என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வலி மிகுந்த தாம்பத்தியத்திற்கு காரணம் உயவு இல்லாதது தான்.
    • திருமணமான புதிதில் தாம்பத்திய வலி இருப்பது இயல்பானது.

    வலி மிகுந்த உடலுறவுக்கான மருத்துவச் சொல் டிஸ்பேரூனியா ஆகும். இது தாம்பத்தியத்தின் போது அல்லது அதற்கு பிறகு பிறப்புறுப்பில் ஏற்படும் வலியாகும். உடல் சார்ந்த மற்றும் உளவியல் பிரச்சினைகள் காரணமாக கூட ஏற்படலாம்.


    உடல் சார்ந்த காரணங்கள்

    * வலி மிகுந்த தாம்பத்தியத்தின் பெரும்பான்மையான காரணம் உயவு இல்லாதது தான். பொதுவாக கர்ப்பப்பை வாய் சுரப்பிகள் சளி போன்ற ஒரு திரவத்தை சுரக்கின்றது. இது தவிர தாம்பத்திய முந்தைய உடல் தூண்டலின் போது கூடுதலான திரவங்கள் சுரக்கும்.

    குறிப்பாக யோனிக்கு அருகில் அமைந்துள்ள பர்தோலின் சுரப்பிகள் மற்றும் ஸ்கீன் சுரப்பிகள் தாம்பத்தியத்தின் போது கூடுதல் உயவூட்டலை உருவாக்குகின்றது. இவை பெரும்பாலும் தாம்பத்திய முன்விளையாட்டின் விளைவாகும். திருமணமான புதிதில் தாம்பத்திய வலி இருப்பது இயல்பானது.

    * தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த பிரச்சினை வரலாம். இதற்கு காரணம் அப்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது தான்.

    * யோனி சுவர் தசைகளின் தன்னிச்சையான பிடிப்புகள் (வெஜினிஸ்மஸ்), யோனி சரியாக வளர்ச்சியடையாத நிலை (அஜெனிசிஸ்), ஹைமன் சவ்வு யோனித் திறப்பை முழுமையாக மூடி இருப்பது (இம்பர்போரேட் ஹைமென்), சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று, கருப்பைச் சரிவு, இடுப்பு அழற்சி நோய், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், அடினோமயோசிஸ், மூல நோய், இடுப்பு பகுதி அறுவை சிகிச்சைக்குப் பின்னர், புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றால் தாம்பத்தியத்தின் போது வலி காணப்படும்.

    * தாம்பத்திய முந்தைய தூண்டலின் போது ஆண்களுக்கு சுமார் 2 முதல் 5 மி.லி. அளவு வரை ஒரு தெளிவான திரவம் சுரக்கும். இது கவ்வர் சுரப்பிகள் மற்றும் லிட்ரே சுரப்பியில் இருந்து சுரக்கிறது. இது தாம்பத்தியத்தின் போது உயவை அதிகரிக்கிறது.


    உணர்ச்சி சார்ந்த காரணங்கள்:

    தாம்பத்திய செயல்பாடுகளுடன் உணர்ச்சிகள் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளன. எனவே அவை தாம்பத்திய வலியில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    உளவியல் சிக்கல்கள்:

    மனச்சோர்வு, உடல் தோற்றத்தைப் பற்றிய கவலைகள், நெருக்கம் அல்லது உறவுச் சிக்கல்கள் பற்றிய பயம், புதிய இடம் போன்றவை மனச்சோர்வு அல்லது வலியை ஏற்படுத்தும்.


    மன அழுத்தம்:

    வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக இடுப்பு பகுதி தசைகள் இறுக்கமடைகின்றன. இது தாம்பத்தியத்தின் போது வலியை ஏற்படுத்தும்.

    உணவு மற்றும் பழக்கவழக்கங்கள்:

    ஈஸ்ட்ரோஜன் குறைவு அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஏற்படும் மிகக் குறைவான உயவினால் வலி மிகுந்த தாம்பத்தியம் ஏற்படுகிறது.

    இதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் (ஆளி விதைகள், அலிசி விதைகள், சோயாபீன், உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், கருப்பு திராட்சைப்பழம், பூண்டு, பெருங்காயம், எள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரக்கோலி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், பெர்ரி வகை பழங்கள், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் கோதுமை) சாப்பிட வேண்டும்.

    டிசென்சிடிசேஷன் சிகிச்சை:

    வலியை குறைக்கக்கூடிய யோனி தளர்வு பயிற்சிகள் செய்ய வேண்டும். ஹெகல் பயிற்சி நல்ல பலனைத் தரும்.


    உளவியல் ஆலோசனை:

    வலி மிகுந்த தாம்பத்தியத்தின் காரணமாக நீங்களும் உங்கள் துணையும் நெருக்கத்தைத் தவிர்த்துள்ளீர்கள் என்றால், உங்கள் துணையுடன் தொடர்பை மேம்படுத்த மனம் விட்டு பேசி பாலியல் நெருக்கத்தை உருவாக்க வேண்டும். அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, எதிர்மறை சிந்தனைகள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.

    • இருவரும் எப்படி வாழ திட்டமிடுகிறீர்கள் என்பதை விவாதித்துவிடுவது நல்லது.
    • பெற்றோரின் பங்களிப்பு, தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது.

    திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மணமக்கள் இருவரும் இல்லற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி திறந்த மனதுடன், நேர்மையான, அர்த்தமுள்ள கலந்துரையாடலை நடத்துவது முக்கியமானது.

    அத்தகைய விவாதம் திருமண வாழ்க்கையை தெளிவான கண்ணோட்டத்துடன் கட்டமைக்க உதவிடும். தடுமாற்றமோ, கருத்துவேறுபாடோ இன்றி சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வழிவகை செய்துவிடும். அதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்களை பட்டியலிடுகிறோம்.


    திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு மட்டுமல்ல திருமணத்தை நடத்தும் போதும் நிதி விஷயம் பற்றி இருவரும் விவாதிப்பது நல்லது. ஏனெனில் விமரிசையாக திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி செலவு செய்தால், பின்பு திருமணத்திற்கு பிறகு அந்த கடனை அடைப்பதற்கு இருவரும்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

    அதனால் திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்வது? இருவரும் திருமணத்திற்கு முன்பு அன்றாடம் செய்யும் செலவுகள் என்னென்ன? ஏற்கனவே கடன் இருந்தால் அதனை எப்படி திருப்பி செலுத்துவது உள்ளிட்ட குடும்ப வரவு செலவு திட்டங்களை கையாள்வது பற்றி விவாதிப்பது நல்லது.

    சேமிப்பை பற்றி விவாதிக்கும்போது ஓய்வு கால சேமிப்பு பற்றிய திட்டமிடலும் இடம் பெறுவது இறுதி கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க உதவிடும்.


    குழந்தை

    குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் திருமணத்திற்கு முன்னரே விவாதித்துவிடுவது நல்லது. ஏனெனில் இருவரில் ஒருவர் குழந்தை பேற்றை தள்ளிப்போட விரும்பலாம். அப்படி விரும்பினால் அதற்கான காரணத்தை விளக்குவது அவசியமானது.

    ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பலரும் திருமண வயதை எட்டிய பிறகும் காலதாமதமாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி இருக்கையில் குழந்தை பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.

    எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? குழந்தைகளை பராமரிப்பது எப்படி? இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தை வளர்ப்புக்கு செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகள், குழந்தைக்கான கல்விச்செலவு உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொண்டு விவாதிப்பது சிறப்பானது.

    வேலை-வாழ்க்கை சமநிலை

    திருமணத்திற்கு முன்பு துணை வேலைக்கு சென்று வந்திருக்கலாம். திருமணத்திற்கு பிறகும் வேலையை தொடர விருப்பப்படலாம். அவரின் கருத்துக்களை கேட்டறிந்து வேலை நேரம், வேலைக்கு சென்று வர ஆகும் பயண நேரம், துணையின் தனிப்பட்ட வாழ்க்கை முறை உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்து கொள்வது நல்லது.

    வேலை, குடும்பத்தை நிர்வகிப்பதற்கு இது உதவும். மேலும் அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முன்வருவது துணை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். திருமண பந்தத்தை வலுவடையச் செய்யும்.


    குடும்ப அமைப்பு

    திருமணத்திற்கு முன்பு வரை மணமகனோ, மணமகளோ இருவரும் பெற்றோரின் ஆதரவில்தான் வசித்திருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு அடியெடுத்து வைக்கும் பெண் அங்கு புதிய உறவுகளுடன் பழகி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

    திருமணத்திற்கு பிறகு மணமகன் பெற்றோருடன் சேர்ந்து வசிப்பதற்கு விரும்பலாம். மணப்பெண்ணோ தனியே சுதந்திரமாக வாழ விரும்பலாம். அதனால் இருவரும் எப்படி வாழ திட்டமிடுகிறீர்கள் என்பதை திருமணத்திற்கு முன்பே விவாதித்துவிடுவது நல்லது.

    தனிக்குடித்தனத்தை விரும்பினால் அதுபற்றி மணமகன் முன்கூட்டியே பெற்றோரிடம் விளக்கி கூறிவிடுவது நல்லது. அது திருமணத்திற்கு பிறகு தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படுவதை தடுக்க உதவிடும்.

    குடும்பத்தின் பங்கு

    இருவருமே தங்கள் திருமண வாழ்க்கையில் அவரவர் பெற்றோரின் பங்களிப்பு, தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதியே செயல்படுவார்கள் என்றாலும் தேவையில்லாமல் தலையீடு செய்வது பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.


    கூடுமானவரை அவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதுபற்றி இருவரும் விவாதித்து தெளிவான முடிவை எடுத்துவிட வேண்டும். முக்கியமான விஷயங்களில் அவர்களிடம் கருத்து கேட்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா விஷயத்திலும் தலையீடு செய்வதற்கு அனுமதிக்காமல் இருப்பது நல்லது.

    ஆரோக்கியம்

    இருவருக்கும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகள், நாள்பட்ட நோய்கள் அல்லது மரபணு சார்ந்த நோய் தாக்கங்கள் இருந்தால் அதுபற்றி விவாதித்துவிடுவது நல்லது. அதில் இருந்து மீண்டு வரும் வழிமுறைகள், நோய்களை முற்றிலும் குணமாக்கும் தன்மை பற்றி மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது.

    சச்சரவுகள்

    வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் புதுமண தம்பதியர்களுக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள், கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை திருமணத்திற்கு முன்னரே கண்டறிந்துவிடுவது சாலச்சிறந்தது. அதற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் தத்தம் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    இறை நம்பிக்கை

    இறை நம்பிக்கை விஷயத்தில் இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் நல்லது. ஆன்மிக ஈடுபாடு கொண்டவராக துணை இருந்தால் அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படுவது அவசியமானது. அது திருமண பந்தத்தை வலுவுடன் வைத்திருக்க துணைபுரியும்.


    நட்பு

    குடும்பம், உறவுகளை பற்றி தெரிந்து கொள்வது போலவே இருவரும் அவரவர் நெருங்கிய நண்பர்களை பற்றியும் விவாதித்து அறிந்து கொள்ள வேண்டும். அந்த நட்பு எந்த அளவிற்கு ஆழமானது என்பதையும் விளக்கி விட வேண்டும். திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு வட்டத்தை தொடரலாமா? எந்த அளவுக்கு தொடர்பில் வைத்திருப்பது என்பதையெல்லாம் முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது.

    இலக்கு

    ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இலக்குகள் இருக்கும். லட்சியங்கள், கனவுகள் இருக்கும். அது பற்றி பேசி தெரிந்து கொள்வதும், அதனை நிறைவேற்றுவதற்கு தம்மால் இயன்ற ஆதரவை வழங்குவதும் இருவருக்குமிடையேயான திருமண பந்தத்தை இன்னும் வலுமையாக்கும்.

    • எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம்.
    • ஹார்மோன் குறைபாடு, பரம்பரை நோயல்ல.

    பெண்களுக்கு எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

    * பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பத்து வயது முதல் எந்த வயதிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவருக்கு இந்த சமநிலையின்மை காரணமாக, மனச்சோர்வு, அதிக தூக்கம், உடல் எடை கூடுவது, மன உளைச்சல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மை என பலவிதமான அறிகுறிகள் ஏற்படும்.


    * பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், சீரான ரத்தப்போக்கு இருக்காது. முதல் இரண்டு நாட்களிலேயே ரத்தப்போக்கு நின்றுவிடுவது அல்லது மாதவிடாய் காலம் முடிந்தும் அதிகமான ரத்தப்போக்கு வெளியேறுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    * ஹார்மோன் சமநிலையின்மை என்பது அவரவர் உடலுக்கு ஏற்றவாறு நிகழும். இதில், பொதுவான சில அறிகுறிகளை மட்டுமே கண்டறிந்து, தீர்வு காண இயலாது. எந்த சுரப்பில் சமநிலையின்மை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கான தீர்வு காண்பதே சரியான வழிமுறை.

    * திருமணமான பெண்களுக்கு, ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். கருத்தரிப்பதில் சிக்கல், கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு இதன் அறிகுறியாக உடல் பருமன் ஏற்படும். இதை, ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம்.

    * ஹார்மோன் குறைபாட்டால், பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் நோய் தைராய்டு. இந்த நோயில், இரண்டு வகைகள் உண்டு. ஹைபர் தைராய்டு (Hyper thyroidism) மற்றும் ஹைபோ தைராய்டு (Hypothyroidism). ஆனால், பெண்களுக்கு பொதுவாக ஏற்படுவது தைராய்டு சுரப்பிக் குறைபாட்டால் ஏற்படும் ஹைபோதைராய்டு. ஆரம்பக் காலத்திலேயே, தகுந்த மாத்திரைகள் மூலம் இதை சரிசெய்துவிட முடியும்.

    * ஹார்மோன் குறைபாடு, பரம்பரை நோயல்ல. ஆனால், தைராய்டு போன்ற நோய், ஒருவரின் குடும்பத்தினருக்கு இருந்தால், அவர்களை சார்ந்தவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

    * ஹார்மோன் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு நோய் பிசிஓடி என்கிற பாலிசிஸ்டிக் ஓவரி நோய். இந்த நோயின் தாக்கத்தால், முகத்திலும் கைகளிலும் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், மன உளைச்சல், முடி உதிர்வது, எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.


    * ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக நீரிழிவு நோயும் தாக்கலாம். நமது உடலில் தேவையான அளவில் இன்சுலின் சுரக்காதபோதுதான் இந்த நோய் ஏற்படுகிறது. ஹார்மோன் குறைபாடு காரணமாக, இந்த இன்சுலின் சுரப்பி சுரக்காமல் போகலாம். இதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படலாம்.

    * பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்பதும் பீட்சா, பர்கர் பதப்படுத்திய குளிர்பானங்கள், துரித உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதும் இன்றைய காலகட்டத்தில் ஹார்மோன் சமநிலையின்மையில் இருந்து ஓரளவு காக்கும்.

    • வாடகைத்தாய் சட்டம் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்டது.
    • வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.

    வாடகை தாய் முறையில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் வாடகைத்தாய் முறையானது தற்போது சில விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் வாடகைத்தாய் சட்டம் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்டது.


    அதன்படி வாடகைத்தாய் முறைகளுக்கு பலவிதமான சட்ட திட்டங்களும், வழிமுறைகளும், வரையறைகளும் இந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. அதாவது, 2022-ம் ஆண்டு வரை இந்த வாடகைத்தாய் என்பது ஒரு வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையாகவே இருந்தது.

    2022-ம் ஆண்டு அமல்படுத்தபட்ட சட்டத்தின் படி வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.


    வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறை என்றால் என்ன என்று பார்த்தால், தங்கள் குழந்தை வளருவதற்காக, ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்து அவர்களின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும்.

    இதன் மூலம் சமுதாயத்தில் பின் தங்கியவர்கள் அதாவது, ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள், பணம் மற்றும் பொருளுக்காக மட்டும் வாடகைத்தாயாக இருந்தனர்.

    அவர்களை வாடகைத்தாயாக தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. வாடகைத்தாய் முறைக்கு உட்படுத்தப்படக்கூடிய பெண்கள் பலர், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.

    எனவே அதுபோன்ற ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வாடகைத்தாய் முறையால் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு தடை விதித்து 2022-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.


    வாடகைத்தாய் முறை பற்றிய தவறான கருத்துகள்:

    வாடகை தாய் முறை சட்டத்தின்படி தற்போதைய வாடகைத்தாய் முறையை எப்படி செய்யலாம் என்பதை குழந்தையின்மை சிகிச்சைக்கு வருபவர்கள் உள்ளிட்ட அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் டாக்டர்களிடம் வரும் நோயாளிகள் பலர் வாடகைத்தாய் முறை என்றால் குழந்தை பேறு எளிதாக வந்துவிடும் என்று தவறாக நினைக்கிறார்கள். வாடகைத்தாய் முறை என்றால் குழந்தை பேறுக்கு 100 சதவீதம் உத்தரவாதம் என்று நினைக்கிறார்கள். இது தவறானதாகும்.

    வாடகைத்தாய் முறை என்பது கர்ப்பப்பை இல்லாத பெண்கள், குழந்தை பேறு பெறுவதற்கான ஒரு வழிமுறை மட்டும் தான். ஏனென்றால் இதற்கு இன்னொரு சிகிச்சை முறை கருப்பை மாற்று சிகிச்சையாகும்.

    இந்த கருப்பை மாற்று சிகிச்சையை கடந்த 2012-ம் ஆண்டு உலக அளவில் சுவீடனில் டாக்டர் மட்ஸ் பிரான்ஸ்ட்ரோம் என்பவர் முதல் முறையாக செய்து குழந்தை பேறு பெறப்பட்டது.

    இந்த கருப்பை மாற்று சிகிச்சை இன்றும் உலகத்தில் பல நாடுகளில் செய்தாலும் கூட இதில் கருப்பை தானம் செய்பவர், தானம் பெறுபவர் மற்றும் குழந்தை பேறு பெறுதல் ஆகியவற்றில் ஆபத்தும் உள்ளது.

    மேலும் இதனுடைய வெற்றி விகிதம் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கான செலவுகளும், பாதிப்பு காரணிகளும் அதிகமாக இருப்பதால் இந்த முறை இன்றும் ஒரு தோல்வி அடைந்த முறையாகத்தான் கருதப்படுகிறது.

    மற்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளான இதயம், கல்லீரல், சிறுநீரகம் மாற்று சிகிச்சை போல கருப்பை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கிறது.

    ஏனென்றால் கருப்பையில் ஒரு குழந்தை வளர வேண்டும், அந்த குழந்தை வளரும் போது, மாற்றப்பட்ட கருப்பையானது குழந்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    அந்த கருப்பை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் இந்த சிகிச்சையானது மிகவும் குறைவான அளவிலான வெற்றியையே தரக்கூடியது.

    ஆனால் வாடகைத்தாய் முறை என்பது குழந்தையின்மை சிகிச்சையில் மிகவும் எளிமையானது, ஆரோக்கியமானது. குழந்தைக்கு கண்டிப்பாக பாதுகாப்பானது.

    அதே நேரத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தையை பெற்றுக் கொடுக்க உட்படுத்தப்படுகிற பெண்கள் பலரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்தித்ததே இந்த சட்டம் வருவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

    • வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.
    • குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான்.

    குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான நடைமுறை சரோகசி (Surrogacy) எனப்படும் வாடகைத்தாய் முறை ஆகும். வாடகைத்தாய் முறையில் தம்பதிகள் பலரும் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர்.

    வாடகைத்தாய் என்பது ஒரு பெண், தன் உடல் திறனால் குழந்தை பெற முடியாத நிலையில், அவர்களுக்காக இன்னொரு பெண் கர்ப்பத்தை சுமந்து குழந்தை பெற்றுத் தருவதாகும்.


    இதை மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெண்ணின் குழந்தை வளருவதற்கு மற்றொரு பெண்ணின் கர்ப்பப்பையை வாடகைக்கு எடுப்பதாகும்.

    அதாவது சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இருக்காது. சில நேரங்களில் அவர்களுக்கு கர்ப்பப்பை இருந்தாலும் கூட அது சரியாக செயல்படாத நிலையில் இருக்கும்.

    ஒருவேளை கர்ப்பப்பையில் செயல்பாடு இருந்தால் கூட அதில் சரியான முறையில் குழந்தை வளர்வதற்கு தேவையான சூழல்கள் இல்லாத நிலை இருக்கும்.

    இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்களுடைய மரபணு வழியிலான குழந்தையை வளர்த்து பெற்றெடுப்பதற்கு ஒரு வழிமுறைதான் வாடகைத்தாய் என்பதாகும்.

    இந்த வாடகைத்தாய் முறையில் எந்த தம்பதிக்கு வாடகைத்தாய் வேண்டுமோ, அவர்களை கமிஷனிங் தம்பதி என்று சொல்கிறோம். அதாவது அவர்கள் தான் அந்த குழந்தைக்கு தாய், தகப்பன்.

    வாடகைத்தாய் என்பவர் கர்ப்பப்பையை மட்டும் தான் இந்த குழந்தைக்கு கொடுப்பார்.

    எனவே இந்த குழந்தையின் மரபணு எல்லாமே அந்த தம்பதியினருடையது தான்.

    அந்த தம்பதியின் முட்டையையும், விந்தணுவையும் சேர்த்து கருவாக்கம் செய்து, அந்த கருவை வேறொரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து குழந்தை பெற்றெடுக்கும் முறைதான் வாடகைத்தாய்.


    இந்த வாடகைத்தாய் முறை என்பது, ஐ.வி.எப். சிகிச்சை அளிக்கத் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகவே பலவிதமான ஆலோசனைகள், விமர்சனங்கள், விவாதங்களுக்கு உட்பட்டதாகவே உள்ளது.

    ஏனென்றால் வாடகைத்தாய் முறையில், குறிப்பாக குழந்தை தேவைப்படுகிறவர்கள் மட்டும் இல்லாமல், சில சமூக காரணங்களுக்காகவும், பிரபலங்கள் என்ற முறைகளிலும், சிலர் தாங்கள் குழந்தை பெற்றால் தங்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும், அல்லது அந்த கர்ப்பத்தை சுமப்பதால் தங்களின் வாழ்க்கை பாதிப்படையும் என்பது போன்ற சூழ்நிலைகளால் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

    • ஆற்றலையும் உற்சாகத்தையும் உடல் பெறுகிறது.
    • உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் செயல்முறை.

    பெண்கள் பிரசவத்துக்குப் பிறகு 'மசாஜ்' செய்து கொல்வது நல்லது. இது உடலுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதிக ஆற்றலையும் உற்சாகத்தையும் உடல் பெறுகிறது.

    மசாஜ் என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்த உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஒரு செயல்முறையாகும். தினசரி வேலை அழுத்தம் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் ஓய்வெடுக்க மசாஜ் சென்டர்களை நாடுகின்றனர். உடலின் தசைகளைத் தூண்டும் மசாஜ் எல்லா வயதினருக்கும் நல்லது.


    பல வகையான மசாஜ்கள், உடலில் உள்ள பல்வேறு பாதிப்புகளை குணப்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு தமது உடல்நிலையை கவனித்துக்கொள்ள நேரம் இருப்பதில்லை. இரவும் பகலும் குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

    அதேசமயம் தமக்கு உடல் வலி இருப்பதையும் அவர்கள் உணர்கிறார்கள். மேலும் பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் எடையும் கொஞ்சம் கூடுகிறது. மகப்பேறுக்கு முந்தைய உடல் வடிவத்தை மீண்டும் பெறுவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். இதற்கெல்லாம் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

    பிரசவத்துக்குப் பின், முறைப்படி பயிற்சி பெற்ற பெண்களிடம் இளந்தாய்மார்கள் மசாஜ் செய்து கொள்ளலாம். இது பிரசவத்துக்குப் பிந்தைய மசாஜ் என்று அழைக்கப்படுகிறது. இந்த மசாஜ், அழகை மேம்படுத்துவது, உடல்வலியை போக்குவதுடன் மேலும் பல நன்மைகளை அளிக்கிறது.

    அவை பற்றி பார்க்கலாம்...


    பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். குழந்தைக்காக அதிக நேரம் ஒதுக்குவது ஒரு புதிய தாயை உடலளவிலும் மனதளவிலும் சோர்வடையச் செய்கிறது. எனவே, சோர்வுற்ற உடலுக்கு மசாஜ் தேவை.

    பிரசவத்துக்குப் பின் கால்கள், தொடைகள், கைகள், கழுத்து, முதுகு வலிகள் இருக்கும். மசாஜ் செய்வதால் இவற்றில் இருந்து விடுபடலாம். இரவில் மசாஜ் செய்வது நல்லது. தூங்குவதற்கு முன் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யத் தெரிந்த பெண் அல்லது கணவரின் உதவியைப் பெற்று மசாஜ் செய்துகொள்ளுங்கள்.

    மகப்பேறுக்குப் பின் அடிவயிற்றில் ஏற்படும் 'ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை' மசாஜ் செய்வதன் மூலம் குறைக்கலாம். நல்ல எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். தோல் மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படும்.


    பிரசவத்துக்கு முந்தைய உடல் வடிவம் பெற தொப்பையைக் குறைக்க. உடல் கொழுப்பை குறைக்க மசாஜை தவிர வேறு வழியில்லை. மசாஜ் செய்வது, பால் சுரப்பிகள் நன்கு செயல்பட உதவுகிறது. மார்பகங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல், மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்கும்.

    பிரசவத்தின்போது பெண்களின் தசைகள் தளர்ந்து விடும். பிரசவத்துக்குப் பிந்தைய மசாஜ், தசைகள் மீண்டும் தங்கள் திறனைப் பெற உதவுகிறது.

    மசாஜ் செய்வது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வலியை நீக்குவது மட்டுமல்லாமல், ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து, இளந்தாயின் ஒட்டுமொத்த பொலிவையும் கூட்டும். எனவே, மென்மையான, முறையான மசாஜ், மிகவும் நல்லது.

    • கடவுச்சொல்லுடன் கூடிய டிஜிட்டல் பூட்டை நிறுவலாம்.
    • டோர் பெல் கேமராக்கள், ஸ்மார்ட் சாதனங்கள் கண்காணிப்புக்கு உதவும்.

    இப்போது பணி நிமித்தமாக வெளியூரில் தங்கியிருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. "அத்தகைய பெண்கள் பெரும்பாலும், பணிபுரியும் மகளிர் விடுதி அல்லது பிற பெண்களுடன் சேர்ந்து வீடு, அறை எடுத்து தங்குவதை விரும்புவார்கள். அதுதான் பாதுகாப்பு என்று கருதுவார்கள்.

    ஆனால் சில பெண்கள், பல்வேறு காரணங்களால், தனியாக வசிக்கும் நிலை இருக்கலாம்.

    இந்த நிலையில், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு, பின்வரும் குறிப்புகளை மனதில் வைத்து செயல்பட வேண்டும்...


    * தனியாக வசிக்கும் பெண், தாள் இருக்கும் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பின் கதவுகள், ஜன்னல்கள், பூட்டுகள், கிரில்கள் ஆகியவை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பயோமெட்ரிக் அனுமதியுடன் கூடிய ஸ்மார்ட் கதவு பூட்டு அல்லது கடவுச்சொல்லுடன் கூடிய டிஜிட்டல் பூட்டை நிறுவலாம்.

    * ஒரு புதிய வீட்டுக்குச் செல்லும்போது, பூட்டுகளை மாற்றி, மாற்று சாவிகள் யாருக்கும் எளிதாக கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செக்யூரிட்டி கேமராக்கள், டோர் பெல் கேமராக்கள் போன்ற ஸ்மார்ட் சாதனங்கள், கண்காணிப்புக்கு உதவும். நாம் வெளியில் இருந்தாலும் வீட்டை கவனிக்க இதுபோன்ற சாதனங்கள் கைகொடுக்கும்.

    * நாய் வளர்ப்பதை பலரும் சிறந்த பாதுகாப்பு உத்தியாக கருதுகிறார்கள். பராமரிக்க முடிந்தால், செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் இருந்தால், நாய் வளர்க்கலாம்.


    * நம்பிக்கைக்குரிய அக்கம்பக்கத்து பெண்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். வெளியாட்களை, அவர்கள் பெண்களாகவே இருந்தாலும் வீட்டுக்கு வரவழைப்பதை தவிர்க்கலாம்.

    * தனியாக வசிக்கும் பெண்கள், தங்களின் முகவரி, தொடர்பு விவரங்களை குடும்பத்தினர். நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    * போலீஸ் அவசர அழைப்பு எண் (100), தேசிய மகளிர் ஆணைய (NCW) உதவி எண் (011-23237166), பெண்கள் உதவி எண் (181) போன்ற அவசர தொடர்பு எண்களை நினைவில் வைத்திருக்கவும்.

    * Safetipin, bSafe, Vithu காப்பு செயலிகளை செல்போனில் பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பகுதி மகளிர் குழுக்களுடன் இணைய முயற்சிக்கவும், ஆன்லைன் மன்றங்களில் சேரவும் அல்லது சமூக நிகழ்வுகளில் பங்கேற்கவும் ஆர்வம் காட்டலாம்.

    * நீங்கள் வசிக்கும் பகுதி எவ்வளவு பாதுகாப்பாகத் தோன்றினாலும், எப்போதும் சுற்றுப்புறத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தனிமையான பகுதிகளில், குறிப்பாக இரவில் நடப்பதைத் தவிர்க்கவும். கூடியவரை, பொதுபோக்குவரத்து அல்லது சரிபார்க்கப்பட்ட ஓட்டுநருடன், சவாரி-பகிர்வு சேவைகளைப் பயன்படுத்தவும்.

    * தனியாக வசிப்பதை, முன்பின் தெரியாதவர்களிடம் தெரிவிக்க வேண்டாம். அவர்கள், நீங்கள் அடிக்கடி பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி.


    * சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்படும் பதிவுகள், ஒருவரின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். தனியாக வாழ்வதை சமூக ஊடகங்களிலும் குறிப்பிடாமல். கவனமாக இருக்க வேண்டும். இருப்பிடம் அல்லது முகவரி போன்ற எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் இணையத்தில் எல்லோரும் அறியும் வகையில் தெரிவிக்க வேண்டாம்.

    * எந்த ஒரு சூழ்நிலையிலும், தமது தனிப்பட்ட பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுவது. தனியாக வசிக்கும் பெண்களின் பொறுப்பு.

    • பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.
    • வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன.

    மாதவிடாய் காலமம் சங்கடமான நேரமாக இருக்கலாம். மாதவிடாய் பல விரும்பத்தகாத அறிகுறிகளுக்கு வழிவகுக்கும், மேலும் மாதவிடாய் கால வலி என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். அது பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.


    மாதவிடாய் வலியை குறைக்க மருந்துகள் அல்லது வெப்பமூட்டும் பட்டைகள் போன்றவை உதவுகின்றன. மாதவிடாய் காலங்களில் நாம் உண்ணும் உணவுகள் மூலமாக கூட வலியை நீக்க முடியும். மாதவிடாய் காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.


    பழங்கள்

    பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன அவை:

    * பெர்ரி

    * வாழைப்பழங்கள்

    * தர்பூசணிகள்

    * பப்பாளிகள்

    * ஆப்பிள்கள்

    * அத்திப்பழம்

    * ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்


    காய்கறிகள்

    வீக்கத்தை நிர்வகிக்க காய்கறிகள் சிறந்தவை. அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக திகழ்கிறது. மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் சில காய்கறிகள்:

    * ப்ரோக்கோலி

    * சர்க்கரை வள்ளிக்கிழங்கு

    * காலிஃபிளவர்

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மாதவிடாய் வலியை நேரடியாகத் தடுக்காது என்றாலும், அவை மாதவிடாயின் போது ஏற்படும் செரிமான அறிகுறிகளில் இருந்து வலியைப் போக்க உதவும்.

    * முழு தானியங்கள்

    * பீன்ஸ்

    * நட்ஸ்

    * விதைகள்

    கொழுப்பு மீன்

    கொழுப்பு நிறைந்த மீன் உடலில் வீக்கத்தைக் குறைத்து மாதவிடாய் அறிகுறிகளை மேம்படுத்தும். இதற்கு அதன் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம்.

    * சால்மன் மீன்

    * சூரை மீன்

    * மத்தி மீன்கள்

    * கானாங்கெளுத்தி

    • கருத்தடை என்பது கர்ப்பத்தை கருவுறுதலை தடை செய்வது.
    • தம்பதியர்கள் பலரும் கருத்தடை குறித்து தெரித்துகொள்ள வேண்டும்.

    கருத்தடை என்பது கர்ப்பத்தை கருவுறுதலை தடை செய்வது. குழந்தைப்பேறு வேண்டாம் என்று சில காலத்துக்கு தள்ளிபோடும் தம்பதியர்கள் பலரும் கருத்தடை குறித்து தெரித்துகொள்ள வேண்டும்.


    கருத்தடை மாத்திரைகள்

    பெண்கள் கருத்தரிக்க விரும்பாத நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம். இந்த மாத்திரைகள் பாதுகாப்பானது. தினமும் இந்த மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.

    ஒரு நாள் தவறினாலும் பலனில்லாமல் போய்விடும். மேலும் மாத்திரைகளை நிறுத்தும் போதும் சுயமாக நிறுத்தாமல் மருத்துவரின் ஆலோசனையோடு தான் நிறுத்த வேண்டும். ஏனெனில் இது சுழற்சி முறை என்பதால் குறிப்பிட்ட நாட்கள் வரை போட்ட பிறகு தான் நிறுத்த வேண்டும்.

    இல்லையெனில் ஹார்மோன் சுழற்சியில் மாற்றம் உண்டாகக் கூடும். பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் எப்போதும் பாதுகாப்பானவை. இவை பக்க விளைவை உண்டாக்காது.


    ஆணுறை

    ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனங்களில் மிக முக்கியமானது. கருவுறுதலை தடுக்கும் வழிமுறைகளில் இது முக்கியமானது. பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளை தடுக்கும் நிலையில் இது சரியான தேர்வாக இருக்கும்.

    ஆணுறை பயன்படுத்துவதும் எளிது என்பதால் கருத்தடைக்கு ஆணுறை சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் ஆணுறை அணியும் போது இருவருக்குமே பாதுகாப்பு. இது பாலியல் தொற்று நோய் உண்டாகாமலும் தடுக்கும்.

    பெண் ஆணுறை

    ஆண்களை போன்றே பெண்களுக்கும் பெண் ஆணுறை உண்டு. இது யோனிக்குள் செலுத்தப்படக்கூடியது. ஆண் ஆணுறைகள் உடலுறவுக்கு பிறகு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

    ஆனால் பெண் ஆணுறைகள் கடினமானது அல்ல. இது ஈரப்பதமானாலும் சிதையாது. மெல்லிய பொருள்களால் தயாரிக்கப்படும் பெண் ஆணுறைகள் ஆண்களின் விந்தணுக்களை உள்ளே செல்லாமல் தடுக்கும்.

    பெண்களின் உடல் எடைக்கேற்ப பல்வேறு அளவுகளில் இவை கிடைக்கிறது. பெண் ஆணுறையின் இரண்டு பக்கமும் வளையப்பகுதி இருக்கும். ஒரு பக்கத்தில் முனை நகராமல் இருக்கும் படியும் மற்றொரு முனையானது யோனிக்குள் செல்லும் வரையிலும் இருக்கும்.

    இதை டேம்பன் போல் பொருத்திகொள்ளலாம். பெண் ஆணுறை குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் குறைவாக தான் உள்ளது. இதை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம்.

    கருத்தடை கிரீம்கள்

    ஆண்களின் விந்தணுக்களை அழிக்ககூடிய ரசாயனங்கள் கலந்த கிரீம் வகைகள், ஜெல்லிகள், களிம்புகள், மாத்திரைகள் கிடைக்கிறது. இதை பெண் உறுப்பில் கர்ப்பபையின் வாய்ப்பகுதியில் தடவிக் கொள்ள வேண்டும்.

    இதனால் ஆண்களின் விந்தணுக்கள் உறவின் போது பெண் உறுப்புக்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கரு உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

    துரதிஷ்டவசமாக இவை கரு உருவாவதை நிச்சயம் தடுத்துவிடும் என்று சொல்லமுடிவதில்லை. பயன்படுத்தும் முறை, அதன் நேரம் இவற்றில் அறியாமல் செய்யும் தவறு கூட கருவுறுதலை மேம்படுத்திவிடுகிறது.


    கருத்தடை ஊசி

    இது புரொஜெஸ்டிரான் ஹார்மோனில் தயாரிக்கப்பட்ட மருந்து. இது ஊசியாக பயன்படுத்தப்படுகீறது. இதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போட்டுகொள்ள வேண்டும். எனினும் இதை தொடர்ந்து வருடக்கணக்காக பயன்படுத்த முடியாது. ஏனெனில் இது மாதவிலக்கை சீரற்று ஆக்கும். எலும்புகளையும் பலவீனமாக்கிவிடும்.


    காப்பர் டி

    கர்ப்பபைக்குள் பதிவிடப்படும் லூப் போன்ற கருத்தடை சாதனம். செம்பு கலந்த காப்பர் டி போன்ற மற்றொரு சாதனம், ஹார்மோன் கலந்த (LNG) என உங்கள் உடலுக்கு தேவையான ஒன்றை மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் பொருத்திகொள்ள வேண்டும். மாதவிலக்கு முடிந்ததும் கர்ப்பபைக்குள் இதை பொருத்தி கொள்ள வேண்டும்.

    பிரசவத்துக்கு பிறகு இதை பொருத்துவதாக இருந்தால் இரண்டு மாதங்களுக்கு பிறகு இதை பொருத்துவார்கள். எனினும் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் உரிய இடைவேளையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது இடம் மாறிவிட்டால் உடனடியாக வேறு மாற்றும்படி அறிவுறுத்துவார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக எடை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
    • உடல் எடை அதிகரிப்பைத் தவிர்க்க வேண்டும்.

    இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் தான் கருப்பையை உறுதியாக, வலுவாக வைத்திருக்கும் ஆதாரங்கள். இவை பலவீனமடையும் போது கருப்பை கீழ்ச்சரிவு ஏற்பட்டு, கருப்பை மெதுவாக கீழே இறங்குகிறது அல்லது யோனியிலிருந்து வெளியே வருகிறது.


    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுகப்பிரசவத்தின் போது அதிக நேரம் கடந்த கடினமான பிரசவங்கள், பிரசவத்தின் போது குழந்தையின் அளவு பெரிதாக இருப்பது மற்றும் அதிக எடையுடன் இருப்பது, மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு திடீரென குறைவது, நாள்பட்ட மலச்சிக்கல், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, கடினமான பொருட்களை எப்போதும் தூக்குதல், பிரசவத்திற்கு பிறகு உடனே கடினமான வேலைகளை செய்வது இவைகளால் கருப்பை கீழிறங்குதல் பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனால், இடுப்பில் கனம் அல்லது இழுத்தல் போன்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகாமல் இருப்பது போன்ற உணர்வு, சிறுநீர் கசிவு, மலச்சிக்கல் மற்றும் குடல் இயக்கத்தில் பிரச்சனை, உட்கார்ந்து இருக்கும் போதும் நடக்கும் போதும் சிரமமாக இருப்பது மற்றும் யோனி ஆடையில் தேய்ப்பது போன்ற உணர்வு, இடுப்பு அல்லது கீழ் முதுகில் அழுத்தம் அல்லது அசவுகரியம், பிறப்புறுப்பு திசு தளர்வாக இருப்பது போன்ற உணர்வு மற்றும் தாம்பத்தியம் சார்ந்த கவலைகள் ஏற்படும்.


    கருப்பை கீழிறங்குதல் அபாயத்தைக் குறைக்க மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், முழு தானிய உணவுகளை உண்ண வேண்டும்.


    அதிக எடை தூக்குவதை தவிர்க்க வேண்டும். நாள்பட்ட இருமல் அல்லது மூச்சுக்குழாய் அழற்சிக்கு உடனே சிகிச்சை பெற வேண்டும். உடல் எடை அதிகரிப்பைத் தவிர்க்க வேண்டும். இடுப்பு தசைகளை வலுப்படுத்துவதற்கான கெகல் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    • முதல் முறையாக கருவுற்றவர்களுக்கு பிரசவம் குறித்து அதிக பயம் இருக்கும்.
    • கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும்.

    முதல் முறை கருவுறுதலின் போது சந்தோஷமாக உணரும் நேரத்தில் பிரசவம் குறித்தும் அதிகம் பயப்படுவார்கள். கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும்.

    அதே சமயம் பிரசவ வலிக்கும், பொய் வலிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை பற்றி கர்ப்பிணிப் பெண்கள் அறிந்து கொள்வது அவசியமானது.


    பொதுவாக பிரசவ வலி என்பது மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் கவலையும் இருக்கும். பெண்ணின் கர்ப்பகாலத்தில் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் இந்த வலி உணர்வு தொடங்கும். முதல் குழந்தையை சுமக்கும் பெண்கள் அடிக்கடி பிரசவ வலி என்று மருத்துவமனைக்கு செல்லும் நிகழ்வுகளும் நடக்கும்.

    பல பெண்கள் தங்களது இறுதி மூன்று மாதங்களில் பிரசவ வலி ஆரம்பித்துவிட்டதாக நினைத்து அடிக்கடி மருத்துவமனை செல்கிறார்கள். இது பொய் வலி அல்லது சூட்டு வலி என்பதை அறிந்த பிறகு வீடு திரும்புகிறார்கள்.

    பொய் வலி விட்டு விட்டு இருக்காது. தொடர்ந்து இருக்கும். உட்கார்ந்தால், நின்றால், படுத்தால் என நிலை மாறும் போது வலி குறையும். இடைவிடாத வலி இருந்தாலே அது பெரும்பாலும் பொய் வலி தான்.


    பிரசவ வலிகள் கீழ் முதுகில் தொடங்கி பின் அடிவயிற்றில் பரவி சில சமயங்களில் கால்கள் வரை பரவும். சில சமயங்களில் வயிற்றில் வலியை உண்டாக்கும். சிலநேரங்களில் வயிற்றுப்போக்குடன் இருக்கலாம்.

    கர்ப்பப்பை வாய் விரிவடைதல் மற்றும் வெளியேற்றத்தின் ஆரம்பமாக இருக்கலாம். குழந்தையின் தலை இடுப்புக்குள் இறங்கி இருக்கலாம். கர்ப்பிணியின் இடுப்பு மற்றும் மலக்குடல் மீது அதிக அழுத்தத்தின் உணர்வு இருக்கும்.

    • பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உயரும்.
    • மாதவிடாய் சுழற்சியில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    மகளிரின் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் இரண்டுமே இன்றியமையாதது. மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும். இது பாலிகுலர் பிரீயட் என்று அழைக்கப்படுகிறது.


    இந்த காலகட்டத்தில் முதல் இரண்டு வாரங்களில் கருமுட்டை விடுவிப்பு நடைபெறுகிறது. இதன் பின்னர் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் ஆதிக்கம் செலுத்துகிறது.

    இனப்பெருக்க காலங்களில் சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜனின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. இதுதவிர சிறுநீரகங்களின் மேல் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் அடிபோஸ் திசுக்கள் (உடல் கொழுப்பு) ஈஸ்ட்ரோஜனை சுரக்கின்றன. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியும் ஈஸ்ட்ரோஜனை சுரக்கிறது.


    ஈஸ்ட்ரோஜன் செயல்பாடுகள்

    ஈஸ்ட்ரோஜன் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்கள் உட்பட உடலில் எல்லா இடங்களிலும் ஈஸ்ட்ரோஜன் செயல்படுகிறது.

    மனநிலையை மாற்றும் செரோடோனின் ரசாயனத்தையும் மூளையில் உள்ள செரோடோனின் ஏற்பிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.

    மூளையில் 'நல்ல உணர்வு' ரசாயனங்களான எண்டோர்பின்களின் உற்பத்தி மற்றும் விளைவுகளை மாற்றியமைக்கிறது. நரம்புகளை சேதங்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நரம்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது.


    சினைப்பைகள் கருமுட்டையை வெளியிடும் போது, கர்ப்பத்திற்கு தயார்படுத்த கருப்பையின் எண்டோமெட்ரியம் புறணியை அடர்த்தியாக்குகிறது. கருமுட்டை வெளிவரும் நாட்களில் ஈஸ்ட்ரோஜன் உச்சத்தை அடைகிறது. இது மிகவும் வளமான காலம். கர்ப்பப்பை சளிச்சுரப்பை அதிகரித்து கருவுறுதல் நிகழ, விந்தணு நீந்த உதவுகிறது.

    பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உயரும். மார்பகங்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இரண்டாம் நிலை பாலின பண்புகளுக்கு வழிவகுக்கிறது. சீரான மாதவிடாய் சுழற்சி நடைபெற புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனுடன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    இந்த ஹார்மோன்கள் மாதவிடாயை சீராக வைத்திருக்க ஒரு நுட்பமான சமநிலையில் இணைந்து செயல்படுகின்றன. தாம்பத்தியத்திற்கு வசதியாக யோனி சுவர்களை மென்மையாகவும், மீள்தன்மையுடனும், உயவூட்டுவதாகவும் வைத்து, வலியைக் குறைக்கிறது.


    மெனோபாஸ் காலம்

    பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரக்கும் அளவுகுறையும். இது மாதவிடாய் நிறுத்தத்திற்கு சில காலங்களுக்கு முன்பே ஆரம்பிக்கும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் இல்லாதபோது அதிகாரப்பூர்வமாக மெனோபாஸ் தொடங்குகிறது. இது பொதுவாக 51 வயதில் நடக்கும்.

    இந்த வயது நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் நின்றவுடன், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைந்து, யோனி வறட்சி, மனநிலை மாற்றங்கள், இரவில் வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    ஈஸ்ட்ரோஜன் குறைபாடு காரணமாக மனநிலை மாற்றங்கள் அடிக்கடி ஏற்படும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தலைவலி, சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.


    ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலை ஏற்படுத்தும் உணவுகள்:

    ஆளி விதைகள் மற்றும் அலிசி விதைகள் (பிளாக் சீட்), சோயா பீன் இவைகளில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், ஐசோபிளேவன் போன்றவை ஈஸ்ட்ரோஜன் சமநிலைக்கு உதவும்.

    பாலுக்கு மாற்றாக சோயா பால் குடிக்கலாம். உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், கருப்பு திராட்சைப்பழம், பூண்டு, பெருங்காயம், எள் விதைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரக்கோலி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், பெர்ரி வகை பழங்கள், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், கோதுமை ஆகியவை நல்லது.

    மன அழுத்தத்தை நீக்க இறை பிரார்த்தனை, தியானம், உடற்பயிற்சி செய்ய வேண்டும். போதுமான நேரம் இரவில் தூங்க வேண்டும்.

    ×