என் மலர்
தர்மபுரி
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
- மொத்தம் ரூ.4 லட்சத்து 94 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று முன் தினம் 751 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,176 கிலோவாக அதிகரித்தது. அதே நேரத்தில் 1 கிலோ ரூ.525-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.24 விலை குறைந்தது.
நேற்று ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.501-க்கும், குறைந்தபட்சமாக ரூ.224-க்கும், சராசரியாக ரூ.420.27-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 94 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21.7.2023 அன்று நடைபெறுகின்றது.
- தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21.7.2023 அன்று நடைபெறுகின்றது.
இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்து கொள்ளும் "தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்" ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் வேலையளிப்பவர் கோரும் பட்சத்தில், உரிய விதிகளின்படி நேர்முகத்தேர்விற்கு பரிந்துரை செய்யப்படும்.
இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனை யாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வி த்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறு வனங்கள் தெரிவித்துள்ளன.
ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற 21.7.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு வருவது குறித்தும் மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
- பணிகளை தரமானதாகவும், உரிய கால அளவிற்குள்ளும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகின்ற 24.7.2023 அன்று தொடங்கவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பைசுஅள்ளி ஊராட்சி, சட்டக்கல்லூரி அருகே தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையில் ரூ.9.62 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தங்களையும்,
பெரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கூடத்தினையும், பெரியாம்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் பூலாப்பட்டி சாலை முதல் கதிரிக்கோட்டை வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,
அடிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டடத்தினையும், பெரியாம்பட்டி ஊராட்சியில் பிரதமரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து முத்தம்பட்டி, பேகாரஅள்ளி வழியாக புலிக்கரை வரை 5.50 கி.மீ தொலைவிற்க்கு தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,
பெரியானஅள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமானதாகவும், உரிய கால அளவிற்குள்ளும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
காரிமங்கலம் பேரூராட்சியில் இயக்கமும், பராமரிப்பும் திட்டத்தின் கீழ், ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் காரிமங்கலம் பேருந்து நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் காரிமங்கலம் வாரச்சந்தை மேம்பாட்டு பணியினையும், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு வருவது குறித்தும் மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, கலைவானி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர் கண்ணபெருமாள், வார்டு உறுப்பினர்கள் ரமேஷ், சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து முறைகேடாக மீன்குட்டைகளுக்கு ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்தி வருவதால், சம்மந்தப்பட்ட கிராமமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- அரசு பேருந்தை, காலிகுடங்களுடன் கிராம மக்கள் சம்பவத்தன்று சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், மானியதஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது மலையப்பநகர் கிராமம்.இக்கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது.
இக்கிராமத்தை சேர்ந்த குடியிருப்பு மக்களின், குடிநீர் தேவைக்காக சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் ஒகேனக்கல் குடிநீர் வழங்கி வருகிறது.
குடியிருப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பூமிக்கடியில் பிளாஸ்டிக் பைப் அமைத்து, அதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த சிலர் 4 மீன்குட்டைகள் அமைத்து, விற்பனைக்காக டன் கணக்கில் மீன்களை வளர்த்து வருகின்றனர்.
மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து முறைகேடாக மீன்குட்டைகளுக்கு ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்தி வருவதால், சம்மந்தப்பட்ட கிராமமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் பற்றக்குறையால் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு பணிக்கு செல்லும் மக்கள் நாள்தோறும் தவித்துவரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு, காரணமான மீன்குட்டை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, இதற்கு துணைப்போன பெண் டேங்க் ஆப்ரேட்டரை பணி நீக்கம் செய்யக்கோரி, மலையப்பநகருக்கு வந்த அரசு பேருந்தை, காலிகுடங்களுடன் கிராம மக்கள் சம்பவத்தன்று சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தொப்பூர் போலீசார் இணைந்து, சம்மந்தப்பட்ட மலையப்ப நகர் கிராமத்திற்கு நேரடியாக சென்று, அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து பூமிக்கடியில் முறைகேடாக, அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைப்புகளையும், ஒகேனக்கல் குடிநீர் மூலம் அமைக்கப்பட்டுள்ள 4 மீன்குட்டைகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மீன்குட்டைகளுக்கு முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட பெண் டேங்க் ஆப்ரேட்டர் நாகம்மாள் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து, முறைகேடாக பயன்படுத்திய ஒகேனக்கல் குடிநீருக்கு ரூ.8189-ஐ அபரதாமாக செலுத்திட, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் உத்தரவிட்டுள்ளார்.
- பொறியாளர்களின் வாழ்க்கை திறன்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
- முடிவில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி சீனிவாசா பொறியியல் கல்லூரியில் "பொறியாளர்களின் வாழ்க்கை திறன்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சீனிவாசா கல்வி அறக்கட்ட ளையின் கவுரவத்தலைவர் பேராசிரியர் இளங்கோவன் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் ரேவதி இளங்கோவன் தலைமை தாங்கினர்.
விழாவில் கல்லூரியின் தலைவர் ரேவதி இளங்கோவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குநர் ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தார். துறை தலைவர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் நந்தகோபால் மற்றும் நிர்வாக இயக்குனர் முருகன் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் பிரபு, எக்ஸ்செல் பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர், முதலாம் ஆண்டு மாண வர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.
முடிவில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்
மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்து
இருந்தனர்.
- வாகனம் மோதியதில் பழனியம்மாள் தூக்கி வீசப்பட்ட பலத்த காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
- இந்த விபத்து தொடர்பாக அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஜாகிரி பிரிவு ரோடு அருகே இன்று காலை 8 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (வயது75) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பழனியம்மாள் தூக்கி வீசப்பட்ட பலத்த காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இது குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து விபத்தில் இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- சிறுவன் இறந்த தகவலை அறிந்த பெற்றோர், உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மதியரசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
- சிறுவனின் உடலை பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் இல்லாமல் காலியாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் போட்டு விட்டேன்.
தருமபுரி:
தருமபுரி அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், மதியரசு (வயது6) மற்றும் 3 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். ஆதிமூலம் ஜே.சி.பி. ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது சிறுவன் மதியரசு திடீரென்று காணவில்லை.
உடனே சிறுவனின் தந்தை ஆதிமூலம் தனது உறவினர்கள் வீடுகள் மற்றும் கிராமத்தில் பல்வேறு இங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ் என்பவருடைய மகன் பிரகாஷ் (வயது19) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் பிரகாஷிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சிறுவன் மதியரசை கொலை செய்து அருந்ததியர் காலனி பகுதியில் பயன்பாட்டிற்கு இல்லாத தண்ணீர் இன்றி காலியாக இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உடலை போட்டுள்ளதாக தகவல் தெரிவித்தான்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.
சிறுவன் இறந்த தகவலை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மதியரசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பிடிபட்ட பிரகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
கடந்த 16-ந் தேதி மாலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மதியரசுவை நான் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றேன்.
இதுகுறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் சொல்லிவிடுவான் என்று பயத்தில், அந்த சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
அதன்பின்னர் யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் இல்லாமல் காலியாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் போட்டு விட்டேன்.
மாயமான சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் கூறியதால், போலீசார் சிறுவனை தேடி என்னிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் நான் மாட்டி கொண்டேன் என்று போலீசாரிடம் பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் கொலை செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுவன் மதியரசு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆதிமூலம், அவரது மனைவி சுதா ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
- உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
மாயமான மதியரசு ஓரினச்சேர்க்கைக்காக கொலை செய்யப்பட்டு அதேபகுதியில் உள்ள கேட்பரான்றி கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பிணமாக கிடந்த சம்பவம் தொடர்பாக காட்டம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை கிருஷ்ணாபுரம் போலீசார் கைது செய்தனர்.
அதன்பின்னர் போலீசார் மதியரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் மதியரசு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆதிமூலம், அவரது மனைவி சுதா ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மதியரசுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மதியரசுவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் கிருஷ்ணாபுரம் நிலையத்தில் திரண்டனர்.
அப்போது அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் பிரகாஷ் மட்டுமல்லாமல் வேறு சில நபர்களும் கூட்டுசேர்ந்து செய்திருக்க வாய்ப்புள்ளது, அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் டி.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சர்மிளாபானு, ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் அங்கு விரைந்து வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த கொலையில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறினர். இதனை ஏற்காத உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டமும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மதியரசு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.
- தந்தை ஆதிமூலம் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் காட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் மதியரசு (வயது6).
இந்த சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து விட்டு சிறுவன் வீட்டிற்கு வந்தான். பின்னர் அந்த மதியரசு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டின் வெளியே வந்து பார்த்த போது அந்த சிறுவனை காணவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் மதியரசு கிடைக்காததால், சிறுவன் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து தந்தை ஆதிமூலம் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வழி தவறி வேறு எங்கேயாவது சென்று விட்டனா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனம் சாலையில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
- பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் நவீன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தருமபுரி,
ஈரோடு மாவட்டம் சேர்வராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் நவீன்குமார் (வயது22). இவர் பி.இ. மெக்கானிக் படித்து விட்டு ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்ற நவீன்குமார். நேற்று ஓசூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நவீன்குமாரை அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் நவீன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நவீன் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நவீன் குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காமராஜரின் உருவ படத்திற்கு பள்ளியின் தாளாளர் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர், கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
காமராஜரின் உருவ படத்திற்கு பள்ளியின் தாளாளர் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவர்களின் அணிவகுப்பை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கல்வி வளர்ச்சியை ஊக்குப்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் மாணவர்களின் அணிவகுப்பில் ஊர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி , நாடகம் மற்றும் நடனம் என பல போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- வெண்ணாம்பட்டி ஹவுசிங்போர்டு அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- தருமபுரி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி,
பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் தருமபுரி வெண்ணாம்பட்டி ஹவுசிங்போர்டு அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் பாமக மாவட்ட செயலாளரும், தருமபுரி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் ஜெயலட்சுமி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், நகர செயலாளர்கள் வெங்கடேசன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். பா.ம.க. கவுரவத் தலைவரும், பென்னாகரம் எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னாள் எம்.பி. மரு.இரா.செந்தில், மாநில துணை தலைவர்கள் பெ.சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில, மாவட்ட பொறுப்பாளர்களும், அணிகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, அணி, துணை பொறுப்பாளர்களும், தொண்டர்களும் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.






