என் மலர்tooltip icon

    குஜராத்

    • ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள்.
    • படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    குஜராத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. இதனால் மாணவிகள் கல்வி கற்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    தலிபான்களின் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து மீண்ட ஆப்கானிஸ்தான் மாணவி ஒருவர் இந்தியாவில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அந்த மாணவியின் பெயர் ரஷியா முராடி. இவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பொது நிர்வாகம்) படித்தார். இதில் அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதித்து உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனால் ரஷியா முராடி மகிழ்ச்சியுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

    கடந்த ஆண்டு நான் எம்.ஏ முடித்தேன். தற்போது பி.எச்.டி படித்து வருகிறேன். எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த சந்தோஷத்தை எனது பெற்றோருடன் கொண்டாட முடியவில்லையே? என்ற ஏக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெற்றோர்களை பார்த்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி நான் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் சந்தோஷப்பட்டனர். நான் ஆப்கானிஸ்தான் பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே கருதுகிறேன். தலிபான் அரசுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிப்பார்கள். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு படிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கும், சாதனை படைக்க ஊக்குவித்ததற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள். படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத் சட்டசபையில் மாநில மீன்வளத்துறை மந்திரி ராகவ்ஜி படேல் கேள்விக்கு பதிலளித்தார்.
    • பாகிஸ்தான் சிறையில் 560 குஜராத் மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அகமதாபாத்:

    அரபிக்கடலில் மீன் பிடிக்கச் சென்று தவறுதலாக பாகிஸ்தான் கடற்பகுதிக்குச் சென்றுவிடும் குஜராத் மாநில மீனவர்களை அந்நாட்டு கடற்பகுதி பாதுகாப்பு அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்துவருகிறது.

    இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கணக்குப்படி குஜராத் மீனவர்கள் 560 பேர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக, குஜராத் சட்டசபையில் நேற்று ஒரு கேள்விக்குப் பதிலளித்த மாநில மீன்வளத்துறை மந்திரி ராகவ்ஜி படேல் கூறியதாவது:

    கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 274 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    2021-ம் ஆண்டில் 193 பேரும், கடந்த ஆண்டில் 81 பேரும் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

    அதேநேரம் கடந்த 2 ஆண்டுகளில் 55 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

    பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்ட மீனவர்களின் 323 குடும்பங்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு தினசரி ரூ.300 உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

    கடந்த ஆண்டில் 428 குடும்பங்களுக்கு இவ்வாறு உதவித்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
    • அகமதாபாத்தில் நாளை தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் கண்டுகளிக்கிறார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் (60), இந்தியாவில் 4 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் இன்று இந்தியா வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    அகமதாபாத்தில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்க உள்ள 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் பார்க்கிறார்.

    மேலும், இந்தப் பயணத்தில் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மும்பை, டெல்லி நகரங்களுக்கும் செல்கிறார். இது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு, பொருளாதார உறவுகளை மட்டுமின்றி இரு தரப்பு மக்களின் உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும்.

    டெல்லியில் நடைபெறுகிற ஆஸ்திரேலிய, இந்திய வருடாந்திர தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் இந்தியப் பிரதமர் மோடியுடன் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கலந்து கொள்கிறார்.

    வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம், ராணுவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது பற்றி இருவரும் விவாதிக்க உள்ளனர்.

    • முதல் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரும் 4-ம் தேதி தொடங்குகிறது.
    • குஜராத் ஜெயன்ட்ஸ் அணி கேப்டனாக பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.

    அகமதாபாத்:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரும் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான குஜராத் ஜெயன்ட்ஸ் நிர்வாகம், தங்கள் அணியின் கேப்டன் யார் என்ற விவரத்தை அறிவித்தது.

    பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் 74 ரன்கள் விளாசி ஆட்டநாயகியாக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் பெத் மூனி குஜராத் அணி கேப்டனாக செயல்படுவார் என தெரிவித்துள்ளது.

    ஏலத்தில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட 29 வயதான பெத் மூனி வெளிநாட்டு லீக் போட்டியில் ஒரு அணியை வழிநடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய ஆல் ரவுண்டர் சினே ராணா துணை கேப்டனாக பணியாற்ற இருக்கிறார்.

    டபிள்யூ.பி.எல். லீக்கில் 4-ம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் அணி மும்பை இந்தியன்சை சந்திக்கிறது

    • ராஜ்கோட்டிற்கு வடமேற்கே 270 கி.மீ தூரத்திலும், 10 கி.மீ ஆழத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
    • லேசான நில அதிர்வு என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

    ராஜ்கோட்டிற்கு வடமேற்கே 270 கி.மீ தூரத்திலும், 10 கி.மீ ஆழத்திலும் இன்று மதியம் 3.30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா, மேகாலயா மாநிலங்களை தொடர்ந்து குஜராத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். லேசான நில அதிர்வு என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    • சந்திரகுப்த மவுரியரின் பொற்கால ஆட்சி குறித்து நாம் படித்து இருக்கிறோம்.
    • நமது வருங்கால சந்ததியினர், தங்கள் தந்தையரும், முன்னோர்களும் மோடியின் ஆதரவாளர்கள்.

    ஆமதாபாத் :

    குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'நமது வரலாறு பாடத்தில் சந்திரகுப்த மவுரியரின் பொற்கால ஆட்சி குறித்து நாம் படித்து இருக்கிறோம். இன்றும் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் உள்ளது. இதைப்போல அடுத்த தலைமுறைகள், 3-வது, 4-வது தலைமுறைகள் பிரதமர் மோடியின் பொற்காலம் குறித்து படிப்பார்கள். அவர்கள் இந்திய வரலாறு படிக்கும்போது இது கற்பிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் ஆட்சியில் எத்தகைய பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது எதிர்கால தலைமுறைகளுக்கு கற்பிக்கப்படும் என தெரிவித்த மாண்டவியா, நமது வருங்கால சந்ததியினர், தங்கள் தந்தையரும், முன்னோர்களும் மோடியின் ஆதரவாளர்கள் என்றும், மோடி அரசில் அங்கம் வகித்தவர்கள் என்றும் பெருமிதம் கொள்வார்கள் எனவும் கூறினார்.

    மேலும் கொரோனா தொற்று நிர்வாகம், நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம், சர்ஜிக்கல் மற்றும் வான்வழி தாக்குதல்கள், இந்தியாவின் வெளியுறவு கொள்கை போன்றவற்றால் உலகமெங்கும் இந்தியா புகழப்படும் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    • முதல் கட்டமாக இந்த வேலி 13 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.
    • விரலைகூட நுழைக்க முடியாதபடி வேலி அமைக்கப்பட உள்ளது.

    அகமதாபாத் :

    இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் வரக்கூடியவை ஆகும். இந்த எல்லைகள்தான், சீனா, வங்காளதேசம் உள்ளிட்ட நாட்டுடனான எல்லை பகுதிகளைவிட மிகப்பதற்றம் நிறைந்தவையாக காணப்படுகிறது. காஷ்மீரை தவிர்த்த மற்ற 3 மாநிலங்களிலும் பாகிஸ்தான் எல்லைகளை எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) தான் பாதுகாத்து கண்காணிக்கிறது.

    அந்த வகையில் பாகிஸ்தானுடனான 3,300 கி.மீ. எல்லை பகுதியில் சுமார் 500 கி.மீ. எல்லை பகுதி குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வருகிறது. தார் பாலைவனத்தின் தொடர்ச்சியான வறண்ட நிலப்பரப்பும், உப்பு பாலைவனமும், சதுப்புநில பகுதிகளும் குஜராத்தின், பாகிஸ்தானுடனான எல்லையாக இருப்பதால் எல்லையை கண்காணிப்பதும், பாதுகாப்பை மேம்படுத்துவதும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு சவால் நிறைந்த பணியாகவே இருந்து வருகிறது.

    சுக்கூர் எனும் மிகப்பெரிய பரந்து விரிந்த ஏரியின் ஒரு பகுதியை பாகிஸ்தானும், மற்றொரு பகுதியை இந்தியாவும் பங்கிட்டு கொள்கிறது. இதன் மைய பகுதியில் சாலையை ஏற்படுத்தி, பாதுகாப்பு வேலியையும் அமைத்து இந்தியா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சில மைல் தூரம் கடந்ததும் சதுப்புநில பகுதி தொடங்குவதால் அங்கு இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டிற்கும் எல்லை வேலி இதுவரை இல்லை. தற்போதுதான் சதுப்பு நிலத்தில் எல்லை வேலிகளை அமைக்கும் பணி தொடங்கியிருப்பதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பி.எஸ்.எப்.) கூறுகின்றனர்.

    எல்லைகளில் வேலி, ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் எல்லையில் இதுபோன்ற வேலிகளும் அமைக்கப்படவில்லை. பொதுவாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு தேவையில்லாமல் எந்த அச்சுறுத்தலையும் கொடுப்பதில்லை. இன்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் மீனவர்கள் உள்பட பாகிஸ்தான் குடிமக்களை அந்நாட்டின் ராணுவம் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்திக்கொள்வதால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கூடுதல் விழிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

    குஜராத்தின் கட்ச் மாவட்டத்தையொட்டிய இந்திய எல்லையில் இருந்து 60 கி.மீ. தூரத்திற்கு குடியிருப்புகள் எதுவுமில்லை, வெளிநபர்களுக்கும் அனுமதியில்லை. அதேவேளையில், பாகிஸ்தான் எல்லையில் 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்து குடியிருப்புகள் தொடங்குகிறது. அந்த வகையில் எல்லை பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பழைய ஈரடுக்கு இரும்பு வேலிகளை அகற்றிவிட்டு, ஸ்மார்ட்பென்ஸ் எனும் நவீன பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட வேலிகளை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    முதல்கட்டமாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் இந்த ஸ்மார்ட்பென்ஸ் பரிசோதனை முறையில் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், அதேபோன்று, குஜராத் மாநிலத்தின் இந்த எல்லை பகுதியிலும் முதல்கட்டமாக 13 கி.மீ. தொலைவுக்கு பரிட்சார்த்த முறையில் 'ஸ்மார்ட்பென்ஸ்' எனும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட வேலியை அமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்பென்ஸ் நவீன பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட வேலியில் விரலைகூட நுழைக்க முடியாதபடி வேலி அமைக்கப்படும் என்றும், தற்போது உள்ள இரும்பு முள்வேலிகளைப் போல் அல்லாமல் எளிதில் உடைக்க முடியாத, துருப்பிடித்து பழுதடையாத வேலியாகவும் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக எல்லை பகுதியில் வெளிநபர்கள் ஸ்மார்ட் வேலியை தொட்டால் சென்சார் மூலமாக தகவல் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படும் எனவும், இவை தவிர்த்து எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை யாரும் இந்திய எல்லைக்கு ஊடுருவி வந்தால் தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கும் தொடர்பு வசதியும் ஏற்கனவே அமலில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    • நிதி பற்றாக்குறை என்பது எங்களுக்கு கிடையாது.
    • நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.


    குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல், காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குஜராத் மாநிலத்தில் நிதி மேலாண்மை சிறப்பான முறையில் கையாளப்பட்டு வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். சமூகத்தில் தேவையானவர்களுக்கு மட்டுமே இலவசங்களை நாங்கள் வழங்கி வருகிறோம். இதனால், நிதி பற்றாக்குறை என்பது எங்களுக்கு கிடையாது.

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக குஜராத் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பட்டால் இத்தகைய இலக்கை நாங்கள் அடைந்துள்ளோம். நாங்கள் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்தாலும், நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மத்திய அரசு கொண்டுவர உள்ள 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் மாநிலங்களுக்கு பயனளிக்க கூடியதாக இருக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் நான் பிரசாரம் செய்வேனா? என்று கேட்கிறார்கள். தமிழ் பேச தெரியாததால் தேர்தல் பிரசாரத்துக்கு வர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது குஜராத் மாநில தலைமை முதன்மை செயலாளர் கைலாசநாதன், வருவாய்த்துறை செயலாளர் ஸ்வரூப், மேக்சானா மாவட்ட கலெக்டர் நாகராஜன் உள்பட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் 51 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தன.
    • இன்றைக்கு நாம் 1 லட்சத்து 226 மருத்துவ படிப்பு இடங்களைப் பெற்றிருக்கிறோம்.

    காந்திநகர் :

    குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்திநகரில், உலகளாவிய இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தின் 13-வது வருடாந்திர மாநாடு நடந்தது. இதில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் ஒரு புதிய ஆஸ்பத்திரியை திறக்கிறபோது அதற்கு டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள்.

    8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் 51 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தன. இன்றைக்கு நாம் 1 லட்சத்து 226 மருத்துவ படிப்பு இடங்களைப் பெற்றிருக்கிறோம்.

    மருத்துவ மேற்படிப்பில் 34 ஆயிரம் இடங்கள் இருந்தன. இப்போது அவை 64 ஆயிரமாக உயர்ந்துள்ளன.

    நாங்கள் மருத்துவ படிப்பு, மருத்துவ மேற்படிப்பு இரண்டின் இடங்களும் சம அளவில் இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறோம். 4 வருடங்களில் இதைச் செய்து முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதைச் செய்து முடித்து விட்டால், மருத்துவ படிப்பு முடிக்கிற அனைவரும், மேற்படிப்பும் படிக்க வாய்ப்பு ஏற்படும்.

    நமது 'இந்தியாவில் குணமாகுங்கள்' திட்டம், உலக நாடுகளில் வாழ்கிறவர்களையெல்லாம் இந்தியாவுக்கு அழைப்பது, மலிவான, தரமான மருத்துவம், ஆரோக்கியம், பாரம்பரிய மருந்துகளை வழங்குவதற்கானது.

    இதற்கான செயல்முறை தொடங்கி இருக்கிறது.

    நீங்கள் சுகாதாரத்துறையில் பணியாற்ற விரும்பினால், சங்கிலித்தொடர்போல ஆஸ்பத்திரிகளை கட்ட விரும்பினால், உங்களுக்கான தொழில் வாய்ப்பை நான் உறுதி செய்ய விரும்புகிறேன்.

    உங்களிடம் 50-100 படுக்கை ஆஸ்பத்திரி இருக்குமானால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அங்கீகாரத்தை பெறுங்கள். நீங்கள் தொழில் வாய்ப்பை அடைய முடியும். மக்களுக்கு சேவை செய்வதற்கு அது ஒரு வாய்ப்பு. நீங்கள் வணிக ரீதியில் நடத்த விரும்பினால், ஆயுஷ்மான்பாரத் திட்டத்தின்கீழ் செயல்படலாம்.

    இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள 'ஹீல் இன் இந்தியா, ஹீல் பை இந்தியா' (இந்தியாவில் குணமாகுங்கள், இந்தியாவால் குணமாகுங்கள்) கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட நாடுகள்- ஆஸ்பத்திரிகள் ஆஸ்பத்திரிகளுக்கு இடையேயும், நாட்டுக்கு நாடு இடையேயும், நாட்டுக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் இடையேயும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது.
    • குஜராத் மணிநகரில், புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தமிழ் பள்ளிக்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையை தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வி.ஜி.சந்தோஷம், மல்லைத் தமிழ் சங்கம் தலைவரும், மதிமுக துணை பொதுச் செயலாளருமான மல்லை சத்யா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

    இதேபோல், குஜராத் மணிநகரில், புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக குஜராத் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஈஸ்வர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    • மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அனைத்து பிசியோதெரபிஸ்ட்களின் முயற்சிகளுக்கும் பாராட்டுகள்.
    • சரியான உடற்பயிற்சி மற்றும் சரியான பழக்கவழக்கங்கள் பற்றி மக்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

    குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இந்திய பிசியோதெரபிஸ்ட் அமைப்பின் தேசிய கருத்தரங்கில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலக பிசியோதெரபிஸ்ட் தினத்தையொட்டி, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அனைத்து பிசியோதெரபிஸ்ட்களின் முயற்சிகளுக்கும் பாராட்டுகள். நமது பிசியோதெரபிஸ்ட்கள் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார்கள். பேரிடர் காலங்களில், காயமடைந்தவர்களின் மறுவாழ்வில் பிசியோதெரபிஸ்டுகள் முக்கியப் பங்காற்ற முடியும். பிசியோதெரபி உடன் யோகாவையும் கற்றுக்கொண்டால், செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும். அதன் சக்தி அதிகரிப்பதை என்னுடைய அனுபவத்தில் கண்டுள்ளேன்.

    பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக உதவி பெற டெலி-மருந்து வசதியை பரவலாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    பிசியோதெரபிஸ்டுகள் மக்களின் நம்பிக்கை, பின்னடைவு மற்றும் மீட்புக்கான அடையாளமாக திகழ்கிறார்கள்.

    நீங்கள் அனைவரும் வீடியோ மூலம் ஆலோசனை செய்யும் முறைகளையும் உருவாக்க வேண்டும். பெரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா நாடுகளைப் போல், இதுபோன்ற பேரழிவுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான பிசியோதெரபிஸ்ட்கள் தேவைப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மொபைல் மூலம் நிறைய உதவ முடியும்.

    பிசியோதெரபியை பிரபலப்படுத்தவும் மேலும் நவீனமயமாக்கவும் அரசு முயற்சிகளை தொடரும். முன்பு குடும்ப மருத்துவர்கள் இருந்தனர். இப்போது குடும்ப பிசியோதெரபிஸ்டுகளும் உள்ளனர். சரியான உடற்பயிற்சி மற்றும் சரியான பழக்கவழக்கங்கள் பற்றி மக்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் சுகாதாரம் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. இன்றைய காலகட்டத்தில், பிசியோதெரபிஸ்டுகளுடன் தொடர்புடைய கல்விக் கட்டுரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் முழு உலகிற்கும் பயனுள்ளதாக இருக்கும். இது இந்திய பிசியோதெரபிஸ்டுகளின் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்த உதவும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் சில மாநிலங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை.
    • சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    துருக்கி- சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டிய கணித்த நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க், இந்தியாவில் சில மாநிலங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.52 மணியளவில் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×