என் மலர்
குஜராத்
- இந்தியா, நியூசிலாந்து இடையிலான டி20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.
- இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
அகமதாபாத்:
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், லக்னோவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியும் வென்றது. இதன்மூலம் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டி20 போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேவேளையில் மற்றொரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பின் அணியில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் சுப்மன் கில்லா? பிரித்வி ஷாவா? என்பதை பாண்ட்யா தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, டி20 தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
- இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளளனர்.
- ஜெய்சுக் படேலை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளளனர். தொங்கு பாலத்தை பழுதுபார்த்து புதுப்பித்து, பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் ஜெய்சுக் பட்டேல் பெயர் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெய்சுக் படேலை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கைது செய்வதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டதையடுத்து, ஜெய்சுக் பட்டேல் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10வது நபர் ஜெய்சுக் படேல் ஆவார். முன்னதாக கைது செய்யப்பட்டவர்களில் துணை ஒப்பந்ததாரர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அடங்குவர்.
- சாமியார் ஆசாராம் பாபுவுக்கான தண்டனை தொடர்பான வாதம் இன்று நடைபெற்றது.
- சாமியாரின் மனைவி, மகன் உள்ளிட்ட 6 பேரையும் வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்தது.
காந்தி நகர்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபு மீது, சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.
2013ல் பதிவு செய்யப்பட்ட இந்த புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கோர்ட் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகளாக கூறிக்கொண்ட 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், சாமியாரின் மனைவி, மகன், 4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
இந்நிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஆசாராம் பாபுவுக்கான தண்டனை தொடர்பான வாதம் இன்று நடைபெற்றது. வாதத்தின் முடிவில், ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஆசாராம் பாபு, ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசாராம் பாபுவுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது.
- மனைவி லட்சுமி, மகன் உள்ளிட்ட 6 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன. சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதனிடையே, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரத்தைச் சேர்ந்த பெண், அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா போலீசில் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
2013ல் பதிவு செய்யப்பட்ட இந்த புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கோர்ட் விசாரித்து வந்தது. பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் பக்தைகளாக கூறிக்கொண்ட 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், சாமியாரின் மனைவி, மகன், 4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. ஆசாராம் பாபுவுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.
- கவ்டா கிராமத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- நில நடுக்கங்களால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அகமதாபாத்:
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 6.38 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துதாய் கிராமத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் வடக்கு-வடகிழக்கே பதிவானது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது.
அதற்கு முன்னதாக அதிகாலை 5.18 மணியளவில் கவ்டா கிராமத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கங்களால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
- குஜராத்தில் அரசுப்பணி தேர்வுக்கான வினாத்தாள் நேற்று கசிந்தது.
- வினாத்தாள் கசிந்ததால் அரசுப்பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அகமதாபாத்:
குஜராத் மாநில பஞ்சாயத்து தேர்வு வாரியம் சார்பில் 1,181 கிளார்க் பணியிடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஒன்பதரை லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால் இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது நேற்று அதிகாலையில் தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் வினாத்தாள் நகலுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தேர்வை மாநில அரசு ரத்து செய்தது. இந்த தேர்வு அடுத்த 100 நாட்களுக்குள் நடத்தப்படும் என பஞ்சாயத்து துறை மேம்பாட்டு கமிஷனர் சந்தீப் குமார் தெரிவித்தார். தொலைதூரங்களில் இருந்து தேர்வுக்காக மையங்களுக்கு வந்திருந்த தேர்வர்கள் பல இடங்களில் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் வதோதராவில் இருந்து 15 பேரை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- இந்த வழக்கில் 1262 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- கைது செய்வதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி ஜெய்சுக் பட்டேல் மனு தாக்கல் செய்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் 1262 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தொங்கு பாலத்தை பழுதுபார்த்து புதுப்பித்து, பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் ஜெய்சுக் பட்டேல் பெயர் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தவிர மேலும் 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்த அக்டோபர் மாதம் 30ம் தேதியில் இருந்து ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேலை காணவில்லை. அவரை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது செய்வதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அடுத்த வாரம் அவரது மனு விசாரணைக்கு வர உள்ளது.
அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி அசோக் யாதவ் கூறி உள்ளார்.
இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்கு குஜராத் அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்த குழு, ஓரேவா குழுமத்தின் பல குறைபாடுகளை மேற்கோள் காட்டியது. தரமற்ற பராமரிப்பு, பாலத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் டிக்கெட்டுகளை அதிக அளவில் விற்பனை செய்தாக குற்றம்சாட்டியது குறிப்படத்தக்கது.
- கடிதத்தில் பஸ்வான் என்ற பெயருடன் கூடிய ஒரு தொலைபேசி எண் இருந்தது.
- போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் கடிதம் அனுப்பியது உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த பஸ்வான் என்பது தெரிய வந்தது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு கடிதம் வந்தது.
அதில், குடியரசு தினத்தன்று (இன்று) அகமதாபாத் ரெயில் நிலையம் மற்றும் கீதா மந்திர் பஸ் நிலையம், பலியதேவ் கோவில் ஆகிய இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்படும். உங்களால் முடிந்தால் அதை தடுத்து நிறுத்துங்கள் என கூறப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரிகள் மாநகரம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்தி, தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த கடிதத்தில் பஸ்வான் என்ற பெயருடன் கூடிய ஒரு தொலைபேசி எண் இருந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது செல்போன் 'சுவிட்ச்ஆப்' ஆகி இருந்தது.
எனினும் அந்த நம்பரில் இருந்து கடைசியாக பேசிய இடத்தை கண்டுபிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் கடிதம் அனுப்பியது உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த பஸ்வான் என்பது தெரிய வந்தது.
உடனடியாக அகமதாபாத் போலீசார், உத்தரபிரதேச போலீசாரை தொடர்பு கொண்டு பேசி, மிரட்டல் கடிதம் எழுதிய பஸ்வானை பிடித்தனர்.
விசாரணையில், மன நலம் பாதிக்கப்பட்ட அவரும், அவரது மனைவியும் சேர்ந்து அந்த கடிதத்தை எழுதியது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திய நிர்வாக அமைப்புகள் குறித்து பி.பி.சி. நீண்ட காலமாகவே தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
- ஏ.கே. அந்தோணி மகன் அனில் தெரிவித்துள்ள கருத்துக்கள் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநில முதலமைச்சராக பிரதமர் மோடி பதவி வகித்த போது கடந்த 2002-ம் ஆண்டு அங்கு கலவரம் நடந்தது. இந்த கலவரம் தொடர்பாக மறு விசாரணை செய்துள்ளதாக கூறி பி.பி.சி., 2 பாகங்கள் கொண்ட ஆவணப்படம் தயாரித்து உள்ளது. இதன் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது.
இதில் கூறப்பட்ட தகவல்கள் தவறானவை என்று அந்த ஆவணப்படம் வெளியான யூ டியூப் மற்றும் டிவிட்டர் பதிவுகளை மத்திய அரசு தடை செய்தது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் பி.பி.சி. ஆவண படங்களை மக்களுக்கு திரையிட்டு காட்டப்போவதாகவும் அறிவித்தன.
அதன்படி கேரளாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல இடங்களில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். இதுபோல இளைஞர் காங்கிரசாரும் திருவனந்தபுரம், எர்ணா குளம், பாலக்காடு பகுதிகளில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர்.
இந்தியாவில் பி.பி.சி. ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாரதிய ஜனதா கட்சியுடன் எனக்கு மிகப்பெரும் கருத்து வேறுபாடுகள் உள்ளது.
ஆனால் இந்திய நிர்வாக அமைப்புகள் குறித்து பி.பி.சி. நீண்ட காலமாகவே தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
இத்தகைய எண்ணம் கொண்ட பி.பி.சி. தயாரித்த ஆவணப்படத்தையும், அவர்கள் தெரிவித்து இருக்கும் கருத்தையும் ஆதரிப்பது தேச இறையாண்மைக்கு எதிராக அமையும்.
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.கே. அந்தோணி மகன் அனில் தெரிவித்துள்ள கருத்துக்கள் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொங்கல் விழாவிற்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிரதமர் மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத் என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் அன்னாமலையை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இன்று காலையில் புறப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. இவருடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், பொங்கல் விழாவிற்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், பொங்கல் விழாவில் கலந்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மேடையில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "விட்டு கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு குஜராத் வாழ் தமிழர்கள் உதாரணம். குஜராத் மாநிலம் புனிதமானது. மகாத்மா காந்தியை பெற்றெடுத்த மண் குஜராத்.
பிரதமர் மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- 20 பொற்கொல்லர்கள் சேர்ந்து 3 மாதங்களாக பாடுபட்டு இந்த சிலையை உருவாக்கி உள்ளனர்.
- ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சூரத் :
கடந்த மாதம் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதை குறிக்கும்வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு நகை தயாரிப்பு நிறுவனம், 18 காரட் தங்கத்தில் 156 கிராம் எடையுள்ள பிரதமர் மோடியின் மார்பளவு சிலையை உருவாக்கி உள்ளது.
கடந்த மாதமே சிலை தயாராகி விட்டது. ஆனால், எடை 156 கிராமுக்கு மேல் இருந்தது. பா.ஜனதா 156 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அதற்காக சில மாறுதல்கள் செய்து எடையை 156 கிராமாக குறைத்துள்ளனர்.
20 பொற்கொல்லர்கள் சேர்ந்து 3 மாதங்களாக பாடுபட்டு இந்த சிலையை உருவாக்கி உள்ளனர். ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலை மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. விலைக்கு வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர்.
இருப்பினும், விற்பது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் வசந்த் போரா இன்னும் முடிவு செய்யவில்லை. இவர் ஏற்கனவே குஜராத்தில் உள்ள பிரமாண்டமான படேல் சிலையின் மாதிரி வடிவத்தை தங்கத்தில் தயாரித்து விற்பனை செய்துள்ளார்.
- 8 வயது தேவன்ஷி சங்வி ஒரு போதும் டி.வி. அல்லது திரைப்படங்களை பார்த்ததில்லை. உணவகங்களுக்கு சென்றதில்லை.
- எந்த ஒரு திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை.
சூரத்:
குஜராத் மாநிலத்தில் வைர நகைகள் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களில் சங்வி அன்ட் சன்ஸ் நிறுவனமும் ஒன்று.
மோகன் சங்வி என்பவர் உருவாக்கிய இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளன. மோகன் சங்வியின் மகனான தனேஷ்சங்விக்கு 8 வயது தேவன்ஷி சங்வி, 5 வயதில் காவ்யா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ஆண்டுக்கு பல நூறு கோடி வியாபாரம் செய்யும் கோடீஸ்வர நிறுவனத்தில் பிறந்தாலும் தனேஷ்சங்வியின் குடும்பத்தினர் மத வழிகாட்டுதலின்படி எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தனர். குறிப்பாக தேவன்ஷி சங்வி தனது சிறுவயதில் இருந்தே தினமும் 3 முறை பிரார்த்தனை செய்வதை வழக்காக பின்பற்றி உள்ளார்.
தற்போது 8 வயதாகும் அந்த தேவன்ஷி இன்று துறவறம் பூணுகிறார். இதையொட்டி நேற்று அவரது குடும்பத்தினர் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தினர். இதில் யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்களுடன் பிரமாண்ட ஊர்வலம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் கூறியதாவது:-
8 வயது தேவன்ஷி சங்வி ஒரு போதும் டி.வி. அல்லது திரைப்படங்களை பார்த்ததில்லை. உணவகங்களுக்கு சென்றதில்லை. மேலும் எந்த ஒரு திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை. அவர் இதுவரை 367 தீட்சை நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றுள்ளார். இது அவரை சிறுவயதிலேயே துறவற பாதையை தேர்ந்தெடுக்க உதவியது. தேவன்ஷி தனது 2 வயதிலேயே உண்ணாவிரதம் இருந்து துறவற பாதையில் செல்வதில் உறுதியாக இருந்தார் என்றார்.
தேவன்ஷி சங்வி தீட்சைக்கு தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர் துறவிகளுடன் 600 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். மேலும் பல்வேறு கடினமான நடைமுறைகளுக்கு பிறகு அவர் தனது குருவால் துறவறம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
நேற்று நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முன்னதாகவே பெல்ஜியத்திலும் இதே போன்ற ஒரு பிரமாண்ட ஊர்வலத்தை அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.






