என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.
    • இந்த எண்ணெய் கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை தரும்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் எண்ணெய் - 500 மி

    நல்லெண்ணெய் - 100 மி

    கரிசலாங்கண்ணி இலைகள் - 2 கைப்பிடி

    அரைக்க வேண்டியவை

    சின்ன வெங்காயம் - 20

    செம்பருத்தி இலை - 2 கைப்பிடி

    கறிவேப்பிலை - 2 கைப்பிடி

    கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்

    மருதாணி - 1 கைப்பிடி

    நெல்லிக்காய் - 10

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கற்றாழை - 2 இதழ்.

    செய்முறை

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 3 எண்ணெயை ஊற்றி மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். அடிபிடிக்காமல் இருக்க பொறுமையாக சிறிது நேர இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரை அடங்கும் வரை காய வைத்து இறக்கி ஆற விடவும்.

    இப்போது எண்ணெய் நன்கு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதனை பாட்டிலில் சேகரித்து தினமும் பயன்படுத்தி வர கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

    குறிப்பு: சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

    • தோல் வறட்சி அடைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தர தீர்வு உண்டு.

    ரத்தத்தில் உள்ள ஹிஸ்டமின் அளவு அதிகரிப்பதால், கொசு மற்றும் பூச்சிக் கடியினால், சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர் வீச்சுகளினால், தோலில் ஈரப்பதம் குறைவதால், வைட்டமின் ஏ,ஈ குறைபாட்டினால், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்றவைகளால் தோல்அரிப்பு, வறட்சி ஏற்படும்.

    தோல் அரிப்புக்கு பரங்கிப்பட்டை சூரணம் 2 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி இவற்றை மூன்று வேளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

    அருகன் தைலம், குப்பைமேனி தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை தோல் அரிப்பு ஏற்படும் இடத்தில் பூசலாம். பனி நேரங்களிலும், வெப்பமான பகுதிகளிலும் வேலை பார்ப்பது போன்றவற்றால் தோலின் ஈரப்பதம் குறைந்து தோல் வறட்சி அடைகிறது.

    தோல் வறட்சிக்கு- கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கழுவி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் அரைத்து தோல் வறண்ட பகுதியில் பூச வறட்சி நீங்கும்.

    மேலும் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி பழச்சாறு, ஆரஞ்சு, சாத்துக்குடி, வெண்பூசணி சாறு, முலாம்பழ சாறு, கேரட், இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கறிவேப்பிலை எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல.
    • இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரை தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    இப்போது இருக்கும் இளைய தலைமுறை கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவது, போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது. இது அவர்களது மன தைரியத்தை குறைக்கிறது.

    இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தலாம். இப்போது கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்…

    தேவையான பொருட்கள்:

    கறிவேப்பிலை எண்ணெய் செய்ய இரண்டே பொருட்கள் போதும். ஒன்று செக்கில் கொடுத்து அரைக்கப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய் வேண்டும். இரண்டாவது நிழலில் உலர்த்தப்பட்ட கறிவேப்பிலை இலைகள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு நிழலில் உலர்த்த வேண்டும்.

    செய்முறை:

    முதலில் தேவையான அளவு கறிவேப்பிலையை உருவி ஒரு தட்டில் அல்லது துணியில் போட்டு நிழலில் உலர்த்தி வையுங்கள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ளவும். கடாய் ஒன்றில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனை சூடு செய்யுங்கள்.

    தீயை குறைவாக வைத்து சூடு செய்யுங்கள். அதே சமயம் புகை வரும் அளவிற்கு சூடு செய்ய வேண்டாம். எண்ணெய் சூடேறிய பிறகு உலர்த்தி வைக்கப்பட்ட கறிவேப்பிலையை சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இந்த எண்ணெய் நன்றாக ஆறி வரட்டும். கறிவேப்பிலை நிறம் மாறி வரும்.

    எண்ணெய் முழுவதுமாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் இதனை ஊற்றி வைத்து பயன்படுத்தலாம். கறிவேப்பிலையோடு சேர்த்தே ஊற்றிக் கொள்ளலாம். கறிவேப்பிலை எண்ணெயில் மிதக்காமல் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இளநரை உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.

    • மஸ்லின் துணியிலும் பட்டுப்புடவையை சுற்றி வைக்கலாம்.
    • சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.

    திருமணத்துக்கு எடுக்கப்படும் முகூர்த்தப்பட்டு சேலையை பெண்கள் பல ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்து பாதுகாப்பது வழக்கம். ஆனால் அதனை பராமரிப்பதில் கவனம் செலுத்தினால் அதன் ஆயுள் காலத்தை மேலும் கூட்ட முடியும். சிலர் பட்டு சேலையை ஏதாவது விழாவுக்கு கட்டிக்கொண்டு செல்வார்கள். வீட்டிற்கு திரும்பியதும் உடனே மடித்து பெட்டியில் வைத்து விடுவார்கள்.

    வியர்வை ஈரத்துடன் அந்த சேலை மடித்து வைக்கப்படுவதால் அதனை பூச்சிகள் அரித்து பட்டுச்சேலையின் சரிகை கருத்துப்போய் விடுகிறது. இதனால் சேலையின் பளபளப்பு குறைந்து அது கிழிந்து விடும் நிலைக்கு உள்ளாகிறது. அதனை தவிர்க்க சேலையை கழற்றியதும் உடனடியாக மடித்து வைக்காமல் மின்விசிறி காற்றில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும். பின்னர் அதனை அயர்ன் செய்து பீரோவில் வைத்து அத்துடன் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைத்தால் சேலைகளை பூச்சி அரிக்காது.

    மாதம் ஒருமுறை எல்லாப் பட்டு புடவைகளையும் வெளியில் எடுத்து நிழல்பட உலர்த்தி அயர்ன் செய்து வைத்தால் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் அந்த சேலைகள் புதியதுபோலவே இருக்கும். மேலும் அதை பாதுகாக்க துணிப்பைகளை தைத்து அதில் சேலையை மடித்து வைத்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜரிகை கருக்காது. அத்துடன் மஸ்லின் துணியிலும் பட்டுப்புடவையை சுற்றி வைக்கலாம்.

    பட்டுப்புடவைகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க அவற்றை மரபீரோவில் வைத்து பராமரிக்கலாம். பட்டுச்சேலை மற்றும் பட்டு ஜாக்கெட் அணிந்து வெளியே சென்று திரும்பும்போது ஜாக்கெட் வியர்வையில் நனைந்து இருக்கும். அதனை லேசாக ஷாம்பு போட்டு கசக்கி அலசி காய வைக்க வேண்டும். அதற்கு சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.ஏனெனில் அதிக காரத்தன்மை கொண்ட சோப்பை பயன்படுத்துவதால், ஜாக்கெட் பொலிவிழந்து கிழிந்து விடும். இந்த ஆலோசனைகள் பட்டுச்சேலை, ஜாக்கெட்டுகளுக்கு மட்டும் அல்ல... பாரம்பரிய பட்டு ரகங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

    • சிவப்பு சந்தனம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்க வல்லது.
    • சரும பிரச்சனைகளுக்கு ரத்த சந்தனத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

    இயற்கை பொருள்களை வைத்து சருமத்தை எவ்வித பக்க விளைவுகள் இன்றி அழகாக மாற்றலாம். சிவப்பு சந்தனம் (red sandalwood) சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்க வல்லது. அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சிவப்பு சந்தனத்தை எப்படி, எதனுடன் சேர்த்து பயன்படுத்துவது என இங்கு காண்போம்.

    * சிவப்பு சந்தனம் (red sandalwood) சருமத்தில் சொரசொரவென்று இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். 

    * பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம். 

    * வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருப்பவர்கள் சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். 

    * முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் பருக்களால் அவதியுறுபவர்கள் சிவப்பு சந்தனத்தை தொடர்ந்து பயன்படுத்த வர விரைவில் சரியாகும்.

    * சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்ட ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை 2 டேபிள் ஸ்பூன் மசித்த பப்பாளியுடன் சேர்த்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    * எண்ணெய் பசையை நீக்க 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து எண்ணெய் பசை நீங்கும்.

    *  பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய், சிவப்பு சந்தன பவுடர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். இந்த பேக் சருமத்தை பொலிவாக்கும்.

    * சரும பிரச்சனைகளை போக்க ஆரஞ்சு தோல் பவுடர் 1 டீஸ்பூன், சிவப்பு சந்தன பவுடருடன் கலந்து அதில் ரோஸ்வாட்டர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும்.

    * 4 டீஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில் 2 டீஸ்பூன் சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

    * சிவப்பு சத்தனம் பவுடர், வேப்பிலை பவுடர் சமஅளவில் எடுத்து கலந்து அதில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இந்த பேக் பருக்கள் மற்றும் பருவால் வரும் தழும்பு, கரும்புள்ளிகளை நீக்கும். 

    * வறண்ட சருமம் உள்ளவர்கள் சிவப்பு சந்தனத்துடன் (red sandalwood) பால், தேன் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். 

    * ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனதூளுடன், சிறிது காய்ச்சாத பச்சைப்பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்ததால் வெயிலில் கருத்த தோலின் நிறம் பொலிவு பெறும். வறண்ட தோல் மென்மையாகும்.

    * கோடை வெயிலில் கருத்த சருமத்தில் வெள்ளரிச்சாறு அல்லது தயிருடன் சிவப்பு சந்தனதூள் கலந்து பூசி வந்தால் கருமை குறைந்து தோல் பொலிவு பெறும்.

    • ஜாதிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது.
    • உங்கள் சருமம் அழகாகவும் பொலிவாகும் மாறுகிறது.

    சருமத்தில் உண்டாகும் நிறமாற்றம் மற்றும் நிறமிழப்பை குறைக்கும் தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு என்பது இதன் அற்புத நன்மைகளில் ஒன்றாகும். சருமம் மற்றும் கூந்தலுக்கு ஜாதிக்காய் சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

    சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுகள், நிறமிழப்பு, சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களால் உண்டாகும் கட்டிகள் , ஹார்மோன் மாற்றம், வயது முதிர்வு, மருத்துகளால் உண்டாகும் பக்க விளைவுகள் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது.

    ஜாதிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இதனால் சருமம் சோர்வடையாமல் தடுக்கிறது. மேலும் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. 

    ஆர்கானிக் பால் அல்லது தேங்காய் பால் ஜாதிக்காய் தூள் இந்த இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து முகத்திற்கு தடவவும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு மிருதுவான தன்மையை அளிக்க உதவுகிறது. உங்கள் சருமம் அழகாகவும் பொலிவாகும் மாறுகிறது.

    ஜாதிக்காயில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் அணுக்களை சேதப்படுத்தும் கூறுகளுடன் இது போராட உதவுகிறது. 

    முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறவும், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையவும் ஜாதிக்காயை பாலுடன் குழைத்து முகத்திற்கு பயன்படுத்துவார்கள்.

    எண்ணெய் சருமத்திற்கு ஜாதிக்காய் பேக்

    செய்ய தேவையான பொருட்கள்:

    ஜாதிக்காய் தூள்,

    தேன்.

    செய்முறை: இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவவும். பத்து நிமிடங்கள் இந்தக் கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும். தேன் மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டிற்கும் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது சருமத்தை அழுக்கு மற்றும் கட்டிகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

    • பெண்களை கவலை கொள்ளும் விஷயம் கூந்தல் உதிர்வு.
    • பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்வு பிரச்சனை வருகிறது.

    தலை முடி உதிர்வுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் குறைபாடுகள், மனக்கவலைகள், தூக்கமின்மை, உடல் சூடு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, பொடுகு போன்றவை முக்கிய காரணமாக உள்ளன.

    இதற்காக பயன்படுத்த வேண்டிய சித்த மருந்துகள்:

    1) அயச் சம்பீர கற்பம் 200 மி.கி. அல்லது அய பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி. எடுத்துக்கொண்டு இவற்றுடன் கரிசாலை சூரணம் ஒரு கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    2) தலைக்கு செம்பருத்தி பூ தைலம் அல்லது கரிசாலை தைலம் தேய்த்து குளித்து வர வேண்டும்.

    3) வாரம் ஒரு முறை கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வெண் மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை சம அளவில் எடுத்து பொடித்து பாலில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர வேண்டும். இதனால் பொடுகு, உடல் சூடு நீங்கும், உடல் குளிர்ச்சி அடையும், கண் ஒளி கூடும்.

    உணவில் முட்டை, பால், கருவேப்பிலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பச்சைப் பட்டாணி, முருங்கை கீரை, வேர்க் கடலை, பேரீச்சம் பழம், மாதுளம்பழம் இவைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும்.
    • தோத்தி குர்தா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும்.

    இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம்.

    புடவை- இந்திய பாரம்பரிய உடை என்றால் நினைவுக்கு வருவது புடவை. ஆனால் அந்த புடவை வகையில் 80 வகைகள் உள்ளது என்பது தெரியுமா? பெங்காளி, ஓடி, குடகு, மலையாளி, என 80 வகையாக புடவை கட்டும் விதங்கள் உள்ளன. புடவை என்பது ஒரு ரவிக்கை மற்றும் உள்ளாடையை கொண்டது. ரவிக்கை மற்றும் உள்ளாடை மீது புடவையை சுற்றி கட்டுவது பாரம்பரிய முறையாகும். தற்காலங்களில் புடவை தைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் அதை கவுன் போலவே மாட்டிக் கொள்ளலாம். தற்காலத்திற்கு ஏற்றார் போல் புடவை பல மாற்றங்களை அடைந்துள்ளது. புடவையில் பிரில் வைப்பது ரவிக்கைகளில் பப்ஸ் வைப்பது, ஒன்-ஷோல்டர், ஆப் - ஷோல்டர் போன்ற பல வகையான மாற்றங்களை அவை அடைந்துள்ளன. இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும்.

    காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும். இது ஒரு துப்பட்டா ஒரு ரவிக்கை மற்றும் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நீண்ட ஆடை உள்ளடக்கியது. இது முகலாயர் காலத்தில் அறிமுகமானது. புடவைக்கு அடுத்து பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும். இதன் வடிவமைப்பில் தற்போதைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. துப்பட்டாவிற்கு பதிலாக பௌ வைப்பது, பொத்தான் வைத்த ஷர்ட்களோடு அணிவது, நீண்ட மற்றும் குறுகிய சோலியோடு அணிவது மேலும் இடுப்பில் அணியப்படும் ஆடையின் அளவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. இது எல்லாவிதமான விழாக்களிலும் அணியக்கூடியது.

    லஞ்சா - லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா. வேறுபாடு என்னவென்றால் ரவிக்கையின் அமைப்பும், இடுப்பில் அணியும் ஆடையின் அமைப்பும். இடுப்பில் இருந்து அணியும் ஆடையின் நீளம் காக்ரா சோலியை விட அதிகமாக இருக்கும். அதே போல் ரவிக்கை நீளம் இடுப்பை தாண்டி நீளும். இது மிகவும் பாரம்பரியமான ஒரு ஆடை வகையாகும். திருமணங்கள் விழா காலங்கள் போன்றவற்றில் முகலாய அரச வம்சத்தில் இன்றளவும் அணியப்படும் பாரம்பரிய உடையாகும். தற்காலத்திற்கு ஏற்றார் போல் லஞ்சாவில் ரவிக்கைக்கு பதிலாக ஜாக்கெட்டும் இடுப்பில் இருந்து அணியப்படும் ஆடையில் நிறைய பிரில்கள் வைத்து நவீனமாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். திருமணங்களில் மணப்பெண் ஆடையாகவும் இது உள்ளது.

    தோத்தி குர்தா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும். ஒரு நீளமான துணி இடுப்பில் சுற்றிக் கொள்வது தோத்தி எனப்படும். பெரும்பாலும் இந்திய ஆண்கள் பகலிலும் இரவிலும் இதை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது பெண்களும் நிறைய பயன்படுத்துகிறார்கள். பருத்தி மற்றும் மஸ்லின் துணிகளை கொண்டு ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் சில்க் மற்றும் சாட்டின் துணிகளை கொண்டு தோத்தி குருதா தைத்து கொள்கிறார்கள். இது ரெடிமேடாகவும் கிடைக்கும். அப்படியே வாங்கி அணிந்து கொள்ளும் வகையிலும் விற்கப்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றார் போல் இது மாற்றம் அடைந்திருக்கிறது. புடவை கட்டுவது போல இதை வடிவமைத்திருக்கின்றார்கள். இடுப்பில் பெல்ட்டும் அணிந்து கொள்ளலாம்.

    சல்வார் சூட்- புடவை அல்லது காக்ரா ஜோலிக்கு அடுத்ததாக விரும்பப்படும் இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று சல்வார் கமீஸ். இது மிகவும் வசதியான ஒரு ஆடை. இது சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டாவும் ஒருங்கிணைப்பாகும். சல்வார் என்பது ஒரு தளர்வான பைஜாமா ஆகும். இடுப்பு பகுதியில் மட்டும் அது இறுக்கமாக இருக்கும் மற்றும் கணுக்கால் பகுதியில் இறுக்கமாக இருக்கும். இடையில் காற்றில் பறப்பது போல் தளர்வாக இருக்கும். கம்மீஸ் என்பது மேலாடை ஆகும். இது சல்வாருக்கு மேல் அணியப்படுவது. முழங்கால் அளவு நீண்டிருக்கும். காலத்துக்கு ஏற்றார் போல் இதில் பல மாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கின்றன. தற்காலத்தில் மிகவும் குறுகிய அளவு கொண்டு அரை ட்ரவுசர் போலவும் இருக்கின்றன. சில சமயங்களில் மேலே போடப்படும் துப்பட்டா பல வகைகளில் வடிவமைக்கப் படுகின்றன. இடுப்பில் அணியப்படும் சல்வார் பல ப்ளீட்ஸ் கொண்டதாகவும் வடிவமைப்பில் சில மாற்றங்களோடும் வந்து கொண்டிருக்கின்றன.

    அனார்கலி சூட்- அனார்கலி சூட் என்பது நீண்ட குர்தாமற்றும் இறுக்கமான சுடிதார் பேண்டிகளின் தொகுப்பாகும். குர்தா இடுப்பு வரை இறுக்கமாக இருந்து பின்பு முட்டிக்கு கீழ் வரை தளர்வாக இருக்கும். இது ஒரு அரசு பாரம்பரிய உடையாகும். வசதியான உடையும் ஆகும். தற்போது அனார்கலி சூட்சில் பல நவீனமான அலங்கார வகைகள் வந்துள்ளன. ஜாக்கட் ஸ்டைல், கேப் ஸ்டைல், ஃப்ளோர் லென்த் கவுன் போன்றவை ஆகும். சமீப காலங்களில் இது பெரிதும் விரும்பப் படும் ஆடையாக உள்ளது.

    குர்தா மற்றும் சுடிதார்- இது குர்தி மற்றும் சுடிதார் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சுடிதார் கால்களின் அளவைவிட மிக நீண்டு இருக்கும். இதனால் கணுக்கால் பகுதியில் சுருட்டி வைப்பார்கள். இது வளையல் போல் தோற்றம் அளிப்பதால், இதற்கு சுரிதார் என்று பெயர் வந்தது. சூரி என்றால் வளையல் என்று பொருள். இதுவும் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பஞ்சாபி பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் வகையாகும். ஆனால் தற்போது இந்தியாவிலும் பெண்கள் அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் குர்தி தரையை தொடும் அளவு நீண்டதாக மேற்கத்திய நாடுகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. குர்தியின் நீளமும் குறைக்கப்பட்டு கணுக்கால அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல வகைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    பெண்களின் ஷர்வாணி- ஷர்வாணி என்பது ஆண்களுக்கான உடையாகும். இது முகலாயர் காலத்தில் அணியப்பட்டு வந்த உடையாகும். அரசாங்க மற்றும் உயர்ந்த மனிதர்கள் அணியக்கூடிய ஆடையாகும். ஆனால் தற்போது ஷர்வாணி உடையாகிப்போனது. இது காட்டன், காட்டன் சில்க், ஷிபான், பட்டு போன்ற பல வகை துணி வகைகளால் செய்யப்படுவது. இதன் மேலாடை எம்ராய்டரி மற்றும் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது பெண்களுக்கு புது வகையான ஆடை வகையாகும். திருமணம் பண்டிகைகள் மற்றும் பல விழாக்களில் இதை அணிந்து கொள்ளலாம். தற்காலத்தில் ஷர்வாணி மேலாடையில் காலர் வைத்தும் காலர் இல்லாமலும் கட் வைத்தும் பல வடிவங்களில் நவீனமாக வடிவமைக்கப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் சுட்ஸ்- குர்த்தியோடு இணைக்கப்பட்ட தளர்வான டவுசர்களின் தொகுப்பாகும். பல்லாசு சூட் தற்காலத்தில் இது மிகவும் விரும்பப்பட்டு அணியப்படும் ஆடை வகையாகும். இதில் பல வகைகளும் உண்டு. நீண்ட, குறுகிய, ஏ-லைன் போன்ற பல வடிவமைப்புகள் இதில் வருகின்றது. மேற்கத்திய ஆடை வகைகளின் தாக்கம் இதில் இருக்கும். பொதுவாக இது துப்பட்டா இல்லாமல் அணியப்படும். பூட்-பாண்ட், கிராப்டு-பாண்ட், சிகரட்-பாண்ட் போன்றவற்றோடு குர்தி பொருந்தி வரும். பொதுவாக இந்த வகையில் துப்பட்டா அணியப்படுவதில்லை. பல வகையான பாண்டு வகைகளோட இது பொருந்தி வருகிறது.

    இந்திய கவுன்- இந்திய கவுன்கள் பெரும்பாலும் துப்பட்டா சேர்ந்தே வருகின்றது. இது ஒரு மேல் நாட்டு கலாச்சார வகை ஆடையாகும். இதில் பலவகைகள் உண்டு. ஒன்-சோல்டர், பெல்-ஸ்லீவ்டு கவுன்ஸ், சாரி-ஸ்டைல் கவுன் போன்று பல வகைகள் இருக்கின்றன. இதன் மேலாடையில் இந்திய கலாச்சாரப்படி பல அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. எம்பிராய்டிங், மணி வைத்து தைப்பது போன்று பல வகைகளில் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது இது புடவையைப் போன்ற வடிவமைப்பில் கிடைக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இதை விரும்பி அடைகின்றனர்.

    சறாரா மற்றும் கறாரா சூட்- சறாரா மற்றும் கறாரா சூட் குர்தி, துப்பட்டா மற்றும் சறாரா/ கறாரா இவற்றின் தொகுப்பாகும். குர்தி நீண்டும் இருக்கும் குறைவாகவும் இருக்கும் நடுத்தர அளவிலும் இருக்கும். இது முட்டிவரை இறுக்கமாக இருந்து அதன் பின் தளர்வாக இருக்கும். இவை தங்க நிற இழை மற்றும் பைப்பிங் போன்றவற்றால் அலங்காரப்படுத்தப்படும். இது முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இன்றளவும் லக்னோவில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள். பாகிஸ்தானில் மணப்பெண்கள் இதை திருமண ஆடையாகவே அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் உயர்ந்த இடுப்பு சறாரா மற்றும் கறாரா சூட்டும் கிடைக்கின்றன.

    மேலே சொன்ன வகைளில் உங்களின் விருப்பமான ஆடையைகளை வாங்கி மகிழுங்கள்.

    • சில குளிர்கால பழங்கள் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை.
    • சரும சுருக்கங்களை குறைக்கும்.

    குளிர் காலத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலையும், குளிர் காற்றும், குறைந்த ஈரப்பதமும் பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு வித்திடும். சரும வறட்சி, நீரிழப்பு, முகப்பரு போன்றவை எட்டிப்பார்க்கும். சில குளிர்கால பழங்கள் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை. சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கக்கூடியவை.

    1. பப்பாளி

    கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் பாப்பைன் என்ற நொதி நிறைந்த பழங்களுள் ஒன்று பப்பாளி. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ மற்றும் சருமத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்தையும் வழங்கும் ஆற்றல் கொண்டவை. முன்கூட்டியே முதுமை பருவம் எட்டிப்பார்ப்பதை தடுக்கும். இந்த பழம் இயற்கையாகவே உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியது. அதனால் குளிர்கால வானிலையை எதிர்த்து போராடி உடல் போதுமான வெப்பநிலையை தக்க வைத்துக்கொள்ள உதவும்.

    2. மாதுளை

    இந்தப் பழம் புத்துணர்ச்சியூட்டும் சக்தி கொண்டது. சரும துளைகளை போக்கவும் உதவும். சரும சுருக்கங்களையும் குறைக்கும். விரைவில் சருமம் முதுமை தோற்றத்திற்கு ஆளாகுவதை தள்ளிப்போடும். மாதுளை பழ ஜூஸ் பருகுவது சருமம் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும். சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தையும் வழங்கும். இதில் இருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி சரும வளர்ச்சிக்கு வித்திடும்.

    3. அன்னாசி

    இதில் புரோமைலின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை குளிர்காலத்தில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. குளிர்காலத்தில் உடலை சூடாகவும், சருமத்தை எண்ணெய் பசைத்தன்மையுடனும் வைத்திருக்க துணை புரியும். மேலும் இதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க உதவும். சரும துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கும்.

    4. கிவி

    இந்த பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள், தடிப்புகள் மற்றும் தோல் அழற்சியைக் குறைக்கக்கூடியவை. சருமத்தை சுத்தம் செய்யவும் உதவக்கூடியவை. கிவியில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. இது வலுவான சருமத்தை உருவாக்க உதவும். மேலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க வழிவகுக்கும்.

    5. வாழைப்பழம்

    பொட்டாசியம், வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை வாழைப்பழத்தில் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் பளபளப்பு தன்மையை மேம்படுத்தக்கூடியவை. இறந்த செல்களை நீக்கி சருமத்தை பிரகாசமாக்கும். குளிர்காலத்தில் சரும வறட்சியை குறைத்து ஈரப் பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும்.

    6. ஆரஞ்சு

    குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை உட்கொள்வது சரும பாதிப்புகளை சரிசெய்ய உதவும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் சருமத்தின் இளமைப் பொலிவையும், பளபளப்பான தோற்றத்தையும் தக்கவைத்துக்கொள்ள உதவும்.

    • காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நூலிலேயே சாயம் ஏற்றிய பின் நெய்யப்படுவதாகும்.
    • துணிகளுக்கு இயற்கை சாயங்களை உபயோகித்து வந்தனர் நம் முன்னோர்கள்.

    வண்ணங்கள் நம் கண்களுக்கு அழகையும் மனதிற்கு இனிமையையும் அளிக்கக் கூடியவை. வண்ணங்கள் இல்லாத வாழ்க்கை வெறுமை. இந்த காரணத்தினால் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வண்ணங்கள் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டன. நம் தமிழக கோயில்களிலும் அஜந்தா எல்லோரா குகைகளிலும் இன்னும் உலகில் பல்வேறு இடங்களிலும். இன்றும் அழகாய் வண்ணமயமாய் இருக்கும் ஓவியங்கள் எல்லாமே இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட சாயங்களினால் தீட்டப்பட்டவையே. காலத்தை கடந்து நிற்கும் இயற்கை சாயங்களின் அற்புத தன்மையை அவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. துணிகளுக்கும் இவ்வாறே இயற்கை சாயங்களை உபயோகித்து வண்ண உடைகளை அணிந்து வந்தனர் நம் முன்னோர்கள்.

    ஆனால் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் செயற்கை சாயங்கள் துணிகளில் கொண்டுவரப்பட்டன. செயற்கை சாயங்கள் வசதியாகவும் செலவு குறைவாகவும் இருந்த காரணத்தினால் அவைகள் இயற்கை சாயத்திற்கு மாற்றாக எல்லா இடங்களிலும் குறிப்பாக துணி நெசவுகளில் உபயோகப்படுத்தப்பட ஆரம்பித்தது. ஆனால் இந்த செயற்கை நிறமூட்டிகளினால் நச்சு கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதை இப்போது அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இயற்கை சாயங்களுக்கு நாம் ஏன் மாறக்கூடாது என்று சமுதாய அக்கறை கொண்டவர்களும் புதுமை நோக்கம் கொண்டவர்களும் நினைக்கத் தொடங்கினர். அவ்வாறு நினைத்த ஆர்எம்கேவி நிறுவனத்தினர் களின் கருத்தில் உதித்து பத்தாண்டு கால ஆராய்ச்சிகளுக்கு பின்பு டஜன் கணக்கில் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து பிரத்தியேக உத்திகளையும் கண்டுபிடித்து அந்த இயற்கை சாயங்களை தங்கள் துணிகளில் ஏற்றி அழகான பட்டு சேலைகளை நெய்து உள்ளனர்.

    இதைப் பற்றி கூறிய ஆர்எம்கேவி நிறுவனத்தினர், "ஆர்எம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100% சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் கலெக்சன். இயற்கை சாயங்களை உருவாக்கும் பண்டைய கால வழிமுறைகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. அவற்றை பற்றி தெரிந்தவர்களும் மிகக் குறைவான எண்ணிக்கைகளில் உள்ள கைவினைஞர்கள் மட்டுமே.

    நாங்கள் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டு அறிந்ததோடு எங்கள் முயற்சியிலேயே பிரத்தியேக நிறங்களையும் புதிதாக உருவாக்கியுள்ளோம். நேச்சுரல்ஸ் கலெக்சன்ஸ் சேலைகள், மஞ்சுஸ்தா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட உயரிய சிகப்பு மற்றும் ஆம்பர் நிற சாயங்களை கொண்டுள்ளது. அரக்கு மிகவும் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கவும், இண்டிகோ நீல நிற சாயத்தையும், வெந்தயம், நெல்லிக்கனி, சிவப்பு மண், மாதுளை பழத்தோல்கள், மல்பெரி இலைகள் மற்றும் சாமந்திப்பூ போன்றவை சாயங்களை உருவாக்குவதற்கு பயன்படும் இயற்கை உட்பொருள்களில் சிலவாகும்.

    துணியை நெய்து சேலை உருவாக்கிய பின் தான் பொதுவாக துணிக்கு சாயம் ஏற்றப்படும். ஆனால் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நூலிலேயே சாயம் ஏற்றிய பின் நெய்யப்படுவதாகும். அந்த முறையில் நாங்கள் பட்டு நூல்கள் தயாரிக்கும் செயல்முறை நிறைவு பெற்றவுடன் அவற்றிற்கு இயற்கையான மற்றும் மக்கும் தன்மை கொண்ட சாயங்களை ஏற்றி தேர்ந்த நெசவாளர்களால் தறிகளில் நெய்கிறோம். எனவே இனி வாடிக்கையாளர்கள் இயற்கை முறையில் சாயம் இடப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலையை தங்கள் கலெக்ஷனில் இனி வரும் விழா காலங்களில் வாங்கி சேர்த்துக் கொள்ளலாம்.

    ஆர்எம்கேவி லெனோ சேலைகள்

    ஆர்எம்கேவி லெனோ சேலைகள் என்ற புதிய லெனோ தொழில்நுட்பம் பற்றி அவர்கள் மேலும் கூறுகையில் "40 சதவீதம் எடை குறைக்கப்பட்டு கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் இவை. பட்டுத்துணி நெசவில் லெனோ தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை ஆரம்கேவி பெற்றுள்ளது. மிக நேர்த்தியான பட்டு நூல் மற்றும் தூய்மையான சரிகை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த அசல் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் காற்றோட்டமிக்க வடிவமைப்புடன் கைகளால் நெய்யப்பட்ட புதுமையான படைப்பாகும். மிக லேசான எடை கொண்ட இந்த சேலையை தற்கால இளைஞர்களை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளோம்.

    இந்த லெனோ சேலைகளில் பளிச்சென்ற வண்ணங்கள் மற்றும் பிரம்மிப்பூட்டும் டிசைன்கள் வழங்கப்பட்டுள்ளது. எங்களின் பிரத்தியேகமான புதுமை படைப்புகள் அனைத்தையும் போலவே லினோ பட்டுப் புடவைகளும் தமிழ்நாட்டில் உள்ள ஆர்எம்கேவி மையத்தில் கைகளால் நெய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. தரமான நேர்த்தியான பட்டு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை எங்கள் தேர்ந்த நெசவாளர்கள் காப்புரிமை பெற்ற லினோ நெசவு தொழில்நுட்பத்தின் மூலம் கைகளால் நெய்ய்கிறார்கள். இதனால் இந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மிகவும் லேசாகவும் காற்றோட்டம் கொண்டதாகவும் இளைஞர்களை கவரும் விதத்தில் உள்ளது. எளிமை மற்றும் உயிர்ப்பு கொண்ட இந்த சேலைகளை எந்த விழாவிற்கும் கொண்டாட்டத்திற்கும் வாங்கி அணியலாம்.

    1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்எம்கேவி நிறுவனம் கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு புகழ் பெற்றது. இதன் கலையம்சம் மற்றும் புதுமை ஆகியவற்றிற்காக பல தேசிய விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது ஆர்எம்கேவி டிசைன் ஸ்டூடியோ பல தனித்துவமான பட்டு சேலைகளை உருவாக்கியுள்ளது. சின்னஞ்சிறு கிளியே, தர்பார் கிருஷ்ணா, ஐஸ்வர்ய பூக்கள், குரல் ஓவியம் போன்ற தீம் புடவைகளும், எந்த பக்கமும் திருப்பி அணிந்து கொள்ளக்கூடிய கிராண்ட் ரிவர்சல் புடவைகள், 50,000 நிறங்கள் கொண்ட சேலை, வர்ணஜாலம் ரகங்கள், நேச்சுரல் சில்க் ரகங்கள் மற்றும் லெனோ லைட் சேலை போன்றவை எங்களின் தனித்துவத்தை பறைசாற்றுபவைகள் ஆகும். இவற்றைக் கடந்து எங்களிடத்தே பேன்சி சேலைகள் எம்ராய்டரி சேலைகள் சல்வார் கம்மீஸ் பெண்கள் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக ரகங்கள் என்று பலவிதமான ஆடைகளும் விற்பனைக்கு உள்ளன," என்றனர்.

    • கம்பளி ஆடைகளை பராமரிக்க பயன்படுத்தக்கூடிய எளிய குறிப்புகள் உள்ளன.
    • இந்த சிறிய குறிப்புகள் உங்கள் ஆடைகளின் ஆயுளை அதிகரிக்கும்

    மற்ற ஆடைகளை விட கம்பளி ஆடைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது, ஏனெனில் இவை மென்மையானவை மற்றும் மிக எளிதாக மங்கலாம் அல்லது சுருங்கலாம், எனவே இந்த வகையான ஆடைகளுக்கு சரியான கவனிப்பு தேவை.

    குளிர்காலத்தில் கம்பளி ஆடைகள் ஒவ்வொருவர் முகத்திலும் மலர்ச்சி தரும் ஒன்று, ஆனால் இந்த ஆடைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுவதால் அவற்றை கவனிப்பது கடினம், எனவே அவற்றை நன்றாக பாதுகாக்க வேண்டும், இல்லையெனில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் அவற்றை புதிதாக வாங்க வேண்டும்.

    நம் கம்பளி ஆடைகளை நாம் நன்றாக கவனித்துக் கொண்டால் இவை நீண்ட காலம் நீடிக்கும். உங்கள் கம்பளி ஆடைகளை பராமரிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன.

    பொதுவான குறிப்புகள்

    1.ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் உங்கள் கம்பளி ஆடைகளை பிரஷ் கொண்டு நன்றாக துடைக்க வேண்டும், இதனால் தூசிகள் மீது ஒட்டாது.

    2.எப்பொழுதும் கம்பளி ஆடைகளை பேட் செய்யப்பட்ட ஹேங்கர்களில் தொங்கவிடவும் மற்றும் துணிகளின் அனைத்து பட்டன்கள் மற்றும் ஜிப்பர்கள் எப்போதும் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.

    3.உலர் துணிகளை கவனமாக மடித்த பிறகு உலர்த்தி பைகளில் வைக்கலாம். துணிகளைப் போடுவதற்கு முன், உங்களின் பணம், அணிகலன்கள், நகைகள் போன்றவை ஸ்வெட்டர்கள் அல்லது ஜாக்கெட்டுகளின் பாக்கெட்டுகளில் இருந்தால் அவற்றை அகற்றவும்.

    4.ஆடைகள் ஈரமாக இருந்தால் அவற்றை அறை வெப்பநிலையில் எப்போதும் உலர்த்தவும், அவற்றை உலர வைக்க ஹீட்டர் அல்லது சூரிய ஒளியைப் பயன்படுத்த வேண்டாம்.

    5.நீங்கள் துணிகளை நீண்ட நேரம் அணிய விரும்பினால், அவற்றை நன்றாக துவைத்த பின் அணியவும். அதனால் புழுக்கள் வராமல் இருக்கும்.

    6. நீங்கள் திரும்ப பயன்படுத்த இருக்கும் ஆடைகளை வைக்கும் பெட்டியில் அல்லது அல்மிராக்களில் எப்பொழுதும் உலர்ந்த வேப்ப இலைகள், ஃபீனைல் உருண்டைகளை போட்டு வைக்கவும்.

    கம்பளி துணிகளை துவைக்கும் போது முன்னெச்சரிக்கைகள்

    1.கம்பளி துணிகளை துவைக்கும்போது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும்.

    2. லேசான சோப்பு, மென்மையான திரவ சோப்பு அல்லது அதிக இரசாயனங்கள் இல்லாத வேறு ஏதேனும் லேசான திரவத்தைப் பயன்படுத்தவும். இந்த சோப்புகள் உங்கள் ஆடைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் வண்ணங்கள் மங்காமல் தடுக்கும்.

    3. துணிகளை 4-5 நிமிடங்களுக்கு சோப்புப் பொருட்களில் ஊறவைத்து, மென்மையாக கைகளால் தேய்க்கவும் (பிரஷ் பயன்படுத்த வேண்டாம் அல்லது சலவை இயந்திரத்தில் துவைக்கவும்) துணிகளை சாதாரண நீரில் துவைக்க வேண்டும், இதனால் டிடெர்ஜென்ட் அவற்றில் இருந்து முற்றிலும் அகற்றப்படும்.

    4.தண்ணீரை அகற்றுவதற்கு மென்மையான டவல்களுக்கு இடையில் துணிகளை அழுத்தவும், பிழிய வேண்டாம்.

    5. கம்பளி ஆடைகளை உலர வைக்க ஹேங்கரில் தொங்கவிடாதீர்கள், செய்தித்தாள், மடிப்பு படுக்கை போன்றவற்றின் மீது எப்போதும் நேராக வைக்கவும்.

    கம்பளி ஆடைகளை சலவை செய்யும் போது முன்னெச்சரிக்கைகள்

    1.நீராவி இஸ்திரியை எப்போதும் பயன்படுத்தவும் மற்றும் கம்பளி அமைப்பில் வைக்கவும்.

    2.துணிகளை உலர வைக்க அவற்றை அயர்ன் செய்யாதீர்கள்.

    3.முடிந்தால் துணிகளை தலைகீழாக (உள் பக்கம்) இருந்து அயர்ன் செய்யவும். முன் பக்கத்தை அயர்ன் செய்ய வேண்டுமானால் எப்போதும் பருத்தி துணியை கம்பளி துணியின் மேல் போடவும்.

    4. ஆடைகள் முழுவதும் இஸ்திரி பெட்டியால் அழுத்தி தேய்க்க வேண்டாம், மெதுவாக அழுத்தவும்.

    இந்த சிறிய குறிப்புகள் உங்கள் ஆடைகளின் ஆயுளை அதிகரிக்கும், எனவே அவற்றைப் பயன்படுத்தி வித்தியாசத்தைப் காணுங்கள்.

    • முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்.
    • பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி.

    சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுப்பது அவசியம்.

    முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

    கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

    பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. அன்றாட உணவுப் பழக்கத்தைச் சரிசெய்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும் லோஷன்களையும் பயன்படுத்தக் கூடாது.

    முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயனத்தன்மை இருக்கிறது. இது சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

    பொடுகுத் தொல்லை,​ நீளமாக நகம் வளர்த்தல்,​ முறையற்ற உணவுப்பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவற்றைத் தனித்தனியாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். முகப்பரு இருப்பவர் பயன்படுத்தும் பொருள்களை மற்றவர் பயன்படுத்தும்போது அவருக்கும் பரவக்கூடும்.

    குளிப்பதற்கு அமிலத்தன்மை மற்றும் அதிக உப்பு இல்லாத சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

    முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி, சுத்தப்படுத்த வேண்டும். ​

    தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையால், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, பருக்கள் வராமல் தடுக்கும்.

    ×