என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    குளிர்காலத்தில் கூந்தலையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். குளிர்காலத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் கூந்தலை பாழாக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
    எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியான பராமரிப்பை மேற்கொள்வது கூட கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். குளிர்காலத்தில் கூந்தலுக்கு செய்யகூடாத விஷயங்கள் என்னவென்பதை பார்க்கலாம். இதை தெரிந்து கொண்டால் உங்கள் கூந்தலை நீங்களும் பாதுகாக்கலாம்.

    தலைக்கு குளிக்கும் போது எப்போதும் குளிர்ந்த நீர் தான் பயன்படுத்த வேண்டும். கோடைக்காலத்துக்கு குளிர்ந்த நீர் சரி. ஆனால் குளிர்காலத்துக்கு எப்படி பொருந்தும் என்று கேட்கலாம். உண்மையில் கூந்தலின் தன்மை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

    குளிர்காலத்தில் கூந்தலில் வெந்நீர் படும் போது முடி உதிர்தலும் முடி பிளவும் வழக்கத்தை விட அதிகரிக்கும். பிறகு இதிலிருந்து கூந்தலை மீட்பது கடினம்.கண்டிப்பாக குளிர்ந்த நீரில் குளிக்க முடியாது என்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். அதிகாலையில் குளிக்காமல் சற்று வெயிலுக்கு பின்பு மந்தமான நீரில் குளிக்கலாம்.

    வாரத்தில் மூன்று நாட்கள் தலைக்கு குளிப்பவர்கள், தினமும் தலைக்கு குளிப்பவர்கள் எல்லோரும் இந்த குளிர்காலத்தில் இதை நிறுத்தி வைப்பது நல்லது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் தலைக்குளியல் செய்யலாம். அதோடு ஷாம்புக்களின் பயன்பாடுகள் குறிப்பாக சோடியம் சல்ஃபேட்,சோடியம் லாவ்ரெல் சேர்க்கை கொண்ட ஷாம்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. அதே போன்று பாரம்பின் இல்லாத ஷாம்புக்களை தேர்வு செய்யுங்கள்.

    ஷாம்பு இல்லாமல் இயற்கை பொருளை பேக் செய்து குளிக்கலாம். தயிர், அவகேடோ, முல்தானி மிட்டி போன்றவை கூந்தல் அழுக்கையும் நீக்கும். கூந்தலுக்கு ஊட்டமும் கொடுக்கும்.

    உச்சந்தலை பகுதி உலர்ந்து இருந்தால் கசகசப்பு தெரியாது என்று கூந்தலை உலரவிடுவது கோடைக்காலம் தான். அடிக்கும் வெயிலில் கூந்தலும் தானாகவே இயற்கையாகவே உலர்ந்துவிடக்கூடும். ஆனால் குளிர்காலத்தில் கூந்தல் உலர்வு என்பது சிரமமானது.

    அதிலும் தலைக்குளியலுக்கு பிறகு அவசரமாக வெளியே செல்ல நினைத்தால் கூந்தலின் ஈரம் சவாலானதாக இருக்கும். இந்நிலையில் ஹேர் டிரையர் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது. கூந்தலில் ஈரம் இருந்தாலும் அதன் உச்சியிலும் ஸ்கால்ப பகுதியிலும் வறட்சியை உண்டாக்க செய்யும். அதனால் குளிர்காலத்தில் ஹேர் டிரையர் தவிர்க்க வேண்டிய ஒன்று.

    ​குளிர்காலத்தில் கூந்தல் இயற்கையாக உலரவைத்தாலும் கூட ஈரத்தன்மையை கொண்டிருக்கும். கூந்தல் ஈரமாக இருக்கும் போது அது வலு குறைந்திருக்கும் அப்போது வேகமாக அதை இழுப்பது மேலும் பலவீனத்தை உண்டாக்கி முடியை உதிர செய்யும். இதை தவிர்க்க பெரிய பற்களை கொண்ட அதிக இடைவெளி உள்ள மரசீப்புகள் அல்லத் கைவிரல்களை பயன்படுத்துங்கள். இதனால் கூந்தல் சிக்கில்லாமல் பாதுகாக்க முடியும்.தலைக்குளியலுக்கு பிறகு கூந்தலை மென்மையான துணி கொண்டு மயிர்க்கால்கள் முதல் நுனிவரை துடைத்தால் சிக்கு இல்லாமல் கூந்தலை பாதுகாக்கலாம்.

    கொஞ்சம் வெயிலாக இருந்தாலும் முழங்கைகள் வரை, முகம் வரை தலையில் ஒரு கவசம் வரை என பொத்தி பொத்தி பாதுகாக்கும் கூந்தலை குளிர்காலத்தில் மட்டும் விட்டுவிடுவார்கள். வெயில் தாக்கம் தான் இல்லையே என்று விரிந்த கூந்தலை சுதந்திரமாக பறக்கவிட்டால் நீங்கள் உங்கள் கூந்தலின் வனப்பை இழக்கிறீர்கள் என்று சொல்லலாம். உண்மையில் உங்கள் கூந்தல் உச்சந்தலை பகுதி வறட்சியை கொண்டிருக்கலாம். கூந்தலின் வறட்சி விரிந்த தன்மை போன்றவை சுற்றியிருக்கு மாசு. அழுக்குகளை கூந்தலில் தேக்கி வைக்க கூடும். அதனால் கூந்தலின் மீது ஒரு ஸ்கார்ப் போடுவதை தவிர்க்க வேண்டாம்.

    ​மழைக்காலம் போன்று குளிர்காலத்திலும் நீங்கள் செய்யும் தவறு சூடான மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ், எண்ணெய் வகை உணவுகள் போன்றவை தான்.குளிர்காலங்களில் கூந்தலின் மயிர்க்கால்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்வு மிக மோசமாக இருக்கும்.

    ஏற்கனவே வறண்ட குளிர்கால சூழலில் இருக்கும் கூந்தல் இதனால் மேலும் தீவிரமாக உதிரக்கூடும். மோசமான உணவுகளும் ஊட்டச்சத்துகளும் உடலில் புதிய மயிர்க்கால்களின் வளர்ச்சியை தடுக்கும். குறிப்பாக அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், கீரைகள், புரத உணவுகளை தவிர்க்க வேண்டாம்.
    பாரம்பரிய டிசைன்களும், நிறக்கலவைகளுமே பட்டுப் பாவாடைக்கு அழகு சேர்க்கிறது. அதனால் டீன்ஏஜ் பெண்களையும் கவரும் விதத்தில் விதவிதமான வடிவமைப்புகளில் பட்டுப்பாவாடைகள் தயாராகின்றன.
    காலம் மாறினாலும் பட்டுப் பாவாடையில் பெண்களுக்கு இருக்கும் ஆசை குறையவில்லை. அதனால் டீன்ஏஜ் பெண்களையும் கவரும் விதத்தில் விதவிதமான வடிவமைப்புகளில் பட்டுப்பாவாடைகள் தயாராகின்றன. விழாக்காலங்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறுமிகள் பட்டுப் பாவாடையுடன் உலா வருவதை பார்க்கவே அழகாக இருக்கும். பளிச்சென்ற நிறத்தில் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப் பாவாடை அணிந்து அழகுக் குழந்தைகள் நடந்துசெல்லும்போது மின்னல்வெட்டியதுபோல் இருக்கும்.

    பாரம்பரிய டிசைன்களும், நிறக்கலவைகளுமே பட்டுப் பாவாடைக்கு அழகு சேர்க்கிறது. பொருத்தமான ஜாக்கெட்டுகள் அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும். சிவப்பு பட்டில் தயாரான மேலாடைக்கு, கை பகுதியில் ‘பப்’வைத்து அதன் இறுதியில் சூரிய கதிர்கள் ஜொலிப்பதுபோல் ஜரிகை வேலைப்பாடு செய்திருந்தால் அது கண்களை பறிக்கும்.

    இப்போது பட்டுப் பாவாடைக்கான ஜாக்கெட்டில் டிசைனர் மெட்டீரியலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். கலம்காரி, டிஜிட்டல், பத்திக், காயின் டாட், இக்காத் போன்ற பல வகை பிரிண்ட் மெட்டீரியல்களை பட்டுப் பாவாடை- ஜாக்கெட்களில் பயன்படுத்துகிறார்கள். ஜாக்கெட் துணி பாவாடைக்கு பார்டர் ஆகிவிடுகிறது. ஸ்கர்ட்டுக்கு பதில் பலாசோ பயன்படுத்துவது புதிய பேஷனாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கான ஜாக்கெட் ‘க்ரோப் டாப்’ போன்றிருக்கும். இப்போது பட்டுப் பாவாடை- ஜாக்கெட்டுடன் தாவணியையும் இணைத்து தருகிறார்கள். டீன்ஏஜ் பெண்களை இது வெகுவாக கவர்கிறது.

    அடர்த்தியான நிறங்களை கொண்ட பட்டுப்பாவாடைகளே முந்தைய ஸ்டைலாக இருந் தது. அந்த பாரம்பரிய ஸ்டைல் இப்போதும் பெண்களை ஈர்க்கத்தான் செய்கிறது. பச்சை- மஞ்சள், நீலம்- சிவப்பு, மெருன்- நீலம், நீலம்-பிங்க், பிங்க்- கிளிப்பச்சை போன்றவைகளே அதற்கான கலர் காம்பினேஷன்களாக இருக்கின்றன. பிராக்கெட் ஜாக்கெட்களுக்கு பாவாடையின் பார்டரில் இருந்து வெட்டி எடுத்த துண்டுகளை ‘ஸ்லீவ்’ ஆக பயன்படுத்துகிறார்கள். அதன் நெக்லைனில் எம்ப்பிராய்டரி, ஸ்டோன் ஒர்க் போன்றவைகளை செய்கிறார்கள்.

    3 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு ஆன்லைனில் ரெடிமேடு பட்டுப்பாவாடைகளை வாங்கலாம். சில்க் காட்டன் மெட்டீரியலில் தயாரான லைனிங் செய்த டாப்பும், பேன்சி நெக்கும், எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகளும் அதில் இருக்கும். ஆன்லைனில் வாங்கும்போது நம்பகமான பிராண்ட்களை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. துணியின் தரத்தையும், டிசைனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்த இணையதளத்தில் இருந்து அதனை வாங்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். குறைந்தது ஐந்து வெப்சைட்டுகளையாவது பார்த்துவிட்டு நிதானமாகவே ஆர்டர் செய்யவேண்டும். ரிட்டர்ன் செய்வது, எக்சேஞ்ச் செய்வது போன்ற சவுகரியங்கள் இருக்கவேண்டும்.

    துணியின் தரத்தை பற்றிய விவரங்களையும் வாசித்து பார்க்கவேண்டும். துல்லியமான அளவில் ஒருபோதும் ஆர்டர்கொடுக்கக்கூடாது. துல்லிய அளவின் அடுத்த சைஸ்க்கு ஆர்டர் கொடுப்பதே சிறந்தது. துல்லிய அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கினால் அது இறுக்கமாக தோன்றலாம். சற்று அளவு அதிகமான பட்டுப்பாவாடை என்றால் அதன் அளவை சுருக்குவது மிக எளிது.

    மெலிந்து உயரமாக தோன்றும் பெண்கள் குறுக்கான கோடுகளை கொண்ட பிரிண்டுகள் அமைந்த டிசைன்களை வாங்கக்கூடாது. அகலமான பார்டரும், பெரிய பூக்களை கொண்ட டிசைன்களும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பாவாடைக்கும்- ஜாக்கெட்டுக்கும் கான்ட்ராஸ்ட் நிறங்களை தேர்ந்தெடுங்கள். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு பாவாடையில் அதிக சுருக்கங்கள் வைத்துக்கொள்ளலாம். ஜாக்கெட்டுகளில் ‘பப் ஸ்லீவ்’ வைத்துக்கொள்ளலாம். குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு சிறிய பிரிண்டுகளை கொண்ட டிசைன்கள் பொருத்தமாக இருக்கும். சிறிய செக் டிசைன்களும் அவர்களுக்கு கூடுதல் அழகு தரும்.
    குளிர்காலத்தில் நம் தோல் மற்றும் முடி ஆகியவற்றைப் பாதுகாக்க சில முயற்சிகளை நாம் செய்யவேண்டியுள்ளது. இந்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
    குளிர்காலத்தில் நம் தோல் மற்றும் முடி ஆகியவற்றைப் பாதுகாக்க சில முயற்சிகளை நாம் செய்யவேண்டியுள்ளது. பெரும்பாலானோருக்குக் குளிர்காலத்தில் சருமம் வறண்டு, அரிப்பு எடுக்கும். குளிர்காலத்தில் சருமம் பாதிப்படைவதைத் தவிர்ப்பதற்கு வைட்டமின் இ எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதில் சில செயற்கை மற்றும் வேதிப்பொருள்களும் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்பூச்சு தவிர, வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

    வைட்டமின் இ சத்துக்கு நிலையற்ற அணுக்களான ஃப்ரீ ராடிகல்ஸை எதிர்த்துப் போரிடும் இயல்பு கொண்டது. ஃப்ரீ ராடிகல்ஸ் உடலின் செல்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. சருமத்திற்கு வயதான தோற்றம், வறட்சி, கரும்புள்ளிகள் இவை தோன்றுவதற்கு ஃப்ரீ ராடிகல்ஸ் காரணமாகின்றன. வைட்டமின் இ, அந்த ஃப்ரீ ராடிகல்ஸின் செயல்பாட்டுக்குச் சருமத்தைப் பாதுகாக்கிறது..

    5 பாதாம் பருப்புகளை இரவு நீரில் ஊற வைத்து காலையில் அவற்றைத் தோல் உறித்து சாப்பிட வேண்டும். காலை டீ அருந்தும்போது அல்லது காலை உணவுடன் இவற்றைச் சாப்பிட்டால் உடலுக்கு வைட்டமின் இ சத்து கிடைக்கும். குளிர்கால தொல்லைகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்..

    பசலைக் கீரையைப் பயன்படுத்தி காலையில் சாப்பிடக்கூடிய பல உணவுகளைச் சமைக்கலாம். பசலை கீரையை நறுக்கி அல்லது அவித்து முட்டையுடன் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம். பசலைக் கீரை மற்றும் பனீரை சாண்ட்விச்சின் உள்ளே வைத்துச் சாப்பிடலாம். ஏதாவது ஒரு வகையில் இக்கீரையைக் காலை உணவில் சேர்த்துச் சாப்பிடுவது பலன் தரும்..

    அவகாடோ பழத்தை மசித்து முட்டை, இறைச்சி அல்லது வேறு காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். அவகாடோ பழத்தைக் காலை உணவுடன் சேர்க்கும்போது உணவும் அழகு பெறும். வைட்டமின் இ சத்து உடலில் சேர்ந்து சருமத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்..

    சூரியகாந்தி விதைகளில் அதிக அளவு வைட்டமின் இ சத்து உள்ளது. சூரியகாந்தி விதையை வறுத்து தின்பண்டமாகச் சாப்பிடலாம். காலையில் தேநீர் அருந்தும்போது சாப்பிடலாம் அல்லது காலை உணவாக ஓட்மீல்ஸ் போன்றவை சாப்பிடும்போது அதனுடன் சேர்த்துச் சாப்பிடலாம்..

    பீநட் பட்டரை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். வேர்க்கடலையை காலை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பீநட் பட்டரை பானங்களுடன் சேர்த்து அருந்தலாம். வைட்டமின் இ சத்து உடம்பில் சேர்ந்தால் குளிர்காலத்தில் கூந்தல் மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்..
    குளிர் காலத்தில் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காது. இப்போது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதுதான் சரியான சரும பராமரிப்பு வழிமுறையாகும்.
    குளிர் காலத்தில் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காது. அதனால் இப்போது சருமம் வறண்டு போவது தவிர்க்கமுடியாதது. சருமத்தின் மேல் அடுக்கில் ஈரப்பதம் குறைவது, குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவுவது, சூடான தண்ணீரில் குளிப்பது, ஒவ்வாமை ஏற்படுவது, சோப்புகளை அதிகம் பயன்படுத்துவது போன்றவை வறண்ட சருமத்திற்கு காரணமாக இருக்கின்றன. அதனால் குளிர் காலத்தில் சருமத்தை பராமரிப்பதில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இப்போது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதுதான் சரியான சரும பராமரிப்பு வழிமுறையாகும்.

    சருமத்தை உலரவிடாமல் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பார்ப்போம்!

    * குளிர்காலத்தில் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம். சூடான நீரில் ஒரு கப் ஓட்ஸ் போட்டு கால் மணி நேரம் கழித்து அதை உடலில் பூசி, சிறிது நேரத்தில் கழுவவும் செய்யலாம். தினமும் ஒரு கப் தரமான பால் பருகலாம். சருமத்திற்கு கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம். இவை வறண்ட சருமத்திற்கு நிவாரணம் அளிக்க உதவுபவை. சருமத்தில் நீர்ச்சத்தையும், ஈரப்பதத்தையும் தக்கவைக்கவும் துணைபுரிபவை.

    * குளிர்காலத்தில் அதிக நேரம் குளிக்க கூடாது. ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குள் குளித்துவிடவேண்டும். உடல் உள் உறுப்புகளை போலவே வெளிப்புற சருமத்திற்கும் போதுமான அளவு நீர் தேவை. அதிக நேரம் குளிப்பது சருமத்திற்கு ஏற்றதல்ல. குறிப்பாக குளிர்காலத்தில் சூடான நீரில் தினமும் குளிப்பது சருமத்திற்கு நல்லதல்ல. 15 நிமிடங்களைவிட கூடுதல் நேரம் குளித்தால், சருமத்தின் எண்ணெய் அடுக்கு பாதிப்புக்குள்ளாகும். அதனால் சருமம் ஈரப்பதத்தை இழக்க நேரிடும். சருமம் வறண்டால் எரிச்சலும் ஏற்படும். வெளிப்புற அடுக்கின் செல்களும் சேதமடையும். அதிக சூடும், குளிர்ச்சியும் இல்லாத நீரில் குளிப்பதுதான் சருமத்திற்கு ஏற்றது.

    * குளித்த பின்பும், கை, கால்களை கழுவிய பிறகும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். சருமத்தின் தன்மை மாறாமல் பாதுகாக்கவும் உதவும். மேலும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் திரவத்தை உறிஞ்சி சரும வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

    * குளிர்காலத்திலும், கோடைகாலத்திலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். ஏனென்றால் குளிர்காலத்தில் சூரியன் பூமிக்கு நெருக்கமாகவும் அதன் கதிர்கள் இன்னும் வலுவாகவும் இருக்கும். சன்ஸ்கிரீன் உபயோகிப்பதன் மூலம் சூரிய கதிர்வீச்சுகளால் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தை தவிர்த்துவிடலாம்.

    * இப்போது குளியல் சோப் உபயோகிக்கும் விஷயத்திலும் கவனம் தேவை. சருமத்திற்கு பொருத்தமான சோப்பை தேர்ந்தெடுக்காவிட்டால் இயற்கையாகவே ஈரப்பதம் வழங்கும் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்ற நிலை உருவாகிவிடும். இதனால் சரும வறட்சி, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

    * சருமத்தின் இயற்கையான அழகை பேணுவதற்கு நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதுதான் சிறந்த வழியாகும். திரவ உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமத்திற்கு மென்மையையும், பிரகாசத்தையும் அளிக்கும்.

    * கேரட், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் வகைகள், பச்சை இலை காய்கறிகள் போன்றவை சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடியவை. அவற்றை குளிர்காலத்தில் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    முகம், கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்களைப் போக்க வாரத்திற்கு ஒரு முறை “டைட்னிங் பேஷியல்” செய்ய வேண்டும். டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலே தயாரிக்கலாம்.
    உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைந்து முகம், கழுத்து, கைவிரல் பகுதிகளில் சுருக்கம் தோன்றும். முகம், கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்களைப் போக்க வாரத்திற்கு ஒரு முறை “டைட்னிங் பேஷியல்” செய்ய வேண்டும். டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலே தயாரிக்கலாம். முட்டையின் வெள்ளைக் கரு, முல்தானிமிட்டி, தேன் மூன்றையும் கலந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தினாலே போதும்.

    டைட்னிங் பேக்குகளும், டைட்னிங் மாஸ்க்குகளும் சரும சுருக்கங்களைப் போக்க உதவுகின்றன. சருமத்தின் அழகைப் பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை. முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு தினமும் பத்து டம்ளர் தண்ணீரும் குடித்தால் சருமம் வறண்டு சுருக்கம் தோன்றுவது தவிர்க்கப்படும்.

    உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது.
    பெண்களின் நெற்றியில் சுருக்கம் இருந்தால் அது பளிச்சென தெரியும். நெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்.
    பெண்களின் நெற்றியில் சுருக்கம் இருந்தால் அது பளிச்சென தெரியும். முக அழகையும் அது கெடுக்கும். வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்தபடி தலையணையில் முகம் பதித்து தூங்குபவர்களுக்கு மற்றவர்களை விட நெற்றியில் சுருக்கங்கள் அதிகம் தோன்றும். முகம் தலையணையில் அழுத்தமாக பதியும்போதும் சுருக்கங்கள் ஏற்படக்கூடும். 

    இது தவிர மன அழுத்தம், கவலை, நீர்ச்சத்து குறைபாடு, சூரியன் அல்லது புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவையும் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன. நெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்!

    * ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் பாதாம் விழுது, ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறு, அரை டீஸ்பூன் கோதுமை எண்ணெய் போன்றவைகளை சேர்க்கவும். அதனை நன்றாக கலந்து நெற்றியில் பூசி, அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம்.

    * ஒரு வாழைப் பழத்தை நன்றாக பிசைந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி சேர்க்கவும். பின்பு இரண்டு டீஸ்பூன் பால், 5 துளிகள் தேன் கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை நெற்றியில் தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.

    * எண்ணெய் மசாஜ் செய்வதும் நெற்றியில் உள்ள சுருக்கங்களை போக்க உதவும். ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய், அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 4 சொட்டு கோதுமை எண்ணெய் ஆகியவற்றை கலந்து நெற்றியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் நன்றாக உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்துவிட்டு தூங்க செல்லலாம்.

    * உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதும் சுருக்கத்தை தடுக்க உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும்.
    ஊட்டச்சத்து நிறைந்த கொலாஜன் ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சியை சிறப்பாக ஊக்குவிக்க கூடியவை. வீட்டிலேயே இந்த எப்படி செய்துகொள்வது என்று பார்க்கலாம்.
    கொலாஜன் புரதமானது முடி பராமரிப்புக்கு அதிக நன்மைகளை தருகிறது. ஆரோக்கியமான உச்சந்தலை பகுதிக்கும் முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவக்கூடியது. முடி உதிர்தலுக்கு காரணமான மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

    கொலாஜன் நிறைவாக இருந்தால் அதிக வலுவான மயிர்க்கால்களை பெறுவதன் மூலம் முடி அடர்த்தியாக வலுவாக பெறலாம். மேலும் கொலாஜன் உற்பத்தி சீராக இருந்தால் முடி உதிர்தலும் முடி மெலிதலுக்கான சிக்கல்களும் வராமல் தடுக்க முடியும். கொலாஜன் வலுவான கூந்தலை ஊக்குவிக்கும் வகையில் ஆரோக்கியமான நன்மைகளை பெறுகிறது.

    கொலாஜன் உணவுக்கு பிறகு செயற்கை முறையில் கூந்தலுக்கு பயன்படுத்தப்படும் கொலாஜன் ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

    கொலாஜன் ஹேர் மாஸ்க்

    தேவையான பொருட்கள்

    ஆலிவ் எண்ணெய் -2 டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கொலாஜன் -1 டீஸ்பூன்

    மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். எண்ணெயோடு கொலாஜன் நிறைவாக கலந்திருக்க வேண்டும். கூந்தலை சிக்கில்லாமல் சீவை வையுங்கள். இப்போது இதை எடுத்து உச்சந்தலை பகுதி முழுவதும் தடவி மிதமாக மசாஜ் செய்யவும். கூந்தலின் மேல் முதல் அடிவரை தடவி விடவும். பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் வரை விட்டு இலேசான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி எடுக்கவும்.

    முடி பராமரிப்புக்கு இயல்பாகவே மாதம் ஒரு முறை இந்த மாஸ்க் பயன்படுத்துங்கள். முடி உதிர்வு குறையும். முடி வளர்ச்சி அதிகரிக்க செய்யும். முடி உதிர்வு அதிகம் இருப்பவர்கள் மாதம் இருமுறை இந்த மாஸ்க் போடுவதன் மூலம் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

    கொலாஜன் ஹேர் மாஸ்க் கூந்தலின் நிறத்தை பாதுகாக்க செய்கிறது. மயிர்க்கால்களின் நிறத்தை பலப்படுத்துவதால் நரைமுடி பிரச்சனை தள்ளி வைக்கிறது. மேலும் இது கூந்தலின் சாம்பல் நிறத்தை தடுத்து கருமை நிறத்தை உண்டாக்குகிறது.

    முடி வறட்சி அடைவதாலும் முடியின் ஈரப்பதம் குறைந்து முடி உதிர்வு அதிகரிக்க செய்யும். கொலாஜன் ஹேர் மாஸ்க் முடிக்கு ஈரப்பதம் அளிக்க செய்கிறது. முடியை வலுவாக பளபளப்பாக வைத்திருக்க செய்கிறது. முடி உடைவு, முடி பிளவு போன்றவற்றை தடுத்து முடியின் நுனி வரை பளபளப்பை தருகிறது.

    உலர்ந்த கூந்தல், எண்ணெய்பசை கூந்தல், முடி உதிர்தல், முடி பிளவு என எல்லா பிரச்சனைகளுக்கும் கொலாஜன் தீர்வு அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. முடியின் சேதத்தை தவிர்த்து முடி வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக அதிகரிக்கும் கொலாஜன் ஹேர் மாஸ்க் நீளமான அடர்த்தியான முடிக்கு சிறப்பாக உதவும். ஒரு முறை பயன்படுத்தினாலே கூந்தலின் வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள்.
    குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. குளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா? என்பதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
    குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. சிலருக்கு உடல் சூடு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் உட்கார்ந்து எழுந்து இடத்தில் சூடாக இருப்பதாக மற்றவர்கள் உணருவார்கள். 

    அப்படிப்பட்ட உடல் கொண்டவர்கள், குளிர்ச்சியான காற்று, மழை, பனி விழும் சமயத்தில் வீட்டுக்கு வெளியே இருந்தால் மூக்கடைப்பு, தும்மல், நீர்கோத்து தலைவலி போன்றவை வரும். இவற்றைப் பீனிச பாதிப்பு என்பர். முன்னால் குனிந்தால் நீர் ஓடுவதுபோல் பாரம் இருந்தால், சைனஸிட்டிஸ் இருக்கக்கூடும். 

    காது சீழ், டான்சிலிடிஸ் போன்ற எல்லாமே உடலின் மேல் பக்க உறுப்புகளைச் சார்ந்த சுவாச பிரச்சனைகள் எனப்படுகின்றன. இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், தலைக்குக் குளிக்கலாமா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. பலர் பயத்தில் தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதேயில்லை. கண்டிப்பாகத் தினமும் தலைக்குக் குளிக்கவேண்டும். 

    உடம்பு வலி இருக்கிறது; காய்ச்சல் இருக்கிறது என்றால் மட்டும் தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்கலாம். பல ஆண்டுகள் தலைக்குக் குளித்து பழக்கமில்லையென்றால் உடனடியாக குளிக்கவேண்டாம். சுக்குத்தைலம், நொச்சி தைலம், அரக்கு தைலம் போன்ற சித்த மருத்துவம் சார்ந்த தைலங்களைத் தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.. 

    அழகான முக அமைப்பிற்குரிய முக்கியமான அடையாளமாக மூக்கு திகழ்கிறது. மூக்கில் இருக்கும் சிறிய குறைபாடுகளை போக்க, அதற்குரிய மசாஜ் செய்யலாம்.
    அழகான முக அமைப்பிற் குரிய முக்கியமான அடையாளமாக மூக்கு திகழ்கிறது. அதனால் தான் அதற்கு கூடுதல் அழகூட்டி மெருகேற்ற விரும்புகிறோம். பெண்கள் மூக்கை அழகு படுத்தவே மூக்குத்தி அணிந்துகொள்ளவும் செய்கிறார்கள். மூக்கில் இருக்கும் சிறிய குறைபாடுகளை போக்க, அதற்குரிய மசாஜ் செய்யலாம்.

    * வயது அதிகரிக்கும்போது எலும்புகள் மற்றும் தசைகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். மசாஜ் செய்வதன் மூலம் அவற்றின் இயல்புத் தன்மையை சீராக பராமரிக்கலாம். அதனை கருத்தில் கொண்டுதான் பச்சிளம் குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகளை குளிப்பாட்டும் போதும், எண்ணெய் மசாஜ் செய்யும்போதும் மூக்குக்கும் மசாஜ் செய்வது வழக்கம். அவை மூக்குக்கு நல்ல வடிவம் பெற்றுக்கொடுக்கும். குழந்தைகள் மட்டுமின்றி மற்றவர்களும் அவ்வப்போது மூக்குக்கு மசாஜ் செய்வது நல்லது. விரல் களால் மூக்கை கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் அசைத்து மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * வலமிருந்து இடமாக மூக்கை அசைத்து மசாஜ் செய்வதும் மூக்குக்கு நல்ல வடிவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அத்துடன் ஒற்றை தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

    * மூச்சை நன்றாக உள் இழுத்துக்கொண்டு இடமிருந்து வலமாகவும் மசாஜ் செய்ய வேண்டும். தினமும் சிறிது நேரம் இவ்வாறு மசாஜ் செய்து வரலாம். இது மூக்குக்கு நல்ல வடிவம் கொடுப்பதோடு நாசி தசைகளுக்கும் வலு சேர்க்கும்.

    * மூக்குக்கு மசாஜ் செய்யும்போது அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. மூக்கு எலும்புகள் மென்மையானவை. அவற்றுக்கு அழுத்தம் கொடுத்தால் காயமடைந்துவிடக்கூடும்.

    * மூக்கின் இரு புறமும் விரலைவைத்து லேசாக அழுத்தியும் மசாஜ் செய்யலாம். அப்படி செய்யும்போது மூக்கின் தடிமன் குறையும். இரு கை விரல்களையும் பயன்படுத்தி இந்த மசாஜை செய்ய வேண்டும். மூக்கின் அழகுக்கான மேக்கப் போடுவதை விட மசாஜ் செய்வது எளிதானது.

    * நன்றாக மூச்சை உள் இழுத்து ஒரு துவாரத்தை விரலை கொண்டு அடைத்துவிட்டு மற்றொரு துவாரம் வழியாக மூச்சை வெளியே விட்டு மூச்சு பயிற்சி செய்தால் ஆரோக்கியம் கிடைப்பதோடு மூக்கு அழகும் மேம்படும்.
    முகத்தில் கோடுகள், மோசமான செயல்பாடு மற்றும் பொருத்தமில்லாத ஷேடுகள் போன்ற பாதிப்புகளை தவிர்க்க, நீங்கள் செய்யும் பவுண்டேஷன் தவறுகளை அறிந்து திருத்திக்கொள்ளுங்கள்.
    இயற்கையாக தோன்றக்கூடிய மேக்கப் போடுவது மேக்கப் கலையில் மிகவும் முக்கியமானதாகும். கோடுகள், மோசமான செயல்பாடு மற்றும் பொருத்தமில்லாத ஷேடுகள் போன்ற பாதிப்புகளை தவிர்க்க, நீங்கள் செய்யும் பவுண்டேஷன் தவறுகளை அறிந்து திருத்திக்கொள்ளுங்கள்.

    பவுண்டேஷனை பூச கைவிரல்களை பயன்படுத்துவது, வேகமான வழியாக தோன்றலாம். ஆனால் இது சருமத்தின் கோடுகளை உண்டாக்கும். இத்தகைய பயன்பாடு உங்கள் அடிப்படை மேக்கப் சீரில்லாமல் தோன்றச்செய்யும். இதற்கு மாறாக பியூட்டி பிலெண்டர் அல்லது பவுண்டேஷன் பிரெஷ் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். முழு கவரேஜ் பவுண்டேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் கழுத்துப்பகுதியிலும் பயன்படுத்த மறக்க வேண்டாம். பொதுவாக உங்கள் கழுத்து உங்கள் முகத்தை விட, சற்று நிறம் குறைவாக இருப்பதால், கழுத்துப்பகுதியில் பவுண்டேஷன் பயன்படுத்தாமல் இருந்தால், முகம் மற்றும் கழுத்து இடையே பளிச் என வேறுபாட்டை எடுத்துக்காட்டும்.

    மாய்ஸ்சரைசர் பயன்படுத்திய உடன் அது உலர்வதற்கு போதிய நேரம் அளிக்க வேண்டும். இல்லை எனில், மேக்கப் சீரற்று தோன்றும். பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கு முன் மாய்ஸர்ரைசர் முழுவதுமாக உலர சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், பவுடர் பவுண்டேஷன் சரியான தேர்வு போல தோன்றலாம். 

    ஆனால், அவ்வாறு இல்லை என சொல்ல விரும்புகிறோம். பவுடர் பவுண்டேஷன் சருமத்தை உலர வைத்து, சாக் தன்மை அளித்து, சருமத்தில் படிந்து, புகைப்படங்களில் இயல்பில்லாமல் அமைகிறது. உங்களுக்கு எண்ணெய் பசை சருமத்தால் கவலை உண்டானால், உங்கள் முகத்தில் இருந்து கூடுதல் பளபளப்பை அகற்ற மேட்டே பவுண்டேஷனை பயன்படுத்தவும். இறுதியில் மேக்கப்பை சீராக்க மறக்க வேண்டாம்.

    பவுண்டேஷனுக்கு முன் கன்சீலர் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுவது தவறானது. பவுண்டேஷன் போதுமானதாக இல்லாத போது கூடுதல் கவரேஜ் அளிப்பது தான் கன்சீலரின் நோக்கம். எனவே, பவுண்டேஷனை முதலில் பயன்படுத்திவிட்டு பின்னர் குறைகளை சரி செய்ய கன்சீலரை பயன்படுத்துவதே சரியான வழியாக இருக்கும்.

    இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். இரவு நேரத்தில் கூந்தல் பராமரிப்பில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
    பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை. இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். இரவு நேரத்தில் கூந்தல் பராமரிப்பில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

    * பெண்கள் நிறைய பேர் இரவில் தூங்கும்போது கூந்தலை இறுக்கமாக கட்டிக்கொள்ளும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறானது. அப்படி இறுக்கமாக கூந்தலில் கொண்டை போட்டுக்கொள்வது மயிர்கால்களை கடுமையாக பாதிக்கும். கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காது. அதனால் கூந்தல் முடிகள் பாதிப்புக்குள்ளாகும்.

    * இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக சீவுவதும் நல்லது. அப்படி செய்தால் கூந்தல் முடியில் சிக்கல் விழாமல் இருக்கும். இரவில் தூங்கும்போது சிக்கல்கள் விழுந்தாலும் எளிதில் சரிப்படுத்திவிடலாம். அதைவிடுத்து சிக்கல் முடியுடன் தூங்க சென்றால் அதன் பாதிப்பு அதிகமாகி விடும். அதனால் முடியின் அடர்த்தியும், வலிமையும் குறையும். முடி கொட்டுதல் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும்.

    * இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பின்னந்தலையில் வியர் வையோ, ஈரப்பதமோ படிந்திருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியமானது. ஏனெனில் அப்படி ஈரப்பதம் இருந்தால் அது மயிர்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொடுகு தொல்லை, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். இரவில் குளித்தால் கூந்தலை நன்றாக உலரவைத்துவிட்டுத்தான் தூங்க வேண்டும்.

    * இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து மயிர்கால்களுக்கு மசாஜ் செய்துவிடுவது நல்லது. அதன் மூலம் மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். மயிர்கால்கள் வலுப்படுவதால் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இரவில் மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் காலை யில் எழுந்ததும் தலைக்கு குளித்துவிடுவது நல்லது.

    * தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும். ஏனெனில் தினமும் அதில் தலையை வைத்து படுக்கும்போது அதில் அழுக்குகள் சேர்ந்துவிடும். தலையில் இருக்கும் எண்ணெய்யும் தலையணை உறையில் படிந்து அழுக்குடனும் சேர்ந்துவிடும். அதில் தொடர்ந்து தலைவைத்து படுப்பது முடிக்கு பாதிப்பாகிவிடும்.
    பெண்கள் தெளிவான முகத்தையே விரும்புவார்கள். சரி வாங்க காபி குடிப்பதால் என்ன சரும பிரச்சனைகள் உண்டாகிறது என்பதை பார்ப்போம்.
    பெண்கள் தெளிவான முகத்தையே விரும்புவார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் வெப்பம், காற்று மாசு ஆகியவற்றால் முகத்தில் பரு, கரும்புள்ளிகள் இடம்பெறுகிறது. சரி வாங்க காபி குடிப்பதால் என்ன சரும பிரச்சனைகள் உண்டாகிறது என்பதை பார்ப்போம். 

    காபினால் முகம் பாதிக்கப்படுமா? ?என்று அனைவரின் மனதில் குழப்பம் இருக்கும். ஆமாங்க அதிக காபி குடித்தால் முகத்தில் பருக்கள் வரும். பெரும்பாலும் ஹார்மோன் சமநிலையில் இல்லையென்றால் முகப்பரு உண்டாகும். இதனை சரி செய்ய அதிக காய்கறிகள், பழங்கள் உண்டாகவேண்டும். 

    அப்பொழுது தான் தெளிவான சருமம் கிடைக்கும். தினமும் குடிக்கும் காபியின் அளவை குறைத்து கொள்ளுங்கள். காபியில் உள்ள வேதி பொருள்கள் மன அழுத்தம் ஏற்படுகின்ற ஹார்மோனை அதிகமாக தூண்டிவிடுவதால் சருமத்தில் முகப்பரு உண்டாகிறது. தோல்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். 

    காபியை அதிகமாக குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்போம். இதனால் உடம்பில் உள்ள முழு தண்ணீரும் வெளியேறிவிடும். இதனால் முகப்பரு உண்டாகிறது. எனவே காபி தான் என்று அலட்சியமாய் இல்லாமல் பிடித்த காபியை அளவோடு பருகுங்கள்... 
    ×