என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை காலை 10 மணியளவில் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
    • நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.

    மேலும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மாலை 4 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
    • கடந்த மாதம் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தை சந்தித்த விவசாயிகள் மீண்டும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    திருப்பதி:

    பருவ மழை காரணமாக கடந்த மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்தது. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

    கிராமங்களில் இருந்த கால்நடைகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். மழை பெய்வது படிப்படியாக குறைந்ததால் அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி மற்றும் துங்கபத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளம் சென்றதால் போலவரம், மற்றும் கபிலேஸ்வரம் பகுதிகளில் உள்ள 100-கணக்கான கிராமங்களில் மழை வெள்ளம் ஊர்களுக்குள் புகுந்தது. இடுப்பளவுக்கு மேல் மழை வெள்ளம் செல்வதால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

    பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. ஏற்கனவே கடந்த மாதம் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தை சந்தித்த விவசாயிகள் மீண்டும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    • வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
    • வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 30 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திருமலையில் குவிந்தனர்.

    கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னால் முதல்-அமைச்சர் எடியூரப்பா மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட விஐபிகள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ஏற்கனவே ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    ஆனால் ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் தேவஸ்தான அறிவிப்பை அலட்சியப்படுத்திவிட்டு தரிசனத்திற்கு வருகின்றனர். வி.ஐ.பி. தரிசனத்தின் போது சாதாரண பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் சாதாரண பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 30 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இலவச தரிசன வரிசையில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயலும் போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பக்தர்களை ஒழுங்குபடுத்தினர்.

    தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று ரூ.4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் சுப்ரமணியம் ரெட்டி தெரிவித்துள்ளார்.
    • லாவண்யா இதற்கு மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு அடுத்த திகுவபல்லியை சேர்ந்தவர் சுப்ரமணியம் ரெட்டி. இவரது மனைவி லாவண்யா (வயது 24). தம்பதியின் மகன் பரமேஸ்வர ரெட்டி (4), மகள் மோஷிதா (2).

    இவர்கள் மதனப்பள்ளி அடுத்த குர்ரம் கொண்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

    சுப்ரமணியம் ரெட்டி அங்குள்ள மருந்து கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மருந்து கடையில் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. இதனால் பெங்களூருக்கு சென்று அங்கு வேறு வேலை தேடிக்கொண்டு குடும்பம் நடத்தலாம் என லாவண்யாவிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கு லாவண்யா மறுப்பு தெரிவித்து இங்கேயே இருக்கலாம் என கணவரிடம் கூறினார்.

    இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்பிரமணியம்ரெட்டி நீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் தான் இங்கிருந்து வரமாட்டேன் என்கிறாய் என லாவண்யாவை சரமாரியாக தாக்கினார்.

    இதையடுத்து லாவண்யா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு பூதலப்பட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கணவருடன் ஏற்பட்ட தகராறால் லாவண்யா மனம் உடைந்தார். நேற்று தனது குழந்தைகளுடன் அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தானும் குதித்து உயிருக்கு போராடினார்.

    கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் அப்பகுதி மக்களால் அவர்களை மீட்க முடியவில்லை. அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரின் உடல்களை மீட்டனர்.

    இது குறித்து குர்ரம் கொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செப்டம்பர் 27-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்துக்கான (செப்டம்பர்) அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    ஆனால் செப்டம்பர் மாதம் 27-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழாவையொட்டி அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்கப்பிரதட்சண டோக்கன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • சோமேஸ்வரராவ் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.
    • விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜி என்ற ரவுடியிடம் சந்திராராவை அழைத்து சென்று டாக்டரை கடத்தினால் ரூ.5 லட்சம் தருவதாக கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவர் சோமேஸ்வரராவ். இவர் அங்குள்ள கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார். ஆஸ்பத்திரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் அதே பகுதியை சேர்ந்த சந்திரராவ் என்பவர் நவீன உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். உடற்பயிற்சி மையம் வைப்பதற்கு பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி உள்ளார். உடற்பயிற்சி நிலையத்தில் வரும் வருமானத்தை வைத்து கடனை அடைக்க முடியவில்லை.

    இதனால் டாக்டர் சோமேஸ்வரராவை கடத்தி அவரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை பறிக்க வேண்டும் என எண்ணினார். இதையடுத்து தனது நண்பரான ரவி தேஜாவை நாடினார்.

    அவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜி என்ற ரவுடியிடம் சந்திராராவை அழைத்து சென்று டாக்டரை கடத்தினால் ரூ.5 லட்சம் தருவதாக கூறினார். அதற்கு அவர் உடன்படவில்லை.

    அதன் பின்னர் பரமேஸ்வர் என்பவரின் உதவியுடன் காரில் இருந்த நம்பர் பிளேட்டை மாற்றி நடைபயிற்சி சென்று கொண்டிருந்த டாக்டர் சோமேஸ்வரர் ராவை காரில் கடத்தி சென்றனர்.

    காரில் இருந்து கீழே குதித்து கடத்தல்காரர்களிடம் இருந்து டாக்டர் தப்பினார். இதுகுறித்து அவர் ஸ்ரீகாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து உடற்பயிற்சி மைய உரிமையாளர் சந்திரராவ் அவரது நண்பர் ரவி தேஜா மற்றும் பரமேஸ்வரர் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்கள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

    இதனால் இந்த ஆண்டு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    எனவே பிரமோற்சவ விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் உட்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது. எனவே தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழியில் 26 நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் நாளை காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 72,851 பேர் தரிசனம் செய்தனர். 34,404 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பதி அலிப்பிரி நடைப்பாதை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.
    • வனப்பகுதியை ஒட்டி இந்த கல்லூரி உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் கல்லூரி வளாகத்திற்குள் வருவது வழக்கம்.

    திருப்பதி:

    திருப்பதி அலிப்பிரி நடைப்பாதை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    வனப்பகுதியை ஒட்டி இந்த கல்லூரி உள்ளதால் அடிக்கடி பாம்பு, சிறுத்தை மற்றும் வனவிலங்குகள் கல்லூரி வளாகத்திற்குள் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாணவர்கள் அனைவரும் விடுதியில் உணவு அருந்திவிட்டு வழக்கம் போல் தூங்க சென்றனர். அப்போது திடீரென நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. மாணவர்கள் கல்லூரி விடுதியில் மாடியில் இருந்து பார்த்தபோது வளாகத்துக்குள் சிறுத்தை ஒன்று அங்கும் இங்குமாக திரிந்து கொண்டு இருந்தது.

    இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர் சில மாணவர்கள் ஓடி வந்து கதவு, ஜன்னலை மூடிவிட்டு அறைக்குள் இருந்தனர். நாய்கள் விரட்டியதால் சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது.

    இது குறித்து மாணவர்கள் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை எங்காவது பதுங்கி உள்ளதா என சோதனை செய்தனர். கல்லூரி வளாகம் முழுவதும் சோதனை செய்துவிட்டு திரும்பி சென்றனர்.

    பக்தர்கள் நடைபாதையாக செல்லும் அலிப்பிரி அருகே கால்நடை மருத்துவக் கல்லூரிக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே திருப்பதி மலை பாதையில் போலீசார் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் பைக்கில் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து வந்து தாக்கியது குறிப்பிடத்தக்கது.

    சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இலவச தரிசனத்தில் 3 நாட்களாக காத்திருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.
    • திருப்பதியில் நேற்று 87,692 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பி சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கி.மீ. கணக்கில் இரவு, பகல் பாராமல் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

    நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் இதுவரை தரிசனம் செய்ய முடியாமல் 40 மணி நேரத்திற்கு மேலாக திருமலையில் தங்கி உள்ளனர். சாமி தரிசனம் செய்ய முடியாத ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர்.

    இலவச தரிசனத்தில் 3 நாட்களாக காத்திருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் சிபாரிசு கடிதங்கள் வழங்கக்கூடாது மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உஷா ஸ்ரீ சரண் தனது உறவினர்கள் 60 பேருடன் திருமலைக்கு வந்து தங்கினார்.

    நேற்று காலை சுப்ரபாத சேவையில் அமைச்சர் உஷா ஸ்ரீ சரண் மற்றும் அவரது உறவினர்கள் 60 பேர் தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மீண்டும் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் 60 பேரையும் அனுமதிக்க வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகளிடம் அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் 60 பேருக்கும் வி.ஐ.பி பிரேக் தரிசனம் வழங்க முடியாது.

    புரோட்டாக்கால் படி 15 பேருக்கு மட்டுமே வழங்க முடியும் மற்றவர்கள் பிரேக் தரிசனத்தில் தரிசனத்திற்கு செல்லலாம் என தெரிவித்தார்.

    அமைச்சர் மற்றும் அவரது உறவினர்கள் தரிசனத்திற்கு சென்றதால் சிறிது நேரம் சாதாரண பக்தர்கள் தரிசனம் தடைபட்டது.

    கடந்த வாரம் கால்நடை துறை அமைச்சர் அப்பால ராஜு தனது உறவினர்கள், ஆதரவாளர்கள் 150 பேருடன் தரிசனம் செய்ததற்கு பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மீண்டும் அமைச்சர் ஒருவர் 60 பேருடன் தரிசனம் செய்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதியில் நேற்று 87,692 பேர் தரிசனம் செய்தனர். 36,832 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தற்போது திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • திருமலையில் உள்ள இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்க திட்டம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான வரவேற்புத்துறை, பறக்கும் படை துறை, காவல் துறை அதிகாரிகள் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமயபவனில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளை பக்தர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று, அதிகமாகப் பணம் சம்பாதிக்கும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    மேலும் சாமி தரிசனம் மற்றும் அறைகளுக்கான சிபாரிசு கடிதம் கொடுக்கும் பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். திருமலையில் உள்ள இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    தற்போது திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இலவச தரிசன பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருமலையில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சியளித்தது.
    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்ததால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சனி, ஞாயிற்றுக்கிழமையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருந்தனர். இதனால், திருமலையில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சியளித்தது.

    நேற்று முன்தினம் கோவிலில் மொத்தம் 92 ஆயிரத்து 328 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 52 ஆயிரத்து 969 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 39 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணிவரை 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு காத்திருந்ததாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வரிசைகளில் நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • திருமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை வரை நீடிக்கும்

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வாரத்தில் 2-வது சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், சுதந்திர தினவிழா விடுமுறை வந்ததாலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று முன்தினம் அலைமோதியது. அதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடம், பல்வேறு இடங்களில் உள்ள அன்னப்பிரசாத கவுண்ட்டர்கள், நாராயணகிரி தோட்டம் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உணவு, பால் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் திருமலைக்கு விரைந்து வந்து நாராயணகிரி பூங்கா, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், பக்தர்களுக்கு வரிசைகளில் வழங்கப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அன்னப்பிரசாதம், சுகாதாரம் மற்றும் பறக்கும்படை பிரிவுகளில் தனிக் கவனம் செலுத்தி, அனைத்து முக்கிய இடங்களிலும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும், என அதிகாரிகளை கேட்டுகொண்டார்.

    தரிகொண்டா வெங்கமாம்பா அன்னத்தானக்கூடத்தில் ஓரிரு நாட்ளாக மதிய வேளையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவும், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அன்னப்பிரசாதமாக உப்புமா, பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது. 2 நாட்களில் வழக்கத்தை விட பக்தர்களுக்கு 2 மடங்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாக, அதிகாரி தெரிவித்தார்.

    அதுமட்டுமின்றி பச்சிளம் குழந்தைகளுக்கு அவ்வப்போது பால் வழங்கப்பட்டு வருகிறது. வரிசைகளில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று பக்தர்கள் கூட்டம் கோவிலில் இருந்து திருமலையில் உள்ள வெளிவட்டச்சாலை வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் 40 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஏழுமலையான் கோவிலில் 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை வரை நீடிக்கும், என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×