என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தி வந்தால் பருக்கள் மறைந்து விடும்.
    • குங்குமாதி தைலம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது.

    பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியது தான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில் தடவிக்கொண்டு அப்படியே விட்டு விடலாம். காலையில் கழுவிவிடலாம்.

    எண்ணெய் பசையான சருமம் கொண்டவர்கள் குளிப்பதற்கு முன் தடவிக் கொண்டு, சிறிது நேரத்தில் குளித்து விட வேண்டும். குங்குமாதி தைலம் உபயோகிக்கிற போது சோப்பை தவிர்ப்பது நல்லது.

    அதற்கு பதில் எலுமிச்சை தோல், பயத்தம் பருப்பு, கிச்சிலிக்கிழங்கு மூன்றும் சம அளவு சேர்த்து அரைத்த பொடியைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

    இது சருமத்திலுள்ள இறந்தசெல்களையும் நீக்கும். தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தத்தை சுத்திகரிக்கிற டானிக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் சருமம் பளபளக்கும். அசல் குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தினால் முகம், முழு நிலவுபோல மாறும் என்று யோகரத்னகர ஆயுர்வேத நூல் சொல்கிறது.

    குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தி வந்தால் பருக்கள் மறைந்து விடும். இது பருக்களுக்கும், பருக்களால் ஆன கரும்புள்ளிகளுக்கும் மிகச்சிறந்த எதிரியாகும். இந்தத் தைலத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையங்கள் மறைந்து முகத்திற்கு ஒரு நல்ல பிரகாசமான ஒளி கிடைக்கும்.

    உதடு சிவப்பாக மாற குங்குமாதி தைலத்துடன் சில துளி தேங்காய் எண்ணெய் சேர்த்து இரவில் உதட்டில் தடவி வரவேண்டும். காலையில் உதட்டை கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்படுவதை காணலாம்.

    • எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட்டால் முகப்பரு வரும்.
    • கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

    முகம், நெற்றி, தோள்பட்டை மார்பு போன்ற பகுதிகளில் ஏராளமான எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, இவற்றிலிருந்து எண்ணெய் (சீபம்) சுரக்கிறது. இவை வெளியேறும் வழியில் ஏற்படுகின்ற தடையினால் பருக்கள், கட்டிகள் வருகிறது. ஹார்மோன் மாற்றங்கள், பாக்டீரியா தொற்றினாலும் இவை ஏற்படுகின்றன.

    இதற்கு சித்த மருந்துகளில், கடல் சங்கை தண்ணீரில் உரசி முகப்பரு, கட்டி உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிட வேண்டும். இரவு தூங்கும் போது குங்குமாதி லேபம் களிம்பை முகத்தில் பூசவும்.

    முகப்பருக்கள் நீங்க ஐஸ் கட்டி ஒத்திடம் கொடுக்கலாம். ஒரு சிறு ஐஸ்கட்டி எடுத்து அதை ஒரு சுத்தமான துணியில் சுற்றி முகப்பரு உள்ள இடத்தில் ஒற்றி எடுக்கலாம். இப்படி செய்வதால் முகப்பருக்களால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி குறையும்.

    எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து முகப்பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கும்.

    முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவ வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

    • முகப்பருக்களை கிள்ளாதீர்கள்.
    • தூசு மற்றும் மாசு மூலம் சருமப் பொலிவு குறையும்.

     இயல்பான அழகை மேம்படுத்திக்காட்டுவதே மேக்கப். உங்கள் சரும நிறம், முகவடிவம் போன்றவற்றுக்கு தகுந்தவாறு மேக்கப் செய்துகொள்வது, உங்களுடைய தோற்றத்தை சிறப்பாகக் காட்டும்.

     தூசு மற்றும் மாசு மூலம் சருமப் பொலிவு குறையும். எனவே அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். வாரத்துக்கு ஒரு முறை வீட்டிலேயே கடலை மாவு, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் பூசி மென்மையாக தேய்த்துக் கழுவவும். இதன்மூலம் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.

     குறிப்பிட்ட இடைவெளியில் சிறந்த அழகுக்கலை நிபுணர் மூலம் பேசியல் செய்துகொண்டால் முகப்பொலிவை பாதுகாக்கலாம்.

     தொடர்ந்து ஏ.சி அறையில் இருப்பவர்கள் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த சூழலில் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மை குறைந்து வறட்சி அடையும். எனவே சருமத்தில் அவ்வப்போது மாய்ஸ்சுரைசர் பூசிக்கொள்வது நல்லது. போதுமான தண்ணீர் குடிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     முகப்பருக்களை கிள்ளாதீர்கள். இதனால் அவை நிரந்தரமான வடுக்களாக மாறிவிடும். வாரம் ஒரு முறை நீராவி பிடிப்பதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றலாம்.

     அடிக்கடி கோபப்படுவது மற்றும் கவலைகொள்வதால் முகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். எனவே மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

     காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். சருமப்பொலிவுக்கு வைட்டமின் 'சி' மற்றும் 'ஈ' அதிகம் உள்ள உணவுகள் முக்கியமானவை.

     மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது சருமத்தின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

     எவ்வளவு களைப்பாக இருந்தாலும், தூங்கச் செல்வதற்கு முன்பு மேக்கப்பை நீக்கி, இரவு நேர சரும பராமரிப்பை தவறாமல் செய்யுங்கள்.

     முடிந்தவரை இயற்கையான பொருட்களையே சரும பராமரிப்புக்கு பயன்படுத்துங்கள்.

     சிறிதளவு ரோஜா இதழ்கள், புதினா மற்றும் வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். ஆறியபின்பு அந்த நீரை வடிகட்டி ஐஸ் டிரேயில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள். அவ்வப்போது இந்த ஐஸ் கட்டியை முகத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால் முகப்பொலிவு அதிகரிக்கும்.

     ஒளி நிறைந்த கண்கள் அழகை அதிகரிக்கும். இரவு தூக்கம் நிறைவாக இருந்தால் கண்கள் ஒளியோடு இருக்கும். எனவே இரவில் நன்றாகத் தூங்குங்கள்.

    • செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும்.
    • கருவளையத்தை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.

    ஆண்கள் மற்றும் பெண்களில் சிலருக்கு கண்களின் கீழும், கன்னங்களின் இரு பக்கமும் கருவளையம் காணப்படும். இதை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.

    ஜாதிக்காய்-1, கோஷ்டம் சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கும்) இவற்றை நன்றாக பொடித்து அத்துடன், 5 பாதாம் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி சுமார் 2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் வரும் அனைத்துவித கருப்பு, கரும்புள்ளிகள் மாறும்.

    வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும்.

    குங்குமாதிலேபம்: இது சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இரவு நேரத்தில் முகத்தில் பூசி தூங்கலாம். காலையில் முகம் கழுவிடலாம்.

    கேரட், பப்பாளி பழம், தர்பூசணி பழம், மாதுளை, பாதாம், பிளாக்ஸ் விதைகள் சாப்பிட்டு வந்தால் முகம் வசீகரமாகும்.

    • இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.
    • வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

    அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே 'பிளீச்சிங்' எனப்படுகிறது. எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைப் பயன்படுத்தி கருமையை நீக்கி, சரும நிறத்தை பழையபடி கொண்டு வர முடியும். அதைப்பற்றி பார்க்கலாம்.

    ரசாயனக் கலவை கலந்த பிளீச்சிங் பொருட்களுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக புளி இருக்கிறது. இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.

    புளி - ஒரு எலுமிச்சை அளவு

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    அரிசி மாவு - 1 தேக்கரண்டி

    தேன் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரோஜா பன்னீர், தண்ணீர் - தேவையான அளவு

    வெந்நீரில் புளியை ஊறவைத்து அதன் சாற்றை கெட்டியாக பிழிந்தெடுத்துக்கொள்ளவும். பிழிந்த சாறில் அரிசி மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை ரோஜா பன்னீர் கொண்டு நன்றாகத் துடைத்த பின்பு, புளி கலவையை முகம் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

    • சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும்.
    • சொறி, சிவத்தல் போன்ற சரும பிரச்சினைகளை குணப்படுத்தும்.

    உடலுக்கு தேவையான வைட்டமின் டி அளவை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளிக்கு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. அதனால்தான் காலையில் சிறிது நேரமாவது சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் சூரிய குளியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடற்கரை மணலில் படுத்தபடி சூரிய ஒளி உடலில் படுமாறு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்.

    சூரிய குளியல் போலவே சூரிய ஒளி கதிர்கள் ஊடுருவும் நீரை பருகுவதும் பலன் தரும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. சூரிய ஒளி படந்த நீரில் வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடல்நலப் பிரச் சினைகள் மற்றும் சரும பிரச்சினைகளைத் தடுக்கக்கூடியவை. நாள் முழுவதும் உடலில் போதுமான ஆற்றல் இல்லாமல் இருப்பதாக உணர்ந்தால் சூரிய ஒளி ஊடுருவிய குடிநீரை பருகலாம். இது சருமத்திற்கும் சிறந்தது.

    சொறி, சிவத்தல் போன்ற சரும பிரச்சினைகளை குணப்படுத்தும். சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. கண் அல்லது சரும பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், சூரிய ஒளி தண்ணீரில் முகம் கழுவலாம். இந்த நீரில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சரும பிரச்சினைகளைத் தடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    சூரிய ஒளி ஊடுருவும் நீர் முற்றிலும் இயற்கையானது. ஆரோக்கியத்தில் எந்த பக்க விளைவு களையும் ஏற்படுத்தாது என்றாலும், வேறு ஏதேனும் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டால் மருத்துவ ஆலோசனை பெற்று அதன் படி செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    • தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.
    • முடி உதிர்தல், சரும நோய்களுக்கு மனஅழுத்தமும் காரணம்.

    பெண்களுக்கு பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றால் முதலில் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி.

    ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம்.

    சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

    பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகை, தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்தச் சிக்கல்களை எளிமையாக சரிசெய்ய முடியும்.

    முடி உதிர்தல், சரும நோய்கள் என பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தமும் காரணம் என்கிறார்கள். புற உலகம் உருவாக்கும் பதற்றம், மனஅழுத்தம் கூந்தலையும் சருமத்தையும் எப்படி பாதிக்க முடியும்? என கேட்கலாம்.

    பொதுவாகவே சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை. தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.

    உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தெளிவான புரிதலுடன் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்கும்போது அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும் என்கிறார்கள், டாக்டர்கள்.

    • பெண்களுக்கு 'முடி உதிர்வு' பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது.
    • இதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 'அடர்த்தியான கூந்தல்' என்பது பல பெண்களின் ஆசைகளில் ஒன்று. ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, ஊட்டச்சத்து குறைவு போன்ற பல்வேறு காரணங்களால், பெரும்பாலான பெண்களுக்கு 'முடி உதிர்வு' பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது. இதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    முடி உதிர்வு, இயற்கையான நிகழ்வின் ஒரு பகுதியாகும். புதிய முடிகள் வளரும்போது அந்தப் பகுதியில் ஏற்கனவே இருக்கும் முடிகள் உதிர ஆரம்பிக்கும். இவ்வாறு அன்றாடம் 50 முதல் 80 முடிகள் வரை உதிர்வது இயல்பானது. இவற்றைவிட அதிகமாக முடி உதிர்ந்தால், அது கவனிக்க வேண்டிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    உடல் நலக்குறைவு, மரபு ரீதியிலான பிரச்சினைகள், தூக்கமின்மை, மன அழுத்தம், சத்தான உணவு உட்கொள்ளாதது, ஹார்மோன் கோளாறுகள் போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதுமட்டுமில்லாமல், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், புதிதாக பிரசவித்த பெண்கள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், தலை முடிக்கு அழுத்தம், இறுக்கம் தரும் வகையில் சிகை அலங்காரம் செய்துகொள்ளும் பெண்களுக்கும் அதிகமான முடி உதிர்வு ஏற்படும்.

    அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு வழிகள்:

     புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

     இயற்கையாகவே முடியின் வேர்க்கால்களில் இருக்கும் சுரப்பிகள் எண்ணெய்யை சுரக்கும். இருந்தாலும் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் பூசுவது நல்லது.

     அடிக்கடி தலை வாரினால் முடிகள் உடைவதுடன் அடர்த்தியும் குறையும். நீங்கள் உபயோகிக்கும் சீப்பு, துண்டு, தலையணை உறை போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும். ஈரமான தலைமுடியை சீப்பு கொண்டு வாருவது கூடாது.

     வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். சருமத்தைப் போலவே தலைமுடியும் புறஊதாக் கதிர்கள் மற்றும் வாகன மாசுக்களால் பாதிக்கப்படும். எனவே அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

     மன அழுத்தம் அல்லது கர்ப்பம் போன்றவற்றால் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் முடி உதிர்வு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு தானாகவே நின்றுவிடும்.

     இறுக்கமான ஜடை, போனிடெயில் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தும் சிகை அலங்கார முறைகளை தவிர்த்தால், முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.

    • டாட்டூ வரைந்து கொள்ளும் பழக்கம், இளம் வயதினர் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
    • டாட்டூ கலை, முன்பை விட இப்போது ரொம்பவே முன்னேறிவிட்டது.

    இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்பும் விஷயங்களில், 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்துதலும் ஒன்று. ஸ்டைலுக்காக டாட்டூ போடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருந்தாலும், அதை சிலர் உற்சாக காரணியாகவும் பார்க்கிறார்கள். அதனால்தான், நிறைய இளைஞர்கள் கை, கழுத்து, முதுகு, நெஞ்சு போன்ற உடல் பகுதிகளில், டாட்டூ போட்டுக்கொள்கிறார்கள்.

    இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி இருக்கும் டாட்டூ மோகத்தை விரிவாக தெரிந்து கொள்ளவும், 'டாட்டூ' கலையில் மேம்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களை பற்றி அறிந்து கொள்ளவும், சென்னையைச் சேர்ந்த 'டாட்டூ' கலைஞர் லீலா மதியை சந்தித்தோம்.

    பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கும் இவர், இளைஞர்களின் டாட்டூ மோகத்தை அறிந்து டாட்டூ கலைஞராக மாறி, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக புதுமையான டாட்டூக்களை வரைந்து வருகிறார். இவர் டாட்டூ குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

    * டாட்டூ வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

    என்னுடைய குடும்பத்திற்கும், ஓவிய கலைக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதால், என்னால் வெகு சுலபமாக ஓவியம் வரைய முடிந்தது. அந்த கலையை எப்படி டிரெண்டாக மேம்படுத்தலாம் என்ற யோசனையில்தான், பட்டப் படிப்பை படித்திருந்தும் கூட, சிறப்பு பயிற்சிகள் வாயிலாக, டாட்டூ கலைஞராக மாறினேன். ஏனெனில், இனிவரும் காலங்களில், டாட்டூ கலைக்கு, அதீத வரவேற்பு இருக்கும்.

    * சமீபகாலமாக டாட்டூ மீதான மோகம், அதிகரித்திருப்பது ஏன்?

    நம்முடைய தாத்தா-பாட்டி காலத்தில், பச்சை குத்தும் பழக்கம் ரொம்பவே அதிகமாக இருந்தது. ஆனால் நம்முடைய அப்பா-அம்மா காலத்தில், டாட்டூ கலாசாரத்திற்கு பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு அரசு வேலையும், ராணுவ பணியும்கூட ஒரு காரண மாக இருக்கலாம். ஆனால் இன்றைய தலை முறையினர், எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்குள்ளும் அடங்காமல், அவர்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே, டாட்டூ கலாசாரம் எதிர்பார்க்காத வகையில் வளர்ந்திருக்கிறது. மேலும், இளைஞர்கள்-இளம் பெண்களின் ஹீரோவாக திகழும் நடிகர்-நடிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் போன்றோரும் டாட்டூ கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, உடல் முழுக்க டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது தாக்கத்தினாலும், டாட்டூ வரைந்து கொள்ளும் பழக்கம், இளம் வயதினர் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

    * இந்தியாவில் டாட்டூ மோகம் எந்த அளவிற்கு இருக்கிறது?

    நம்முடைய இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 65 சதவிகித மக்கள் டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார்கள்.

    * அன்றும், இன்றும் டாட்டூ எப்படி மாறுபடுகிறது?

    டாட்டூ கலை, முன்பை விட இப்போது ரொம்பவே முன்னேறிவிட்டது. பச்சை நிறத்தில் மட்டுமல்ல, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணங்களில், 'டாட்டூ' வரைந்து கொள்வதற்கு ஏற்ப அதன் தொழில்நுட்பம் முன்னேறி இருக்கிறது. உலக நாடுகளில், வண்ண மைகளில் டாட்டூ வரைய அதிக வரவேற்பு இருக்கிறது. நம் இந்தியாவின், மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு பகுதிகளிலும், வண்ண மைகள் புழக்கத்தில் இருக்கின்றன. அதேபோல, தற்போது பயன்படுத்தப்படும் டாட்டூ மை, மிகவும் ஆரோக்கியமானது; பாதுகாப்பானது. ஐசோ பிரோபைல் ஆல்கஹால் இதில் இருப்பதால், நோய் தொற்றுகள் பரவும் அபாயம் மிகக் குறைவு.

    மேலும் டாட்டூ வரைய உதவும் கருவிகளும் டிஜிட்டல் முறையில் முன்னேறிவிட்டன. டாட்டூ கலைஞர்களுக்கு சவுகரியமான வகையில் கையடக்கமான பல கருவிகள், மார்க்கெட்டில் இருக்கின்றன. இவை முன்பு போல அதிகம் வலியில்லாமல் டாட்டூ வரைய வழிகாட்டுகின்றன.

    * முன்பெல்லாம் பெயர்களை பச்சை குத்துவது டிரெண்டாக இருந்தது. இப்போது என்ன டிரெண்டாக இருக்கிறது?

    பெற்றோரின் பெயர், கணவன்-மனைவி பெயர், குழந்தைகளின் பெயர்களை டாட்டூ போடுவது, எவர்கிரீன் டிரெண்ட். அதேபோல, பிறந்த தேதி, திருமண தேதி, காதலை வெளிப்படுத்திய தேதி, குழந்தை பிறந்த தேதி, பெற்றோரின் ஓவியம் ஆகியவற்றை டாட்டூ போடும் பழக்கமும் நடை முறையில் இருக்கிறது. ஆனால் பேஷன் துறையில் இருப்பவர்கள், உடல் முழுக்க ஓவியங்களை வரைந்து கொள்வார்கள். அதில் தங்களுக்கு பிடித்தமான தெய்வங்களின் ஓவியங்கள் தொடங்கி, அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய ஓவிய காட்சிகளை வரையச் சொல்வார்கள். ஒருசிலர், பழங்குடியின அடையாளங்களை, டாட்டூவாக உடலில் வரைந்து கொள்வதுண்டு.

    * அழகு என்பதை தாண்டி வேறு ஏதாவது வகையிலும் டாட்டூ பயன்படுகிறதா?

    ஆம்..! விபத்துகளில் சிக்கியவர்களின் உடலில் மறையாமல் இருக்கும் வடுக்களை, டாட்டூ மூலமாக மறைப்பது உண்டு. அதேபோல, வெண் குஷ்டம் நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள்கூட, டாட்டூ மூலமாக முகப்பொலிவை மெருகேற்றுகிறார்கள்.

    * டாட்டூ மோகம் யாரிடம் அதிகமாக இருக்கிறது?

    இளம் வயதினர், டாட்டு போடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். குறிப்பாக, பெண்கள் ரொம்பவே தீவிரமாக இருக்கிறார்கள்.

    * டாட்டூ வரைந்த பிறகு அழிக்க முடியுமா?

    முடியும். ஆனால், அதற்கு காஸ்மெட்டாலஜி மருத்துவரை அனுக வேண்டியிருக்கும். அவர் மூலமாகத்தான், லேசர் முறையில் டாட்டூக்களை அகற்ற வேண்டும். அவை, நிறமிழக்க சில காலங்கள் தேவைப்படும்.

    * டாட்டூவை போன்று, வேறு என்ன டிரெண்ட் ஆகிறது?

    மேற்கத்திய பேஷன் கலாசாரங்களில், பியர்ஸிங் என்பதும் ரொம்ப பிரபலம். அதாவது காது, மூக்கு குத்தி கொள்வதை போல, உதடு, கண் புருவம், காதுகளின் மேல் பகுதிகளில் வளையம் போடும் 'பியர்ஸிங்' கலாசாரமும், தமிழகத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அடுத்த 2 வருடங்களில், நிறைய இளம் வயதினரை 'பியர்ஸிங்' பேஷனில் பார்க்க இருக்கிறோம்.

    * டாட்டூ வரைய நினைப்பவர்கள், எந்தெந்த விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்?

    சுத்தமான, முன் அனுபவம் உள்ள ஸ்டூடியோக்களை தேர்ந்தெடுப்பது நல்லது. டாட்டூ வரைய உதவும் ஊசிகளை மாற்றுகிறார்களா?, ரத்த சிதறல்கள் தெறிக்காமல் இருக்க பிளாஸ்டிக் ஷீட் மூலம் 'ராப்' செய்கிறார்களா? என்பதை எல்லாம் சோதித்த பிறகே, டாட்டூ போட வேண்டும்.

    • 50 வயதை எட்டுபவர்களின் சருமத்தில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்.
    • தூக்கமின்மை, மன அழுத்தம் காரணத்தால் முன்கூட்டியே முதுமை ஏற்படலாம்.

    வயது அதிகரிக்கும்போது பல்வேறு மாற்றங்களை உடல் எதிர்கொள்ளும். மனதும் கூட மாற்றத்திற்கு தன்னை தயார் படுத்திக்கொள்ளும். ஆனால் பலர் இளமை காலத்திலேயே முன்கூட்டியே வயதான தோற்றத்திற்கு மாறிவிடுகிறார்கள். மரபியல் காரணங்கள், சூரியக்கதிர்களின் ஆதிக்கம், புகைப் பிடித்தல் போன்றவை அவற்றுக்கு காரணமாக அமையலாம். எனினும் சரும பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் முன்கூட்டியே முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுத்துவிடலாம். ஆரம்ப நிலையிலேயே ஒருசில அறிகுறிகளை கவனித்து அவற்றை கட்டுப்படுத்தினால் போதுமானது.

    சரும வறட்சி மற்றும் சரும அரிப்பு போன்றவை முன்கூட்டியே வயதான தோற்றத்துக்கு வழிவகுக்கும் பொதுவான காரணங்கள். சருமத்தில் இறந்த செல்கள் அகற்றப்படாமல் நீண்ட நாட்கள் படர்ந்திருக்கும்போது இந்த பிரச்சினை எழும். அப்படி சருமத்தின் மேற்பரப்பில் இறந்த செல்கள் நீக்கப்படாமல் இருக்கும்போது சருமத்தின் பளபளப்பு தன்மையும் மங்கி போய்விடும்.

    பெரும்பாலும் 50 வயதை எட்டுபவர்களின் சருமத்தில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். முகம் மட்டுமின்றி கை, கால்களிலும் இந்த புள்ளிகள் தென்படும். சூரிய ஒளிக்கதிர்கள் பல ஆண்டுகளாக சருமத்தை பாதிக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படும்.

    நடக்கும்போது வழக்கமாக எடுத்து வைக்கும் நடையின் வேகம் குறைந்து விடுவதும் முன்கூட்டியே வயதான தோற்றத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். மெதுவாக நடக்கும் நடுத்தர வயதினர் முன்கூட்டியே வயதான தோற்றத்திற்கு மாற வாய்ப்புள்ளதாக ஆய்வுகளும் கூறுகின்றன.

    வயதாகும்போது சரும வடிவத்தை பராமரிக்க உதவும் புரத பொருளான கொலாஜன் உற்பத்தி குறையும். இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் மற்றும் தசையில் தளர்ச்சி ஏற்படும். தூக்கமின்மை, மன அழுத்தம், வாழ்நாள் முழுவதும் சூரிய ஒளி படும்படியான இடத்தில் வேலை பார்ப்பது போன்ற காரணங்களாலும் முன்கூட்டியே முதுமை ஏற்படலாம்.

    மற்ற உடல் பாகங்களை விட கைகள்தான் மிக விரைவாக வயதான தோற்றத்திற்கு மாறுகின்றன. ஏனெனில் அவைதான் சூரியனின் பாதிப்புக்கு அதிகம் ஆளாகின்றன. தொடர்ச்சியாக சருமத்தில் புற ஊதா கதிர்கள் தாக்கும்போது சருமத்தில் உள்ள எலாஸ்டின் என்னும் புரதப் பொருள் சேதமடையக்கூடும். இதன் விளைவாக சுருக்கங்கள், கையில் நிறமாற்றம் ஏற்படும். இத்தகைய அறிகுறிகளை கவனத்தில் கொண்டு சரும பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    • 'லட்கான்', பல்வேறு ரகங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கிறது.
    • இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும்.

    லெகெங்கா, சுடிதார், குர்த்தி, பிளவுஸ், பாவாடை என அனைத்து விதமான ஆடைகளிலும் லட்கானைத் தொங்க விட்டு அலங்கரிக்கிறார்கள். பெண்கள் ஜடையில் சூடிக்கொள்ளும் 'குஞ்சம்' போன்ற அமைப்பில் இருக்கும் 'லட்கான்', பல்வேறு ரகங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கிறது. இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே…

    தேவையான பொருட்கள்: துணி, ஊசி, நூல், சில்க் கயிறு, அளவுகோல், கத்தரிக்கோல்.

    செய்முறை: துணியில் 2x2 அங்குல நீள அகலத்தில் இரண்டு துண்டுகள் வெட்டிக்கொள்ளவும். அதனைப் பாதியாக மடித்து இரண்டு எதிரெதிர் முனைகளை ஒன்றாகத் தைக்கவும். அதில் ஒரு முனை மட்டும் திறந்து இருக்கும்படி செய்யவும். இப்போது சில்க் கயிற்றின் முனையில் முடிச்சு போடவும். தைத்து வைத்திருக்கும் துணிக்கு உள்ளே கயிற்றை நுழைத்து பின்பு வெளியே எடுத்து துணியைத் திருப்பவும். பிறகு திறந்திருக்கும் மற்றொரு முனையையும் ஊசி நூல் கொண்டு தைக்கவும். இதேபோல் மற்றொரு சில்க் கயிற்றிலும் செய்யவும்.

    அடுத்ததாக, துணியில் 4x4 அங்குல நீள அகலத்தில் 16 துண்டுகள் வெட்டிக்கொள்ளவும். சதுர வடிவ துணியின் ஒரு முனையை அதன் எதிர் முனையுடன் வைத்து மடித்தால் முக்கோண வடிவம் கிடைக்கும். அதைப் பக்கவாட்டில் மடித்தால், சிறிய அளவிலான முக்கோண வடிவ துணி கிடைக்கும். இப்போது முக்கோணத்தின் அடிப்பகுதியில் உள்ள துணிகளை ஒன்றாக வைத்து தைக்கவும். இதேபோல் 16 துண்டு துணிகளையும் தைக்க வேண்டும். பின்னர், முக்கோண துணிகளை உள்ளிருந்து வெளியே திருப்பிக்கொள்ளவும். சில்க் கயிற்றில் ஏற்கனவே தைத்த சதுர வடிவ துணிக்கு கீழே எதிர் எதிர் முனையில் முக்கோண துணி துண்டுகளை வைத்து தைக்கவும். ஒரு கயிற்றில் எட்டு முக்கோண துணிகளைத் தைக்கலாம். மற்றொரு கயிற்றில் எட்டு முக்கோண துணிகளை எதிர் எதிர் திசையில் ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து தைத்தால் அழகான 'லட்கான்' தயார்.

    குறிப்பு: லட்கானில் உங்களின் கற்பனைக்கு ஏற்ப மணிகள், கற்கள், கண்ணாடிகள், பாசிகள், நூல் துண்டுகள் போன்றவற்றைச் சேர்த்து அலங்கரிக்கலாம்.

    • தளர்ந்த சருமம் இறுக்கம் அடையும்.
    • சுருக்கங்கள் மறையும்.

    சரும பராமரிப்புக்கு ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டாகும். வேலைப்பளு, அலைச்சல் போன்ற காரணங்களால் உடலும், மனமும் சோர்ந்து இருக்கும்போது ஐஸ் கட்டியை முகத்தில் மென்மையாகத் தேய்த்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

    தக்காளி, உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, கற்றாழை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் சாறை ஐஸ் டிரேயில் நிரப்பி, கட்டியாக மாற்றியும் பயன்படுத்தலாம். இதனால் ஏற்படும் பயன்களை தெரிந்துகொள்வோம்.

    சருமப் பொலிவு அதிகரிக்கும்:

    வெயில், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால், முகத்தில் அழுக்குப் படிந்து பொலிவு குறையும். ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் சீராகி சருமத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்; முகம் பளபளக்கும்.

    சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கும் ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம். பாலை, ஐஸ் டிரேயில் ஊற்றி உறைய வைத்து, அந்த ஐஸ் கட்டியை மென்மையாக முகத்தில் தேய்க்கலாம். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம், இறந்த செல்களை நீக்கி சருமத்தின் இயற்கையான பொலிவை அதிகரிக்கும்.

    பேஸ் பேக், பேஸ் மாஸ்க் போன்றவற்றை முகத்தில் தடவுவதற்கு முன்பு, ஐஸ் கட்டியால் சருமத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். இதனால் தோலின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

    கரு வளையம் நீங்கும்:

    கண்களுக்குக் கீழ் உருவாகும் கருவளையம் முகத்தின் அழகைக் கெடுக்கும். ரோஜா பன்னீர், வெள்ளரிச் சாறு இரண்டையும் கலந்து ஐஸ் டிரேயில் உறைய வைக்கவும். இந்த ஐஸ் கட்டியை கண்களைச் சுற்றிலும் மென்மையாகத் தடவி வந்தால் விரைவில் கரு வளையம் நீங்கும். அதிக வேலைப்பளுவால் ஏற்படும் கண் சோர்வுக்கு இது சிறந்த நிவாரணி. ஐஸ் கட்டியை கண்களின் உள் மூலையில் இருந்து, புருவங்களை நோக்கி வட்ட வடிவ இயக்கத்தில் தடவ வேண்டும். இதனால் கண்கள் புத்துணர்ச்சி அடையும்.

    முகப்பருவைக் குறைக்கும்:

    ஐஸ் கட்டியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு, முகத்தில் வரும் பருக்களைப் போக்கும். இதைத் தொடர்ந்து தடவி வரும்போது, சருமத்தில் அதிகமான எண்ணெய் உற்பத்தி கட்டுப்படும். சருமத் துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும். தளர்ந்த சருமம் இறுக்கம் அடையும். சுருக்கங்கள் மறையும்.

    உதடுகள் மென்மையாகும்:

    வறட்சியால், வெடிப்பு ஏற்பட்டு உதடுகள் உலர்ந்து இருக்கும். ஐஸ் கட்டியை உதட்டின் மீது மென்மையாகத் தடவி வந்தால், சருமம் நீரேற்றம் அடைந்து மென்மையாகும்.

    ×