என் மலர்
தர்மபுரி
- இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- மனமுடைந்து காணப்பட்ட அன்பு நேற்று தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்துள்ள பெரமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது55). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அன்பு நேற்று தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது.
- இதனால் மனமுடைந்து காணப்பட்ட கலைவாணி வீட்டை விட்டு மாயமானார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி நேருநகர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது மனைவி கலைவாணி (வயது36). இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கலைவாணி வீட்டை விட்டு மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
இதேபோல் கோட்டப்பட்டி அடுத்துள்ள தா.அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சூரியா (வயது22). இவர்களுக்கு ஹரிஸ் (4), என்கிற மகனும், தஸ்வந்த் ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளன. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து நேற்று சூரியா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு திடீரென மாயமானார். இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரிமங்கலம் அருகே மொரப்பூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
- மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள சப்பாணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது பயாஸ் (வயது45). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் காரிமங்கலம் அருகே மொரப்பூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முகமது பயாஸ் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
- சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கி சாலை அமைக்கும் முதல் பணியினை தொடங்கி வைத்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சியில் கஸ்தூரி கோம்பை கிராமம் அமைந்துள்ளது.
இப்பகுதி பொதுமக்கள் தங்கள் கிராமப் பகுதிகளுக்கு மண் சாலை மட்டுமே அமைந்துள்ளது. இவற்றை தார்சாலையாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கம்மம்பட்டி ஊராட்சியில் உள்ள கஸ்தூரி கோம்பை கிராமத்திற்கு தார்சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து தார் சாலை அமைக்க பூமி பூஜை போடுவதற்காக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் கிராமத்திற்கு சென்றனர்.
இதனால் முதன் முதலாக தங்கள் பகுதியில் தார் சாலை அமையவிருப்பதால் மகிழ்ச்சி அடைந்த அக்கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கி சாலை அமைக்கும் முதல் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த புதிய தார்சாலை பூமி பூஜை நிகழ்ச்சியில் கம்மம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சரவணன், பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், கவுன்சிலர்கள் ராஜீவ் காந்தி, வளர்மதி தமிழ்ச்செல்வன் மற்றும் கம்மம்பட்டி ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ஒரு சில விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, கரகதஅள்ளி, காட்டம்பட்டி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.
இப்பகுதியில் அதிக அளவில் தக்காளி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.25-க்கு விற்பனையானது.
பாலக்கோடு பகுதியில் முள்ளங்கி அறுவடை தொடங்கியதால் சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் அதிக அளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது முள்ளங்கி அறுவடை தொடங்கி உள்ளது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து சுத்தம் செய்து உழவர் சந்தை, மார்க்கெட்டுக்கு அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அறுவடை கூலி, வண்டி வாடகைக்கு கூட கட்டுபடி ஆகாததால் விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர் என்று கவலையுடன் தெரிவித்தனர்.
- பொதுக்குழு கூட்டம் கோட்ைடயில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஹாஜி அன்வர்பாஷா தலைமை வகித்தார்.
தருமபுரி,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தருமபுரி மாவட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஹாஜி அன்வர்பாஷா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நிசாமுதீன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஹாஜி முகமது அபூபக்கர் கலந்து கொண்டு பேசினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சேலம் அன்சர் பாஷா, சேலம் மாவட்ட துணை செயலாளரும் வழக்கறிஞருமான ஷாகுல் அமீத், மாநில யூத் லீக் தலைவர் பள்ளப்பட்டி யூனுஸ் சாஹெப், இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஜக்கிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தருமபுரி மாவட்ட தலைவராக ஹாஜி சையத் அன்வர் பாஷா, மாவட்ட முதன்மை துணை தலைவராக நிசாமுதீன், மாவட்ட செயலராக சிராஜீதீன், மாவட்ட பொருளாளராக இளம்பிறை சுலைமான், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக அலாவுதீன், மாவட்ட அணி அமைப்பாளராக இலியாஸ்பாஷா, உலாம அணி அமைப்பாளராக ஷபீல் அகமது, வனிதா அணி மாவட்ட அமைப்பாளராக ஆயிஷா ஜாஸ்மின் மற்றும் 2 துணை தலைவர்கள், 2 துணை செயலாளர்கள், மாவட்ட துணை தலைவராக அப்துல் ரஷீத், அரூர், மாவட்ட துணை செயலா–ளராக பாபு மற்றும் ரிஸ்வான், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளராக ரகமதுல்லா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை இளம்பிறை சுலைமான், அலாவுதீன், ஆகியோர் செய்து இருந்தனர்.
- அதகபாடி என்கிற இடத்தில் வந்தபோது லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசியது.
- சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள ராஜாகொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் அஜித் (வயது19), அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் மகன் சிலம்பரசன் (20), நாகராஜ் மகன் அஜய் (17) ஆகிய 3 பேரும் நேற்று இருசக்கர வாகனத்தில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதகபாடி என்கிற இடத்தில் வந்தபோது லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.
அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கரம் வாகனம் மீது ஏறி இறங்கியது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் இறந்த அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதுகாப்பாக வைக்க சிமெண்ட் தரை தளம் மற்றும் நிழற்கூடம் போன்றவை போதுமானதாக இல்லை.
- வியாபாரிகள் வந்து பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து முடிக்க அன்று மாலை அல்லது இரவு வரை ஆகிறது.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக வாரம்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலமும், வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் ஏலமும் நடைபெற்று வருகிறது.
சீசன் காலங்களில் ஒரே நாளில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் வரையில் பருத்தியும், ரூ.75 லட்சம் வரையில் மஞ்சளும் விற்பனையாகின்றன.
இதில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், தீர்த்தமலை, கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது பருத்தி மற்றும் மஞ்சளை கொண்டு வருகின்றனர். ஏல நாட்களில் காலை முதல் இரவு வரை விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் இங்கு வரும் விவசாயிகள் ஓய்வு எடுக்க போதிய வசதிகள் இல்லை. இது தவிர போதுமான கழிப்பறைகளும் இல்லை. பருத்தி மற்றும் மஞ்சளை பாதுகாப்பாக வைக்க சிமெண்ட் தரை தளம் மற்றும் நிழற்கூடம் போன்றவை போதுமானதாக இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
போதிய இட வசதி உள்ள நிலையில், வளாகப்பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி கூடுதலாக கழிப்பறைகள், ஓய்வறைகள் மற்றும் சிமெண்ட் தரை தளம், மழை மற்றும் வெயிலில் விளை பொருட்கள் பாதிக்காமல் இருக்க நிழற்கூடம் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, பருத்தி விவசாயிகள் கூறுகையில் அரூரில் பருத்தி ஏலத்திற்காக இரு சீசன்களிலும் காலை 10 மணி முதலே விவசாயிகள் சங்க வளாகத்திற்கு மூட்டைகளோடு வருகின்றனர்.
வியாபாரிகள் வந்து பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து முடிக்க அன்று மாலை அல்லது இரவு வரை ஆகிறது. இது போன்ற சமயங்களில் சுமார் 700 முதல் 800 விவசாயிகள் வரை வளாகப் பகுதிகளில் காத்திருக்கும் நிலை உள்ளது.
ஆனால், ஓய்வெடுக்க இடமோ, போதுமான கழிப்பறைகளோ இல்லாததால் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தவிர மேற்கூரை போதுமானதாக இல்லாததால் மழையில் விளை பொருட்கள் நனைந்து வீணாகும் சூழல் ஏற்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
- அரூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
- சாலை விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 25.7.2023 முதல் 27.7.2023 வரை இம்மூன்று நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
தருமபுரி,
தருமபுரி குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்ட பராமரிப்பு கோட்டம் தருமபுரி கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது அக்ரஹாரம் அருகில் நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலை விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 25.7.2023 முதல் 27.7.2023 வரை இம்மூன்று நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
எனவே மேற்கண்ட பகுதிகளில் இம்மூன்று நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளவும், பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தருமபுரி மாவட்ட கலெக்டரக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHG), உற்பத்தியாளர் குழுக்கள் (NRLM Portal)-லில் பதிவு பெற்றிருந்தல் வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டு ள்ளது.
2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டா டப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட முடிவு செய்துள்ளது.
அதன்படி தருமபுரி மாவட்ட கலெக்டரக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவானது சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHG), உற்பத்தியாளர் குழுக்கள் (NRLM Portal)-லில் பதிவு பெற்றிருந்தல் வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு "ஏ" அல்லது "பி" சான்று பெற்றிருக்க வேண்டும்.
உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதாளிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.
மேலும், இது குறித்து விரிவான விவரங்களை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை அணுகி தெரிந்துக் கொள்ளலாம். மேலும், நாளை 21.07.2023 வெள்ளிக்கிழமைக்குள் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏராளமா–னோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- பள்ளியின் சேர்மன் எவரெஸ்ட் முனிரத்தினம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூரில் உள்ள கிரீன்பார்க் சி.பி.எஸ்.சி, மெட்ரிக்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏராளமா–னோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளியின் சேர்மன் எவரெஸ்ட் முனிரத்தினம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னார்.
நிர்வாக அலுவலர் ராஜா மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- காரில் வீடு திரும்பி சென்றபோது வழியில் பெண்வீட்டாரின் உறவினர்கள் திடீரென்று வண்டியை வழிமறித்து விக்ணேஷை சரமாரியாக தாக்கிவிட்டு மதுஸ்ரீயை கடத்தி சென்றுவிட்டனர்.
- சினிமாவில் நடப்பதுபோல் காதல் திருமணம் செய்த தம்பதியினரை தாக்கிவிட்டு பெண்ணை தாய் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மூக்கானஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் விக்னேஷ் (வயது29). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் விக்னேசுக்கும் பாலக்கோடு மண்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த மதுஸ்ரீ (21) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் மதுஸ்ரீக்கு அவரது வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதன்காரணமாக விக்னேசும், மதுஸ்ரீயும் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் இருவரும் பெங்களூருவில் தனியாக வசித்து வந்தனர்.
இதன்காரணமாக தனது மகள் காணவில்லை என்று அவரது தாய் கலைவாணி (45) பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கலைவாணி போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த மதுஸ்ரீ தனது காதல் கணவருடன் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
அப்போது போலீசார் காதல்ஜோடியின் இருவீட்டாரையும் அழைத்து சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பெண் வீட்டார் இந்த காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கலைவாணி தன்னுடன் வருமாறு மதுஸ்ரீயை அழைத்தார். ஆனால், அவர் பெற்றோருடன் செல்லாமல் தனது காதல் கணவருடன் காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
விக்னேசும், மதுஸ்ரீயும் காரில் வீடு திரும்பி சென்றபோது வழியில் பெண்வீட்டாரின் உறவினர்கள் திடீரென்று வண்டியை வழிமறித்து விக்ணேஷை சரமாரியாக தாக்கிவிட்டு மதுஸ்ரீயை கடத்தி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து விக்னேஷ் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் காதல் திருமணம் செய்ததால் மதுஸ்ரீயை கடத்தி சென்றதாக அவரது தாய் கலைவாணி, உறவினர்கள் சீனிவாசன் (48), கோபாலகிருஷ்ணன் (45), கீதா (47) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமாவில் நடப்பதுபோல் காதல் திருமணம் செய்த தம்பதியினரை தாக்கிவிட்டு பெண்ணை தாய் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






