என் மலர்tooltip icon

    கடலூர்

    மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தி வருவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தொடர்ந்து விலை உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. நடுத்தர, ஏழை மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க., நிலைப்பாடு குறித்து அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். தி.மு.க. அரசும் தற்போது வரை நடுநிலையாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
    கடலூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தனது மூத்த மகன் விஜய பிரபாகரனுடன் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்தார்.

    அதைத்தொடர்ந்து அவர், தே.மு.தி.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாளுக்கு நாள் அதிகாித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் தவித்து வருகிறார்கள். விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்க விஷயம்.

    செங்கல், சிமெண்டு, ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையும் 40 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல், நடுத்தட்டு மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று குறைவான நாட்களே ஆகி இருப்பதால் இப்போதைக்கு சாதகமும் இல்லை. பாதகமும் இல்லை. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

    கடலூர் மாவட்டத்தில் 9 வயது சிறுவன் உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. அவர்கள் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயில் அடித்து வருகிறது. ஆனால் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தினால் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.

    மேலும் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு நாள் ஒன்றுக்கு 1500 நோயாளிகள் வரும் நிலையில், அதில் 150 பேர் காய்ச்சால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி நேற்று 50 பேர் காய்ச்சலால் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்ததில், 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது. அதில் பண்ருட்டியை சேர்ந்த 9 வயது சிறுவன், தோட்டப்பட்டை சேர்ந்த 48 வயது பெண், பண்ருட்டியை சேர்ந்த 25 வயது வாலிபர், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, காரைக்காட்டை சேர்ந்த 28 வயது வாலிபர் என 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

    இதையடுத்து அவர்கள் அங்குள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த காலக்கட்டத்தில் காய்ச்சல் வராமல் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசுக்கள் மூலமாக காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வீட்டுக்கு அருகில் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் சுய மருந்து எடுத்துக்கொள்ளாமல் டாக்டர்கள் ஆலோசனையை பெற்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா தெரிவித்தார்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேல்காங்கேயன்குப்பத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் இவரது மனைவி மாதவி (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.

    சிவலிங்கத்தின் தாயார் பார்வதி, சகோதரிகள் வைரம், வாசுகி, மாமா ராஜகோபால் ஆகியோர் மாதவியிடம் அடிக்கடி நகை-பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இது சம்பந்தமாக ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செய்து சமாதானப்படுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் முத்தாண்டிகுப்பத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவுக்கு சிவலிங்கம் மட்டும் தனியாக வந்துள்ளார். அப்போது சிவலிங்கம் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாதவியின் தந்தை குப்புசாமியும் வந்திருந்தார். அப்போது தனது மகளை அழைத்து வராமல் மருமகன் மட்டும் தனியாக இங்கு வந்து செல்கிறார்? என்று குப்புசாமி குழப்பத்தில் இருந்தார்.

    இந்த நேரத்தில் மாதவியின் தந்தை குப்புசாமிக்கு ஒரு போன் வந்தது. அதில் 12 மணி அளவில் உங்களது மகள் மாதவி இறந்து விட்டார் என்ற தகவல் கூறினர். இதை கேட்டு குப்புசாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் மேல்காங்கேயன் குப்பத்துக்கு விரைந்து சென்றார். அங்கு பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் குப்புசாமி புகார் செய்தார். அதில் தனது மகள் மாதவி கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்ததாகவும், தனது மகளை அடித்து கொலை செய்து இருக்கலாம்? என சந்தேகிப்பதாகவும், மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாதவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூரில் 2 அடி நீளமுள்ள பாம்பை, கட்டுவிரியன் பாம்பு ஒன்று விழுங்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
    கடலூர்:

    கடலூர் கோண்டூர் ராம்நகரில் உள்ள ஒருவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் 2 பாம்புகள் சீறி சண்டை போட்டது. சத்தம் கேட்டதும் வீட்டு உரிமையாளர் எழுந்து பார்த்துள்ளார். இதையடுத்து அவர் அந்த பாம்புகளை துரத்தி விட்டார். ஆனால் அந்த பாம்புகள் வீட்டு வாசல் அருகில் உள்ள மாடி படிக்கட்டுகளுக்குள் சென்று விட்டது.

    பின்னர் இது பற்றி வீட்டின் உரிமையாளர், கடலூர் பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது கட்டுவிரியன் பாம்பு, நழுவ (சுவரொட்டி) பாம்பை விழுங்கிக்கொண்டிருந்தது. அதற்குள் அந்த பகுதியில் உள்ள தெருவாசிகள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் கட்டுவிரியன் பாம்பு, நழுவ பாம்பை விழுங்குவதை தங்களின் செல்போனில் பதிவு செய்தனர்.

    தொடர்ந்து அந்த கட்டுவிரியன் பாம்பு, நழுவ பாம்பை முழுமையாக விழுங்கிய பிறகு, அந்த பாம்பை பிடித்த செல்லா அதை பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்று விட்டார். இதற்கிடையில் கட்டுவிரியன் பாம்பு, நழுவ பாம்பை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பாம்புகள் இரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கி உள்ளது.

    குறிப்பாக கட்டுவிரியன் பாம்புகள் இரவில் தான் இரை தேடி வெளியே வரும். அந்த நேரத்தில் நழுவ பாம்பை விழுங்கி உள்ளது. நழுவ பாம்புக்கு விஷம் கிடையாது என்று பாம்புபிடி வீரர் செல்லா தெரிவித்தார். பிடிப்பட்ட கட்டுவிரியன் 4 அடி நீளம் உடையதாகவும், அது விழுங்கிய நழுவ பாம்பு 2 அடி நீளம் கொண்டதாகவும் இருந்தது.

    பாம்புகளில் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பாக கருதப்படுவது கட்டுவரியன் பாம்பு ஆகும். அத்தகையை பாம்பு அப்பகுதியில் பிடிப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மஞ்சக்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சின்ன பள்ளி வாசல் தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில், ஒருவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். 

    இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த சேகர் (வயது 51) என்பதும், புகையிலை பொருட்களை தனது மளிகை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மளிகை கடையில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    குறிஞ்சிப்பாடி அருகே கைப்பந்து விளையாடிய மாணவர், திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குறிஞ்சிப்பாடி:

    குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தையல் குணம் பட்டினம் அம்பானி நகரை சேர்ந்தவர் ராஜா. தொழிலாளி. இவரது மகன் பகவதி(வயது 16). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால், பகவதி தனது சக நண்பர்களுடன் அருகில் உள்ள ரங்கநாதபுரம் குளக்கரையில் கைப்பந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது பந்து அருகில் கிடந்த முட்புதர் உள்ளே சென்றது. இதையடுத்து பகவதி உள்ளே சென்று பந்தை எடுத்து வந்தார். அப்போது, நண்பர்களிடம் தனது காலில் ஏதோ ஒன்று கடித்தது போன்று இருந்தது என்று கூறியுள்ளார்.

    மேலும் அவர் தனக்கு மயக்கம் வருவது போன்று உள்ளது என்று கூறி, தனது வீட்டுக்கு சைக்கிளில் சென்றார். வீட்டுக்கு வந்த சிலநொடிகளில் பகவதி மயங்கி விழுந்தார்.

    உடன் அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே பகவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இது தொடர்பாக பகவதியின் தாய் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பகவதி கைப்பந்து விளையாடிய இடத்தில் ஏதேனும் விஷசந்துகள் கடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை முடிவில் தான் இறப்பின் காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மதுவில் கலந்து குடிப்பதற்காக மளிகை கடையில் குளிர்பானங்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடையில் திருடிய வீடியே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருமாச்சிபாளையத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 53). இவர் குள்ளஞ்சாவடி கடைவீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையில் இருந்த தயாளன், திடீரென கடையை பூட்டாமல் அருகில் இருந்த வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது கடையில் இருந்து குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. இதனால் திடுக்கிட்ட அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார்.

    அப்போது பக்கத்து கிராமமான சின்னதானங்குப்பத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் மணி, பெரிய காட்டுசாகையை சேர்ந்த வேலு மகன் வீரமணி, குமார் மகன் தினேஷ், சேடப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விஜயகுமார்(26) ஆகியோர் தயாளன் கடையில் இருந்து வெளியே சென்ற நேரத்தில் கடைக்குள் புகுந்து குளிர்பானங்கள் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகளை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது.

    இதை கண்டு திடுக்கிட்ட தயாளன், உடனே குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், மணி உள்ளிட்ட 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மணி, வீரமணி உள்ளிட்ட 4 பேரும் மதுவில் கலந்து குடிப்பதற்காகவும், மது அருந்தும் போது சாப்பிடுவதற்காகவும் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்களை, தயாளனின் மளிகை கடைக்குள் புகுந்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி, வீரமணி, தினேஷ், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
    மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டது.
    சிதம்பரம்:

    கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் வெளியே சுற்றுவதாக புகார் வந்தன.

    இதைத்தொடர்ந்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்தனர். அப்போது அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் அம்மாபேட்டையை சேர்ந்த சஞ்சய் (வயது 17), அஜய்குமார், நெக்டா பாலன், சுசீந்திரன், சூர்யா, சந்துரு ஆகிய மாணவர்கள் ஒருசில வகுப்புகளை புறக்கணித்து வெளியே சுற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவர்களை பள்ளி இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் (55) நேற்று முன்தினம் அழைத்து கண்டித்தார்.

    இதையடுத்து அந்த மாணவர்களை ஆசிரியர் சுப்பிரமணியன் முட்டி போட வைத்தார். மாணவன் சஞ்சையை, ஆசிரியர் சுப்பிரமணியன் பிரம்பால் சரமாரியாக தாக்கியும், காலால் எட்டியும் உதைத்தார். இதனை வகுப்பில் இருந்த மாணவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர். அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதை பார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    ஆசிரியர் சுப்பிரமணியன்.


    இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் மாணவன் சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 294(பி), 323, 324, பொது இடத்தில் திட்டுதல், வன்மமாக பேசுதல், 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவனை தாக்குதல், எஸ்.சி.எஸ்.டி. பிரிவின் கீழ் ஆகிய வழக்குகள் உள்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிதம்பரம் கிளைசிறையில் அடைத்தனர். மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாணவனை அடித்த அரசு பள்ளி ஆசிரியர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சிதம்பரம்:

    கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் வெளியே சுற்றுவதாக புகார் வந்தன.

    இதைத்தொடர்ந்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்தனர். அப்போது அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் அம்மாபேட்டையை சேர்ந்த சஞ்சய் (வயது 17), அஜய்குமார், நெக்டாபாலன், சுசீந்திரன், சூர்யா, சந்துரு ஆகிய மாணவர்கள் ஒருசில வகுப்புகளை புறக்கணித்து வெளியே சுற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவர்களை பள்ளி இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் (55) அழைத்து கண்டித்தார்.

    இதையடுத்து அந்த மாணவர்களை ஆசிரியர் சுப்பிரமணியன் முட்டிபோட வைத்தும், பிரம்பால் அடித்து உதைத்தார். இதனை வகுப்பில் இருந்த மாணவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர். அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதைபார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் மாணவன் சஞ்சய் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்தனர்.

    பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர். மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் என்ஜினீயருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
    கடலூர்:

    நெல்லிக்குப்பம் மேல்பாதி அருந்ததியர் நகரை சேர்ந்தவர் குப்பாராவ் மகன் வீரக்குமார் (வயது 34). என்ஜினீயர். இவரும் பண்ருட்டி மேல்கவரப்பட்டு இமயவர்மன் மகள் இந்துமதி (26) என்பவரும் கடந்த 2014-ம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்துமதி தடகள வீராங்கனை மற்றும் முதுகலை பட்டதாரியாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு இருவரும் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை கன்னிக்கோவில் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தினர். இதற்கிடையில் இந்துமதி 5 மாத கர்ப்பமானார். இதை அறிந்ததும் இந்துமதி பெற்றோர் தம்பதியிடம் பேச ஆரம்பித்தனர். பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தினர். அப்போது இந்துமதி பெற்றோர், வீட்டுக்கு தேவையான சீர்வரிசைப்பொருட்கள், நகை ஆகியவற்றையும் வழங்கினர்.

    அதையடுத்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு வீரக்குமார் மனைவியிடம் தனியாக காய்கறி கடை வைக்க ரூ.3 லட்சம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் கடந்த 31.7.2018 அன்று வீரக்குமார் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். இதை அன்று இரவு இந்துமதி தனது தாய் ஜெயபாரதியிடம் செல்போனில் தெரிவித்துவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி ஜெயபாரதி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு வீரக்குமாரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் வீரக்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜரானார்.
    அரியராவி நேரடி கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த 300 மூட்டை நெல் மழையில் நனைந்து முளைத்தது. அதிகாரிகள் அலட்சியம் காரணமாக நெல்முட்டைகள் மழையில் நனைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அருகே அரியராவி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது. இங்கு அரியராவி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த நெல்லை, கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.

    அந்த வகையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரசு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

    பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலான மூட்டைகள் தார்பாய் போட்டு மூடாமல், திறந்த வெளியிலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இருப்பினும், அரியராவி நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் அங்கிருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது. இதற்கிடையே தற்போது மூட்டைகளில் இருந்த நெல் அனைத்தும் முளைக்க தொடங்கி உள்ளது. இதனால் அந்த நெல் மூட்டைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூட்டைகளில் இருந்தே நெல் முளைத்து வீணானதை கண்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் 3 மாதம் இரவு-பகலாக கஷ்டப்பட்டு விளைவித்து அறுவடை செய்த நெல் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தங்கள் கண் முன்னே முளைத்து வீணாகி வருவது வேதனையாக உள்ளது. அதனால் இனியாவது விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    ×