என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ராகுல்நாத் வாக்காளர் பட்டியலை வெளியிட்டபோது எடுத்த படம்.
    X
    கலெக்டர் ராகுல்நாத் வாக்காளர் பட்டியலை வெளியிட்டபோது எடுத்த படம்.

    வாக்காளர் பட்டியல் வெளியீடு செங்கல்பட்டு மாவட்டத்தில் 11½ லட்சம் வாக்காளர்கள்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 லட்சத்து 54 ஆயிரத்து 933 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2021-க்கான சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ராகுல்நாத் வெளியிட்டார்.

    முதல் பிரதியை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் பெற்றுக்கொண்டார்.

    அப்போது கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2,034 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 11,54,933 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவற்றில் ஆண் வாக்காளர்கள் 5,69,583, பெண் வாக்காளர்கள் 5,85,163, இதர வாக்காளர்கள் 187 பேர் அடங்குவர். 2,034 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலர்களாக ஏறத்தாழ 16,208 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு அலுவலரிடம் பெறப்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலுக்கு துணைப்பட்டியல்கள் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×