணீரை அடைத்துவிட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று மாலை அல்லது நாளைக்குள் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுப்பணித்துறை அதிகாரியுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×