என் மலர்
அழகுக் குறிப்புகள்
- இதனைத் தினமும் இரவு செய்யலாம்.
- சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன.
ஜோஜோபா எண்ணெயில் (Jojoba Oil ) அழற்சி எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால் சோர்வடைந்த உங்கள் கண்களைப் புத்துயிர் பெறச் செய்யும். அவோகேடாவில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ ஆகியவை நிறைந்து இருப்பதால் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தினை மென்மையாக வைக்கிறது. அப்ரிகாட் கர்னல் எண்ணெயில் வைட்டமின் ஏ, ஓலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளதால் சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன. அத்துடன் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்துவதால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை நீரேற்றத்துடன் வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
ஜோஜோபா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டியளவு
அப்ரிகாட் கர்னல் எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு
அவோகேடா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு
4 எண்ணெய்களையும் எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம்.
கண் சுருக்கங்கள்
ஆரஞ்சு பழத்தின் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால் கண்களில் ஏற்பட்ட சுருக்கத்தினை சரி செய்ய உதவுகிறது. வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் கண்களின் தோற்றத்தினை மேம்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர், 3 முதல் 4 துளி வேப்ப எண்ணெய் எடுத்து ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.
- சரும நிபுணர்கள் ஹேர் கலரிங் செய்வது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார்கள்.
- அவ்வப்போது மாறும் கூந்தல் கலர்கள் தான் அழகு என்று உலாவருகிறார்கள்.
கூந்தலுக்கு மணம் இருக்கா இல்லையா என்பதெல்லாம் பழைய காலச்சாரம். கூந்தலுக்கு என்ன கலர் அடிக்கலாம் என்பதே லேட்டஸ்ட் ஃபேஷனாக இருக்கிறது. அடர்ந்த கருங்கூந்தல் தான் பெண்களுக்கு அழகு என்று சொல்வார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல. அவ்வப்போது மாறும் கூந்தல் கலர்கள் தான் அழகு என்று உலாவருகிறார்கள்.
இயற்கையில் அழகு நிறைந்த கறுப்பு கூந்தல் தான் வயது ஆகும் போது வெள்ளி மின்னல் கீற்றுகளாய் வெள்ளை நிறமாய் மாறுகிறது. இயற்கையை இயற்கையாக ஏற்றுக்கொள்ளும் வரை உடலுக்கு எவ்வித பிரச்னைகளும் இல்லை. ஆனால் அழகுபடுத்துகிறேன் என்று ஆரஞ்சு, பிர வுன் கலர்களைப் பூசிக்கொள்ளும் போது கூந்தலின் அழகும் ஆரோக்யமும் கெட்டுவிடுகிறது என்பது தான் சரியாக இருக்கும்.
சரும நிபுணர்கள் ஹேர் கலரிங் செய்வது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார்கள். அழகில் ஆபத்து நிறைந்திருந்தாலும் அழகு தேவை என்பதே பல பெண்களின் விருப்பமாக இருக்கிறது. பொதுவாக இளநரை, அல்லது குறைந்த வயதில் முடி நரைத்துப் போனவர்கள் ஹேர் டை உப யோகிப்பார்கள். அவர்களும் தரமற்ற டைகளை உபயோகிப்பதன் மூலம் நரை மேலும் அதிகமாகவே செய்யும். இது ஒரு புறம் இருக்க இன்றைய இளம் தலைமுறையினர் இருபாலரும் கலரிங் செய்து கொள்வதை ஹாபியாக வைத்திருக்கிறார்கள்.
ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது நீண்ட நாட்கள் என்று அவர்களது விருப்பத்துக்கேற்றவாறு அழகு நிலையங்கள் செல்கிறார்கள். இந்தக் கலர்களை உண்டாக்கும் சாயங்கள் உடலுக்குள் பல்வேறு கேடுகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் சரும நிபுணர்கள். ஹேர் கலரிங் செய்யலாம். ஆனால் கூந்தலின் நிறத்திலிருந்து அதிக வேறுபாடு இல்லாமல் இலேசான மாற்றம் செய்யலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
வித்தியாசமான கலரிங் செய்யும் போது கூந்தல் வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். கூந்தலின் வளர்ச்சி தடுக்கப்படும். சிலருக்கு சாயங்களின் ஒவ்வாமை நாளடைவில் கண்களிலும் பிரச்னைகளை உண்டாக்கிவிடும். சருமம் சம்பந்தமான உபாதைகளும் உண்டா கும் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
- வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம்.
- மணப்பெண்கள் சருமப் பராமரிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண்கள் அனைவரும் சந்தோஷம், பரபரப்பு, எதிர்பார்ப்பு, குழப்பம் என பல்வேறு உணர்வுகள் கலந்த மனநிலையில் இருப்பார்கள். மேலும் திருமணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் அலைச்சல் மற்றும் பணிச்சுமை ஆகியவையும் சிரமத்தை தரும். இந்த பாதிப்புகள் அவர்களின் சருமத்தில் பிரதிபலிக்கக்கூடும். எனவே, 3 மாதத்திற்கு முன்பாகவே, சருமப் பராமரிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
இதோ சில சரும பராமரிப்பு முறைகள்:
சருமப் பராமரிப்பில் முதலில் செய்ய வேண்டியது, நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் ஆகும். இதன் மூலம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் கழிவுகள் வெளியேறி சருமம் பொலிவு பெறும்.
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்.
வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம். காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தில் மென்மையாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். தண்ணீரில் ஊற வைத்தக் கொண்டைக்கடலையுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கொரகொரப்பாக அரைத்து, அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் இறந்த செல்கள் அகன்று புதிய செல்கள் உருவாகி சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
கண்ணுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது அவசியம். இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் முக்கியமானது. கூடுதலாக 'ஐ கிரீம்' பயன்படுத்தலாம் அல்லது கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி உள்ள சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இது கருவளையங்கள் நீங்கி கண்கள் பளிச்சிட உதவும். திருமணம் நெருங்கும் நாட்களில், சரும பராமரிப்பு முறைகள் மற்றும் மேக்கப் போன்றவற்றில் எதையும் புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டாம். சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தால், 3 மாதத்திற்கு முன்பாகவே பயன்படுத்த ஆரம்பிப்பது நல்லது.
- காலம் கடந்தும் இதன் கலைநயம் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
- பார்ப்பதற்கு அழகாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும் குந்தன் காரி.
கலைநயம் மிக்க நகைகளை அனைவரும் விரும்புவர். பழமையான நகைகளில் அக்காலத்து கலைநயம் மிகுந்து காணப்படும். அவற்றின் நிறங்களும் தனித்துவமான தன்மையும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். பல்வேறு காலகட்டங்களில் பல வகையான கலைநயம் மிக்க நகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில இன்றளவும் மிகவும் பிரபலமாக உள்ளன. அவற்றை காண்போம்.
தாராகாஷி
இந்த வகையான கலைநயம் மிகுந்த நகை வகை 1500 களில் ஒரிசாவில் வளர்ச்சி அடைந்தது. இது கிரேக்க பிலிகரி வேலைபாட்டின் மாற்றி அமைக்கப்பட்ட வடிவமாகும். இயற்கையில் உள்ள வடிவங்களை இது பிரதிபலிக்கின்றது. தாராகாஷி நகைகள் தாவர மற்றும் உயிரினங்களின் வடிவங்களை கொண்டு வடிவமைக்கப்படும். மெல்லிய வெள்ளி கம்பிகளால் இந்த நகைகள் செய்யப்படும். பொதுவாக வட்ட வடிவத்தில் மையப்பகுதி இருக்கும். இவை நெக்லஸ், இடுப்பு மற்றும் கைகளில் அணியும் ஆபரணமாக பயன்படுத்தப்பட்டது. தற்போது மோதிரங்கள், காதணிகள், கால்கொலுசு, போன்ற ஆபரணங்கள் பெண்களிடம் மிகப் பிரபலமாக உள்ளது. காலம் கடந்தும் இதன் கலைநயம் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
தேவா
தேவா பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கலைநயம் மிக்க நகை ஆகும். இன்றளவும் ராஜஸ்தான் குஜராத் போன்ற இடங்களில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. 23 கேரட் தங்கத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது மிகச் சிறப்பான மணிகளும் பதக்கங்களும் இணைத்து ஆரம் போல் செய்யப்பட்டிருக்கும். இதை உருவாக்கியவர் பிரதாப் காரியா நட்டுலால் சோனியாவால் என்ற பொற்கொல்லர் ஆவார். மகாராஜா சுமன் சிங் இந்த நகையை கவனித்தார். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் காலத்தில் இந்த கலைநயம் மிகவும் வளர்ச்சி அடைந்தது. இந்தப் பதக்கங்களில் உள்ள கலைநயம் மனதைக் கவரும் வகையில் இருக்கின்றது.
பச்சிகம்
பச்சிகம் குஜராத் மாநிலத்தில் கட்ச் என்ற ஊரில் உருவானது. குஜராத்தி மொழியில் பச்சிகர் என்றால் பொற்கொல்லர் என்று பெயர். அந்த பெயரில் இருந்து பச்சிகம் என்று பெயர் பெற்றது. இது பிளாட்டினம் மற்றும் வெள்ளி உலோகங்களால் தயாரிக்கப்படுவது. பொதுவாக கண்ணாடி மணிகள் விலை குறைந்த கற்கள் இவற்றைக் கொண்டு கலைநயத்தோடு பச்சிகம் உருவாக்கப்படுகிறது. மோதிரங்கள் வளையல்கள், கொலுசு, காதணிகள், நெத்திச்சுட்டி மற்றும் நெக்லஸ் போன்ற பல வகையான நகைகள் செய்யப்படுகின்றது இவற்றில் பதித்த கண்ணாடி மணிகள் மற்றும் அதன் அமைப்பும் கண்களை பறிக்கும் வண்ணம் சிறப்பாக இருக்கும்.
மீனாகாரி
மீனாகாரி ராஜா மான்சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எனாமல் கொண்டு செய்யப்படும் நகையாகும். இதை செய்வது சற்று கடினமானது. இந்த நகையை வடிவமைக்கும் போது அரக்கு குச்சிகளில் வைப்பார்கள். அதன் இடையே உள்ள துவாரங்களில் எனாமல் தூள்களை தூவுவார்கள். பிறகு அதை சூடேற்றுவார்கள். அந்த தூள் உருகி அந்த இடம் முழுதும் நிரப்பும் வரை சூடேற்றுவார்கள். பிறகு வடிவங்களை பொறித்து வெள்ளி அல்லது தங்கத்தால் நகையை செய்து முடிப்பார்கள். மிக அழகாக காட்சி அளிக்கும் இந்த நகையின் கலைநயம் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். பிகானீர்- ராஜஸ்தான், வாரணாசி - உத்திரபிரதேச, ஹைதராபாத் - ஆந்திர பிரதேசம் மற்றும் கொல்கத்தாவில் செய்யப்படும் மீனாகாரி நகை வகைகள் உலகம் முழுதும் பிரபலமானவை. நாத்வராவின் வெள்ளி மீனாகாரி நகைகள் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமானது.
குந்தன்காரி
19 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசவைகளில் உருவானது குந்தன் காரி நகைவகையாகும். இது வைரம், வைடூரியம், மாணிக்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்படுவது. பார்ப்பதற்கு அழகாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும் குந்தன் காரி பிரேஸ்லெட், நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் கொலுசுகள் இன்றைய நவீன நாகரிக காலத்திலும் மணப்பெண்களால் விரும்பப்படுவதாகும். விலையுயர்ந்த கற்களின் வேலைப்பாடு மனம் கவரும் வகையிலும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும். கற்களை நெருக்கமாக பொருத்தி சிறப்பாக செய்யப்பட்டிருக்கும்.
ஜடோ
இது மீனாக்காரி நகையின் அழகையும் குந்தன் காரின் நகையின் ஆடம்பரத்தையும் சிறப்பாக இணைத்து செய்யப்பட்ட நகையாகும். இது முகலாயர் காலத்தில் நமக்கு அறிமுகமான நகை வகையாகும். இந்த நகையில் அண்கட் வைர பொய்க்கிஸ் மற்றும் மாற்று மதிப்புள்ள கற்கள் இவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். பொதுவாக வைரப் பொய்கிகள் தங்கம் அல்லது வெள்ளி இழைகளால் சுற்றப்பட்டு இருக்கும். இதனால் கற்களின் பளபளப்பு தன்மை அதிகரிக்கும். இந்தப் போல்கிகள் அரக்கால் செய்யப்பட்ட வடிவமைப்புக்குள் அழுத்தி வைக்கப்படும். பிறகு தங்கம் கொண்டு இவற்றை செய்து முடிப்பார்கள். பல வண்ணம் கொண்ட மாற்றுக் கற்கள், விலை உயர்ந்த கற்கள் இவற்றால் ஜடோ நகைகள் செய்யப்படும். மணப்பெண்களை அலங்கரிக்கும் இந்த நகை கண் கவரும் வகையில் இருக்கும். அதன் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்ட கற்கள் மிகவும் அழகாக காட்சி அளிக்கும்.
விக்டோரியன்
இவை ஐரோப்பிய நகை வகையை சார்ந்தவை. பிரிட்டிஷ்காரர்களால் கொண்டுவரப்பட்டது. இந்த நகைகள் தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளியால் செய்யப்படுபவை. மேலும் இவை கற்கள் மற்றும் சாதாரணமாக கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படுபவை. இவை ஆங்கிலோ-இந்தியன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றவை. மலிவான விலையில் கிடைப்பதால் இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. பிரேஸ்லெட் மற்றும் தலையில் அணியும் ஆபரணங்கள் இந்திய பெண்களால் இன்றளவும் விரும்பப்படுகிறது. இவை நம் பாரம்பரிய உடைகளான புடவை, சல்வார் கமிஸ், காக்ரா சோலி, தோத்தி குரதாஸ் போன்ற எந்த ஆடைகளுக்கும் பொருந்தி போகக் கூடிய வகையில் உள்ளதால் இந்திய கலாச்சாரத்திற்கு மிகவும் பொருந்துகின்றது. குறைவான விலை மற்றும் கலைநயம் மிகுந்த வடிவமைப்பால் இந்த நகை அனைவராலும் விரும்பப்படுகிறது. நெக்லஸ், வளையல் போன்றவை இன்றளவும் இந்திய பெண்களால் பயன்படுத்தப்படுகின்றது
- தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன.
- தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன.
பெண்கள் மனதை கவரும் வகையில் புதிய புதிய வடிவமைப்புடன் நகைகள் வெளிவரும் போது தான் அதனை வாங்குதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பார்த்தவுடன் இந்த நகை வடிவமைப்பு எவ்வளவு அழகாக உள்ளது, இதனை எப்படி செய்திருப்பார்கள் என்றவாறு பல கேள்விகளை எழுப்புவதில் தான் அதன் மதிப்பே உள்ளது. அந்த வகையில் பெண்கள் அணிகின்ற நகைகளின் ஓர் வடிவமைப்பு உக்தி (அ) உருவாக்கும் முறை தான் பிலிகிரி வேலைப்பாடு.
அதி உன்னதமான மேம்பட்ட கைவினை வேலைப்பாடு என்பதில் தனித்து விளங்குவது பிலிகிரி வேலைப்பாடு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இந்த பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன. பிலிகிரி வேலைப்பாடு மூலம் எந்தவிதமான உருவம், வடிவம், வித்தியாசமான வளைவுகள் போன்றவற்றை உருவாக்க முடியும். ஒரே மாதிரியான தங்க நகைகளை வாங்கி அணிபவர்களுக்கு வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட பிலிகிரி நகைகள் ஆர்வத்தை தூண்டுகின்றன.
பிலிகிரி நகை வடிவமைப்பின் சிறப்பு
பிலிகிரி நகைகள் என்பது தனிப்பட்ட முறையில் வடிவமைப்பது. விலையுயர்ந்த உலோகத்தை மெல்லிய நூல்களாய் உருவாக்கி அதனை கொண்டு கைநேர்த்தியுடன் வடிவமைப்பதே பிலிகிரி நகைகள். அதாவது மெல்லிய பூக்கள், அழகிய சுழல் வேலைப்பாடு, கண்கவர் சிற்ப வடிவம், டெக்கோ ஸ்டைல் போன்றவாறு அற்புதமான பலவித வடிவமைப்பு உத்திகளுடன் நகை வடிவமைப்பு ஒருங்கிணைந்த பணியாக மேற்கொள்ளப்படுகிறது. எந்த வடிவமைப்பும் பிலிகிரி வேலைப்பாட்டில் செய்ய முடியாது என்று கூறமுடியாது.
வரலாற்று சிறப்புமிக்க பிலிகிரி நகைகள்
பிலிகிரி நகைகள் என்பது பழங்கால கலைவடிவம், நகைவடிவமைப்பு உத்தியில் நகைக்கான தனிசிறப்பு, வரலாற்று பின்னணி கொண்டதாகவும் உள்ளது. பிலிகிரி வேலைப்பாடு என்பது விருதுகள், பெரிய சின்னங்கள் மற்றும் ஆடைகளில் பொத்தான்கள் போன்றவாறு அலங்கார அணிவகுப்பிற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தன. பிலிகிரி நகைகள் என்பது 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மெசபடோமியா பகுதிகளிலேயே காணப்பட்டது. அதுமட்டுமின்றி ரோமானிய அரச குடும்பங்களிலும் பிலிகிரி வடிவமைப்பு உத்திகளில் உருவான நகைகள் அதிகளவு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. இதன் பின்னர் வந்த தலைமுறையினர் பழங்கால நகை வடிவமைப்பு ஓவியங்கள் மற்றும் வரையப்பட்ட முறைகளை பயன்படுத்தி புதிய நவீன உத்திகளை பயன்படுத்தி ஏராளமான நகைகளை பிலிகிரி முறையில் உருவாக்கி தந்தனர்.
பிலிகிரி நகை உருவாக்கம்
நகையை உருவாக்கும் முன் தங்கம் மற்றும் வெள்ளி என்பது மெல்லிய கம்பிகளாக உருவாக்கப்பட்டு அதன் மூலம் சிறு வடிவங்கள் உருவங்கள் வளைத்தும், பின்னப்பட்டும் உருவாகின்றன. இந்த சிறு சிறு வடிவங்கள் இணைத்து பெரிய நகைகளாக உருவாகின்றன இந்த கம்பிகளுடன் சிறு மணிகள் இணைப்பு இந்த நகை உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு வடிவமைப்பு சிற்பங்கள் மற்றும் ஓவிய அமைப்புகள் பின்னல் போன்று வளைவுகளாய் செதுக்கப்படுகிறது. கைநேர்த்தியுடன் செதுக்கப்படும் இந்த நகைகள் வடிவம் பெறுவது என்பது அற்புதமான கலை பணியாக உள்ளது. எனவே பிலிகிரி நகைகள் என்பது அதற்கென உள்ள பிரத்யேகமான வடிவமைப்பாளர்கள் மூலமே உருவாக்கம் பெறுகின்றன. நவீன வடிவில் பிலிகிரி நகைகள் கூடுதல் பொலிவுடன் வருகின்றன.
நவீன வடிவமைப்புடன் கூடிய பிலிகிரி நகைகள்
தற்போது பல நகை விற்பனை கூடங்களிலும் தனிப்பட்ட பிலிகிரி நகை பிரிவுகளையே காணலாம். அதில் அதிகபட்ச கலைநயம் மற்றும் ஜொலிக்கும் அமைப்புகள் கொண்டவாறு நகைகள் உருவாகின்றன. பொதுவாக பளிச்சிடும் மஞ்சள் வண்ண தங்க நகைகள் என்பது பிலிகிரி நகைகளாக வெளிவரும் போது மாறுபட்ட மஞ்சள், செம்மை, வெண்மை சாயலுடன் அதிக பளபளப்பு மற்றும் ஜொலிப்புடன் வருகின்றன. சல்லடை போன்ற அமைப்புடன் பெரிய பாந்தமான நகைகள் முதல் சிறிய அளவிலான நகைகளும் உலா வருகின்றன.
பூக்கள் என்பது ஒவ்வொரு இதழ்களாக, அடுக்குகளாக விரிந்தவாறு உள்ள அமைப்புடன் நகைகளால் உருவாக்கப்படுகின்றன. பூக்கள் என்பதால் எடை அதிகரிக்காத வண்ணம் மெல்லிய கம்பிகள் கொண்டு இயந்திரம் மற்றும் கைவினை இணைந்தவாறு இதன் உருவாக்கம் உள்ளது.
வித்தியாசமான கோணம் மற்றும் வளைவுகளுடன் கூடிய பிலிகிரி நெக்லஸ்கள் கழுத்தில் அணியும் போது புதிய ஓவியமாகவும், சிற்பமாகவும் ஜொலிக்கின்றன எனலாம். மற்ற நகைகள் போன்ற அழுத்தமான எம்போஸ் செய்யப்பட்ட வடிவமைப்புகள் காணாது. உயிரோட்டமான வடிவங்கள் கண்ணுக்கு விருந்தாகின்றன. பிலிகிரி நகைகளில் அழகிய பிரேஸ்லெட்கள், காதணிகள், நெக்லஸ்கள், சிறுசிறு மோதிரங்கள் போன்றவை நவீன உத்தியை பயன்படுத்தி மேம்பட்ட அழகுடன் உலா வருகின்றன. பார்த்தவுடன் பரவசமூட்டும் பிலிகிரி நகைகள் அதிக எடையில்லாத மெல்லிய நகைகள் என்பதுடன் பிரமாண்டமான நகை தோற்றத்தை தருவதால் பெண்கள் விரும்ப தொடங்கியுள்ளனர்.
- முகத்தில் எந்த மாசுவும் சேர விடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும்.
- சருமத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கும்.
பெண்களின் சருமத்தை பாலாடையோடு ஒப்பிடுவது வழக்கம். அத்தகைய மென்மையான, பளபளக்கும் சருமத்தை பெற அவ்வப்போது முகத்துக்கு 'பாலாடை மாஸ்க்' உபயோகிக்கலாம். பாலில் இருக்கும் 'லாக்டிக் அமிலம்' சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
அதனால் அந்த இடத்தில் புதிய செல்கள் தோன்றி சருமம் எப்போதும் புதுப்பொலிவுடன் இருக்கும். பாலாடையை சருமத்தில் பூசுவதன் மூலம், திசுக்களில் தேங்கி இருக்கும் முகப்பருவை உருவாக்கும் கிருமிகள் நீங்கும். பாலாடையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவினால் 'பேஷியல்' செய்தது போன்ற பொலிவு கிடைக்கும்.
பாலாடையை முகத்தில் நன்றாகத் தேய்த்து ஸ்கிரப் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் பாலாடையை அவ்வப்போது தடவி வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெய் தன்மைகொண்ட சருமத்தில் பாலாடையுடன் ரோஜா பன்னீர் அல்லது தயிர் கலந்து மாஸ்க் போன்று பயன்படுத்தலாம்.
பாலாடையை அப்படியே உபயோகிக்காமல், சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால், சருமத்தில் பெரிய அளவில் இருக்கும் துவாரங்கள் சிறியதாகும். முகத்தில் எந்த மாசுவும் சேர விடாமல் தடுத்து அழகை அதிகரிக்கும்.
பாலாடை பயன்படுத்தி தயாரிக்கும் பேஸ் மாஸ்க்குகள்:
பாலாடை மற்றும் மஞ்சள்: 1 டீஸ்பூன் பாலாடையுடன், 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகம் முழுவதும் பூசி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.
பாலாடை மற்றும் கற்றாழை ஜெல்: 2 டீஸ்பூன் பாலாடையுடன், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.
பாலாடை மற்றும் தேன்: 1 டீஸ்பூன் பாலாடையுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
- செமி பேம்பு புடவைகள் எடை குறைவாக இருக்கும்.
- ப்யூர் சில்க் புடவைகள் குறைந்த எடை கொண்டது.
ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் புதுவிதமான துணி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதுவும் தீபாவளி சமயம் என்றால் புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். சரி என்னென்ன புடவைகள் வந்திருக்கின்றன. என்னுடன் ஷாப்பிங் வரத் தயாரா?
*சினியா சில்க் புடவைகள் : மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது. உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும்,உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.
இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது.இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.
*செமி பேம்பு புடவைகள் : எடை குறைவாக இருக்கும் இந்தப் புடவைகள் பத்திக் டிசைன்களுடன் எளிமையான கடி சரிகை பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வாங்கக் கூடிய விலையில் வந்திருப்பது வரவேற்கும் விதத்தில் இருக்கின்றது. உடல் பகுதி மற்றும் பல்லு ஒரே வண்ணத்திலும் , உடல் பகுதியும் பல்லுவும் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போன்றும் புடவைகள் வந்துள்ளன.
*செமி ரா சில்க் புடவைகள் : வேறுபட்ட வண்ணங்கள் மற்றும் வித்தியாசமான டிசைன்களில் பார்டர்கள் இல்லாமல் வரும் இந்த செமி ரா சில்க் புடவைகளின் அழகைக் கூற வார்த்தைகளே இல்லை எனலாம்.எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஃபிளோரல் டிசைன்கள் உடல் பகுதியிலும் பல்லுவிலும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு கண்கவர் வண்ணங்களில் வந்திருக்கும் இந்த புடவைகளை உடுத்திப் பார்க்கும் பொழுதுதான் அதனுடைய அழகு முற்றிலுமாகத் தெரியும்.சரிகை மற்றும் நூலினால் நெய்யப்பட்டிருக்கும் டிசைன்கள்,பார்ப்பவர்களை வாங்கத் தூண்டும் வண்ணங்களில் வந்திருக்கும் இந்தப் புடவைகளை மிகவும் அட்டகாசம் என்று சொல்லலாம்.
*பனாரசி ஜார்ஜெட் புடவைகள்: அனைத்து வகையான விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் விதத்தில் ரிச் ஆன்டிக் பார்டர்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அசத்தலாக வந்திருக்கும் இந்தப் புடவைகள் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய புடவைகளில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். ஆரஞ்சு வண்ணத்திற்கு வெளிர் நீலம், க்ரீம் வண்ணத்திற்கு மஜந்தா, மஞ்சள் வண்ணத்திற்கு மஜந்தா,க்ரீம் வண்ணத்திற்கு கருப்பு என ஆன்டிக் பார்டர்களுடன் வரும் இந்தப் புடவைகள் விருந்து உபச்சார நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என அனைத்திற்கும் உடுத்திச்செல்வதற்கு ஏற்றவை.
*செமி லினன் புடவைகள் : மென்மையாகவும், உடுத்துவதற்கு எளிதாகவும், எடை குறைவாகவும், சிறு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாகவும் இருக்கும் இந்த புடவைகளில் பாந்தினி, கலம்காரி மற்றும் அஜ்ராக் என பலவிதமான பிரிண்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன.கடி ஜரி பார்டர்,மதுபானி பிரிண்டட் பார்டர், பைப்பிங் பார்டர் மற்றும் எளிமையான ஜரி பார்டர்கள் என இந்தப் புடவைகளை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இந்தப் புடவைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும்.
*பியூர் ஜூட் சில்க் : ஜரி மற்றும் சில்க் த்ரெட்டில் உடலில் சிறு எம்பிராய்டரியும், பார்டரில் அதைவிட சற்று பெரிய அளவில் எம்பிராய்டரி செய்யப்பட்டு எளிமையான பல்லுவுடன் வந்திருக்கும் இந்த ஜூட் சில்க் புடவைகள் உடுத்துவதற்கு எளிதாகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன.பல்லுவில் டாசில்ஸ் வைத்து வருவது புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. ஜூட் சில்கில் ஜகார்ட் மற்றும் பார்டர்களுடன் வரும் புடவைகள் அருமையாக இருக்கின்றன.
- நம்மை நாமே மெருகேற்றும் கலைக்குதான், ‘செல்ப் குரூமிங்’ என்று பெயர்.
- குடும்ப பெண்கள் மத்தியில் ‘செல்ப் குரூமிங்’ கலாசாரம் அதிகமாக தென்படுகிறது.
'செல்ப் குரூமிங்' என்ற வார்த்தை, சமீப காலமாகவே ரொம்ப டிரெண்டாக பகிரப்படுகிறது. குறிப்பாக, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள், ஐ.டி. மற்றும் அரசு துறையில் பணிபுரியும் குடும்ப பெண்கள் மத்தியிலும், 'செல்ப் குரூமிங்' கலாசாரம் அதிகமாக தென்படுகிறது.
அது என்ன 'செல்ப் குரூமிங்', இதன்மூலம் நம்மை எப்படி மேம்படுத்திக் கொள்ளமுடியும்... என்பது போன்ற கேள்விகளுடன், தேன்மொழியை சந்தித்தோம்.
வேலூரில் வசிக்கும் இவர், எம்.எஸ்சி மென்பொருள் அறிவியல் படித்தவர். 8 ஆண்டுகள் ஐ.டி. துறையில், மென்பொருள் டெவலெப்பராக பணியாற்றி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு, ஐ.டி.வேலைக்கு 'குட்-பை' சொன்னவர், 'செல்ப் குரூமிங்' சம்பந்தமான அழகு கலை பயிற்சிகளை முடித்து, இப்போது 'செல்ப் குரூமிங் எக்ஸ்பெர்ட்' ஆக, நிறைய பெண்களுக்கு வழிகாட்டுகிறார். குறிப்பாக, அழகு கலை சம்பந்தமான பல பயிலரங்கங்களை நடத்துகிறார்.
இவரிடம், 'செல்ப் குரூமிங்' பற்றிய பல சந்தேகங்களுக்கு விடைபெற்றோம். அவை இதோ...
* அது என்ன 'செல்ப் குரூமிங்'?
நம்மை நாமே மெருகேற்றும் கலைக்குதான், 'செல்ப் குரூமிங்' என்று பெயர். உடை அலங்காரம், சிகை அலங்காரம், மேக்கப், நகம் பராமரிப்பு, பல் பராமரிப்பு, உடல் பராமரிப்பு... என நம்மை எல்லா விதங்களிலும், அழகாக்கும் விஷயங்களை கற்றுக்கொண்டு, அதன்மூலம் நம்மை நாமே மேம்படுத்துவதுதான், 'செல்ப் குரூமிங்'.
* 'செல்ப் குரூமிங்' செய்வதன் அவசியம் என்ன?
வழக்கமான கூட்டத்தில் இருந்து, தங்களை தனித்துவமாக வெளிக்காட்டுவதில் எல்லா பெண்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு 'செல்ப் குரூமிங்' வழிகாட்டும். கூடவே, ஆடை-அலங்கார விஷயங்களில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்கையில், அது பணியிடத்தில் கூடுதலான தன்னம்பிக்கையுடன் பணியாற்ற வழிவகுக்கும்.
* ஆடை-அலங்கார விஷயங்களால், தன்னம்பிக்கை அதிகரிக்குமா?
ஆம்! நிச்சயமாக. நாம் அணிந்திருக்கும் ஆடையும், நாம் செய்து கொண்டிருக்கும் 'மேக்கப்' அலங்காரங்களும் நமக்கு நன்றாக பொருந்துகிறது. அது நம்மை தனித்துவமாக, சிறப்பானவர்களாக வெளிக்காட்டுகிறது என்று நம் ஆழ்மனதில் தோன்றும் சிறு நம்பிக்கை, பணியிடத்தில் உற்சாகமாக இயங்கவும், எந்த ஒரு சூழலையும் 'பாசிட்டிவாக' அணுகவும், வழிவகுக்கிறது. மேக்கப் மற்றும் ஆடை அலங்காரங்கள் உண்டாக்கும் 'செல்ப் கான்பிடன்ஸ்' நமக்கு பிரத்யேக 'எனர்ஜியை' உண்டாக்கும். அது நம்மிலும், நம் பணியிலும் வெளிப்படும்போது, எல்லா விஷயங்களிலும் வெற்றியே கிடைக்கும்.
* பணிபுரியும் பெண்களுக்கு, 'செல்ப் குரூமிங்' அவசியமா?
இதற்கான பதில் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்திற்கு ஏற்ப மாறுபடும். பொழுதுபோக்கு, மீடியா, அழகு நிலையங்களில் பணிபுரியும் பெண்களுக்கு நிச்சயம் 'மேக்கப்' அவசியம். மேக்கப் மட்டுமல்ல, 'செல்ப் குரூமிங்' சம்பந்தப்பட்ட, எல்லா அழகு பயிற்சிகளும் அவசியம்.
கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் பெண்களுக்கு, 'மேக்கப்' மட்டுமே தேவைப்படும். ஆனால் சென்னை, பெங்களூரு, மும்பை... போன்ற பெருநகரங்களில் இயங்கும் ஐ.டி. அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, மேக்கப்புடன் சேர்த்து மற்ற அழகு பயிற்சிகளும் அவசியம். ஏனெனில், அங்கு ஏற்கனவே பணியாற்றும் பெண்களுடன், நீங்கள் ஒன்றர கலக்க 'மேக்கப்' நுணுக்கங்களையும், 'பேஷன்' அம்சங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்த கூட்டத்தில் இருந்து நீங்கள் மட்டும் தனியாக தெரிவீர்கள்.
* சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு, புதிதாக பணிக்கு செல்ல இருக்கும் பெண்கள், தங்களை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்?
தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் வளர்ந்த பெண்களும், படித்து முன்னேறி பெருநகரங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அப்படி உங்களுக்கும், பெருநகர ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால், உடை தேர்வு மற்றும் அலங்கார விஷயங்களில் கவனமாக இருங்கள்.
அதுநாள் வரை, மேக்கப் விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு என ஒரு பிரத்யேக 'ஸ்டைல்'-ஐ கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் அது பெருநகர வாழ்க்கைக்கு பொருந்தாது. முடிந்தவரை, நகர சூழலுக்கு ஏற்ப சின்னச்சின்ன மேக்கப் மற்றும் உடை அலங்கார நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். பணிச்சூழல், உடன் பணிபுரிபவர்களை பற்றி அறிந்த பிறகு, அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடிய ஆடை, அலங்கார பொருட்களை வாங்கலாம்.
எல்லோருடைய கவனத்தையும் சட்டென ஈர்க்கும் நிறங்களிலான உடைகளையும், உதட்டு சாயங்களையும், அலங்கார பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான மேக்கப்பை தவிர்த்துவிடுங்கள். அதற்காக மேக்கப் இல்லாமலும், பணிக்கு செல்லாதீர்கள். அதேபோல, அணியும் உடைக்கு ஏற்ற காலணி அல்லது ஷூ தேர்வும் முக்கியம்.
சுடிதார், குர்த்தி, ஜீன்ஸ், லெக்கின்ஸ், பலாசோ, பிளேசர்ஸ்... இவை எல்லாம் ஐ.டி. கலாசாரத்தில் பொதுவானவை. அதனால் இத்தகைய உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தலாம். பணியிடம் பழக்கமானதற்கு பிறகு, உங்களுக்கான 'ஸ்டைலை' மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
* மேக்கப் விரும்பாதவர்கள் என்ன செய்யலாம்?
'செல்ப் குரூமிங்' விஷயத்தில், 'சுத்தம்' (Personal hygiene) மிகமிக அவசியம். உங்களுக்கு மேக்கப் விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் முகப்பொலிவை தக்க வைக்கும் சிறுசிறு விஷயங்களிலாவது ஆர்வம் செலுத்துங்கள். அதாவது, முகத்தை சுத்தமாக பராமரிப்பது; நக பூச்சு பூசவில்லை என்றாலும் நகங்களை சுத்தமாக பராமரிப்பது, முகம் கருக்காமல் இருக்க 'சன்ஸ்கிரீன்' போடுவது, யாரும் குறை சொல்லாதபடி தலை முடிகளை பராமரிப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருங்கள்.
* 'செல்ப் குரூமிங்' திறனை வளர்ப்பது எப்படி?
இன்றைய டீன் ஏஜ் பெண்கள், அழகு கலை சார்பான அறிவை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். மேக்கப் கலையின் அடிப்படையை கற்றுக்கொள்கிறார்கள். சிகை அலங்காரங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். நகம், பாதம் பராமரிப்பு, புடவை அணிவித்தல், உடை நாகரிக அறிவு... இப்படி எல்லாவற்றையும் சிறுசிறு பயிற்சிகளாக கற்றுக்கொண்டு, அதன்மூலம் தங்களை மெருகேற்றிக் கொள்கிறார்கள். ஏனெனில், மேக்கப் பார்லர்களில் அதிக பணம் செலவழிப்பதை விட, அலங்கார அம்சங்களை கற்றுக்கொண்டு தங்களை தாங்களே மெருகேற்றுகிறார்கள்.
* முகப் பொலிவை மேம்படுத்த நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
முகப் பொலிவை மெருகேற்ற நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல குளித்து முடித்தவுடன், உடலில் 'மாய்ஸ்சுரைசர்' கிரீம் பூசுவதை வழக்கமாக்க வேண்டும்.
* புதிதாக மேக்கப் செய்பவர்களுக்கு, உங்களுடைய டிப்ஸ்?
மேக்கப் செய்வதற்கு முன், முகத்தை நன்றாக கழுவவேண்டும். முகத்தில் பரு, சிறுசிறு துளைகள் இருந்தால் அதை 'பிரைமர்' எனப்படும் பூசு பொருள் கொண்டு சரிசெய்த பிறகு, 'பவுண்டேஷன்' பூச வேண்டும். நம்முடைய நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷன்களை தேர்வு செய்வது கடினம் என்றாலும், அதில் அதீத கவனம் செலுத்தினால் மேக்கப் செய்திருப்பதே தெரியாத அளவிற்கு 'நீட்'டாக இருக்கும்.
எண்ணெய் பசை தன்மை கொண்டவர்கள், 'காம்பாக்ட் பவுடர்' பயன்படுத்துவது நல்லது. கண்களுக்கு கீழ் இருக்கும் கருவிழிகளை 'கன்சீலர்' கொண்டு சீராக்கலாம். மேக்கப்பை கூடுதல் பொலிவாக்க, 'பிரான்சர்' கொண்டு ஜொலிக்க வைக்கலாம்.
'கான்டர்' என்பதை பயன்படுத்துவதன் மூலம் குண்டாக தெரியும் முகத்தை கூட, ஒல்லியாக காட்டமுடியும். மேக்கப் விஷயத்தில் கண் மற்றும் புருவம் மிக முக்கியமானது. ஏனெனில் கண் புருவங்கள்தான், முக அழகை நிர்ணயிக்கக்கூடியவை. அதை அழகாக்க 'ஐ புரோ பவுடர்', 'ஐ லைனர்', 'மஸ்காரா' போன்றவை புழக்கத்தில் இருக்கின்றன. இறுதியாக உதடுகளை 'லிப் பாம்', 'லிப் லைனர்', 'லிப்ஸ்டிக்' கொண்டு அழகாக்கலாம்.
* மேக்கப்பை கலைப்பது எப்படி?
மேக்கப்பை கலைப்பதற்கு என பிரத்யேக லோஷன் இருக்கிறது. இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, மேக்கப்பை கலைக்கலாம். இரவு தூங்க செல்லும் முன், கட்டாயமாக மேக்கப்பை கலைக்க வேண்டும்.
ஏனெனில் மேக்கப் கிரீம் பூசுவதால் அடைக்கப்பட்டிருக்கும் சரும துளைகள் அதற்கு பிறகுதான் சுவாசிக்க ஆரம்பிக்கும்.
- பீட்ரூட் உலர்ந்த உதடுகளை பொலிவாக்கக் கூடியது.
- பீட்ரூட் இயற்கையான ‘லிப் பாம்’ ஆகவும் செயல்படக்கூடியது.
உதட்டை அழகுபடுத்துவதற்கு லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்றில்லை. உதட்டின் நிறத்திற்கு ஏற்பவே பளிச் வண்ணத்தில் மிளிரும் பீட்ரூட்டும் சிறந்த உதட்டு அலங்கார பொருள்தான். இது சரும பராமரிப்பிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. உதடுகளை இளஞ்சிவப்பு நிறத்தில் பொலிவு பெற வைப்பதோடு மென்மைத்தன்மையை தக்க வைக்கக்கூடியது.
சரும பராமரிப்பில் கவனம் செலுத்துபவர்கள் முகத்திற்கு விதவிதமான பேஸ் பேக்குகளை பயன்படுத்துவதுண்டு. முகத்திற்கு கொடுக்கும் முக் கியத்துவத்தை உதடுகளுக்கு கொடுக்க தவறிவிடுவார்கள். உதட்டு பராமரிப்புக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்று தெரியாமல் குழம்பவும் செய்வார்கள். அந்த குறையை பீட்ரூட் போக்கிவிடும். உதட்டுக்கு பிரகாசத்தையும், கூடுதல் அழகையும் பெற்று தரும்.
பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உதட்டில் படர்ந்திருக்கும் கருமை நிறத்தை போக்கக்கூடியது. பீட்ரூட் இளம் சிவப்பு நிறத் தினால் ஆனது. அதே நிறத்தை உதடுகளுக்கும் கொடுக்கக்கூடியது. உதட்டுக்கு இயற்கை மாய்ஸ்சுரைசராக செயல்படக்கூடியது. பீட்ரூட் உதட்டுக்கு அழகு சேர்ப்பதோடு, உலர்ந்த உதடுகளை பொலிவாக்கக் கூடியது.
உதட்டு வெடிப்புகளையும் போக்கக்கூடியது. தினமும் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், உதடுகள் மென்மையாக மாறும். மேலும் உதடுகளில் உள்ள வெடிப்புகள், கோடுகளை குறைத்து இளமை பொலிவை தக்க வைக்கும். விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தள்ளிப்போடும்.
பீட்ரூட்டை நன்றாக மசித்து, அதனுடன் சர்க்கரை கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து தினமும் உதட்டில் தடவி வரலாம். அவ்வாறு செய்யும்போது இறந்த செல்கள் அகற்றப்படும். உதடுகள் மென்மையாகவும், பிரகாசமாகவும் மிளிரும்.
பீட்ரூட் இயற்கையான 'லிப் பாம்' ஆகவும் செயல்படக்கூடியது. ஒரு துண்டு பீட்ரூட்டை அரை மணி நேரம் பிரிட்ஜில் குளிர வைத்துவிட்டு, அதனை உதடுகள் மீது தடவினால் போதுமானது. சில நொடிகள் தேய்த்தாலே போதும். உதடுகள் ரோஜா மலர் போல பொலிவுடன் காட்சி அளிக்கும். ஒரு டீஸ்பூன் பீட்ரூட் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து உதடுகள் மீது தேய்த்து வந்தாலும் உதடுகள் பிரகாசமடையும். பீட்ரூட் மற்றும் எலுமிச்சை இரண்டிலும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை உதடுகளை பிரகாசமாக்க உதவுகின்றன.
- பெண்கள் அதிகமாகக் கவலைப்படுவது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நினைத்துதான்.
- முகத்தில் வளரும் முடிகளை நீக்குவதற்கு இயற்கையான வழிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
முகப்பரு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அடுத்து பெண்கள் அதிகமாகக் கவலைப்படுவது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நினைத்துதான். இதற்கான காரணம் மற்றும் முடிகளை நீக்குவதற்கு இயற்கையான வழிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஹார்மோன்கள்: அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும். இதனால் 'ஆன்ட்ரோஜன்' எனும் ஆண்களுக்கான ஹார்மோன் சுரப்பு பெண்கள் உடலில் அதிகரிக்கும். இது முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி, குரல் கரகரப்பாக மாறுதல், எடை அதிகரித்தல், கருப்பை நீர்கட்டிகள், தைராய்டு பாதிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
மரபியல்: ஆரோக்கியமான பெண்களுக்கு முகத்தில் முடிகள் அதிகமாக வளர்வதற்கு மரபு வழியும் காரணமாக இருக்கலாம். பாட்டி, அம்மா அல்லது பரம்பரையில் உள்ள பிற பெண்களுக்கு முகத்தில் முடி அதிகமாக இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உண்டு.
தவிர்க்க வேண்டியவை:
ஷேவிங்: முகத்தில் வளரும் முடிகளை நீக்குவதற்காக பிளக்கிங், வேக்ஸிங், ஷேவிங் போன்ற பல முறைகளை பெண்கள் கையாள்கின்றனர். இவை உடனடி தீர்வாக இருந்தாலும், இவற்றால் சருமம் சேதமடைவது, கடினமாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆகையால் முடிந்தவரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
செயற்கை கிரீம்: முடிகளை நீக்க கடைகளில் கிடைக்கும் செயற்கை கிரீம்களைப் பயன்படுத்துவதால், அதிலுள்ள ரசாயனம் முகத்தில் அரிப்பு, தோல் தடிப்பு, பருக்கள் அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கும்.
மேற்கொள்ளவேண்டிய இயற்கை வழிகள்: சிறிதளவு சர்க்கரையுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தண்ணீர் கலந்து, பசை போல தயாரிக்கவும். இந்தக் கலவையை, முகத்தில் முடி வளர்ச்சி இருக்கும் இடங்களில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால், முகத்தில் வளர்ந்திருக்கும் தேவையற்ற முடிகள் எளிதில் நீங்கும்.
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், சிறிதளவு உப்பு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பால் ஆகியவற்றை நன்றாகக் கலந்து, முகத்தில் தடவ வேண்டும். இதை முடி வளர்ச்சிக்கு எதிர்புறமாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பதுடன், முடிகளும் உதிர்ந்து விடும்.
ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, மஞ்சள்தூள், சிறிதளவு கடுகு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பசை போல தயாரிக்கவும். இதை முகத்தில் முடி வளர்ச்சி உள்ள இடங்களில் தடவி, மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால், முடி உதிர்வதுடன், வளர்ச்சியும் கட்டுக்குள் வரும்.
- மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும்.
- எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.
எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது என்பதுபற்றி இங்கே பார்க்கலாம்.
- திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.
- குங்குமாதி லேபத்தைப் பருக்களின்மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.
- பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.
- 50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாள்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.
- அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும்.
- வெங்காரத்தைப் பொரித்தால் (போரக்ஸ்) அது மாவாகக் கரையும். அதைத் தண்ணீருடன் கலந்து பரு பழுத்திருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.
- வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.
- மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும். வெட்பாலை தைலத்தைப் பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.
- பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும்.
- எலுமிச்சைப்பழச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாள்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.
- வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.
- குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது.
- ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும்.
ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும். தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.
க்ளென்சிங் செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் ஸ்கிரப் செய்யவேண்டும். அதற்கு, பொடித்த சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல ஸ்கிரப் செய்யவும். கவனிக்க... சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து ஸ்கிரப் செய்யலாம். ஸ்கிரப் செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும்.
நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும். தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும். கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும்.
மசாஜ் செய்த பின் முகத்தில் ஊடுருவக்கூடிய காட்டன் துணியான காஸ் (gauze) போடவும். அதன் மேல் பேக் போட வேண்டும். பேக் ரெடி செய்ய, நல்ல பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் தூய்மையான தேன் ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை, முகத்தில் போடப்பட்டிருக்கும் காஸ் மீது அப்ளை செய்து கொள்ளவும். முகம் முழுவதும் அப்ளை செய்த பின் அதன் மீது சில்வர் ஃபாயில் கொண்டு மூடிவிடவும்,
10 நிமிடங்களுக்குப் இந்த இந்த சில்வர் ஃபாயிலை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் காஸ் துணியை நீக்கவும். முகத்தை துடைத்துக் கொள்ளவும். பின் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். முகம் அவ்வளவு மென்மையாக, பளிச்சென்று ஆனதை உணர்வீர்கள்.






