என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மாவட்டத்தில் மொத்தம்293 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9,327 ஆக உயர்ந்துள்ளது. இதில் 66 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69, 49, 65, 70 வயதுடைய 4 ஆண்களும், 59 வயதுடைய பெண் ஒருவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் என மொத்தம் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 7,235 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,020 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்களை கண்டறியும் பொருட்டு, வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் 50 வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து அவர்களில் உடல் வலி, சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கிராம செவிலியர் மூலம் வட்டார மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவிப்பார்கள். ஆகவே, பொதுமக்கள் அனைவரும் வீடு தேடி வரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68). இவர் அந்த கிராமத்தில் ரைஸ்மில் நடத்தி வந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் ஒப்படைத்தது. அதைத்தொடர்ந்து உறவினர்கள் உடலை ஆம்புலன்சில் ஏற்றி வந்து வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு பந்தல் அமைத்து இறுதி சடங்கு செய்யவும் முடிவு செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த செந்துரை தாசில்தார் குமரய்யா வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது என்றும் இறுதி சடங்கு செய்யக்கூடாது என்றும் தடை விதித்தனர்.
அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடலை ஏற்றி சென்று தாசில்தார் முன்னிலையில் அரசு விதிமுறைகள் படி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் அச்சமின்றி உறவினர்கள் உடலை வீட்டில் வைத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து நகராட்சி சார்பில் ‘டிரோன்’ மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் மேற்பார்வையில் தொடங்கியது. இந்த டிரோன் கருவியானது 12 கிலோ எடையில், 12 லிட்டர் கிருமி நாசினியை வான்வழி மூலம் தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஜெயங்கொண்டம் நகராட்சியில் தொற்று அதிகம் பாதித்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் டிரோன் குழுவினர் வரவழைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






