என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • சட்டசபையை இதுபோல நடத்துவது அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல்.
    • உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

    மும்பை :

    சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்தியாகவும் பதவியேற்றார். இன்று சட்டசபையில் பெரும்பான்மையையும் நிருபித்தார். முன்னதாக உத்தவ் தாக்கரேயை எளிதில் அணுக முடியவில்லை என ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்ற எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

    இந்தநிலையில் உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதில் இன்று தாதர் சேனா பவனில் உத்தவ் தாக்கரே தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    இது சிவசேனாவை அழிக்க பா.ஜனதா போட்ட சதி. தைரியம் இருந்தால் இடைத்தேர்தலை நடத்துங்கள் என அவர்களுக்கு சவால் விடுகிறேன். இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதை விடுத்து, நாம் மக்கள் மன்றத்தை சந்திக்கலாம். ஒருவேளை நாங்கள் தவறு செய்து இருந்தால் மாநில மக்கள் எங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

    நீங்கள் தவறு செய்து இருந்தால் உங்களை (பா.ஜனதா, ஷிண்டே அணி) வீட்டுக்கு அனுப்புவார்கள். சட்டசபையை இதுபோல நடத்துவது அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல். நான் போராட உள்ளேன். போராட்டத்திற்கு தயாராக உள்ளவர்கள் என்னுடன் இருக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நான் அரசில் பங்கேற்க மாட்டேன் என்பதும் முடிவு செய்யப்பட்டது.
    • நான் துணை முதல்-மந்திரியாக மனதளவில் தயாராகவில்லை.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமைக்கு எதிராக திரும்பி ஏக்நாத் ஷிண்டே அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தினார். அவர் மகாவிகாஸ் அகாடியில் இருந்து வெளியேறி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். அவருக்கு பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் பா.ஜனதா அவருக்கு முதல்-மந்திரி பதவியை கொடுத்தது. இது பா.ஜனதாவின் தலைமை எடுத்த ராஜதந்திர முடிவு என கூறப்பட்டது.

    இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்-மந்திரி பதவியை கொடுக்குமாறு நான் தான் கூறினேன் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

    " எங்கள் தலைவர்கள் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா என்னிடம் கேட்டு தான் ஏக்நாத் ஷிண்டேயை முதல்-மந்திரியாக்க முடிவு செய்தனர். ஏக்நாத் ஷிண்டேயை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என நான் தான் கூறினேன் என்று கூறினால் கூட தவறில்லை. நான் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    மேலும் நான் அரசில் பங்கேற்க மாட்டேன் என்பதும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஜே.பி. நட்டா என்னை தொடர்பு கொண்டு நான் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க வேண்டும் என கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறினார். உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேசினார்.

    எனினும் துணை முதல்-மந்திரியாக நான் மனதளவில் தயாராகவில்லை. ஏக்நாத் ஷிண்டேவுக்கு வெளியில் இருந்து உதவி செய்யவே தயாராக இருந்தேன். எனினும் எனது தலைவர்களின் உத்தரவால் எனது முடிவை மாற்றிக்கொண்டேன். " என்றார்.

    • சிவசேனா பால் தாக்கரேவுக்குச் சொந்தமானது என்றார் சஞ்சய் ராவத்.
    • பணத்தின் மூலம் கட்சியை யாரும் விலைக்கு வாங்க முடியாது என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாகவும், பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல் மந்திரியாகவும் பதவியேற்றனர். கடந்த 4-ம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

    இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சிவசேனா 100 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று உறுதியுடன் உள்ளோம். இடைத்தேர்தல் வரட்டும், யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்பது எல்லாம் தெளிவாகும் என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

    சிவசேனா பால் தாக்கரேவுக்குச் சொந்தமானது. வேறு யாருடையதாகவும் இருக்கமுடியாது. பணத்தின் மூலம் கட்சியை விலைக்கு வாங்க முடியாது.

    பணம் மட்டுமல்லாது வேறு ஏதாவது கொடுக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்த ஏதாவது வெளிப்படும் போது தெரியவரும்.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வருவார்கள் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் எங்கள் கட்சியினர், மீண்டும் வருவார்கள் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்பை மற்றும் புறநகர் பகுதியான தானே மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கல்பாதேவி மற்றும் கயாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    இந்தநிலையில் நேற்று இரவு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    சயான், அந்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது. இன்று காலையில் மழை பெய்ததால் தொடர்ந்து வெள்ளம் தேங்கியபடி இருந்தது.

    ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ரோடுகளில் வெள்ளம் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களில் செல்வோர் தவித்தனர். ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றன.

    தானே, நவி மும்பை பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருந்தது. கடுமையான மழை காரணமாக பேரிடர் மீட்பு குழு மும்பை வாப் மீட்பு பணியில் ஈடுபட்டது. தாழ்வான பகுதியில் இருந்த மக்களை 5 குழுக்கள் மீட்டு வருகிறது.

    மும்பை மற்றும் புறநகர் பகுதியான தானே மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நான் ஒரு சிவசேனாவை சேர்ந்தவன், எப்போதும் அப்படி தான் இருப்பேன்.
    • நான் துணை முதல்-மந்திரி ஆவதை சிவசேனா ஏற்க மறுத்துவிட்டது.

    மகாராஷ்டிரா சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எளிதாக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இந்த புதிய அரசை அமைப்பதற்கு பின்னால் இருந்த கலைஞர் பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தான். இன்றைய நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்தவை இல்லை. நான் ஒரு சிவசேனாவை சேர்ந்தவன், எப்போதும் அப்படி தான் இருப்பேன். நான் எனது சொந்த முயற்சியின் மூலம் தானே மற்றும் அதை சுற்றியுள்ள 16 லேடீஸ் பார்களை மூடினேன். என் மீது 100-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் மிகவும் அமைதியானவன். எங்களை பற்றியோ, கட்சிக்காரர்களை பற்றியோ கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினாலும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளிக்கிறேன்.

    நாங்கள் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு சென்றபோது, 40 எருதுகள் பலியிடத்திற்கு செல்வதாக கூறினார்கள். இப்போது யார் பலிகடா ஆக்கப்பட்டார்கள்?

    2014-ம் ஆண்டு ஆளும் பா.ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின்போது எனக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைக்க இருந்தது. ஆனால் நான் துணை முதல்-மந்திரி ஆவதை சிவசேனா ஏற்க மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து எனக்கு வழங்கப்பட்ட மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக இருந்தேன்.

    ஆனால் அப்போது எனக்கு ஆதரவளித்தது, முதல்-மந்திரியாக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் தான். உங்களுக்கு விரைவில் நல்ல பதவி கிடைக்கும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி என்னிடம் கூறினார். கடந்த மாநிலங்களவை தேர்தலின்போது நான் ஒதுக்கப்பட்டு இருந்தபோதிலும், சிவசேனா அல்லாத வாக்காளர்களிடம் இருந்து 3 வாக்குகளை எங்கள் வேட்பாளருக்கு என்னால் பெற முடிந்தது. இதைத்தொடர்ந்து மேல்-சபை தேர்தலின்போது நான் நடத்தப்பட்ட விதம் என்னை கடுமையாக தூண்டிவிட்டது.

    சட்டசபையில் தற்போது பா.ஜனதாவின் பலம் 106 ஆகவும், எங்கள் எம்.எல்.ஏ.க்களின் பலம் 50 ஆகவும் உள்ளது. ஆனால் அடுத்த தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இல்லை என்றால் நான் மீண்டும் விவசாய வேலைக்கே சென்றுவிடுவேன். கடந்த காலங்களில் சிவசேனாவை விட்டு வெளியே சென்றவர்கள் இந்துத்வா பாதையில் இருந்து விலகி சென்றனர்.

    இருப்பினும் நாங்கள் இந்துத்வா பாதைக்கு திரும்புவதற்காக மகா விகாஸ் அகாடியை விட்டு வெளியேறினோம். அதனால் என்னுடன் இணைந்த ஒரு எம்.எல்.ஏ. கூட தேர்தலில் தோற்க மாட்டார்கள்.

    நான் எப்படி ஓரங்கட்டப்பட்டேன் என்பதை நேரில் பார்த்தவர்கள் இந்த சபையில் உள்ளனர். நான் நீண்டகாலமாக அடக்குமுறைகளுக்கு ஆளாகி இருக்கிறேன். சுனில் பிரவும் (உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ.) எனக்கு நடந்தவற்றிற்கு ஒரு சாட்சி ஆவார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு கீழ் பணியாற்ற விரும்பவில்லை என்று மகா விகாஸ் அகாடி அரசு அமைவதற்கு முன்பு என்னிடம் கூறப்பட்டது. ஆனால் மகா விகாஸ் அகாடி அரசு அமைந்த பிறகு உங்கள் சொந்த கட்சியில் (சிவசேனா) விபத்து நடத்துவிட்டது என அஜித்பவார் என்னிடம் கூறினார். நீங்கள் முதல்-மந்திரியாக வருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பதவி ஏற்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு வாழ்த்து கூறினார்.
    • அமித்ஷா எங்களுக்கு பின்னால் ஒரு பாறையை போல நின்று ஆதரவளிப்பதாக கூறினார்.

    சிவசேனாவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனால் நடந்த அரசியல் திருப்பங்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பா.ஜனதா மழுப்பலாக பதில் கூறி வந்தது. தேவேந்திர பட்னாவிசும், ஏக்நாத் ஷிண்டேயும் குஜராத்தில் சந்தித்து பேசியதாக தகவல்களும் பரவின. இந்த நிலையில் நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கையோடு திறந்த புத்தகம் போல, திரைக்கு பின்னால் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே படம் போட்டு காட்டினார்.

    இதுபற்றி ஏக்நாத் ஷிண்டே நேற்று சட்டசபையில் பேசியதாவது:- 20-ந் தேதி எம்.எல்.சி. தேர்தலில் கட்சியால் எனக்கு கிடைத்த அவமரியாதை என்னை கட்சிக்கு எதிராக தூண்டியது. இனி கட்சி பக்கம் திரும்ப கூடாது என்று தீர்மானித்தேன். எம்.எல்.ஏ.க்களுடன் போலீஸ் சோதனை சாவடிகளை தாண்டி எப்படி செல்வது என்பது எனக்கு தெரியும். செல்போன் டவர்களைக் கண்டறிவது மற்றும் ஒரு நபரை கண்காணிப்பது எப்படி என்று எனக்குத் தெரியும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய கலைஞர் இவர் தான் (இவ்வாறு கூறியபடி தனது வலது பக்கம் அமர்ந்திருந்த பட்னாவிசை சுட்டிக்காட்டினார்). கவுகாத்தி ஓட்டலில் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அயர்ந்து தூங்கிய பிறகு நான் குஜராத் செல்வேன். அங்கு பட்னாவிசை சந்தித்து பேசுவேன். எம்.எல்.ஏ.க்கள் எழுந்திருக்கும் முன்பே அதிகாலையில் கவுகாத்தி ஓட்டலுக்கு திரும்பி விடுவேன். எல்லாவற்றையும் ஒருக்கிணைத்தவர் இங்கே இருக்கிறார். இவர் என்ன செய்வார், எப்படி செய்வார் என்று யாருக்கும் தெரியாது.

    இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

    இந்த ரகசியங்களை ஏக்நாத் ஷண்டே போட்டுடைத்தபோது பட்னாவிஸ் தர்மசங்கடமான நிலையில் இருந்ததை காண முடிந்தது. மேலும் ஏக்நாத் ஷிண்டே பேசும்போது, "எங்கள் எண்ணிக்கை பா.ஜனதாவை விட குறைவாக இருந்தது. ஆனாலும் பதவி ஏற்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு வாழ்த்து கூறினார். மேலும் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக என்னிடம் தெரிவித்தார். மத்திய மந்திரி அமித்ஷா எங்களுக்கு பின்னால் ஒரு பாறையை போல நின்று ஆதரவளிப்பதாக கூறினார்" என்றார்.

    • அரசியல் விளையாட்டிற்கு பதிலாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.
    • சட்டசபையை தன்னிச்சையாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல்.

    மும்பை:

    மகாராஷ்டிர சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவசேனா தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, சிவசேனா பவனில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பேசியதாவது:

    சட்டசபையை தன்னிச்சையாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல். சிவசேனா கட்சியை முடிவுக்குக் கொண்டு வர பாஜக சதி செய்கிறது. இந்த விளையாட்டுகளை எல்லாம் விளையாடுவதற்கு பதிலாக, அவர்களுக்கு தைரியம் இருந்தால் மாநிலத்தில் இடைக்காலத் தேர்தலை நடத்த வேண்டும்.

    நாங்கள் மக்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம். நாங்கள் தவறு செய்தால், மாநில மக்கள் எங்களை வீட்டிற்கு அனுப்புங்கள், நீங்கள் (ஷிண்டே குழுவினர் ) தவறாக இருந்தால், மக்கள் உங்களை வீட்டிற்கு அனுப்புவார்கள்

    மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் நகர்வுகள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதா அல்லது அரசியலமைப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிருபிக்க சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
    • சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ராகுல் நர்வேக்கர் வெற்றி பெற்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார்.

    காலியாக உள்ள சபாநாயகர் பதவி தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிருபிக்கவும் 3, 4 ஆகிய தேதிகளில் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சட்டசபை சிறப்பு கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் ராகுல் நர்வேக்கரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வியும் போட்டியிட்டனர். இதில் ராகுல் நர்வேக்கர் வெற்றி பெற்றார்.



    இந்த நிலையில் இன்று காலை சட்டசபை மீண்டும் கூடியது. ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பெரும்பான்மையை நிரூபித்து ஷிண்டே தனது ஆட்சியை தக்க வைத்தார். பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அரசுக்கு ஆதரவாக 164 பேர் வாக்களித்தனர். இதனால் ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

    சட்டசபையில் சிவசேனாவுக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் ஏக்நாத் ஷிண்டே அணியில் 39 பேர் இருந்தனர். சட்டமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சிவசேனா கட்சியின் மேலும் ஒரு எம்எல்ஏ, ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவினார். இதனால் ஷிண்டே அணியின் பலம் 40 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

    • சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்துவரப்பட்டனர்.
    • மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த 2½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிவசேனா தலைமையிலான ஆட்சி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். இ்ந்தநிலையில் காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது.

    இதற்காக கோவாவில் முகாமிட்டு இருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்துவரப்பட்டனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வருகையையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் அவர்கள் வருவதற்காக தனிவழிபாதைகள் அமைக்கப்பட்டன. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    சபாநாயகர் தேர்தலில் வாக்குப்பதிவு நடத்துவதற்காக விதான் பவன் அருகில் உள்ள சொகுசு ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள், தங்கியிருந்த ஓட்டலுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதீத பாதுகாப்பை சிவசேனா முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மும்பையில் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அஜ்மல் கசாப்புக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு போடப்படவில்லை. நீங்கள் ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? அங்கிருந்து யாராவது தப்பி ஓடிவிட போகிறார்களா? ஏன் இவ்வளவு பயம்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதியான அஜ்மல் கசாப் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது உயிருடன் பிடிபட்டவர் ஆவார்.

    • 12 எம்.எல்.சி. விவகாரமும் கவா்னரின் கண்ணுக்கு தெரியாமல் இருந்தது.
    • கவர்னர் பதவி பிராமணத்தை மீறியது தெளிவாக தெரிகிறது.

    சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வியாழக்கிழமை ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை மும்பை ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிசுக்கு இனிப்பு ஊட்டினார். கவர்னர், ஆட்சி அமைக்க உரிமை கோர வந்தவர்களுக்கு இனிப்பு ஊட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை கிண்டல் செய்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்பு விழாவை டி.வி.யில் பார்த்தேன். கவர்னர் அவர்களுக்கு இனிப்பு ஊட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். அவரிடம் சில பண்புகள் மாறி இருப்பதாக தெரிகிறது. இதேபோல 2019-ல் மகாவிகாஸ் அகாடி பதவி ஏற்பு விழாவில் நான் இருந்தேன். அப்போது கவர்னர் சில மந்திரிகள் தலைவர்களின் பெயரை கூறி பதவி ஏற்க எதிர்ப்பு தெரிவித்தார். அதுகுறித்து என்னிடம் கூட அவர் கூறினார். ஆனால் ஏக்நாத் ஷிண்டே பால்தாக்கரே, ஆனந்த் திகே பெயரை கூறி பதவி ஏற்ற போது அவர் எதுவும் கூறவில்லை.

    இதேபோல 12 எம்.எல்.சி. விவகாரமும் கவா்னரின் கண்ணுக்கு தெரியாமல் இருந்தது. அவர் 12 எம்.எல்.சி.களை நியமிக்க ஒப்புதல் அளிக்கவே இல்லை. தற்போது அவர் விரைவில் முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது. கவர்னர் பதவி பிராமணத்தை மீறியது தெளிவாக தெரிகிறது. கவர்னர் பல தரப்பட்ட அரசியல் சூழல்களை சந்திக்கும் போது நடுநிலையுடன் செயல்படவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபாநாயகர் தேர்தலில் ராகுல் நர்வேக்கர் வெற்றி பெற்றார்.
    • மகாராஷ்டிரா சட்டசபையின் மொத்த பலம் 287 ஆகும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த 2½ ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சி கவிழ்ந்தது. கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார்.

    இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே ராஜினாமா செய்ததால், கடந்த 1½ ஆண்டுகளாக காலியாக உள்ள சபாநாயகர் பதவி தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிருபிக்கவும் 3, 4 ஆகிய தேதிகளில் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் ராகுல் நர்வேக்கரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வியும் போட்டியிட்டனர்.

    தேர்தலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணிக்கு எதிராக சிவசேனா வேட்பாளரை நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு போட்டியாக சிவசேனா அதிருப்தி அணியும் கட்சியினருக்கு கொறடா உத்தரவு பிறப்பித்தது.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு மகாராஷ்டிரா சட்டசபை முதல் முறையாக நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ரயிஸ்சேக், அபு ஆஸ்மி, எம்.ஐ.எம். கட்சியின் ஷா பரூக், முப்தி முகமது, பா.ஜனதாவின் லட்சுமண் ஜக்தாப், முக்தா திலக், ஜெயிலில் உள்ள தேசியவாத காங்கிரசை சேர்ந்த அனில் தேஷ்முக், நவாப் மாலிக் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த தத்தாரே பாரனே, அன்னா பன்சோதே, நிலேஷ் லங்கே, பாபன்தாதா ஷிண்டே, காங்கிரசை சேர்ந்த பிரனிதி ஷிண்டே, ஜிதேஷ் அன்தாபுர்கர் என சுமார் 13 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.

    இதையடுத்து நடந்த சபாநாயகர் தேர்தலில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை சபாநாயகர் நர்காரி ஜிர்வால் பொறுப்பு சபாநாயகராக இருந்து புதிய சபாநாயகர் தேர்தலை நடத்தினார். முடிவில் சபாநாயகர் தேர்தலில் 271 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதில் பா.ஜனதாவின் ராகுல் நர்வேக்கர் 164 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் ராஜன் சால்விக்கு 107 ஓட்டுக்களே கிடைத்தன.

    மகாராஷ்டிரா சட்டசபையின் மொத்த பலம் 288 ஆகும். ஒரு உறுப்பினர் இறந்துவிட்டதால் தற்போதைய பலம் 287. மெஜாரிட்டிக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சிவசேனா அதிருப்தி- பா.ஜனதா கூட்டணி அரசு மெஜாரிட்டிக்கு கூடுதலாக 20 ஓட்டுகள் பெற்று சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்ற 45 வயது ராகுல் நர்வேக்கருக்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து கூறினார்.

    அப்போது அவர், 'நாட்டின் இளம் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர்' என பெருமிதத்துடன் தெரிவித்தார். இதற்கிடையே சட்டசபை வளாகத்தில் உள்ள சிவசேனா சட்டமன்ற கட்சி அலுவலகம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் சீல் வைக்கப்பட்டது. அலுவலக வாசலில், 'சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் உத்தரவின் பேரில் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.' என எழுதப்பட்ட வாசகம் தொங்கவிடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. சபாநாயகர் தேர்தலில் பெற்றிபெற்றதால் நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே அரசு எளிதில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதை தடுக்க மும்பையில் உள்ள ஓட்டலுக்கு மீண்டும் அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

    • பாஜகவை சேர்ந்த நர்வேகர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளில் உறுப்பினராக இருந்தவர்.
    • தற்போது கொலாபா தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.

    \முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர்.

    வாக்கெடுப்பில் நர்வேகருக்கு ஆதரவாக 164 வாக்குகளும், சால்விக்கு ஆதரவாக 107 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து புதிய சபாநாயகராக ராகுல் நர்வேக்கர் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும், நர்வேக்கரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    அப்போது பேசிய பட்னாவிஸ், ராகுல் நர்வேகர் மகாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் இளம் வயது சபாநாயகராக உள்ளார் என தெரிவித்தார். 45 வயதான நார்வேக்கரின் முதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார். பின்னர் அதில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்த அவர், அக்கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவர்.

    பின்னர் 2014 ஆம் ஆண்டில் சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் அவர் இணைந்தார். தற்போது கொலாபா தொகுதி பாஜக எம்எல்ஏவாக அவர் உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ராகுல் நர்வேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×