search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    இளைய தலைமுறையை ஈர்க்கும் டாட்டூ கலாசாரம்
    X

    இளைய தலைமுறையை ஈர்க்கும் 'டாட்டூ' கலாசாரம்

    • டாட்டூ வரைந்து கொள்ளும் பழக்கம், இளம் வயதினர் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
    • டாட்டூ கலை, முன்பை விட இப்போது ரொம்பவே முன்னேறிவிட்டது.

    இன்றைய இளைஞர்கள் அதிகம் விரும்பும் விஷயங்களில், 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்துதலும் ஒன்று. ஸ்டைலுக்காக டாட்டூ போடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருந்தாலும், அதை சிலர் உற்சாக காரணியாகவும் பார்க்கிறார்கள். அதனால்தான், நிறைய இளைஞர்கள் கை, கழுத்து, முதுகு, நெஞ்சு போன்ற உடல் பகுதிகளில், டாட்டூ போட்டுக்கொள்கிறார்கள்.

    இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி இருக்கும் டாட்டூ மோகத்தை விரிவாக தெரிந்து கொள்ளவும், 'டாட்டூ' கலையில் மேம்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களை பற்றி அறிந்து கொள்ளவும், சென்னையைச் சேர்ந்த 'டாட்டூ' கலைஞர் லீலா மதியை சந்தித்தோம்.

    பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கும் இவர், இளைஞர்களின் டாட்டூ மோகத்தை அறிந்து டாட்டூ கலைஞராக மாறி, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக புதுமையான டாட்டூக்களை வரைந்து வருகிறார். இவர் டாட்டூ குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

    * டாட்டூ வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

    என்னுடைய குடும்பத்திற்கும், ஓவிய கலைக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதால், என்னால் வெகு சுலபமாக ஓவியம் வரைய முடிந்தது. அந்த கலையை எப்படி டிரெண்டாக மேம்படுத்தலாம் என்ற யோசனையில்தான், பட்டப் படிப்பை படித்திருந்தும் கூட, சிறப்பு பயிற்சிகள் வாயிலாக, டாட்டூ கலைஞராக மாறினேன். ஏனெனில், இனிவரும் காலங்களில், டாட்டூ கலைக்கு, அதீத வரவேற்பு இருக்கும்.

    * சமீபகாலமாக டாட்டூ மீதான மோகம், அதிகரித்திருப்பது ஏன்?

    நம்முடைய தாத்தா-பாட்டி காலத்தில், பச்சை குத்தும் பழக்கம் ரொம்பவே அதிகமாக இருந்தது. ஆனால் நம்முடைய அப்பா-அம்மா காலத்தில், டாட்டூ கலாசாரத்திற்கு பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு அரசு வேலையும், ராணுவ பணியும்கூட ஒரு காரண மாக இருக்கலாம். ஆனால் இன்றைய தலை முறையினர், எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்குள்ளும் அடங்காமல், அவர்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே, டாட்டூ கலாசாரம் எதிர்பார்க்காத வகையில் வளர்ந்திருக்கிறது. மேலும், இளைஞர்கள்-இளம் பெண்களின் ஹீரோவாக திகழும் நடிகர்-நடிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் போன்றோரும் டாட்டூ கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, உடல் முழுக்க டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது தாக்கத்தினாலும், டாட்டூ வரைந்து கொள்ளும் பழக்கம், இளம் வயதினர் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

    * இந்தியாவில் டாட்டூ மோகம் எந்த அளவிற்கு இருக்கிறது?

    நம்முடைய இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 65 சதவிகித மக்கள் டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார்கள்.

    * அன்றும், இன்றும் டாட்டூ எப்படி மாறுபடுகிறது?

    டாட்டூ கலை, முன்பை விட இப்போது ரொம்பவே முன்னேறிவிட்டது. பச்சை நிறத்தில் மட்டுமல்ல, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணங்களில், 'டாட்டூ' வரைந்து கொள்வதற்கு ஏற்ப அதன் தொழில்நுட்பம் முன்னேறி இருக்கிறது. உலக நாடுகளில், வண்ண மைகளில் டாட்டூ வரைய அதிக வரவேற்பு இருக்கிறது. நம் இந்தியாவின், மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு பகுதிகளிலும், வண்ண மைகள் புழக்கத்தில் இருக்கின்றன. அதேபோல, தற்போது பயன்படுத்தப்படும் டாட்டூ மை, மிகவும் ஆரோக்கியமானது; பாதுகாப்பானது. ஐசோ பிரோபைல் ஆல்கஹால் இதில் இருப்பதால், நோய் தொற்றுகள் பரவும் அபாயம் மிகக் குறைவு.

    மேலும் டாட்டூ வரைய உதவும் கருவிகளும் டிஜிட்டல் முறையில் முன்னேறிவிட்டன. டாட்டூ கலைஞர்களுக்கு சவுகரியமான வகையில் கையடக்கமான பல கருவிகள், மார்க்கெட்டில் இருக்கின்றன. இவை முன்பு போல அதிகம் வலியில்லாமல் டாட்டூ வரைய வழிகாட்டுகின்றன.

    * முன்பெல்லாம் பெயர்களை பச்சை குத்துவது டிரெண்டாக இருந்தது. இப்போது என்ன டிரெண்டாக இருக்கிறது?

    பெற்றோரின் பெயர், கணவன்-மனைவி பெயர், குழந்தைகளின் பெயர்களை டாட்டூ போடுவது, எவர்கிரீன் டிரெண்ட். அதேபோல, பிறந்த தேதி, திருமண தேதி, காதலை வெளிப்படுத்திய தேதி, குழந்தை பிறந்த தேதி, பெற்றோரின் ஓவியம் ஆகியவற்றை டாட்டூ போடும் பழக்கமும் நடை முறையில் இருக்கிறது. ஆனால் பேஷன் துறையில் இருப்பவர்கள், உடல் முழுக்க ஓவியங்களை வரைந்து கொள்வார்கள். அதில் தங்களுக்கு பிடித்தமான தெய்வங்களின் ஓவியங்கள் தொடங்கி, அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய ஓவிய காட்சிகளை வரையச் சொல்வார்கள். ஒருசிலர், பழங்குடியின அடையாளங்களை, டாட்டூவாக உடலில் வரைந்து கொள்வதுண்டு.

    * அழகு என்பதை தாண்டி வேறு ஏதாவது வகையிலும் டாட்டூ பயன்படுகிறதா?

    ஆம்..! விபத்துகளில் சிக்கியவர்களின் உடலில் மறையாமல் இருக்கும் வடுக்களை, டாட்டூ மூலமாக மறைப்பது உண்டு. அதேபோல, வெண் குஷ்டம் நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள்கூட, டாட்டூ மூலமாக முகப்பொலிவை மெருகேற்றுகிறார்கள்.

    * டாட்டூ மோகம் யாரிடம் அதிகமாக இருக்கிறது?

    இளம் வயதினர், டாட்டு போடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். குறிப்பாக, பெண்கள் ரொம்பவே தீவிரமாக இருக்கிறார்கள்.

    * டாட்டூ வரைந்த பிறகு அழிக்க முடியுமா?

    முடியும். ஆனால், அதற்கு காஸ்மெட்டாலஜி மருத்துவரை அனுக வேண்டியிருக்கும். அவர் மூலமாகத்தான், லேசர் முறையில் டாட்டூக்களை அகற்ற வேண்டும். அவை, நிறமிழக்க சில காலங்கள் தேவைப்படும்.

    * டாட்டூவை போன்று, வேறு என்ன டிரெண்ட் ஆகிறது?

    மேற்கத்திய பேஷன் கலாசாரங்களில், பியர்ஸிங் என்பதும் ரொம்ப பிரபலம். அதாவது காது, மூக்கு குத்தி கொள்வதை போல, உதடு, கண் புருவம், காதுகளின் மேல் பகுதிகளில் வளையம் போடும் 'பியர்ஸிங்' கலாசாரமும், தமிழகத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அடுத்த 2 வருடங்களில், நிறைய இளம் வயதினரை 'பியர்ஸிங்' பேஷனில் பார்க்க இருக்கிறோம்.

    * டாட்டூ வரைய நினைப்பவர்கள், எந்தெந்த விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்?

    சுத்தமான, முன் அனுபவம் உள்ள ஸ்டூடியோக்களை தேர்ந்தெடுப்பது நல்லது. டாட்டூ வரைய உதவும் ஊசிகளை மாற்றுகிறார்களா?, ரத்த சிதறல்கள் தெறிக்காமல் இருக்க பிளாஸ்டிக் ஷீட் மூலம் 'ராப்' செய்கிறார்களா? என்பதை எல்லாம் சோதித்த பிறகே, டாட்டூ போட வேண்டும்.

    Next Story
    ×