என் மலர்
சமையல்
அட்டகாசமான ஆலப்புழா மீன் குழம்பு! அடிபொலி சுவை!
- ஆலப்புழாவில் கிடைக்கும் மீன் உணவுகளின் சுவை, அங்கிருக்கும் இயற்கையின் அழகை விட ஒரு படி மேலானது!
- புளிக்கு பதில் மாங்காயின் புளிப்புச் சுவை சேர்க்கப்படுவது இதன் தனிச் சிறப்பு.
கேரள மாநிலத்தின் ஆலப்புழா அதாவது அலப்பி நகரம் என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் எழில் கொஞ்சும் படகு வீடுகளும், கால்வாய்களும்தான். ஆனால், அங்கே கிடைக்கும் மீன் உணவுகளின் சுவையோ, அந்த இயற்கையின் அழகை விட ஒரு படி மேலானது. குறிப்பாக, தேங்காய் பாலில் தயாரிக்கப்படும் ஆலப்புழா மீன் குழம்பு அதன் தனித்துவமான சுவைக்காகவே மிகவும் புகழ் பெற்றது. ஆப்பம், சாதம், இடியாப்பம் என எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் தனித்துவமான ருசி கொண்ட இந்த குழம்பு ரெசிபியை செஃப் கதிர்வேல் நமக்காக செய்து காட்டியுள்ளார். அந்த வகையில் இந்த தொகுப்பில் 'ஆலப்புழா மீன் குழம்பு' ரெசிபியை எப்படி செய்வது என விரிவாக காணலாம்.
ஆலப்புழா மீன் குழம்பு செய்முறை
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
* எண்ணெய் சூடானதும், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுப்பை சிம்மில் வைத்து, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். (மிளகாய் தூள் கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.)
* பிறகு நறுக்கிய மாங்காய் துண்டுகள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து, சிறிது வதக்கிய பின், சுத்தம் செய்த மீன் துண்டுகளை மெதுவாகச் சேர்க்கவும்.(எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து சுத்தம் செய்த மீன்).
* மீன் மற்றும் மாங்காயை வேகவைக்க தேவையான தண்ணீரை ஊற்றி, குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மீன் 10 நிமிடங்கள் வேகும்வரை மூடி வைக்கவும்.
* மீன் வெந்த பிறகு, அடுப்பை முற்றிலுமாக அணைத்துவிடமால் மிக மிகக் குறைந்த தீயில் வைத்து, திக்கான தேங்காய் பாலை சேர்க்கவும்.
* தேங்காய் பால் சேர்த்த பின் அதிகம் கொதிக்க விடக்கூடாது (அதிக நேரம் கொதித்தால் குழம்பு திரிந்து போக வாய்ப்புள்ளது). சுவையை சரி பார்த்து, உடனடியாக மூடி வைக்கவும்.
* இப்போது அட்டகாசமான ஆலப்புழா மீன் குழம்பு தயார்!
சுவையான, சத்து நிறைந்த ஆலப்புழா மீன்குழம்பு
ஆலப்புழாவின் உணவுச் சிறப்பு
* கேரளாவின் பல மீன் குழம்புகளில் கொடம் புளி எனப்படும் கருப்பு புளி பயன்படுத்தப்படும். ஆனால், இந்த ஆலப்புழா ஸ்டைலில், மாங்காயின் புளிப்புச் சுவை சேர்க்கப்படுவது இதன் தனிச் சிறப்பாகும்.
* இந்த குழம்புக்கு வஞ்சரம் அல்லது வவ்வால் மீன் பயன்படுத்துவது வழக்கம். இந்த மீனின் உறுதியான சதை, குழம்பில் உடையாமல், குழம்பின் சுவையை உள்வாங்கி சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
* இந்தக் குழம்பின் தனி சிறப்பே, தேங்காய் எண்ணெயின் நறுமணமும், தேங்காய் பாலின் தனித்துவமான சுவையும்தான். இது குழம்பிற்கு ஒரு அசல் கேரளச் சுவையை வழங்குகிறது.
உணவில் உள்ள நன்மைகள்
* மீன் ஒரு முழுமையான புரத மூலமாகும். இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, அழற்சியை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
* மஞ்சள் தூள் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
* தேங்காய் பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது உடலுக்கு ஆற்றலை வழங்கவும், சில வைட்டமின்களை (A, D, E, K) உறிஞ்சவும் உதவுகிறது.
* இதில் பயன்படுத்தப்படும் வெங்காயம் மற்றும் இஞ்சி செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உணவிற்கும் தனித்துவமான சுவையை கொடுக்கிறது.
இப்படி மீன், மாங்காய் மற்றும் தேங்காய் பாலின் ஆரோக்கியமான கலவையுடன் விரைவாகச் சமைக்கக்கூடிய இந்த அற்புதமான கேரள உணவை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்






