search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.
    X
    கூட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.

    தி.மு.க.- அ.தி.மு.க. தமிழகத்தை நாசமாக்கி விட்டது: விஜயகாந்த்

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 1967ல் இருந்து 2017 வரை 50 ஆண்டு காலமாக ஆட்சி செய்து தமிழ்நாட்டை நாசப்படுத்தி விட்டது என தாராபுரத்தில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தே.மு.தி.க. சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணி வரவேற்றார். மாநில நிர்வாகிகள் இளங்கோவன், பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்களுக்கு வழங்கி விஜயகாந்த் பேசியதாவது:-

    தொழிலாளர்கள் 8 மணி நேரம் மட்டுமே உழைக்க வேண்டும் என்பதற்காகவே மே தினம் கொண்டாடப்படுகிறது. மதுரையில் ரைஸ்மில்லில் இருந்த போதும் சரி பிறகு சினிமா துறைக்கு வந்து வளர்ந்த போதும் சரி தொழிலாளர்களின் கஷ்டத்தை உணர்ந்தவன் நான்.

    தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு நியாயமான சம்பளம் கிடைக்காமல் போவதை நினைத்து நான் இப்போதும் வருத்தப்படுகிறேன். அதை நினைக்கும் போது என் கண்களில் நீர்வருகிறது. இதை வேறு விமர்சனமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.


    மின்வெட்டால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மூடுவிழாவை நோக்கி செல்கிறது.

    தி.மு.க. லோக் ஆயுக்தா, லோக்பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அந்த சட்டம் கொண்டு வந்தால் முதலில் உள்ளே செல்வது மு.க. ஸ்டாலின் குடும்பம் தான்.

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 1967ல் இருந்து 2017 வரை தமிழ்நாட்டை 50 ஆண்டு காலமாக நாசப்படுத்தி விட்டது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் நாளை காலை ஆட்சியில் இருப்போமா? இல்லையா? என்று நினைத்து ஆட்சி செய்து வருகிறார்கள். தமிழக மின்சார துறை மயான துறையாக இருக்கிறது.

    எனவே தே.மு.தி.க.வை நம்பி ஆதரவளியுங்கள் விரைவில் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்.

    இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

    முன்னதாக டெல்லியில் விவசாயிகள் போராடிய போது பிரேமலதா சென்று ஆதரவு அளித்ததற்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து தலைமையில் விவசாயிகள் விஜயகாந்துக்கும், பிரேமலதாவிற்கும் நன்றி தெரிவித்து பொன்னாடை அணிவித்து கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
    Next Story
    ×