என் மலர்
செங்கல்பட்டு
- ஒரு கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
- ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலின் கடற்கரையில், டபிள்யூ.வி.கனெக்ட் நிறுவனம் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட 101 ஜோடிகளுக்கு, 1 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் அப்சராரெட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, தட்சிணாமூர்த்தி, நந்தினி விஜய் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.
ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் 3 ஆம் நாளான இன்று, மிகபிரமாண்டமாக இந்த திருமணங்கள் மாமல்லபுரத்தில் நடைபெற்றது., 101 புதுமண தம்பதிகளுக்கும், தாலி, பட்டுப்புடவை, வேட்டி சட்டை, ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், படுக்கை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. ஜியோ பவுண்டேஷன் மற்றும் மதர் எர்த் பவுண்டேஷன் ஆகியற்றுடன் இணைந்து தகுதிவாய்ந்த 101 ஜோடிகளை மிக கவனமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
- போலீஸ் நிலையம் வந்து நகையை வாங்கி கொள்ளும்படி கூறிவிட்டு மர்மநபர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம், கடப்பேரி பகுதியில் உள்ள மண்டபத் தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம். இவரது மனைவி பிரமலா (வயது60). இவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது டிப்-டாப் உடை அணிந்த 2 வாலிபர்கள் பிரமலாவிடம் பேச்சு கொடுத்தனர். நாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள். பல இடங்களில் திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்டு வருகிறது.சமீபத்தில் ஒரு பெண்ணிடம் திருடுபோன நகை உங்கள் கழுத்தில் இருக்கின்ற நகை போல் உள்ளது. அதனை பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மூதாட்டி பிரமலா தான் அணிந்து இருந்த 7½ நகையை கழற்றி அந்த வாலிபர்களிடம் கொடுத்தார். பின்னர் நகையை பார்த்த மர்மநபர்கள் பிரமலாவிடம் வீட்டு முகவரியை கேட்டு குறித்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் வந்து நகையை வாங்கி கொள்ளும்படி கூறிவிட்டு மர்மநபர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பிரமலா தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் விசாரித்த போது மர்ம நபர்கள் போலீஸ்போல் நடித்து நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மதுராந்தகம் காவல் நிலையத்தில் பிரமலா கணவர் பக்த வச்சலம் கொடுத்த புகாரின் பேரில் மதுராந்தகம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காட்டாங்கொளத்தூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் செல்வராஜ் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சமீப காலமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் செல்வராஜ் தூக்குப்போட்டு கொண்டார். அவர் நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை அவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென அரிவாளால் லோகேசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
- பலத்த காயமடைந்த லோகேசுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகேஷ் (வயது 25) இவர் மீது திருட்டு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இவர் நேற்று மாலை ஜாபர்கான்பேட்டையில் உள்ள மதுபான கடை முன்பு நின்றபடி உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென அரிவாளால் லோகேசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த லோகேசுக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மோட்டார் சைக்கிளில் குழந்தையை முன்பக்கம் உட்கார வைத்து அழைத்து செல்ல முயன்றார்.
- அப்பகுதி மக்கள் வாலிபரை விடாமல் விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திருக்கழுக்குன்றம்:
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த அடவிளாகம் கிராம பகுதியில் நேற்று காலை சாலையோரத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டர் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பெண் குழந்தையிடம் சாக்லேட் ஒன்றை காண்பித்து அந்த குழந்தையை கூப்பிட்டு கொடுத்துள்ளார்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் அந்த குழந்தையை முன்பக்கம் உட்கார வைத்து அழைத்து செல்ல முயன்றார். உடனே குழந்தை கத்தி அழுதது. குழந்தையின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததும் குழந்தையை அங்கேயே இறக்கி விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் அந்த நபர் வேகமாக சென்றார்.
உடனே அந்த பகுதி மக்கள் அந்த வாலிபரை விடாமல் மோட்டார்சைக்கிள் மூலம் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் அவர் திருப்போரூர் அடுத்த புங்கேரி கிராமத்தைச் சேர்ந்த சாந்தகுமார் (வயது 26) என்பது தெரிய வந்தது.
மேலும் இவர் இதுபோல வேறு ஏதேனும் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டாரா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப் போவதாக தகவல்
- செய்யூர் எம்.எல்.ஏ பனையூர் பாபு, மாமல்லபுரம் கிட்டு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அம்பேத்கர் நகர் பகுதியில் மாற்று கட்சியிலிருந்து விலகி விடுதலை சிறுத்தை கட்சியில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், இதனால் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வி.சி.க ஆதரவு வழங்கும் எனவும் தெரிவித்தார்.
ஏப்ரல் 14ஆம் தேதி பா.ஜ.க.வினரின் எதிர்கட்சிக்கு எதிரான போக்கை கண்டித்தும் ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும் ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப் போவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
செய்யூர் எம்.எல்.ஏ பனையூர் பாபு, மாமல்லபுரம் கிட்டு உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக அவரை வரவேற்க புதுபட்டினத்தில் உள்ள தமிழன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலம்பம் சுற்றினர். அவர்களை வியந்து பார்த்த திருமாவளவன், அவர்கள் அனைவரையும் பாராட்டி அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
- தாம்பரம் ரெயில்வே சுரங்கப் பாதையில் சென்ற இளம்பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
- இளம்பெண் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
தாம்பரம்:
தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சீனிவாஸ் நாயக் (32).
இவர் நேற்று இரவு தாம்பரம் ரெயில்வே சுரங்கப் பாதையில் சென்ற இளம்பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனை கண்டித்த அவ்வழியாக வந்த வாலிபர்களையும் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஒரு வாலிபரின் கை விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த இளம்பெண் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த இளம்பெண்ணின் கணவர் மற்றும் நண்பர்கள் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக்கை மடக்கி பிடித்தனர்.
அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை தாம்பரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்பெக்டர் சீனிவாஸ் நாயக்கை சஸ்பெண்டு செய்து ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ராஜையா உத்தரவிட்டார்.
ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக் இதுபோல் பல பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
- திருக்கழுக்குன்றம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது.
- தற்கொலைக்கான காரணம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது28). இவர் ஆலவாய் பகுதியில் உள்ள மாமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சுதா அணிந்து இருந்த 6 பவுன் செயினை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
- பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவர் சிங்கபெருமாள் கோவில்-ஒரகடம் சாலையில் பெரியார் நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சுதா அணிந்து இருந்த 6 பவுன் செயினை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 3 பேரை கைது செய்து இருந்தனர். இந்தநிலையில் இந்த வழிப்பறி தொடர்பாக புதுபெருங்களத்தூர், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
- புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைப்பெற்றது.
- பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம் சார்பில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 16வது வார்டு எம்.என் குப்பம் பகுதியில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்ட உள்ளது.
அதற்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் போடப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தோஷ் வீட்டை பூட்டிவிட்டு ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
- கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தோஷ் வீட்டை பூட்டிவிட்டு ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அவரது மனைவியும் மகனும் வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தனர்.
நேற்று மாலை அவர்கள் வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் பீரோவை உடைத்து 42 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
- மாமல்லபுரம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்தது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பணிகள் வந்து செல்கிறார்கள்.
மாமல்லபுரம் நகருக்கு உள்ளே நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது. மோட்டார் சைக்கிளுக்கு ரூ.25. கார்-ரூ.50, பஸ், லாரிகளுக்கு ரூ.100 கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
வாகன நுைழவு கட்டணம் வசூல் செய்யும் போது ஏற்படும் வாக்குவாதம், மோதல் காரணமாக சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். மாமல்லபுரத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் பொது நல வழக்குகளும் தொடரப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முதல் மாமல்லபுரம் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணமோ, புராதன சின்னங்கள் அருகே வாகன நிறுத்துமிட கட்டணமோ செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.






