என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் பணியை நிறுத்தினர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் நாவிதர் நகரில் நூற்றுக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர் இந்த குடியிருப்புகளின் நடுவே தனியார் நிறுவனத்தினர் செல்போன் கோபுரம் அமைக்க கடந்த 2 நாட்களாக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர்.

    இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை அந்த இடத்திற்கு சென்று பள்ளம் தோண்டுபவர்களிடம் இங்கு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், ஒழலூர் கிராம நிர்வாக அலுவலர் பானுப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தினர்.

    அப்போது, கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்று நேற்று முன்தினம் கலெக்டரிடம் மனு அளித்தும், அதையும் மீறி பள்ளம் தோண்டுகிறார்கள்.

    குடியிருப்பு நிறைந்த இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு ஏற்பட்டு குழந்தைகள் கர்ப்பிணிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அனுமதியின்றி சட்ட விரோதமாக கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றனர். இதனையடுத்து அதிகாரிகள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தினர். இதனால் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வண்டலூரில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வெளிவட்ட சாலையில் நேற்றுமுன்தினம் மாலை ஓட்டேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை வழி மறித்து போலீசார் விசாரித்த போது, அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துக் கொண்டிருந்தார்.

    இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த சாக்குப் பையை சோதனை செய்தபோது அதில் 48 மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியை சேர்ந்த விஷால் (வயது 21), என்பது தெரியவந்தது. இதனையடுத்து வாலிபர் விஷாலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் கோர்ட்டு காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
    செங்கல்பட்டு:

    சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். தற்போது வரை சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைதுக்கு பின்னர் சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் கேட்டு வரும் நிலையில் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.

    அதில் பள்ளி ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய 3 பேர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆண்மை இல்லாத நான் எப்படி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும் என வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இதே காரணத்தை கூறி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் சிவசங்கர் பாபா மீது இருக்கும் 3 போக்சோ வழக்குகளில் நீதிமன்ற காவல் முடிவடைந்த காரணத்தால் புழல் சிறையில் இருக்கும் அவர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

    சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து வரும் 17-ந் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    பின்னர் வெளியே வந்த சிவசங்கர் பாபாவை பார்த்து அவரது பக்தர்கள் அவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு உள்ளதாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் முழங்காலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர், சிவசங்கர் பாபாவை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.
    வீட்டுக்குள் புகுந்து வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள அருணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28). மெக்கானிக். இவர் தாய் சாந்தியுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு வெங்கடேசன் அருகில் உள்ள பாட்டி பார்வதியின் குடிசை வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கேயே தூங்கினார். அந்த வீட்டில் வாசல் கதவு இல்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் 4 பேர் கும்பல் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.

    அவர்கள் பார்வதியின் வீட்டுக்குள் திடீரென நுழைந்தனர். அதிகாலை நேரம் என்பதால் வெங்கடேசனும், அவரது பாட்டி பார்வதியும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம கும்பல் வெங்கடேசனை, சரமாரியாக வெட்டினர். தலை கழுத்தில் பலத்த வெட்டுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதற்குள் சத்தம் கேட்டு பாட்டி பார்வதி எழுந்தபோது பேரன் வெங்கடேசன் மர்ம கும்பலால் வெட்டப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சலிட்டார்.

    இதையடுத்து கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதுகுறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். செங்கடேசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னையை சேர்ந்த டோரா கார்த்திக் என்பவர் கொலை வழக்கில் வெங்கடேசன் 5-வது குற்றவாளி ஆவார். மேலும் வெங்கடேசன் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    கஞ்சா விற்பனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் எதிர் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு இருந்தது. இந்த தகராறில் கொலை நடந்ததா? அல்லது டோரா கார்த்திக் கொலைக்கு பழிக்குப் பழியாக வெங்கடேசன் தீர்த்துக்கட்டப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    திருக்கழுக்குன்றம் அருகே லாரி மோதி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 25). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் தாம்பரத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். திருக்கழுக்குன்றம் பை-பாஸ் சாலையில் வந்தபோது எதிரே அணுபுரம் பகுதியில் சிமெண்டு ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

    இதில் தினகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர், சப்- இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பிச்சென்று விட்டார். லாரியை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 லட்சத்து 54 ஆயிரத்து 933 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2021-க்கான சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ராகுல்நாத் வெளியிட்டார்.

    முதல் பிரதியை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் பெற்றுக்கொண்டார்.

    அப்போது கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2,034 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 11,54,933 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவற்றில் ஆண் வாக்காளர்கள் 5,69,583, பெண் வாக்காளர்கள் 5,85,163, இதர வாக்காளர்கள் 187 பேர் அடங்குவர். 2,034 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலர்களாக ஏறத்தாழ 16,208 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு அலுவலரிடம் பெறப்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலுக்கு துணைப்பட்டியல்கள் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் 6,606 கி.மீ தேசிய நெடுஞ்சாலை உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பரமாரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ சாலைகள் மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிப்பவரிடம் கட்டணம் வசூலிப்பதற்காக 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீட்டை திரும்ப பெறும் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதற்கு பிறகு 40 சதவீத சாலை பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.

    ஆனால் தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீத அளவுக்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

    அதன்படி தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவுக்கு பிறகு கட்டணம் உயர்த்தப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. செங்கல்பட்டு பரனூரில் உள்ள சுங்கச்சாவடியிலும் கட்டணம் ரூ.15 வரை அதிகரிக்கிறது.

    கோப்புப்படம்


    தாம்பரம்-திண்டிவனம் இடையே உள்ள ஆத்தூர், சென்னை-தடா இடையே உள்ள நல்லூர், செங்கல்பட்டு பரனூர், சூரப்பட்டு, வானகரம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, திருச்சி- காரைக்குடி இடையே உள்ள லம்பலக்குடி, லட்சுமணப்பட்டி, மதுரை-ராமநாதபுரம் இடையே உள்ள போகலூர், நாங்குநேரி, திருச்சி பூதக்குடி, கந்தர்வக்கோட்டை பழையா, பள்ளிகொண்டார், திருச்சி சித்தம்பட்டி, பட்டரை பெரும்புதூர், வாகைக்குளம் புதுக்கோட்டை, திருப்பதி- திருத்தணி சாலையில் உள்ள எஸ்.வி.புரம், திருநெல்வேலி- கன்னியாகுமரி சாலையில் உள்ள சாலைப்புதூர், எட்டூர் வட்டம், கப்பலூர், திருமயம்- மானாமதுரை இடையே உள்ள செண்பகம்பேட்டை, மதுரை-ராமநாதபுரம் சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி, செங்கப்பள்ளி- கோவை பைபாஸ் சாலையில் உள்ள கணியூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    செங்கல்பட்டு அருகே கள்ளநோட்டு அச்சடித்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
    செங்கல்பட்டு:

    சென்னையை சேர்ந்தவர் ரகு. இவர் செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பகுதியை சேர்ந்த கனிமொழி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதன் மூலம் அங்கு அறிமுகமான செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பகுதியை சேர்ந்த தந்தை, மகனான ராஜ் (வயது 50), எபினேசர் (26) ஆகியோருடன் சேர்ந்து தொழில் செய்ய திட்டமிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

    கடந்த 6 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் நேற்று திடீரென வீட்டை காலி செய்ய முயன்றனர். வீட்டில் கள்ளநோட்டுகள் மற்றும் அச்சடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் பாபு செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ரூ.500, ரூ.100 கள்ள நோட்டுக்கள் மற்றும் அச்சடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர் இருப்பதை கண்டறிந்தனர்.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜ், அவரது மகன் எபினேசர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள ரகுவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
    கூடுவாஞ்சேரி அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகம் அருகே நேற்று முன்தினம் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாகனம் மோதி இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை, இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கூடுவாஞ்சேரியில் கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 56). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மீண்டும் சென்னை செல்வதற்காக திருமண மண்டபத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமதாஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமதாஸ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 854 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2428 -ஆக உயர்ந்துள்ளது. 1121 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 657-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1227-ஆக உயர்ந்துள்ளது. 336 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரை சேந்தவர் சுசீலா (வயது 61). இவர், அரசு வங்கியில் காசாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வந்தவாசியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டார்.

    நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் மற்றும் வீட்டில் இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். அப்போது ஐந்து ரூபாய் நோட்டு கட்டுகளை வீட்டு வாசலிலேயே போட்டு சென்றுவிட்டனர். இதேபோல் புதுபெருங்களத்தூர் சீனிவாசன் நகர், கண்ணகி தெருவைச் சேர்ந்த ஆராவமுதன் (50) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், ரூ.3 ஆயிரம் மற்றும் மடிக்கணியை திருடிச்சென்று விட்டனர்.
    ×