என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.
    • தினமும் 750 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்யும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 மணிக்கு பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுவர். சுப்ரபாத சேவையின்போது அவர்கள் ஏழுமலையானை தரிசித்து விட்டு வெளியே வருவார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கோவில் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்க பிரதட்சணமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதற்கும் ஆன்லைன் முறையை தேவஸ்தானம் கையாண்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டது.

    வரும் ஆகஸ்ட் மாதம் அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை இணைத்து டோக்கனை பெற்றனர். தினமும் 750 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்யும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடப்பதால் அன்று மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,503 பேர் தரிசனம் செய்தனர். 30,884 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பிரகாசம் மாவட்டம் அஜித் சிங் நகரில் உள்ள நக்சலைட் ஆதரவாளர் ஒருவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • சத்தீஸ்கர் வாலிபர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சந்தித்தார்களா என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    பிரகாசம் மாவட்டம் அஜித் சிங் நகரில் உள்ள நக்சலைட் ஆதரவாளர் ஒருவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து சில டைரிகள், டிஜிட்டல் உபகரணங்கள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். விஜயவாடாவில் உள்ள ஒரு வீட்டின் அருகே சத்தீஸ்கரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் தங்குவதற்கு இட வசதி அளிக்கப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர்.

    சத்தீஸ்கர் வாலிபர்கள் அந்த வீட்டில் எவ்வளவு நாட்கள் தங்கினர். தடை செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சத்தீஸ்கர் வாலிபர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சந்தித்தார்களா போன்ற விவரங்களையும் அவர்கள் சேகரித்தனர். விஜயவாடாவில் ஒரு இடத்திலும், பிரகாசம் மாவட்டத்தில் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    பிரகாசம் மாவட்டம் தங்குதூர் அருகே அழகுறபாடு என்ற இடத்தில் 3 வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், பேனர்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒரு சில டைரிகளை கைப்பற்றியதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2019-ம் ஆண்டு சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் நகர்நார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கில் ஆந்திராவின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோதாவரி ஆற்றில் பருவ மழை காரணமாக வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் பருவ மழை காரணமாக வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 7 நாட்களாக குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    மழை வெள்ளத்தில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்டவை வீடுகளுக்கு புகுந்து விடுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டத்தில் 3 பேரும், ஏலூர் மாவட்டத்தில் ஒருவரும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஒருவரை மழை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதே போல் நேற்று கோதாவரி மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் மாணவர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆந்திரா, தெலுங்கானா மாநில எல்லையான சீதா ராமராஜ் மாவட்டத்தில் தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரின் உடல்களை மீட்டனர்.

    தெலுங்கானாவில் 13 மீட்பு குழுவும் ஆந்திராவில் 10 மீட்பு குழுவினரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோதாவரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

    மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நர்சாபுரம், எலமஞ்சிலி, அச்சந்த மண்டலம், ஏலூர் மாவட்டத்தில் குக்கனூர், வேளேறுபாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் வடியாமல் குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    அந்தப் பகுதிகளில் உணவு, பால், ரொட்டி, பிஸ்கட், குடிநீர், குளோரின் மாத்திரைகள், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்டவைகள் இந்திய கடற்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மீட்புப் பணிகளில் 120 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாமி டாலர்களை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • பக்தர்களின் புகார்களை பரிசீலனை செய்த தேவஸ்தான அதிகாரிகள் மீண்டும் 2, 5 கிராம் தங்க சாமி டாலர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருபுறம் சாமி உருவமும், மறுபுறம் ஏழுமலையான் கோவில் தங்க கோபுரமும் பதிக்கப்பட்டு விற்பனை செய்யும் சாமி டாலர்களை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2,5,10 கிராம் எடையுள்ள தங்க சாமி டாலர்களும், 5, 10 கிராம் வெள்ளி டாலர்களும், 5 மற்றும் 10 கிராம் வெண்கல சாமி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 2 கிராம் டாலர் ரூ.10,000, 5 கிராம் டாலர் ரூ.25 ஆயிரம் மற்றும் 10 கிராம் டாலர் ரூ.50,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் வரை வருவாயாக கிடைத்தது.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 மற்றும் 5 கிராம் டாலர்கள் விற்பனை நிறுத்தப்பட்டு, 10 கிராம் எடையுள்ள சாமி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் 10 கிராம் எடையுள்ள தங்க சாமி டாலர்களை வாங்க முடியாமல் தவித்தனர். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 டாலர்கள் மட்டுமே விற்பனையானது. இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் அளித்தனர். பக்தர்களின் புகார்களை பரிசீலனை செய்த தேவஸ்தான அதிகாரிகள் மீண்டும் 2, 5 கிராம் தங்க சாமி டாலர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

      திருப்பதி:

      திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி சாமி முன்பாக வருடாந்திர வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆனிவார ஆஸ்தானம் இன்று காலை நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க ஏழுமலையானுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.

      இதையடுத்து சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம் தோமாலை அர்ச்சனை ஆகியவை நடந்தது.

      பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சொப்பன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் வைத்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் 2021-22 ம் ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகள், இருப்பு உள்ளிட்டவை வாசிக்கப்பட்டது.

      ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சர்வ பூபால வாகனம் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் சார்பில் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.

      திருப்பதியில் நேற்று 84,885 பேர் தரிசனம் செய்தனர். 41211 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
      • நெல், வாழை, மணிலா உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது.

      திருப்பதி:

      ஆந்திராவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் கோதாவரி கிருஷ்ணா நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆந்திராவில் ஆற்றங்கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து தீவாக காட்சியளிக்கிறது.

      ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

      இதனால் கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளில் 70 அடி உயரத்திற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

      மழை வெள்ளம் ஆற்று தண்ணீர் கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் ஆற்றங்கரையோர கிராமங்கள் தீவாக காட்சியளிக்கின்றன.

      மேலும் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, மணிலா உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. லட்சக்கணக்கில் செலவு செய்து பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

      ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

      இதையடுத்து தாடேபள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

      மேலும் வெள்ளம் பாதிப்பு மீட்பு பணிகளுக்காக 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை செய்து வருகின்றனர்.

      அடுத்த 24 மணி நேரத்துக்கு கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

      • வார விடுமுறை இறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
      • நேற்று இரவு முதலே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

      திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை கொண்டாடப்படுகிறது.

      நாளை உற்சவர் ஏழுமலையான் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருவாய் கணக்கு, வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு கணக்குகள் சமர்ப்பிக்கப்படும்.

      அப்போது சிறிது நேரம் பக்தர்கள் முன்னிலையில் சாமி நிறுத்தப்படுவார். தங்க வாசல் அருகே சர்வ பூபால வாகனத்தில் இந்த ஐதீக முறை நடத்தப்படுகிறது. அப்போது உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் இவர்களுடன் சேனாதி பதியாக கருதப்படும் விஷ்வகேஸ்வரரும் காட்சி அளிக்கிறார்.

      பின்னர் தேவஸ்தான கோவில் சாவி மூலவரின் காலடியில் வைத்து பூஜை செய்த பின்னர் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

      ஆனிவார ஆஸ்தானம் இம்முறை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      வார விடுமுறை இறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

      நேற்று இரவு முதலே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

      இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 15 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.

      திருப்பதியில் நேற்று 72,195 பேர் தரிசனம் செய்தனர். 35,967 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 4.24 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

      • கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ரசிகர்கள் சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர்.
      • தசரா பண்டிகையின்போது முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

      திருப்பதி:

      ஆந்திராவில் முதல்-அமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை கணிசமாக குறைக்கப்பட்டது.

      இதனால் தொகை வசூல் ஆகாததால், நஷ்டத்தில் சினிமா தியேட்டர்களை இயக்க முடியவில்லை என டிக்கெட் விலை குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களை மூடி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

      இதையடுத்து சினிமா தியேட்டர் அதிபர்கள் மற்றும் நடிகர்கள் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து டிக்கெட் விலை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சினிமா தியேட்டரில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது.

      இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ஆந்திராவில் முன்னணி நடிகர்கள் நடித்த அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான படம் எதுவும் வெளியாகவில்லை.

      மேலும் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ரசிகர்கள் சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர்.

      இதனால் 20 முதல் 30 ரசிகர்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்து செல்கின்றனர். இதன் காரணமாக தியேட்டர்களுக்கு ஒரு காட்சிக்கு ரூ.2000 முதல் 3000 வரை மட்டுமே வசூலாகிறது.

      இந்த பணத்தை வைத்துக்கொண்டு சினிமா தியேட்டர்களை பராமரிக்க கூட முடியவில்லை. மின்சார கட்டணம் செலுத்த முடியவில்லை. சினிமா தியேட்டர்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி நேற்று முதல் ஆந்திராவில் 400 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

      தசரா பண்டிகையின்போது முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதுவரை தியேட்டர்களை மூடி வைக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

      ஆந்திராவில் ரசிகர்கள் படம் பார்க்க வராததால் 400 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      • நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ரோஜா நகரியில் நேற்று வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
      • பொதுமக்கள் அமைச்சர் ரோஜாவுக்கு மாலை அணிவித்தும் மேள தாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

      திருப்பதி:

      ஆந்திர சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால், ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்வதற்காக பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக எம்.எல்.ஏக்களை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

      இதேபோல் எதிர்க்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் எப்படியாவது ஆட்சி பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆந்திரா முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி ஆளும் கட்சியில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கூறி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

      சமீபத்தில் சந்திரபாபு நாயுடு நகரி தொகுதியில் உள்ள புத்தூரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்தினார். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது சந்திரபாபு நாயுடு அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார்.

      இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தொகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.

      அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் பொது மக்களுக்கு சரியாக கிடைக்கிறதா என கேட்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளார்.

      அதைத் தொடர்ந்து நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ரோஜா நகரியில் நேற்று வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

      அப்போது பொதுமக்கள் அமைச்சர் ரோஜாவுக்கு மாலை அணிவித்தும் மேள தாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்டவை கிடைக்கிறதா? ரேசன் பொருட்கள் சரியான அளவில் வீடு தேடி வருகிறதா, வீட்டு மனை, பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

      ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் வர இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் ஆந்திராவில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வருவதால் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

      • எஸ்.என்.சி காம்ப்ளக்ஸ் அருகே சென்ற போது வேதாச்சலம் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்தார்.
      • தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

      திருப்பதி:

      திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து இருந்தனர்.

      இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.

      பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் தரிசனத்திற்காக வரிசையில் காத்து இருந்தனர். திருப்பதியில் நேற்று அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதி அடைந்தனர்.

      இந்த நிலையில் காஞ்சிபுரம் கரகம் பாக்கம் பகுதியை சேர்ந்த வேதாச்சலம் (வயது 64) என்பவர் நேற்று மாலை தனது மனைவி மற்றும் மகனுடன் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்று கொண்டிருந்தார்.

      எஸ்.என்.சி காம்ப்ளக்ஸ் அருகே சென்ற போது வேதாச்சலம் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்தார். அருகில் இருந்த அவரது மனைவி மற்றும் மகன் தண்ணீரை கொடுத்து அவரை எழுப்ப முயன்றனர். வேதாச்சலம் அசைவு இல்லாமல் இருந்தார்.

      அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வேதாச்சலத்தை மீட்டு அஸ்வினி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

      தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

      • ஆன்லைன் மூலம் அறை வாடகை எடுக்கும் பக்தர்கள் வாடகையை விட 2 மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர்.
      • அறையை காலி செய்தவுடன் பக்தர்களின் வங்கிக்கணக்கிற்கு தேவஸ்தானம் சார்பில் கூடுதலாக பெறப்பட்ட முன்பணம் திருப்பி அனுப்பப்படுகிறது.

      திருப்பதி:

      திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது.

      ஆன்லைன் மூலம் அறை வாடகை எடுக்கும் பக்தர்கள் வாடகையை விட 2 மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர். இதற்கு முன்பு அறையில் தங்கி இருந்த பக்தர்கள் அறையை காலி செய்யும்போது பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட முன்பணம் உடனடியாக பக்தர்களிடம் வழங்கப்பட்டு வந்தது.

      தற்போது ஆன்லைன் மூலம் பக்தர்களிடம் இருந்து பெறப்படும் முன்பணம் பக்தர்கள் தங்கியிருந்த அறைகளை காலி செய்து 30 நாட்களாகியும் திருப்பி தரவில்லை என ஏராளமான பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு புகார் தெரிவித்தனர்.

      அறையை காலி செய்தவுடன் பக்தர்களின் வங்கிக்கணக்கிற்கு தேவஸ்தானம் சார்பில் கூடுதலாக பெறப்பட்ட முன்பணம் திருப்பி அனுப்பப்படுகிறது.

      ஆனால் வங்கிகள் பணத்தை உடனடியாக அனுப்பாமல் தாமதம் செய்து வருவதாகவும், விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.

      • சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர்.
      • நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் சிவசங்கர் பாபு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் பறித்து மோசடி செய்துள்ளார்.

      திருப்பதி:

      குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி 8 பெண்களை தனது வலையில் வீழ்த்தி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

      இதுகுறித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 8 பெண்கள் ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

      குண்டூரைச் சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி மேட்ரிமோனியில் பதிவிட்டிருந்தார்.

      குறிப்பாக திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே மேட்ரிமோனி மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு காதல் வலை வீசினார். அவர் கூறுவதை உண்மை என நம்பிய நாங்கள் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

      திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் எங்களிடமிருந்த விலை உயர்ந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்.

      இதே போல் பல பொய்களை சொல்லி 8 பெண்களை அவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர்.

      8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை, பணத்தை ஏமாற்றிய சிவசங்கர் பாபு மீது குகட்பல்லி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் போலீஸ் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

      கடந்த மே 16-ந் தேதி கோண்டாப்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வதைக் கண்டு அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆர்.சி.புரம் போலீசில் புகார் அளித்தார்.

      போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பெண்களை சிவசங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

      நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் பறித்து மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      ×