என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா குடும்பத்தினர் பற்றி ஜெயலலிதாவிடம் கூற பயந்தோம்- அமைச்சர் சீனிவாசன்
    X

    சசிகலா குடும்பத்தினர் பற்றி ஜெயலலிதாவிடம் கூற பயந்தோம்- அமைச்சர் சீனிவாசன்

    கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்திய சசிகலா குடும்பத்தினர் பற்றி ஜெயலலிதாவிடம் கூற பயந்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். #Sasikala #Jayalalithaa #TNMinister #DindigulSreenivasan
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் அ.தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தினார். அவர் ஆட்சியின் போது, சசிகலா குடும்பத்தினரால் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதுகுறித்து நாங்கள் எல்லாம் அறிந்தபோதும், ஜெயலலிதாவிடம் கூறுவதற்கு பயந்தோம். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த குடும்பம் கொள்ளை அடித்து பணத்தை சேர்த்தது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. அதில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா குடும்பம் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. இதற்கு காரணம் அ.தி.மு.க. தொண்டர்கள் தான்.


    ஆரம்பத்தில் வேகமாக இருந்த தினகரனின் வேகம் குறைந்து விட்டது. தற்போது அவருக்கு ஓய்வு கிடைத்து வருகிறது. முன்பு தினமும் பேட்டி கொடுத்து வந்த தினகரனை தற்போது டிவியில் தேட வேண்டியுள்ளது.

    ஒன்றாக இருந்த தினகரன், திவாகரன் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரே துறையாக மக்கள் நல்வாழ்வுத்துறை விளங்குகிறது. இதனால் இந்த துறை தேசிய அளவில் பல விருதுகளை பெற்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூறி அவரை பதவி விலகச் சொல்வது தவறானதாகும். ஜெயலலிதாவின் ஆசியுடன் நடக்கும் இந்த ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், குரங்கணி தீ விபத்து குறித்து ஒருநபர் கமிஷன் விசாரணை நடத்தி உள்ளது. விரைவில் அந்த அறிக்கை வெளியிடப்படும். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம். தமிழகத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தைல மரங்களுக்கு பதில் முந்திரி மரங்கள் நடவு செய்ய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala #Jayalalithaa #TNMinister #DindigulSreenivasan
    Next Story
    ×