என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 90.62 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    பள்ளிக் கல்வித்துறை சார்பாக கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வினை காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த 43 ஆயிரத்து 451 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    பொது பாடத்தேர்வில் 41 ஆயிரத்து 842 மாணவ-மாணவிகளும், தொழில் பாடப்பிரிவில் 1,609 மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.

    இவர்களில் 39 ஆயிரத்து 375 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 90.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இது கடந்த ஆண்டை விட 0.72 அதிகம் ஆகும். இந்த ஆண்டு மாணவிகள் 93.40 சதவீதமும், மாணவர்கள் 87.25 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவிகளின் சதவீதம் மாணவர்களை விட 6.15 சதவீதம் அதிகம். 109 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    இந்த தகவலை முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி, கொரோனா தொற்றால் பரிதாபமாக இறந்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை அம்பாள் நகரைச் சேர்ந்தவர் பழனி (வயது 53). இவர், 1988-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

    தற்போது காஞ்சீபுரத்தில் உள்ள நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொரோனாவுக்கு உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிக்கு, தனலட்சுமி என்ற மனைவியும், ஹரிபிரசாத் (27) என்ற மகனும், லோகேஸ்வரி (25) என்ற மகளும் உள்ளனர்.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி உயிரிழந்த தகவல் கேள்விபட்டதும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, பாலுச்செட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், தனிபிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

    21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
    லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரே லாரி சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அம்பலமாகி உள்ளது.
    பூந்தமல்லி:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மேத்தா நகரைச் சேர்ந்தவர் ராஜி (வயது 70). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் டீ குடிப்பதற்காக குன்றத்தூர்-அனகாபுத்தூர் சாலையை கடக்க முயன்றதாகவும், அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதி ராஜி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்ததாகவும் கூறப்பட்டது.

    இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்தது எப்படி? என அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    சம்பவத்தன்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் ராஜி, அங்கும், இங்குமாக நடந்தபடி இருக்கிறார். அப்போது அந்த வழியாக 16 சக்கரங்கள் கொண்ட லாரி வருகிறது. அதை கண்ட ராஜி, வேகமாக லாரியின் அருகில் செல்கிறார். திடீரென அவர் லாரியின் பின்பக்க சக்கரங்களுக்கு இடையே தானாக போய் படுத்து கொள்கிறார். அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் அதே இடத்தில் பலியானார்.

    ஆனால் இதை கவனிக்காத அந்த பகுதி மக்கள், லாரி மோதி ராஜி இறந்ததாக தெரிவித்துவிட்டனர். தற்போது விபத்து வழக்காக பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இந்த வழக்கை குன்றத்தூர் போலீசாருக்கு மாற்ற உள்ளனர்.

    ஆட்டோ டிரைவரான ராஜி, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணைக்கு பின்னர் முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். லாரி சக்கரத்தில் விழுந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு தொற்று உறுதியான நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
    காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் தாட்டித்தோப்பு அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உயிரிழந்த சங்கரின் மனைவி துர்கா, காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் மேலும் 144 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,123 ஆக உயர்ந்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,123 ஆக உயர்ந்துள்ளது.
    காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் 26-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    காஞ்சிபுரம்,

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தபகுதியில் இதுவரை 128 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இந்த பகுதியில் 6 ஆயிரத்து 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது பணி நிமித்தமாக வெளியே சென்று வருவதால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொற்று பரவவும், பிற பகுதிகளில் இருந்து மேற்கண்ட பகுதிக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே இந்த பகுதிக்கு உட்பட்ட 21 தெருக்களையும் வருகிற 26-ந்தேதி இரவு 12 மணி வரை முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த பகுதி மக்களுக்கு வீடு, வீடாக சென்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக எழுந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுடன் செங்காடு சங்கோதி அம்மன் கோவில் அருகே சென்றார். அங்கு எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி இருந்தார். அப்போது நிலம் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார்.

    அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது அந்த குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதேபோன்று படுகாயம் அடைந்த இமயம்குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று இச்சம்பவம் தொடர்பாக திருப்போரூர் காவல் நிலையத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, ஜஜி நாகராஜன், எஸ்.பி.கண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக எஸ்.பி. கண்ணன் கூறுகையில் ‘‘திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார். கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குமார் என்பவர் தனது பட்டா நிலத்தில் கால்வாய் அமைப்பதாக புகார் அளித்திருந்தார். வாய்தகராறு முற்றி இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

    திருப்போரூர் எம்எல்ஏவும், அவரது தந்தையும் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். கோஷ்டி மோதல் தொடர்பாக இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்போரூர் கோஷ்டி மோதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

    இந்நிலையில் எம்.எல்.ஏ. இதயவர்மன் மேடவாக்கம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    கால்வாயில் கழிவுநீரை திறந்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய ரவுடி உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம்(வயது 50). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், இவரது வீட்டின் அருகில் உள்ள அஞ்சலி என்பவருக்கும் கால்வாயில் கழிவுநீர் திறந்து விடுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அஞ்சலி தனது மகனும், ரவுடியுமான குறளரசன்(22) என்பவரிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், செல்வத்தை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி குறளரசன், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த செல்வத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.

    அங்கு செல்வத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் கொலையான செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவுடி குறளரசன் உள்பட 5 பேரையும் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,259 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 82,324 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,829-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 3,099 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,259 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 1,260 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 42 பேர் உயிரிழந்துள்ளனர். 
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரியும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட தனிபிரிவு போலீஸ் அலுவலகம் மூடப்பட்டது. அதே அலுவலகத்தில் 2-வது மாடியில் அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

    மேலும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரியை சேர்ந்த 39 வயது ஆண் ஒருவர் காஞ்சீபுரம் மாவட்டம் சென்னகுப்பம் ஊராட்சி பகுதியில் தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

    இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 3 ஆயிரத்து 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 1,260 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,797 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 42 பேர் இறந்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள அருள்நகர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 45 வயது பெண், 70 வயது மூதாட்டி, 80 வயது முதியவர், மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 24 வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,635 ஆக உயர்ந்தது. இவர்களில் 4,355 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 7 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்தது.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி மல்லியங்குப்பம் ஊராட்சி, வேலன் தெருவில் வசித்து வரும் 38 வயது வாலிபர், ஆரணி பெருமாள் குப்பம் பகுதியில் 55 வயது ஆண் உள்பட 4 பேர், பெரியபாளையம் பஜார் தெருவில் 34 வயது பெண், பாளையக்கார தெருவில் வசித்து வரும் 32 வயது வாலிபர், எம்.கே.பி. நகரில் வசித்து வரும் 52 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளாயினர்.

    கடம்பத்தூர் ஒன்றியத்தில் 60 வயது முதியவர் உள்பட 3 பேர் என நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 219 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரையில் 6 ஆயிரத்து 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,736 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,221 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 118 பேர் பலியாகி உள்ளனர்.

    உத்திரமேரூரில் திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் மர்மமரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் திருவேங்கடம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் உத்திரமேரூர் தீயணைப்புத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மகளிர் சங்க தலைவியாக உள்ளார்.

    இவர்களுடைய மகள் செந்தாரகை (வயது 23). பட்டதாரியான இவருக்கும், உத்திரமேரூர் நரசிம்மநகரை சேர்ந்த தனியார் பெயிண்டு கம்பெனியில் வேலை பார்க்கும் யுவராஜ் (27) என்பவருக்கும் ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

    செந்தாரகை திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 வாரத்துக்கு முன்னர் தனது தாய்வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் குளியலறைக்கு சென்ற செந்தாரகை நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.

    கதவை உடைத்து பார்த்ததில் செந்தாரகை குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்தது தெரியவந்தது

    ஆனால் செந்தாரகை சாவில் மர்மம் இருப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் செந்தாரகை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஒரு மாதமே ஆனதால் காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன் விசாரணை மேற்கொண்டார். பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    ×