search icon
என் மலர்tooltip icon

    மேகாலயா

    • மேற்கு வங்காளத்தில் வன்முறைகள், ஊழல்கள் அதிகரித்து உள்ளன.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

    சில்லாங் :

    சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். சில்லாங்கில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை ஆகும். தாங்கள் அனைத்தையும் புரிந்து வைத்திருப்பதாக நினைக்கிறார்கள். யாரையும் மதிப்பதும் இல்லை. அவர்களுக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டும். மேகாலயாவின் மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்றை பா.ஜனதா அழிக்க பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதை அனுமதிக்காது.

    நான் உங்களுடைய பாரம்பரிய ஜாக்கெட்டை அணிந்திருக்கிறேன். உங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் இதை அணிந்துள்ளேன். எனது செயல்கள் இந்த ஜாக்கெட்டில் பிரதிபலிக்கின்றன. ஆனால், பிரதமர் வருவதைப் போல நான் இங்கு வந்திருந்தால், இந்த ஜாக்கெட்டை அணிந்து கொண்டு, உங்கள் மதம், கலாசாரம், வரலாறு மற்றும் மொழியைத் தாக்கினால் நான் உங்களை அவமதித்ததாகவே இருக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'திரிணாமுல் காங்கிரசின் வரலாறு உங்களுக்கு தெரியும். மேற்கு வங்காளத்தில் வன்முறைகள், ஊழல்கள் அதிகரித்து உள்ளன. அவர்களது பாரம்பரியத்தை நீங்கள் அறிவீர்கள். கோவா தேர்தலில் மிகப்பெரிய தொகையை அவர்கள் செலவழித்தார்கள். பா.ஜனதாவுக்கு உதவுவதற்கே இந்த யோசனை' என சாடினார்.

    இதே திட்டத்தை மேகாலயாவிலும் பின்பற்றுவதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, மேகாலயாவில் பா.ஜனதா வலுவடைந்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே அந்த கட்சியின் திட்டம் என்றும் கூறினார்.

    • திரிபுராவில் ஆளும் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள ஐ.பி.எப்.டி. கட்சி முடிவு செய்துள்ளது.
    • திரிபுராவில் கூட்டணி விவகாரங்களை கவனித்துக் கொள்ள பா.ஜனதாவில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் பணியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதா தனித்து போட்டியிடுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டும் அதே கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. இப்போது 2-வது முறையாக தனித்து போட்டியிடுகிறது.

    அதே நேரத்தில் நாகாலாந்தில் என்.டி.பி.பி. கட்சியுடன் கூட்டணியை தக்க வைத்துள்ளது. அங்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டை போலவே பா.ஜனதா 20 இடங்களிலும், என்.டி.பி.பி. கட்சி 40 இடங்களிலும் போட்டியிடுகிறது.

    திரிபுராவில் ஆளும் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள ஐ.பி.எப்.டி. கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து அங்கு கூட்டணி விவகாரங்களை கவனித்துக் கொள்ள பா.ஜனதாவில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

    • மேகாலயாவில் அடுத்த மாதம் 27-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசால் மட்டுமே நல்லாட்சி அளிக்க முடியும்.

    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், அடுத்த மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில், அங்குள்ள நார்த் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசால் மட்டுமே நல்லாட்சி அளிக்க முடியும். இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் ஆகியோரின் கனவுகளை திரிணாமுல் காங்கிரஸ்தான் நனவாக்கி வருகிறது.

    மேகாலயாவில், மக்களுக்காக, மக்களால், மக்களின் அரசை அமைக்க விரும்புகிறோம். பா.ஜனதா கட்சி இரட்டை முகம் கொண்டது. தேர்தலுக்கு முன்பு ஒன்று சொல்லும். தேர்தலுக்கு பிறகு வேறு எதையாவது செய்யும். பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி கொடுக்கிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை ஆதரியுங்கள் என்று அவர் பேசினார்.

    • மேகாலயாவில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது 3.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    ஷில்லாங்:

    மேகாலயா மாநிலம் நாங்போ பகுதியின் வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் நேற்று நள்ளிரவு 11.28 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    நேற்று காலை அரியானாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது.

    தொடர்ந்து வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக தகவல்.
    • வங்காளதேச பாதுகாப்பு படையினரிடம் சிறுவன் ஒப்படைப்பு.

    ஷில்லாங்:

    வங்காளதேசத்தை ஒட்டி அமைந்துள்ள மேகாலயா மாநிலத்தின் தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட எல்லைக்குள் சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்துள்ளான். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்ட அந்த சிறுவனை பிடித்த எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வங்காளதேச நாட்டைச் சேர்ந்த தாம் வேண்டுமென்றே இந்த பகுதிக்குள் நுழையவில்லை என்றும், கவன குறைவாக வழி தவறி வந்து விட்டதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.

    இதையடுத்து நல்லெண்ண நடவடிக்கையாக, வங்காளதேச பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் அந்த சிறுவன் ஒப்படைக்கப் பட்டதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 


    இதுகுறித்து பேசிய இந்திய பாதுகாப்பு படை அதிகாரி பிரதீப் குமார், இது போன்று இந்திய பகுதிக்குள் நுழைபவர்கள் சிறார்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கும் நிலையில் இரு அண்டை நாடுகளின் எல்லை பாதுகாப்பு படையினர் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

    இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும் இது போன்ற பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 8 ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்து விட்டன.
    • பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் 60 சதவீதம் சரிந்து விட்டது.

    ஷில்லாங் :

    இந்தியாவின் 8 வட கிழக்கு மாநிலங்களான அருணாசலபிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகியவற்றின் நலனுக்காக, குறிப்பாக அவற்றின் பொருளாதார, சமூக மேம்பாட்டுக்காக 1972-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி வடகிழக்கு கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது.

    இந்த வட கிழக்கு கவுன்சில் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி அதன் பொன்விழா கொண்டாட்டம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கலந்து கொண்டார்.

    இந்த விழாவில் பேசும்போது அமித்ஷா கூறியதாவது:-

    வட கிழக்கு மாநிலங்கள் என்றால் வன்முறை, பிரிவினைவாதம் என்றுதான் ஒரு காலத்தில் அறியப்பட்டன. ஆனால் (மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிற) கடந்த 8 ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்து விட்டன. பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் 60 சதவீதம் சரிந்து விட்டது. வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள் பலியாவது 89 சதவீதம் குறைந்திருக்கிறது.

    வட கிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் அமைதியை ஏற்படுத்தியது.

    கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி 50 முறை இங்கு வந்துள்ளார். இந்த பிராந்திய வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டியவரும் அவர் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவைகளுக்கு ரெட் கார்ட் கொடுத்தோம்.
    • அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் இலக்கு.

    ஷில்லாங்:

    மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    கால்பந்து போட்டியில் விதிகளுக்கு எதிராக செயல்படும் வீரர்கள், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதே போல் கடந்த 8 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த வளர்ச்சியின்மை, ஊழல், அமைதியின்மை போன்ற அனைத்து தடைகளுக்கும் எனது அரசு ரெட் கார்டு வழங்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும் முயற்சிகளையும் அகற்றியுள்ளோம்.

    வடகிழக்கு மாநிலங்களில் மேம்படுத்தப்பட்ட விமான சேவை இணைப்பு, வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்ய உதவுகிறது, இது விவசாயிகளுக்கு பயனளிக்கிறது. அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டு வருவதுமே அரசின் இறுதி இலக்காகும். ஊழல், பாகுபாடு, வன்முறை மற்றும் வாக்கு வங்கி அரசியலை ஒழிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டு வளர்ச்சிக்கு மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதை போன்று உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை நாங்கள் நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அந்த விளையாட்டு போட்டியில் எங்கள் மூவர்ணக் கொடி உயரத்தில் பறக்கும், அப்போது எங்கள் சொந்த அணிக்காக நாங்கள் ஆதரவு குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.3,400 கோடி செலவில் கட்டப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை பயனாளிகளிடம் பிரதமர் ஒப்படைக்கிறார்.
    • புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 320க்கும் அதிகமான 4ஜி செல்போன் கோபுரங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

    வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுராவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளை பாரதீய ஜனதா கடந்த வாரமே தொடங்கிவிட்டது.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மேகாலயா, திரிபுராவுக்கு சென்று ரூ.6,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மேகாலயா தலைநகர் ஷில்லாங் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதலில் அவர் இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தின் (ஐ.ஐ.எம்.) புதிய வளாகத்தை திறந்து வைத்தார். பின்னர் மோடி வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதோடு ரூ.2,450 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதோடு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வடகிழக்கு மாநில முதல் அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு பிராந்தியத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 320க்கும் அதிகமான 4ஜி செல்போன் கோபுரங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

    மேகாலயா, மணிப்பூர், இமாச்சல பிரதேசம் இடையே அமைக்கப்பட்டு உள்ள சாலை, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ள 21 இந்தி நூலகங்கள் உள்பட பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    அதைத்தொடர்ந்து திரிபுரா செல்கிறார். அங்கு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.3,400 கோடி செலவில் கட்டப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை பயனாளிகளிடம் பிரதமர் ஒப்படைக்கிறார்.

    விரிவுப்படுத்தப்பட்ட அகர்தலா புறவழிச்சாலையை அவர் திறந்து வைக்கிறார். அந்த மாநிலத்தில் 230 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் அமைத்தல், 540 கிலோ மீட்டர் தொலை வில் 112 சாலைகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    • மொத்தம் ரூ.6,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
    • பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி, நாளை மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நாளை காலை நடைபெறும் வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர் காலை 11.30 மணியளவில் ஷில்லாங்கில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    மேலும் அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களை இணைக்கும் 6 சாலைத் திட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஷில்லாங் தொழில் நுட்ப பூங்காவின் 2ம் கட்டப் பணிகளுக்கும், துராவில் ஒருங்கிணைந்த மருத்துவமனை மற்றும் கன்வென்சன் மையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் நிறைவடைந்த பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

    தொடர்ந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு செல்லும் பிரதமர், பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது ரூ.4,350 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்தப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

    பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூ.3,400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். அகர்தலா புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேகாலயாவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது 3.4 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    ஷில்லாங்:

    மேகாலயா மாநிலம் டூரா பகுதியின் தென்கிழக்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • அக்னிபாத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது.
    • இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பாக்பத் :

    முப்படைகளில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக்கும் அக்னிபாத் திட்டம் தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எதிர்கால போர் வீரர்களான இளைஞர்களுக்கு அக்னிபாத் திட்டத்தில் 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் விடுப்பும் கிடைக்கிறது. மீதமுள்ள 3 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியமும் இன்றி வீடு திரும்பும் அவர்களுக்கு திருமண வரன்கள் எதுவும் அமையாது. அந்தவகையில் அக்னிபாத் திட்டம் எதிர்கால வீரர்களுக்கு எதிரானது. அவர்களின் நம்பிக்கை மீதான மோசடி இது' என சாடினார்.

    எனவே ஒப்பந்த அடிப்படையில் ஆள்தேர்வு செய்யும் இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    முன்னதாக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கவர்னர் சத்யபால் மாலிக் போர்க்கொடி உயர்த்தி அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×