search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கமல், ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்தது ஏன்?: பிரேமலதா
    X

    ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கமல், ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்தது ஏன்?: பிரேமலதா

    கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது ரஜினியும் கமலும் எங்கு இருந்தார்கள். அவர்கள் அரசியலுக்கு வராதது ஏன்? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வியெழுப்பினார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஜார் வீதியில் தே.மு.தி.க. மேற்கு மாவட்டம் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

    மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் மக்களுக்காக இறங்கி போராடும் கட்சியாக தே.மு.தி.க. உள்ளது. பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சொன்னவுடன் ஆட்சியாளர்கள் பஸ் கட்டணத்தை குறைத்தது எங்களது பலத்தை காட்டுகிறது.

    ஜல்லிக்கட்டு பிரச்சனை வந்தபோது அலங்காநல்லூரில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வரவேண்டும் என குரல் கொடுத்தது விஜயகாந்த்தான்.

    கரும்பு விவசாயிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் கரும்பு ஆலைகள் முன்பு தே.மு.தி.க. முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் 2 நாட்களிலேயே கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என ஆட்சியாளர்கள் அறிவித்தனர்.

    பஸ் கட்டணத்தை 5 பைசா, 10 பைசா என குறைப்பதை விட ஒட்டு மொத்தமாக குறைக்க வேண்டும் என்பதே தேமுதிக-வின் கோரிக்கை. லஞ்சம், ஊழல் தமிழகத்தில் குறைய வேண்டும். ஆட்சியை சரியாக நடத்தினாலே இந்த நஷ்டத்திலிருந்து போக்குவரத்து துறையை காப்பாற்றலாம்.

    ஆட்சி நிர்வாகம் அதிகாரிகளிடத்திலும் இல்லை, ஆட்சியாளர்களிடமும் இல்லை என்பதே போக்குவரத்து துறையில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு காரணம்.

    கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருக்கும் போது ரஜினியும் கமலும் எங்கு இருந்தார்கள். அவர்கள் அரசியலுக்கு வராதது ஏன்? யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரட்டும், களத்தில் இறங்கி போராடட்டும் ஆனால் அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    தமிழகத்தில் கவர்னர் ஆட்சி கொண்டு வருவதற்கான முன்னோட்டம் தான் கவர்னர் சுற்றுப்பயணம். எனவே தமிழகத்தில் ஆட்சி விரைவில் கவிழும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக திருவள்ளூர் தேரடியில் இருந்து பஜார் வரை மாட்டு வண்டியில் வந்தார்.

    ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சேகர், நிர்வாகிகள் ஆயில் சரவணன், நம்பாக் கம் முனிவேல், புதூர் பாலாஜி, கிழானூர் சுந்தர், நிசாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    Next Story
    ×