என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • அரசு ஊழியர்கள் இந்த ஆட்சியில் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
    • சந்திரபாபு நாயுடுவின் பினாமி. அவர் சொல்லிக் கொடுப்பதை தான் இவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில பிரபல சினிமா நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் விசாகப்பட்டினத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இதுகுறித்து பவன் கல்யாண் நிருபர்களிடம் கூறுகையில்:-

    ஜெகன்மோகன் தேர்தல் வாக்குறுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 2.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    கொரோனா தொற்றுக்கு முன்பாக அரசு பள்ளிகளில் 44 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் 4 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து உள்ளனர்.

    விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்காக 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விவசாயிகள் வழங்கினர். ஆனால் ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்த பிறகு 3 இடங்களில் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என விவசாயிகளை மோசம் செய்து உள்ளார்.

    அரசு ஊழியர்கள் இந்த ஆட்சியில் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

    ஜெகன்மோகன் தேர்தல் வாக்குறுதியில் அளித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை கூறியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறுகையில்:-

    ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் கும்பகர்ணனை போல் 6 மாதம் தூங்கிக் கொண்டு இருப்பார். மீதியுள்ள 6 மாதம் விழித்துக் கொண்டு இருப்பார். இவர் சந்திரபாபு நாயுடுவின் பினாமி. அவர் சொல்லிக் கொடுப்பதை தான் இவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.

    இவரது சுற்றுப்பயணத்தை கண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அஞ்சி விடும் என நினைக்க வேண்டாம்.

    எங்கள் ஆட்சியில் மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அதனால் எங்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது நாங்கள் யாரைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

    • புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    • அதிகமாக குளிர்வாட்டுவதால் குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்துள்ளனர்.

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்ததும் அனைத்து தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை.

    கடந்த 5 நாட்களாக அதிகமாக இருந்த பக்தர்களின் கூட்டம் இன்று சற்று குறைந்து காணப்பட்டது.

    இன்று காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு சுமார் 20 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 5 முதல் 6 மணி நேரமும் ஆனது.

    காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது திருப்பதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

    அதிகமாக குளிர்வாட்டுவதால் குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 83,223 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 36,658 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் வசூலானது.

    • திருமலையில் குறைந்த தங்குமிடமே உள்ளன.
    • 50 சதவீத அறைகள் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கின்றன.

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர், ஸ்ரீவாரி பிரம்மோற்சவ விழாவை வெற்றிகரமாக நடத்தியதற்கும், பொதுப் பக்தர்களுக்கான சேவைகளை சிறப்பாகச் செய்ததற்கும் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவைப் பாராட்டினார்.

    அதன்பிறகு பக்தர்கள் தெரிவித்த குறைகள், கேட்ட கேள்விகளுக்கு ஏ.வி.தர்மாரெட்டி பதில் அளித்துப் பேசினார். பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அதிகாரி அளித்த பதில்களும் வருமாறு:-

    வாரங்கல், முரளிதர், ஐதராபாத் சீதா: திருமலையில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்களுக்கு சரியாக அறைகள் வழங்கப்படுவது இல்லை.

    அதிகாரி: திருமலையில் குறைந்த தங்குமிடமே உள்ளன. 50 சதவீத அறைகள் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கின்றன. மீதமுள்ள அறைகள் தற்போதைய முன்பதிவின் கீழ் வைக்கப்படுகின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருவதால், திருப்பதியில் அறைகள் எடுத்துத் தங்கலாம். ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்கள் அறைகளுக்காக இடைத்தரகர்களை அணுகுவதைத் தவிர்ப்பது நல்லது.

    மதனப்பள்ளி ரெட்டப்பா, ஓங்கோல் வெங்கடேஷ்: ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின்போது சுவையான அன்னப்பிரசாதம் வழங்கியதற்காக தேவஸ்தானத்துக்கு பாராட்டுகள். திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உங்கள் தலைமையில் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. திருமலையில் உள்ள நான்கு மாடவீதி கேலரிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும்.

    அதிகாரி:பக்தர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க திருமலை முழுவதும் 140 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்களை (ஆர்.ஓ. பிளான்ட்) நிறுவி உள்ளோம். மேலும் திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே பக்தர்கள் தங்களுடைய கண்ணாடி, தாமிரம், ஸ்டீல் அல்லது டப்பர்வேர் பாட்டில்களை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை, மகேஷ்பாபு: திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், பக்தி சேனல் ஊழியர்கள் உள்பட பலர் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்களுக்கு சிறப்பான சேவையை செய்துள்ளனர். வாகனம் தூக்குபவர்களுக்கும் பாராட்டுகள்.

    அதிகாரி:அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இணைந்து 79 வாகன தூக்குபவர்களை பாராட்டி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.81,500 வீதம் பணப்பரிசு, ஒரு ஜோடி ஆடையை வழங்கி உள்ளனர்.

    கர்னூல், வாசு: தானேயில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான பாழடைந்த கோவிலை தத்தெடுக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முன்வருமா?

    அதிகாரி:ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் புதிதாக வெங்கடேஸ்வரா கோவில்களை கட்டுவது மட்டுமின்றி, சிதிலமடைந்த பழமையான கோவில்களுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் புனரமைக்கப்படும்.

    கரீம்நகர், மகேந்திரராவ்: ஸ்ரீவாரி சேவையை ஆன்-லைனில் முன்பதிவு செய்யும்போது இடைத்தரகர்கள் பணம் கேட்கிறார்கள்.

    அதிகாரி:ஸ்ரீவாரி சேவை முற்றிலும் தன்னார்வ சேவை. ஆன்லைனில் அல்லது ஆப்லைனில் யாருக்கும் ஒரு பைசா கூட செலுத்த தேவையில்லை. ஆன்-லைனில் காலியிடங்கள் அல்லது வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே சேவைக்கு வாருங்கள். ஊழலை ஊக்குவிக்கவோ அல்லது சேவா முன்பதிவுக்காக இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை.

    கடப்பா, சரஸ்வதி: திருமலையில் 5 கிராம் தங்க டாலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    அதிகாரி: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2 கிராம், 5 கிராம், 10 கிராம் ஸ்ரீவாரு தங்க டாலர்களை விற்பனை செய்கிறது. விற்பனை எந்த அளவுக்கு நடக்கிறது என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்வோம்.

    மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.

    மேலும் பல்வேறு பக்தர்கள், தேவஸ்தான இ.தரிசன கவுண்ட்டர்களில் ஒருசில தரிசன டோக்கன்களை மீண்டும் தொடங்க வேண்டும், எனக் கேட்டதற்கு, ஒவ்வொரு நாளும் ரூ.300 டிக்கெட் 25,000 வழங்கப்பட்டு வருகிறது. இ.தரிசன கவுண்ட்டர்களில் மணிக்கணக்கில் காத்திருப்பதற்கு பதிலாக ஆன்லைனில் எளிதாக முன்பதிவு செய்யலாம், என அதிகாரி கூறினார்.

    • வட மாநில ரெயில் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத ரெயில் பெட்டிகளை நவீனமயமாக ஓட்டல்களாக மாற்றி வருகின்றனர்.
    • குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த உணவகம் சைவ, அசைவ உணவு பிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

    திருப்பதி:

    வட மாநில ரெயில் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத ரெயில் பெட்டிகளை நவீனமயமாக ஓட்டல்களாக மாற்றி வருகின்றனர்.

    ஆந்திராவில் குண்டூர் ரெயில் நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத பழைய ரெயில் பெட்டி ஒன்று உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.

    அதிநவீன அனைத்து வசதிகளுடன் கூடிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இந்த ரெயில் பெட்டி உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவகிறது.

    குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த உணவகம் சைவ, அசைவ உணவு பிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பல உணவு வகைகளுடன் இந்த உணவகம் உள்ளூர் கட்டணத்தில் 24 மணி நேரமும் சுகாதாரமான உணவை வழங்குகிறது‌.

    இந்த ரெயில் பெட்டி உணவகத்தை கோட்ட ரெயில்வே மேலாளர் (தென் மத்திய ரெயில்வே, குண்டூர்) ஆர்.மோகன்ராஜா திறந்து வைத்தார்.

    "பழைய மற்றும் பயன்படுத்த முடியாத பெட்டிகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்குவதற்காக குண்டூர் ரெயில்வே கோட்டத்தால் இந்த ஓட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கோச் உணவகமாக மாற்றப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் உள்ளூர் கட்டணத்தில் அனைத்து வகையான உணவுகளும் 24 மணி நேரமும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருங்காலங்களில் இந்த புதுவித முயற்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருப்பதியில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கடந்த மாதம் திருப்பதியில் 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதியில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதிக்கு கடந்த மாதம் 21 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் 122 கோடியே 19 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    சுமார் ஒரு கோடி லட்டுகள், அதாவது 98 லட்சத்து 44 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 44 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தினர்.

    இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் மையங்கள் விரைவில் செயல்பட உள்ளன. திருப்பதி மலையில் செயல்படும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் கவுன்டர்கள் சோதனை அடிப்படையில் விரைவில் திருப்பதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

    இதன் மூலம் அறைகள் கிடைக்காத பக்தர்கள் திருப்பதியில் தங்கி கொள்ளலாம்.

    இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கு நள்ளிரவுக்கு மேல் சாமி தரிசனத்திற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலேயே இரவு முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    அவ்வாறு காத்திருக்கும் பக்தர்கள் காலையில் விரைவாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக, வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இனி, காலை 10 மணிக்கு பின்னரே வி.ஐ.பி. தரிசனம் என்ற நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • குண்டு வெடிப்பில் கார்கள் பைக்குகள் மற்றும் போலீஸ் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்காதர நல்லூரில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் மருந்து பொருட்களை உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கிருந்து 713 கிலோ எடையுள்ள வெடி தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதன் பின்னர் வெடிபொருட்களை போலீசார் அழித்துவிட்டனர். மீதமிருந்த 250 கிராம் எடையுள்ள வெடிபொருட்களை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்து அதன் மீது கான்கிரீட் அமைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பைக்குகள் மற்றும் காவல் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

    அதிர்ஷ்டவசமாக அப்போது பணியில் இருந்த போலீசார் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் டி.எஸ்.பி. சுதாகர் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், "இந்த வெடிகுண்டு விபத்து காரணமாக போலீசாருக்கோ பொதுமக்களுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை.

    வெடிகுண்டு விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடிபொருட்களை மரத்துக்கு அடியில் புதைத்து வைத்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

    சமூக விரோதிகள் யாராவது சதி செயலில் ஈடுபட்டார்களா? அல்லது எதேச்சையாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆகிறது.
    • ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயல்வதை தவிர்க்க வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.

    குறிப்பாக தமிழகத்தில் இருந்து வாகனங்கள் மூலமும் நடைபயணமாக செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலுபிரி சோதனை சாவடியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பரிசோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் முதல் இலவச தரிசன வரிசை 5 கி.மீட்டரை தாண்டி நீண்டு கொண்டு உள்ளது. திருப்பதியில் பெய்து வரும் மழையின் காரணமாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், டீ, காபி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்:-

    இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆவதால் பக்தர்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயல்வதை தவிர்க்க வேண்டும்.

    பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் பக்தர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்து மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வந்தால் சிரமமின்றி தரிசனம் செய்து கொண்டு செல்லலாம்.

    தரிசனத்திற்கு வந்துள்ள பக்தர்கள் கூட்டம் குறையும் வரை தங்கும் விடுதிகளில் பொறுமையாக காத்திருந்து தரிசனத்திற்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 70,007 பேர் தரிசனம் செய்தனர். 42,866 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.25 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

    • புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம்.
    • நேற்று அதிகாலை இருந்து இரவு 8 மணிவரை 44 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்.

    பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று (8-ந்தேதி) திருப்பதி ஏழுமலையானை வழிபட திருமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஷெட்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    கோகர்ப்பம் அணை வரை 6 கிலோ மீட்டா் தூரத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை தரிசனத்திற்காக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 48 மணி நேரம் ஆகிறது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணிவரை 44 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காத்திருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும் வரை பொறுமை காக்க வேண்டும். பக்தர்கள் திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுக்கலாம். அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • உடைமைகளை அலட்சியமாக தூக்கி எறியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    • தேவஸ்தான ஊழியர்கள் லக்கேஜ்களை தூக்கி வீசும் கைவிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் உடைமைகள், தேவஸ்தானம் சார்பில் லக்கேஜ் கவுண்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் முடிந்து வரும்போது திருப்பி வழங்கப்படுகிறது. இந்நிலையில், லக்கேஜ்களை தேவஸ்தான ஊழியர்கள் தூக்கி வீசிய நிகழ்வு பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வேனில் கொண்டு வரப்பட்ட லக்கேஜ்களை, லக்கேஜ் கவுண்டரில் இறக்கும்போது, அவற்றை வேகமாக தூக்கி எறிவது பதிவாகியிருக்கிறது.

    இது கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக வந்த தன்னார்வலர்களின் லக்கேஜ்கள் என்று கூறப்படுகிறது. இது பிரம்மோற்சவ விழாவின்போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது.

    உடைமைகளை தூக்கி எறியும் போக்கை தேவஸ்தான ஊழியர்கள் கைவிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்களை தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கோவிலை சுற்றி இலவச தரிசன பக்தர்கள் வரிசை அமைக்கப்பட்டு இருந்தது.
    • குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.

    திருமலை பாலாஜி பஸ் நிலையத்திலிருந்து சீலா தோரணம் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் செல்ல வேண்டும் என்றால் அங்கு தான் செல்ல வேண்டும். இதனால் சுமார் 5 கி.மீ. தூரம் மலையை சுற்றிக்கொண்டு பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.

    குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.

    சில தனியார் வாகனங்கள் அங்கு செல்கிறது. அவர்கள் பக்தர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

    இலவச தரிசன செல்லும் வரிசையை அடையவே 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு சுமார் 5 கி.மீ. தூரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

    தரிசனம் செய்யவும் சுமார் 40 மணி நேரம் ஆகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

    ஏற்கனவே கோவிலை சுற்றி இலவச தரிசன பக்தர்கள் வரிசை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள சீலா தோரணம் தரிசன வரிசை அமைக்கப்பட்டு உள்ளதால் வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    எனவே இலவச தரிசன வரிசையில் மீண்டும் பழையபடி மாற்றி அமைக்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முறையை (தரிசன நேரம் குறித்த டோக்கன்) ஏற்படுத்தி கொடுத்தால் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அவதிப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து தரிசனம் செய்து கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பதியில் அடிக்கடி லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருப்பதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மாட வீதிகளில் சாமி ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தாலும் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்த அளவு மட்டுமே இருந்தது.

    கருட சேவை அன்று மட்டும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ரூ.300 கட்டண சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் பிரம்மோற்சவ நிறைவு பெற்றதால் அனைத்து தரிசனங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கூட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.

    இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இலவச தரிசன வரிசை சீலா தோரணம் வரை 5 கி. மீ தூரத்திற்கு வரிசையில் காத்துக்கொண்டு உள்ளனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 40 மணிநேரம் வரை ஆகிறது.

    திருப்பதியில் அடிக்கடி லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குளிர் காற்று வீசுவதால் வரிசையில் காத்திருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை குளிரில் நடுங்கியபடி வரிசையில் நின்று கொண்டு உள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 72,195 பேர் தரிசனம் செய்தனர். 41,071 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.17 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் தேவஸ்தான சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    • ரூ.20 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 400 உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
    • ரூ.300 சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ஆகிய தரிசனங்கள் இன்று மீண்டும் தொடங்கியது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    முதல் நாளான அன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. கடந்த 1-ந் தேதி கருட சேவை நடந்தது.

    பிரம்மோற்சவ விழா தொடங்கியது முதல் நேற்று வரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 735 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 2 லட்சத்து 20 ஆயிரத்து 816 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 20 லட்சத்து 99 ஆயிரத்து 96 பக்தர்கள் அன்னபிரசாதம் சாப்பிட்டனர். 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 சிறிய லட்டுக்களும், 29 ஆயிரத்து 968 பெரிய லட்டுக்களும் விற்பனையானது.

    ரூ.20 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 400 உண்டியலில் காணிக்கையாக வசூலானது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 226 பக்தர்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 4 லட்சத்து 47 ஆயிரத்து 969 பக்தர்களும் பஸ்சில் பயணம் செய்தனர்.

    குற்ற சம்பவங்களை கண்காணிக்க திருமலையில் 2,279 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 4,635 போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக 140 பஸ்களில் அழைத்து வரப்பட்டு 61,997 சாமானிய பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதியில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.300 கட்டண சேவை சிறப்பு தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ஆகிய தரிசனங்கள் இன்று மீண்டும் தொடங்கியது.

    இந்த தரிசனங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    ×