என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் கடந்த சுமார் 14 நாட்களுக்கு பிறகு நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த சுமார் 14 நாட்களுக்கு பிறகு நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் கடந்த 2020-ம் வருடம் மார்ச் 22-ந் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    அதில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட த்தில் 2-ம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத் தியது. 2-ம் அலையில் தினசரி பாதிப்பு அதிக பட்சமாக 1,764 வரை பதிவாகியது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

    முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன்பின் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக 2-ம் அலை கட்டுக்குள் வர தொடங்கியது.

    இதனால் மாவட்டத்தில் பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3-ம் அலை உருவாகி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். 

    தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப் பட்டதால் 3-ம் அலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று குணமடைந்தனர். 3-ம் அலையில் தினசரி பாதிப்பு 1,400 வரை பதிவாகி இருந்தது.

    பின்னர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக 3-ம் அலை பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு குறைந்த வண்ணம் இருந்தது. 

    இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இதேபோல் கடந்த  2-ந் தேதி கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இதனால் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமானது.

    இந்நிலையில் சுமார் 14 நாட்களுக்கு பிறகு நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,32,668 ஆக உயர்ந்தது. 1,31,933 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை மாவட்டத்தில் 734 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். தற்போது ஒருவர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
    அந்தியூர் அருகே டிப்பர் லாரி மோதி பலியான முதியவர் உடலை மீட்டு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே டிப்பர் லாரி மோதி பலியான முதியவர் உடலை மீட்டு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்  பகுதியை சேர்ந்தவர் பகுதியை சேர்ந்தவர் பெத்தாகவுண்டர் (வயது 75). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பெத்தாகவுன்டர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பெத்தாகவுண்டர் சைக்கிளில் கரடி நாயக்கனூருக்கு சென்று கொண்டிருந்தார். பிரம்மதேசம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக பெத்தாகவுண்டர் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காய மடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த பழைய மஞ்சாள நாயக்கனூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(32) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வறட்சியினால் பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாடுகளை வாங்கி செல்வதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    வறட்சியினால் பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாடுகளை வாங்கி செல்வதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையானது வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெற்று வருகின்றது.

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, நேபாளம், மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் பசுமாடு 450, எருமை 250, கன்றுக்குட்டிகள் 50 என 750-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் வியாபாரிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வாங்கிச் செல்ல தயக்கம் காட்டியதால் விற்பனை பாதி அளவு மட்டுமே நடைபெற்றதாக சந்தை வியாபாரிகள் கூறினர்.

    வறட்சியினால் பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாடுகளை வாங்கி செல்வதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வருவதாக வியாபாரிகள் கூறினர்.

    இது குறித்து மாட்டு சந்தை வியாபாரிகள் கூறியதாவது: கோடை காலத்தில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை வழக்கமாகவே அதிகரிப்பது வழக்கம்.

    இந்தாண்டு வெயில் சுட்டெரிப்பதால் பசுந்தீவன ங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. விவசாயிகள் உலர் தீவனங்கள் இருப்பு வைத்துள்ளதால் ஓரளவு சமாளித்து விடுகின்றனர்.

    ஆனால் கால்நடை வளர்ப்போர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தினமும் உலர் தீவனங்கள் வாங்க ரூ.150 வரை செலவிட வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் வேறுவழியின்றி சந்தைக்கு விற்பதற்கு மாடுகளை அதிக அளவில் கொண்டு வருகின்றனர்.

    ஆனால் சந்தையில் இருந்து வாங்கி செல்ல வியாபாரிகள் குறைவாகவே வருகின்றனர். குறிப்பாக கேரளா மாநில வியாபாரிகள் வருகை பா தியாக குறைந்து விட்டதால் சந்தையில் மாடுகள் விற்பனை பாதியாக குறைந்து விட்டது.  ஆனாலும் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    இலங்கை தொழிலதிபரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்த சென்னிமலை ஜவுளி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    சென்னிமலை:

    இலங்கை தொழிலதிபரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்த சென்னிமலை ஜவுளி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் அப்துல் அஷ்ரப் முகம்மது ரஹீம். இவர் இந்தியாவில் இருந்து ஜவுளி ரகங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து வருகிறார்.

    இந்நிலையில் சென்னிமலை, சரண் டெக்ஸ் ஜவுளி நிறுவனத்திடம் ஜவுளி வாங்க கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆர்டர் கொடுத் துள்ளார். ஜவுளிக்கான முழு தொகையையும் அனுப்பினால் ஜவுளிகளை அனுப்புவதாக சரண் டெக்ஸ் மோகனவண்ணன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதன் அடிப்படையில் 2 தவணைகளாக மொத்தம் ரூ. 41 லட்சம் வங்கி மூலம் சரண் டெக்ஸ் மோக னவண்ணனுக்கு அனுப்பி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட இவர் இலங் கையை சேர்ந்தவருக்கு குறிப்பிட்ட காலத்தில் ஜவுளி அனுப்பாமல் தாமதம் செய்துள்ளார்.

    இதையடுத்து உடனே ஜவுளி அனுப்புமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால், ஜவுளிகள் அனுப்பவில்லை. மோகனவண்ணனிடம் இருந்து சரியான பதில் இல்லை. இதை தொடர்ந்து இந்திய தூதரகம் மூலம் தமிழக போலீசாருக்கு கடந்த மாதம் இ-மெயில் மூலம் தொழிலதிபர் அப்துல் அஷ்ரப் முகம்மது ரஹீம் புகார் செய்துள்ளார். 

    இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சென்னிமலை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து. ரூ.41 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஜவுளி அனுப்பாத சென்னிமலை ஜவுளி நிறுவனத்தினரிடம் விசாரணை நடத்தி வந்தனர். 

    இலங்கையை சேர்ந்த ஜவுளி வியாபாரி ரூ.41 லட்சம் பணத்தை வங்கி மூலம் அனுப்பியதற்கான ஆவணங்களை போலீசா ரிடம் கொடுத்தது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து சென்னையில் முகாமிட்டு இருந்த மோகன வண்ணனை சென்னிமலை போலீசார் கண்காணித்து வந்தனர். 

    பின்னர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் வைத்து அவரை போலீசார் கைது செய்து நேற்று சென்னி மலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் மோகனவண்ணன் பெருந்துறை கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் 15 நாள் அடைக்கப்பட்டார்.
    பவானியில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானியில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி கோட்டைநகர் செங்காடு பகுதியை சேர்ந்த மான் அருள்ராஜ் (47). மளிகை கடையில் கூலி வேலை செய்து வந்தார். 

    இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அருள்ராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. 

    கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அருள்ராஜ் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து பவானி போலீசார்   வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொழிலாளர்கள் வன்முறை எதிரொலியாக ஆயில் நிறுவனம் முன்பு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
    மொடக்குறிச்சி:

    எஸ்.கே.எம் ஆயில் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய பீகார் மாநிலத்தை சேர்ந்த காமோத்ராம் என்பவர் நேற்று இரவு நிறுவனத்துக்குள் டேக்கர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வட மாநிலத்தவர்கள் கும்பலாக சேர்ந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். மேலும் போலீசாரையும் விரட்டி அடித்தனர்.

    இதில் மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் காயமடைந்தனர். 4 போலீஸ் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ஈரோடு, பவானி, பெருந்துறை சப்- டிவிசன்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    ஏ.டி.எஸ்.பிக்கள் பாலாஜி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஆயில் நிறுவனத்தில் டேங்கர் லாரி மோதியதில் பலியான காமோத்ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்.கே.எம். பூர்ணா ஆயில் மில் இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சுற்றுபுற பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    பீகார் மாநிலம் ராம்குருவா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணராம். இவரது மகன் காமோத்ராம் (30). இவர் ஆயில் மில்லில் பாய்லர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி சம்பா தேவி மற்றும் 2 குழந்தைகளுடன் மொடக்குறிச்சி பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் காமோத்ராம் ஆயில் மில்லுக்கு வழக்கம்போல் வேலைக்கு வந்தார். அப்போது ஆயில் லோடு ஏற்றி செல்ல கம்பெனிக்கு வந்த டேங்கர் லாரியில் சிக்கி காமோத்ராம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இதையடுத்து விபத்தில் இறந்த காமோத்ராம் உடலை ஆம்புலன்சு மூலம் எடுத்து செல்ல முயன்றனர். இது பற்றி தெரிய வந்ததும் பீகார் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் ஆலையின் முன்பு கூடி விபத்தில் பலியானவருக்கு இழப்பீடு தொகை வழங்கினால் தான் உடலை எடுத்து செல்ல அனுமதிப்போம் என்று தெரிவித்தனர். மேலும் உடலை எடுக்க விடாமல் தடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் 7 போலீசார் விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தற்போது உடலை எடுத்து செல்ல அனுமதிக்கும்படியும் பின்னர் ஆலை நிர்வாகத்திடம் பேசி இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் தொழிலாளர்கள் இழப்பீடு தொகை வழங்கிய பின்புதான் உடலை எடுக்க வேண்டும் என்று கூறினர். சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

    நேரம் செல்ல செல்ல தொழிலாளர்களுக்கும், ஆலை நிர்வாகத்துக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களை கொண்டு போலீசார் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் மீது தாக்க தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பிக்க போலீசார் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் அறைகளில் பதுங்கி கொண்டனர். வடமாநில தொழிலாளர்கள் கம்பெனியின் முன்பகுதியில் இருந்த காவலர் அறையின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களையும் சூறையாடினர்.

    இந்த சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் தீபா உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர். மேலும் தொழிலாளர்கள் அங்கு இருந்த 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் 10-க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இரவு நேரத்தில் வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே போர்களம் போல காட்சி அளித்தது.

    இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு அதிரடிப்படை போலீசாருடன் விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் கம்பெனி வளாகத்துக்குள் நுழைந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். ஆனாலும் போலீசார் வன்முறையில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி மொடக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து ஆலை வளாகத்தில் ஏ.எஸ்.பி. கவுதம் கோயல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜானகிராமன், பாலாஜி ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    மேலும் டேங்கர் லாரி மோதியதில் பலியான காமோத்ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்களை அடையாளம் கண்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த மாதம் போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக 10 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த மாதம் போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக 10 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.3  லட்சத்து 4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக  போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு தெற்கு, வடக்கு போக்குவரத்து போலீசார் மாநகர் பகுதி முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக 10,756 வழக்குகள் இந்த இரு போக்குவரத்து போலீ சாரால் பதிவு செய்யப் பட்டுள்ளது.

    இதில் தெற்கு போக்குவரத்து போலீசில்  மொபைல் போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 201 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓடியதாக 1592 வழக்குகள்,  ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாக 1010 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 149, டிரைவிங் லைசன்ஸ் இன்றி சென்றது 121,  3 பேர் அமர்ந்து சென்றது 140 என மொத்தம் 4,164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் வடக்கு போக்குவரத்து போலீசில் மொபைல் போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 94 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2762, ஹெல்மெட் அணியா மல் பின்னால் அமர்ந்து சென்றதாக 2424, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 234, 3 பேர் சென்றதாக 199 என மொத்தம் 6,592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதன் மூலம் ரூ.3  லட்சத்து 4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக  போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.33 காசுக்கு விற்பனை செய்வதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.33 காசுக்கு விற்பனை செய்வதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்& டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    கடந்த மாதம் 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் விலை விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

    ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.58-க்கு விற்பனை யானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ. 100.68-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல், விலை உயர்ந்துள்ளது.

    ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 75 காசுகள் அதிகரித்து ரூ.111.33 காசுக்கு விற்பனை ஆனது. இதேப்போல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் அதிகரித்து ரூ.101.44 காசுக்கு விற்பனை ஆனது.

    அதாவது கடந்த 15 நாட்களில் 13 முறை பெட்ரோல் டீசல், விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர்.

    இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பவானி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    பவானி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (52). தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். 85 வயதுடைய தாய் மற்றும் மனைவி, மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். தனது தாய் சர்க்கரை நோய் காரணமாக உடல்நலக்குறைவால் இருந்தவரை சரவணன் தினசரி பராமரித்து வந்துள்ளார். 

    சம்பவத்தன்று இரவு மனமுடைந்து காணப்பட்ட சரவணன் வீட்டில் யாரும் இல்லாத போது சமையல் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்த மனைவி சரவணன் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைத்தார். 

    உடனே அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று காலை நடத்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    அந்தியூர்:

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று காலை நடத்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் பண்டிகை தொடங்கியது.

    இதனை தொடர்ந்து மகிஷாசுர வர்தனம் எனும் எருமைக் கிடாய் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.

    இதனையடுத்து 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், 30&ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வும் நடைபெற்றது.

    திருவிழாவில் இரவு நேரத்தில் அம்மன் பூத வாகனம், நரி வாகனம்,சிம்ம வாகனம் ஹம்ச வாகனம் யானை வாகனம் சட்டத் தேர் புஷ்ப பல்லாக்கு வாகனங்களில் தினந் தோறும் அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா  வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.

    இதனைத்தொடர்ந்து குண்டம் திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது.  இன்று அதிகாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக பண்டிகை நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றதால் பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். 

    டி.எஸ்.பி. கார்த்திகேயன், மது விலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தலைமையில்  100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக குண்டம் இறங்குவதற்காக தவுட்டுப் பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, பறவைக்காவடி எடுத்து கோவிலுக்கு வந்தனர்.

    தொடர்ந்து 8-ந் தேதி மாலை தேர் திருவிழா தொடங்கி 11-ந் தேதி வரை அம்மன் முக்கிய வீதிகள் வழியாக பக்தர் களுக்கு அருள்பாலித்து  மாலை நிலையை வந்து அடையும். 12-ந் தேதி பரிவேட்டையும், 13-ந் தேதி வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.
    விலை வீழ்ச்சி காரணமாக தாளவாடி பகுதிகளில் செடியிலேயே சின்ன வெங்காயம் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    தாளவாடி:

    விலை வீழ்ச்சி காரணமாக தாளவாடி பகுதிகளில் செடியிலேயே சின்ன வெங்காயம் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங் களான  கொங்கள்ளி,  பனக ஹள்ளி,தொட்ட காஜனூர்  பாரதி நகர், கெட்டவாடி, தலமலை  அருள்வாடி போன்ற 40&க்கும் மேற்பட்ட கிராமங்களில்  கத்திரி, வெண்டை, தக்காளி  பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டை கோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ்  ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
     
    இப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம்  சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.6 முதல் ரூ.8 விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தாளவாடி  விவசாயிகள் கூறியதாவது: 3 மாத பயிரான சின்ன வெங்காயம்  1 ஏக்கருக்கு விதை வெங்காயம், களை எடுத்தல், உரம் மருந்து என ரூ.80 ஆயிரம்  வரை செலவு ஆகிறது. அதுவும் ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.70 கொடுத்து வாங்கி ஏக்கருக்கு விதை வெங்காயம் ரூ 30 ஆயிரத்துக்கு வாங்கி நடவுசெய்தோம். கடந்த மூன்று மாதம் முன்பு ஒரு கிலோ சின்ன  வெங்காயம் ரூ.30 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தார். 

    ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ8 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். சில விவசாயிகள் அறுவடை கூலி கிடைக்காது என அறுவடை செய்யாமல் தோட்டத்தில் அப்படியே விட்டுவிட்டனர்.

    இதன் காரணமாக செடிகளிலேயே சின்னவெங்காயம் வீணாகி வருகிறது. வியாபாரிகள்  விளைச்சல் அதிகம் எனக்காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்கின்றனர். 

    பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூடகிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
    ×