என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (47). விவசாயி.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆன் லைன் மூலம் 19,500 ரூபாய் மதிப்புள்ள டி.வி.யை வாங்கியுள்ளார். 4½ மாதத்தில் அதில் பழுது ஏற்பட்டது.
இதனால் ஜீவானந்தம் காஞ்சீபுரம் மேட்டு தெருவில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு சென்று முறையிட்டுள்ளார். அவர்கள் 10 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனர்.
பின்னர் சில நாட்களுக்கு பின் ஜீவானந்தத்தை தொடர்பு கொண்ட அவர்கள் டிவியை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். டி.வி.யை கொண்டு சென்ற ஜீவானந்த்திடம் புதிய பேனல் மாற்ற 13,000 ரூபாயை கேட்டுள்ளனர். அதற்கு அவர் டி.வி.க்கு ஒருவருடம் வாரண்டி உள்ளது. எனவே நான் பணம் தரமுடியாது என கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் ஆன்லைனில் வாங்கினால் வாரண்டி கிடையாது என கூறியுள்ளனர். இதனால் மனஉச்சலுக்கு ஆளான அவர் ஆன்லைன் நிறுவ னத்தின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கூறிய தற்கு அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. பலநாள் அலைகழிப்பிற்கு பின்னர் பழுதுநீக்க ரூ. 7 ஆயிரம் செலுத்துமாறு கூறி யுள்ளனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அவர் 19.9.2016 அன்று செங்கல் பட்டில் அமைந்துள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் நிறுவனமும், டிவி. சர்வீஸ் சென்டரும் தனக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காக 2 லட்சமும், வழக்கு செலவாக ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த வழக்கினை விசாரணை செய்த மாவட்ட நுகர்வோர் குறை தீர்மன்ற நீதிபதிகள் சிவானந்த ஜோதி, பாபு வரதராஜன் ஆகியோர் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கினர்.
தீர்ப்பில் ஜீவானந்தத்திற்கு ஆன்லைன் நிறுவனம் மற்றும் சர்வீஸ் சென்டர் ஆகியோர் தனித் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து டி.வி. வாங்கியதற்கான தொகை 19,500 ம் வழக்கு செலவிற்காக ரூ. 10 ஆயிரமும், வாடிக்கையாளருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ. 20 ஆயிரம் ரூ. 49 ஆயிரத்து 500-ஐ 2 மாத காலத்திற்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
தவறும்பட்சத்தில் தொகை முழுவதற்கும் உத்தரவு வழங்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தப்படும் காலம் வரை ஆண்டிற்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென உத்தரவில் தெரிவித்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெற்கு மாட வீதியில் உள்ள சித்திரைகுளம் அருகே 300-க்கும் மேற்பட்ட பழம், பூ, காய்கறி கடைகள் உள்ளன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இன்று காலை அங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருக்கிறது என்று கூறி கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பொருட்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். திடீரென்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது வியாபாரிகள் கூறும்போது, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். திடீரென்று கடைகளை அகற்ற சொன்னால் என்ன நியாயம். இதை நம்பிதான் நாங்கள் வாழ்கிறோம். கடைகளை அகற்றினால் மாநகராட்சி முன்பு தீக்குளிபோம்” என்றனர்.
அவர்களிடம் அதிகாரிகள், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் ஸ்ரீராமானுஜரின் 1000-வது ஆண்டு அவதார உற்சவம் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. இந்த விழா மே 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
வழக்கமாக ராமானுஜர் காவி உடையில் தான் காட்சி தருவார். ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் வெள்ளை ஆடை அணிந்து குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருவார். இந்த விழா நேற்று நடைபெற்றது. இது கூரேச விஜயம் என அழைக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வருகிற 30-ந் தேதி ராமானுஜர் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் வலம் வருகிறார். மே 1-ந் தேதி ராமானுஜர் அவதரித்த திருவாதிரை நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை, ஆராதனை திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இந்த இரு விழாக்களிலும் தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், ஜீயர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக கோவிலை சுற்றிலும் புதியதாக சாலைகள் போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட நவீன ரெடிமேட் கழிவறைகள் வைக்கவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
திருதேர் அன்று அன்னதான வழங்க பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னர் தான் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பேரூராட்சி முழுவம் பிளாஸ்டிக் பொருட்கள் கேரிபேக், பாக்கெட் தண்ணீர், மோர் பாக்கெட் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
விழாவை முன்னிட்டு 30-ந் தேதி முதல் 2-ந்தேதி வரை 3 நாட்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் வேலூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் இந்திரா காந்தி சிலை அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து காஞ்சீபுரம், வேலூர் செல்லும் பஸ்கள் ஸ்ரீபெரும் புதூர் நுழைவு வாயிலில் அருகே நின்று பைபாஸ் வழியாக செல்லும். பக்தர்களின் கார்கள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் வன போஜன மடம் அருகே நிறுத்த வேண்டும். விஐ.பி. கார்கள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் மற்றும் ஜெயின் கோவில் அருகே நிறுத்தப்படும்.
பெண் பக்தர்கள் அனைவருக்கும் பெண் காவலர்கள் மூலம் செயின் பறிப்பு சம்பவத்தை தடுக்க சேப்டி பின் அணிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் இருந்து 1000 க்கும் மேற்பட்ட போலீசாரார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற துணை சபாநாயகரும் அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க. 2 அணிகளாக பிரிந்த பின்னர் பெரும்பாலான தொண்டர்கள் இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அதன் அடிப்படையில் 2 அணிகளும் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்த சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் இரு அணிகளும் இணையும். இரு அணியினரிடமும் அதற்கான ஆர்வம் தெரிகிறது.
பெரும்பாலான தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. தினகரன் மற்றும் சிலர் கட்சியை விட்டு ஒதுங்கி இருப்பதாக கூறிவிட்டனர். அதன் அடிப்படையிலும், பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரம். அது பற்றி மற்ற கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம். அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்திரமேரூர் பஜார் வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகன்லால். நேற்று இரவு 10.30 மணி அளவில் கடையை பூட்டி விட்டு சென்றனர்.
நள்ளிரவில் கடையில் இருந்து பயங்கர புகை மூட்டம் வெளியேறியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கடை உரிமையாளர் மோகன்லாலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்த போது துணிகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
தகவல் அறிந்த உத்திரமேரூர் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் ஆகியங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால் ஜவுளிக்கடையில் இருந்த அனைத்து துணிகளும் எரிந்து நாசமானது. பல லட்சம் ரூபாய் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரத்தை அடுத்த சாலபோகம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த மனோகர், ராகவேந்திரன், குமரவேல் ஆகியோரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சுங்குவார் சத்திரம் பகுதியில் ஆற்று படுகையில் இருந்து லாரி மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதேபகுதியைச் சேர்ந்த பிரகாசை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது24). இவர் மோட் டார்சைக்கிளில் ஏனாத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மினி லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அன்பரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
விபத்தினை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் அன்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
ஜெர்மன் நாட்டு பெண் லோமன் ஜென்னி மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்தார்.
கடந்த 2-ந் தேதி பட்டிப்புலம் கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட்ட போது தன்னை 3 பேர் கற்பழித்ததாக மாமல்லபுரம் போலீசாரிடம் முதலில் புகார் கொடுத்தார்.
பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது பத்திரிகையாளர்களிடம் 2 பேர் கற்பழித்ததாக கூறினார்.
மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகள் வேண்டாம், புகார் கொடுத்ததற்கான அறிக்கை மட்டும் கொடுங்கள் என்றார்.
எனினும் போலீசார் அதை மறுத்து 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். சைபர்கிரைம், உளவுத்துறை, கடலோர காவல்படை, ஊர்க்காவல் படை என ஒத்துழைப்புடன் அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி கற்பழிப்பு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இது தொடர்பாக சந்தேகப்பட்ட நபர்களின் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை லோமன்ஜென்னிக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி விசாரித்தனர். ஆனால் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தொடர்ந்து கூறி வந்தார். இதனால் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் வாரணாசி சென்றிருந்த லோமன் ஜென்னி அங்கிருந்து போலீசாருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் விசாரணை அறிக்கைகளை மட்டும் அவரது நாட்டு தூதரகம் மூலம் வாங்கி விட்டு ஜெர்மன் சென்று விட்டார்.
இதனால் தற்போது அந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அவர் யார், அங்கு என்ன தொழில் செய்கிறார். இந்திய நாட்டின் மீது அவப்பெயர் சுமத்துவதற்காக பொய் புகார் கொடுத்தாரா என்று விசாரித்து வழக்கை பொய் வழக்காக முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மீனாட்சி. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 25). நெம்மேலி அரசு கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமனின் மனைவி தரணிக்கும் மீனாட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ராமனின் தரப்பினர் மீனாட்சியின் மகன் மணிகண்டனை சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராமன், அவரது மனைவி தரணி, தேவன் ஆகியோரை கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி இவரது கணவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு விசாலாட்சி, அரசாணி மங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் ஜன்னலை உடைந்து இருந்தது. பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கம் ½ கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதே போல் அருகில் உள்ள கங்கை அம்மன் கோவிலுக்குள் புகுந்த கொள்ளைகும்பல் உண்டியலை உடைத்து பணத்தை சுருட்டி சென்று உள்ளனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் கடந்த 15-ந் தேதி புதிய மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று இரவே அப்பகுதி மக்கள் மதுக்கடையை உடைத்து சூறையாடினர்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 132 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. 9 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரால் தேடப்பட்ட ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்தது.
சில நாட்களுக்கு முன்பு, மதுக்கடையை மூடக்கோரி படூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆகாஷ் தனி ஒருவனாக போராட்டத்தில் குதித்தான்.
அவன் பள்ளிச்சீருடையில் புத்தக பையுடன் சாலையில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டான். அவனை போலீசார் சமாதானம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சிறுவன் ஆகாஷ், படூரில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி மீண்டும் அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 13 பேருடன் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றான். அவர்கள் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனுவை நேரடியாக அளித்தனர்.
அதில், எங்களது படூர் கிராமத்தில் இதுவரை மதுபானக்கடை திறக்கப்பட்டது இல்லை. ஒரு சில நாட்களுக்கு முன் படூரில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டது.
அதனை எதிர்த்து போராடிய பொதுமக்கள் பலர் மேல் வழக்கு போடப்பட்டு, அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளார்கள்.
மதுவால் ஏற்கனவே எங்களது கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பு என்பது எங்கள் கிராம மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழித்து விடும். உடனடியாக எங்களது கிராமத்தில் உள்ள மதுக்கடையை மூடுவதுடன், படூர் கிராமப் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் வேறு எங்கும் மதுக்கடையை புதியதாகவும் திறக்கக்கூடாது என்ற ஆணையை வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து படூரில் உள்ள மதுக்கடையை மூட கலெக்டர் பொன்னையா அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து அந்த மதுக்கடை நேற்று மாலை உடனடியாக மூடப்பட்டது.
மதுக்கடை மூடப்பட்டதால் படூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுக்கடைக்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக முறையிட்ட சிறுவன் ஆகாஷ் உள்பட மாணவ-மாணவிகளை அவர்கள் பாராட்டினர்.
சிறுவன் ஆகாஷ் தற்போது 2-ம் வகுப்பு முடித்துவிட்டு 3-ம் வகுப்புக்கு செல்ல இருக்கிறான். அவன் ஏற்கனவே ஹெல்மெட் விழிப்புணர்வு, சீமை கருவேல மர ஒழிப்பு, நாட்டு கோழி வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு செய்து உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த படூர் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏராளமான மதுக்கடைகள் அடைக்கப்பட்டது. மேலும் அதற்கு பதிலாக புதிதாக சி.ஏ.எம். பகுதியில் கடைகள் திறக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூர் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதனை கண்டித்து அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “படூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.






