search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த காஞ்சிபுரம் பக்தர் மயங்கி விழுந்து மரணம்
    X

    திருப்பதியில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த காஞ்சிபுரம் பக்தர் மயங்கி விழுந்து மரணம்

    • எஸ்.என்.சி காம்ப்ளக்ஸ் அருகே சென்ற போது வேதாச்சலம் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்தார்.
    • தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து இருந்தனர்.

    இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.

    பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் தரிசனத்திற்காக வரிசையில் காத்து இருந்தனர். திருப்பதியில் நேற்று அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் கரகம் பாக்கம் பகுதியை சேர்ந்த வேதாச்சலம் (வயது 64) என்பவர் நேற்று மாலை தனது மனைவி மற்றும் மகனுடன் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்று கொண்டிருந்தார்.

    எஸ்.என்.சி காம்ப்ளக்ஸ் அருகே சென்ற போது வேதாச்சலம் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்தார். அருகில் இருந்த அவரது மனைவி மற்றும் மகன் தண்ணீரை கொடுத்து அவரை எழுப்ப முயன்றனர். வேதாச்சலம் அசைவு இல்லாமல் இருந்தார்.

    அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வேதாச்சலத்தை மீட்டு அஸ்வினி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×