என் மலர்
அரியலூர்
- இரட்டை கொலை வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரியவளையம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெரியவளையம் தைலம் மரம் காட்டில் கடந்த அக்.22 ஆம் தேதி காளான் பறிக்கச் சென்ற இரண்டு பெண்களை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கழுவந்தோண்டி கிராமம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் பால்ராஜை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையையடுத்து, ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதற்கான நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.
- பொது மக்களுக்கு குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- தரம் பிரித்து வழங்குவதற்காக
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம் சார்பில் நகர்ப்புற தூய்மைப்படுத்தி திட்டம் மட்டும் குப்பை கூடைகள் வழங்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கு 2 வழங்கப்பட்டு அதன் மூலம் வீட்டில் இருக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வைப்பதற்கு கூடை வழங்கினார்கள்.
நகராட்சி முழுவதும் உள்ள வீடுகளில் குப்பைகளை தனித்தனியாக வைத்திருந்தால், துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகள் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் குப்பை கூடைகள் கூடைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமை தாங்கினார். மற்றும் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலையில் வைத்தனர். ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் ஆர் முருகன் ஏற்பாடு செய்திருந்தனர்.
முன்னாள் தலைவர்கள் குமணன் செந்தில்வேல் விஜயகுமார் கிருபாநிதி மற்றும் உறுப்பினர்கள் கார்த்தி செந்தில் வேல் சிலம்பு செல்வன் சிவகார்த்திகேயன் சரவணன் ஆனந்த பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
- 11 ஆம் வகுப்பு படித்து வரும்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் காமராஜ் மகன் வசந்தன் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியிடம் பழகியுள்ளார்.
பின்னர் அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஜெயமங்களத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அறிந்த அவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். குழந்தை திருமணம் செய்தது உண்மை என்பதால் அவர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த வசந்தன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் கொளஞ்சியம்மாள் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து வசந்தனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மீட்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- அரசு பள்ளியில் அரசியலமைப்பு வார விழா நடந்தது
- மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அரியலூர்:
அரசியலமைப்பு வார விழாவை முன்னிட்டு, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார. ஊராட்சித் தலைவர் அம்பிகாமாரிமுத்து துணைத் தலைவர் பழனியம்மாள், மேலாண்மை குழுத் தலைவர் அகிலா மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- 70 கிலோ இரும்பு கம்பிகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பாலம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த 70 கிலோ இரும்புக் கம்பிகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல் துறையினர் இரவு வீரசோழபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படியாக சென்ற 3பேரை அழைத்துப் போது, அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சுண்டிபள்ளம் காலனித் தெருவைச் சேர்ந்த ரஞ்சித், மோகன்ராஜ், அபினாஷ் என்பதும், இவர்கள் வீரசோழபுரம் சாலையில் பாலம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த 70 கிலோ இரும்புக் கம்பிகளை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் சிறையில் அடைந்தனர்.
- அரியலூர் மாவட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன
- சிறந்த பள்ளிக்கான அன்பழகன் விருதுக்கு
அரியலூர்:
தமிழகத்தில் சிறந்த பள்ளிக்கான விருதுகள் பட்டியலில் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 3 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பெயரில் சிறந்த பள்ளிக்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து சிறந்தப் பள்ளிகளுக்கான விருது பட்டியலை தமிழக பள்ளி கல்வித் துறை வெளியிட்டது. இதில் அரியலூர் ஒன்றியத்தில் லிங்கத்தடிமேடு அரசு உதவிப் பெறும் கே.ஆர்.வி.நடுநிலைப் பள்ளி, இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.மேற்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது
- 11 வகையான சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டது
அரியலூர்:
அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு, 160 கர்ப்பிணிகளுக்கு 11 வகையான சீர்வரிசைப் பொருள்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்களை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் க.அன்பரசி, வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், வாலாஜா நகரம் ஊராட்சித் தலைவர் அபிநயா இளையராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் ம.மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியானார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவா மற்றும் அஜித்குமார். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு கயர்லாபாத் ஆஞ்சநேயர் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரேவந்த டிப்பர் லாரி மோதியதில் 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவா தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிவா நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
- உதவி புவியாளர் , சுரங்கத்துறை ஆய்வாளர் வாகன சோதனை ஈடுபட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த ராங்கியம் பகுதியில் திருச்சி உதவி புவியாளர் நாகராஜன் மற்றும் அரியலூர் மாவட்ட சுரங்கத்துறை ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய அனுமதியின்றி 3 யூனிட் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் விருத்தாசலம் மாவட்டம் கூவநல்லூர் தனசேகரனை (வயது 37) போலீசார் கைது செய்தனர்.
- சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சாலையில் கற்களை போட்டு பிடித்தனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்துள்ள ரெட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மு.புத்தூர் கிராமத்தில் தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது.
இந்த சுரங்கத்திலிருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள், சுண்ணாம்புக்கற்களை ஏற்றி அங்குள்ள கோவில் நிலத்தின் வழியே சென்று வருகிறது. இதனால், அக்கிராம மக்கள் கோவிலை புதிதாக கட்டித்தர வேண்டும் என சிமெண்டு ஆலை நிர்வாகத்திடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இதுவரை கோவில் கட்டித்தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நேற்று சாலையில் கற்களை போட்டு அவ்வழியே சென்ற சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி சென்ற லாரிகளை சிறை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிமெண்டு ஆலை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால், கோவில் கட்டுவதற்கான அனுமதி, செலவு அறிக்கை பெற்றுத்தந்தால் கோவிலை விரைவில் கட்டித்தருவதாக கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரிகளை கிராம மக்கள் விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது."
- அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
- வாக்காளர் சிறப்புத்திருத்தம் தொடர்பாக
அரியலூர்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படியும், அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படியும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அரியலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாக்காளர் சிறப்புத்திருத்தம்- 2023 தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள், 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும் வாக்குச்சாவடி முகவர் பட்டியல் வழங்காத அரசியல் கட்சியினர் உடனடியாக முகவர் பட்டியல் அனுப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் அனைத்து வாக்காளர்களுக்கும் ஆதார் எண் இணைத்தல் தொடர்பாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
இதில் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமை தாங்கினார். முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன."
- அரசு பள்ளிகளில் கலை திருவிழா ேபாட்டிகள் நடைபெற்றது
- மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்பு
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளில் ஒன்றிய அளவில் கலைத் திருவிழா நடைபெற்றது.
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவை, நகர் மன்ற தலைவர் சாந்திகலைவாணன் தொடக்கி வைத்து பேசினார். இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பார்வையிட்டார்.
இதே போல், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற கலைவிழாவை ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடக்கி வைத்து, படிப்புடன் இதர திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். விழாவில், மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) ஜெயா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்குபெறுவர்.






