என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தை மேம்படுத்தும் பணி"

    • ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு வருவது குறித்தும் மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகளை தரமானதாகவும், உரிய கால அளவிற்குள்ளும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    காரிமங்கலம், 

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகின்ற 24.7.2023 அன்று தொடங்கவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பைசுஅள்ளி ஊராட்சி, சட்டக்கல்லூரி அருகே தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையில் ரூ.9.62 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தங்களையும்,

    பெரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கூடத்தினையும், பெரியாம்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் பூலாப்பட்டி சாலை முதல் கதிரிக்கோட்டை வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,

    அடிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டடத்தினையும், பெரியாம்பட்டி ஊராட்சியில் பிரதமரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து முத்தம்பட்டி, பேகாரஅள்ளி வழியாக புலிக்கரை வரை 5.50 கி.மீ தொலைவிற்க்கு தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,

    பெரியானஅள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமானதாகவும், உரிய கால அளவிற்குள்ளும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    காரிமங்கலம் பேரூராட்சியில் இயக்கமும், பராமரிப்பும் திட்டத்தின் கீழ், ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் காரிமங்கலம் பேருந்து நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் காரிமங்கலம் வாரச்சந்தை மேம்பாட்டு பணியினையும், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு வருவது குறித்தும் மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, கலைவானி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர் கண்ணபெருமாள், வார்டு உறுப்பினர்கள் ரமேஷ், சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×