என் மலர்tooltip icon

    சமையல்

    • இட்லி, தோசை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு.
    • சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும்.

    இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க. அட ஆமாங்க இட்லி தோசைக்கு ஏற்ற பச்சைமிளகாய் சட்னி எப்படி தயார் செய்யலாம் வாங்க பார்க்கலாம்

    தேவையான பொருட்கள்

    கடுகு- தாளிக்க

    வெந்தயம்- தாளிக்க

    பூண்டு- 10

    புளி- ஒரு எலுமிச்சை அளவு

    பச்சைமிளகாய்- 25 (விதை நீக்கியது)

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    சாம்பார் வெங்காயம்- 20

    பெருங்காயம்- ஒரு சிட்டிகை

    வெல்லம்- ஒரு ஸ்பூன்

    கறிவேப்பிலை- ஒரு கொத்து

    செய்முறை

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் புளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சூடு தணிந்த பிறகு இதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டி தேவையான அளவு உப்பு, வெல்லம் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.

    பின்னர் மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது, அதில் கடுகு கறிவேப்பிலை பூண்டு பற்கள் போட்டு தாளித்து இறக்கினால் சுவையான பச்சைமிளகாய் சட்னி தயார். இது ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும்.


    • ஒரே சமையலை செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு சலித்துவிடும்.
    • புதிய விஷயங்களை சமையலில் முயற்சிப்போம்.

    இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை ஒன்றுதான். நாளைக்கு என்ன சமைக்கலாம்… குழம்பு என்ன வைக்கலாம் என்பது தான். ஏனென்றால், தினமும் ஒரே சமையலை செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு சலித்துவிடும். எனவே, நம்மில் பலர் புதிய புதிய விஷயங்களை சமையலில் முயற்சிப்போம்.

    இட்லி, தோசை என்றாலே நமது நினைவுக்கு வருவது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, சாம்பார் தான் வரும். எப்போதாவது இட்லி, தோசைக்கு ஏற்ற வகையில் கொய்யா காய் வைத்து ஒரு சட்னி வைத்தால் எப்படி இருக்கும் என நினைத்தது உண்டா? கொய்யா பயன்படுத்தி சுவையான சட்னி ஒன்றை எப்படி தயார் செய்யலாம் என பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கொய்யா - 3.

    கொத்தமல்லி - ஒரு கொத்து.

    இஞ்சி - 2 இன்ச் அளவு.

    பச்சை மிளகாய் - 2.

    சீரகம் - 1/2 ஸ்பூன்.

    எலுமிச்சை பழம் - 1.

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    முதலில் சட்னி செய்ய எடுத்துக்கொண்ட கொய்யா காயினை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும். இதை தொடர்ந்து எடுத்து வைத்துள்ள, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயினை சுத்தம் செய்து, ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்னர் அதே மிக்சி ஜாரில் நறுக்கிய கொய்யா காய், கொத்தமல்லி இலைகள், சீரக விதைகள், உப்பு சேர்த்து நன்கு ஒரு முறை அரைக்கவும். பதமாக அரைத்த இந்த சட்னியில் தற்போது போதுமான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள சுவையான கொய்யா சட்னி தயார்.

    தேவைப்பட்டால், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்துக்கொள்ளலாம். இந்த சுவையான கொய்யா சட்னியை இட்லி, தோசை என உங்களுக்கு பிடித்தமான உணவு வகையுடன் சேர்த்து சுவையாக பரிமாறலாம்.

    • உடல் வெப்பத்தை குறைக்க பயன்படுகிறது.
    • அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

    பாதாம் பிசின் ஒரு இயற்கையான குளுரூட்டியாக செயல்படுகிறது. இது உடல் வெப்பத்தை குறைக்க பயன்படுகிறது. சிலருக்கு எல்லாக் காலங்களிலும் உடம்பானது சூடாக இருக்கும். உடம்பு சூட்டின் காரணமாக அவர்கள் வயிற்று வலி, நீர் கடுப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். எனவே அதிகப்படியான உடம்பு சூட்டை தணித்து குளிர்ச்சியை கொடுக்க பாதாம் பிசின் உதவுகிறது.

    வயிற்றில் ஏற்படும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் ஒரு இனிப்பு ரெசிபி வாங்க எப்படி செய்யலாம் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- ஒரு லிட்டர்

    ஜவ்வரிசி- கால் கப்

    சேமியா- கால் கப்

    நாட்டு சர்க்கரை- ஒரு கப்

    பாதாம் பிசின்- ஒரு ஸ்பூன்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    பாதாம்- 10

    நெய்- தேவையான அளவு

    முந்திரி- 10

    செய்முறை:

    பாதாம் பிசினை முன்தினம் இரவே தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் பாதாமையும் இரவே தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். இப்போது ஊறவைத்த பாதாமை தோலினை நீக்கிவிட்டு அதனை சிறிதளவு பால் ஊற்றி பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரையை போட்டு அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கரைந்ததும் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி ஜவ்வரிசி மற்றும் சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்புறகு வாணலியில் பாலை ஊற்றி காய்ந்ததும் அதில் ஜவ்வரிசி, சேமியாவை வேகவைக்க வேண்டும். இப்போது நாட்டுசர்க்கரையை வடிகட்டி சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு அதனுடன் ஊறவைத்த பாதாம் பிசின், ஊறவைத்து அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட், ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் பாதாம் பிசின் பாயாசம் தயார்.

    • உங்கள் செல்லக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • நாக்கில் உச் கொட்டி சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

    பரோட்டா என்றாலே உங்கள் செல்லக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும், பன்னீர் மசாலா சேர்ந்த காம்பினேஷன் என்றால் குழந்தைகளுக்கு சொல்லத் தேவையில்லை. நாக்கில் உச் கொட்டி சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    பனீர்- 450 கிராம் (துருவியது)

    கோதுமை மாவு- ஒரு கப்

    வெங்காயம் - 1 (நறுக்கியது)

    பச்சை மிளகாய்- 1 (நறுக்கியது)

    தனியா - ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி

    சீரகத்தூள்- ஒரு ஸ்பூன்

    மிளகாய் தூள்- கால் டீஸ்பூன்

    கரம் மசாலாதூள்- கால் டீஸ்பூன்

    சாட் மசாலாதூள்- கால் டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் கோதுமை மாவினை எடுத்து அதில் உப்பு, எண்ணெய் அல்லது நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ள வேண்டும். இந்த மாவு கொஞ்சம் தளர்வாக இருக்குமாறு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு துணி கொண்டு அரைமணிநேரத்திற்கு மூடி வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஒரு பவுலில் துருவிய பனீர், வெங்காயம், பச்சை மிளகாய், சீரகத்தூள், மிளகாய் தூள், சாட் மசாலாதூள், தனியா விதை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து பிசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது சப்பாத்திமாவினை உருட்டி எடுத்து தேய்த்துக்கொள்ள வேண்டும். அதன் நடுவே நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பனீர் கலவையை எடுத்து அதன் நடுவே வைத்து அதனை மறுமபடியும் மூடி உருட்டிக்கொள்ள வேண்டும். மீண்டும் அதனை மாவில் தோய்த்து சப்பாத்திகளாக தேய்த்து எடுக்க வேண்டும். இப்போது சப்பாத்திகள் தயார்.

    இதனை ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் நெய் அல்லது வெண்ணெய் தடவி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை முன்னும் பின்னுமாக புட்ரட்டிப்போட்டு எடுத்தால் சுவையான னீர் ஸ்டஃப்டு பராத்தா தயார். இதனை தயிர் அல்லது குருமா வைத்து சாப்பிட இன்னும் அருமையாக இருக்கும்.

    • கிராமத்து சமையல் என்றாலே தனி ருசிதான்.
    • கொள்ளு - கருப்பு உளுந்து வடை ருசியோ ருசிதான்.

    கிராமத்து சமையல் என்றாலே தனி ருசிதான். அதிலும் கொள்ளு - கருப்பு உளுந்து வடை ருசியோ ருசிதான். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

    தேவையானபொருட்கள்:

    முளை விட்ட கொள்ளு - 200 கிராம்,

    கறுப்பு உளுந்து - 50 கிராம் (ஊறவைக்கவும்),

    பச்சரிசி - ஒரு டீஸ்பூன் (ஊறவைக்கவும்),

    நறுக்கிய புதினா கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு,

    பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப),

    நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்,

    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    உப்பு- தேவைக்கேற்ப

    சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு,

    எண்ணெய் - கால் கிலோ.

    செய்முறை:

    கறுப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்க வேண்டும். முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கறுப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைக்க வேண்டும். கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி -பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித் தெடுக்கவும்.

    • வித்தியாசமான ஒரு பாயாசம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும்.

    பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். மிகவும் சுவையான வித்தியாசமான ஒரு பாயாசம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பனங்கிழங்கு - 4

    தேங்காய்ப்பால் - ஒரு கப்

    பனை வெல்லக் கரைசல் - அரை கப்

    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

    நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன்

    நெய் - ஒரு டீஸ்பூன்

    செய்முறை:

    பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும், உள்ளே உள்ள குருத்து பகுதியை நீக்க வேண்டும். இதனை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடி பிடிக்காமல் 2, 3 நிமிடம் வதக்க வேண்டும், அதன்பிறகு பனை வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்கும் போது இறக்கவும். சற்றே சூடு தணிந்த பின் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும். சுவையான பனங்கிழங்கு பாயசம் தயார்.

    • பொடி மேல் நெய் விட்டு சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.
    • எளிதாக செய்யலாம் ஆந்திரா ஸ்பெஷல் சிட்லம் பொடி.

    என்னதான் நம்முடைய வீட்டில் பருப்பு பொடி அரைத்தாலும் அந்த ஆந்திர ஹோட்டலில் சாப்பிட்ட பருப்பு பொடியின் சுவை நிச்சயம் வராது. அப்படி அந்த பருப்பு பொடியில் என்னதான் சேர்த்து அரைக்கிறார்கள். ஆந்திராவுக்கு போனாலே சுடச்சுட சாதத்தில் அந்த பருப்பு பொடி மேல் நெய் விட்டு சாப்பிட அவ்வளவு பிடிக்கிறது. இந்த ரெசிபி தெரிந்தால் நம்முடைய வீட்டிலும் அரைத்து வைத்துக்கொள்ளலாம் என்று யோசிப்பவர்கள் இந்த ரெசிபியை படிங்க.

    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - கப்

    உளுந்தம்பருப்பு- கப்

    துவரம்பருப்பு - கப்

    காய்ந்த மிளகாய் 15

    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகம்-1 டேபிள் ஸ்பூன்

    புளி - நெல்லிக்காய் அளவு

    பெருங்காயம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    அடிகனமான வாணலியில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை மிதமான தீயில் தனித்தனியாக வறுத்து ஆற வைக்க வேண்டும். பின்னர் அதே வாணலியில் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் ஆகியவற்றையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் புளியைப்போட்டு அதில் உள்ள ஈரப்பதம் முழுவதுமாக நீங்கும் வரை வறுக்க வேண்டும்.

    மிக்சி ஜாரீல் முதலில் காய்ந்த மிளகாய், உப்பு, புளி போட்டு பொடித்துக்கொள்ளவும். அதன்பிறகு மிளகு, சீரகம், பருப்பு ஆகியவற்றை போட்டு பொடியாக அரைக்கவும். கடைசியாக இந்த பொடியுடன் பெருங்காயத்தூள் கலந்து ஆற வைக்க வேண்டும். பின்னர் அதை உலர்ந்த சுத்தமான பாட்டிலில் நிரப்பி வைக்கலாம். இப்போது ருசியான சிட்லம் பொடி தயார். அதிககாரம் தேவைப்பட்டால். அதற்கு ஏற்றவாறு காய்ந்த மிளகாயின் அளவை அதிகரித்தும் தயாரிக்கலாம்.

    • முட்டை சுக்கா எல்லா சாதத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும்.
    • சுவையான முட்டை சுக்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

    பொதுவாக முட்டையில் ஆம்லெட், பொரியல், குழம்பு, வறுவல் இது மாதிரி செய்தா எல்லாருமே அதிகமாக சாப்பிடுவாங்க. அதுலயும் இந்த மாதிரி சுக்கா எல்லாம் செய்து இந்த போது ரொம்பவே பிடிக்கும். இந்த முட்டை சுக்கா எல்லா சாதத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும் சேர்த்து வைத்து சாப்பிடுவதற்கு. இந்த மாதிரி மட்டன் சுக்கா ஸ்டைல நீங்களும் முட்டை சுக்கா டிரை பண்ணி வீட்ல எல்லாரும் கொடுத்து பாருங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த சுவையான முட்டை சுக்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    முட்டை- 5

    சோம்பு- 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் தூள்

    துருவிய தேங்காய்- 2 ஸ்பூன்

    சின்ன வெங்காயம்- 6

    தக்காளி- 1

    கிராம்பு- 2

    பட்டை - 1 துண்டு

    தனியா விதைகள்- 1 ஸ்பூன்

    மிளகு- 3 ஸ்பூன்

    கறிவேப்பிலை- 1 கொத்து

    கொத்தமல்லி- சிறிதளவு

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை

    முட்டையை வேக வைத்து ஓட்டை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மஞ்சள் கருவை உடையாமல் முட்டையை வெள்ளை கருவை தனியாக எடுத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    அதன்பிறகு ஒருமிக்சி ஜாரில் பட்டை, சோம்பு, தனியா விதைகள், மிளகுகு சேர்த்து அரைக்க வேண்டும். அதில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் வாணலியில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர்  மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும். மசாலா நன்றாக சுண்டி வந்த பிறகு அதில் நறுக்கிய முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    இறுதியாக எடுத்து வைத்த மஞ்சள் கருவை சேர்த்து உடைக்காமல் மசாலாவில் கலந்து விட்டு கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் ருசியான சேலம் சுக்கா வறுவல் தயார்.

    • மோர் குழம்பு என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • சேப்பங்கிழங்கு சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவை அருமையாக இருக்கும்.

    அனைவருக்கும் மோர் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். மோர் குழம்பு வைத்து அதனுடன் உருளைக்கிழங்கு மசாலா அல்லது ஊறுகாய் வைத்து சாப்பிட பலருக்கும் மிகவும் பிடிக்கும். மோர் குழம்பில் நாம் பலவிதமான காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டு இருப்போம். உதாரணமாக வெண்டைக்காய் பூசணிக்காய் வெள்ளரிக்காய் சௌசௌ காய் என பல காய்கறிகளை வைத்து மோர் குழம்பு செய்து சாப்பிட்டு இருப்போம்.

    ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சேப்பங்கிழங்கு சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவை அருமையாக இருக்கும். மோர் குழம்பு சேப்பக்கிழங்கா என்று யோசிக்க வேண்டாம். ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மோர் குழம்பு மிகவும் பிடித்தமானதாக அமையும். இப்பொழுது வாங்க இந்த சேப்பக்கிழங்கு மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேப்பங்கிழங்கு - 300 கிராம்

    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 5

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    சேப்பங்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து குழைய வேகவைக்கவும். அது ஆறிய பிறகு தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய்களை பொடிதாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

    பின்னர் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு அதில் சேப்பங்கிழங்கை போட்டுக் கிளறி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இந்த கலவை கொதித்து தண்ணீர் சற்று சுண்டி வரும் நேரத்தில், ஒன்றிரண்டு சேப்பங்கிழங்கை கரண்டியால் நன்றாக நசுக்கிவிடவும். சிறிது நேரத்தில் குழம்பு கெட்டியாகும்.

    அப்போது அதில் தயிரை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். பின்னர் அடுப்பில் மற்றொரு சிறிய வாணலியை வைத்து, அதில் மீதம் இருக்கும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் கறிவேப்பிலையை போட்டு வதக்கவும். இந்த தாளிப்பை தயாரித்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றி கிளறவும். இந்த குழம்பை இட்லி, தோசை மட்டுமில்லாமல் சூடான சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்.

    • உலகின் சிறந்த உணவு நகரங்கள்' பட்டியல்.
    • பலவிதமான சாட் வகை உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

    வெளி இடங்களுக்கு செல்பவர்கள் சாலையோர உணவகங்கள் முதல் பிரபலமான ஓட்டல்கள் வரை அங்கு பரிமாறப்படும் சுவையான உணவு வகைகளை ருசி பார்ப்பதற்கு விரும்புவார்கள். உணவு பிரியர்களின் நாவிற்கு தீனி போடும் வகையில் `உலகின் சிறந்த உணவு நகரங்கள்' பட்டியலை பயண வழிகாட்டி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ ஆகிய 5 இந்திய நகரங்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. அவற்றுள் மும்பை (35-வது இடம்), ஐதராபாத் (39-வது இடம்) ஆகிய நகரங்கள் முதல் 50 இடங்களுக்குள் நுழைந்திருக்கின்றன. அடுத்ததாக டெல்லி 56-வது இடத்தையும், சென்னை 65-வது இடத்தையும், லக்னோ 92-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    இந்த பட்டியலில் இத்தாலி நாடு முதலிடம் வகிக்கிறது. அங்குள்ள ரோம், போலோக்னா மற்றும் நேபிள்ஸ் ஆகியவை நகரங்களின் பட்டியலிலும் முதல் மூன்று இடத்தை பிடித்திருக்கின்றன. இந்த 3 இத்தாலிய நகரங்களும் பாஸ்தா, பீட்சா மற்றும் சீஸ் சார்ந்த உணவுகளுக்கு புகழ் பெற்றவை.

    `டாப் 10' பட்டியலில் இடம் பிடித்த மற்ற நகரங்கள்:

    வியன்னா (ஆஸ்திரியா), டோக்கியோ (ஜப்பான்), ஒசாகா (ஜப்பான்), ஹாங்காங் (சீனா), டுரின் (இத்தாலி), காசியான்டெப் (துருக்கி) மற்றும் பாண்டுங் (இந்தோனேசியா).

    நாடுகளின் பட்டியலில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஜப்பான், கிரீஸ், போர்ச்சுக் கல், சீனா, இந்தோனேசியா, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெரு ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் அங்கம் வகிக்கின்றன.

    இந்தியா 11-வது இடத்தை பிடித்திருக்கிறது. பாவ் பாஜி, தோசை, வடை பாவ், சோலே பட்டூரே, கபாப், நிஹாரி, பானி பூரி, சோலே குல்சே, பிரியாணி மற்றும் பலவிதமான சாட் வகை உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

     கடைசி 10 இடங்களை பிடித்திருக்கும் நாடுகள்:

    கஜகஸ்தான், அல்பேனியா, கிர்கிஸ்தான், மியான்மர், நியூசிலாந்து, சவுதி அரேபியா, வடக்கு அயர்லாந்து, பஹாமாஸ், டொமினிகன் குடியரசு, வேல்ஸ் மற்றும் கானா.

    • சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் பிரை.
    • ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிட்டதா?

    காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 20 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் ஃப்ரை செய்யுங்கள். இது சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    மிளகு – ஒன்றரை ஸ்பூன்

    சீரகம் – 1 ஸ்பூன்

    சோம்பு – 1 ஸ்பூன்

    மல்லித் தூள் – அரை ஸ்பூன்

    தாளிக்க தேவையான பொருட்கள்

    நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

    கடுகு – அரை ஸ்பூன்

    உளுந்து – அரை ஸ்பூன்

    பூண்டு – 10 பல்

    பச்சை மிளகாய் – 1

    கறிவேப்பிலை – சிறிதளவு

    பெரிய வெங்காயம் – 2

    இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

    காளான் – 200 கிராம்

    உப்பு – தேவையான அளவு

    மல்லித் தழை – சிறிதளவு

    செய்முறை

    மிளகு, சீரகம், சோம்பு மசாலா பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் கடுகு, உளுந்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போனவுடன், மஞ்சள் தூள், காளான், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக தயார் செய்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மூடிவைத்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்க வேண்டும். தேவைப்பட்டால் வறுத்த முந்திரிகளை கூட சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான காளான் பெப்பர் ஃப்ரை ரெசிபி ரெடி.

    • அவலை அரைத்துக் கலந்தால் கூழ் பதமாகி விடும்.
    • வடகம் கூழில் இஞ்சியை சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும்.

    * வடகம் செய்பவர்கள் ஐந்து பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு ஜவ்வரிசி சேர்த்து மாவு அரைத்து வடகம் பிழிந்தால் வடகம் நல்ல மொறுமொறுப்பாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.

    * வடகம் கூழ் நீர்த்து விட்டால் ஊற வைத்த அவலை அரைத்துக் கலந்தால் கூழ் பதமாகி விடும்.

    * வடகம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டுப் பார்த்தால் உப்பு குறைவாகவே இருக்க வேண்டும். அப்போது தான் காய்ந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.

    * சாதம் மிகுந்து விட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடகம் போல பிழிந்து காய வைக்கவும். இதை எண்ணெய்யில் பொரித்து சாப்பிட்டால் மொறுமொறுவென்று இருப்பதுடன் சுவையும் அசத்தும்.

    * ஜவ்வரிசி வடகம் உடைந்து தூளாகி இருந்தால் அவற்றை பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப்போட்டு பிறகு பஜ்ஜி சுட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.

    * வடகக்கூழில் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்து இஞ்சியை அரைத்துச் சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும், உடம்புக்கும் நல்லது.

    * வடகம் மாவில் எலுமிச்சைச்சாறு அதிகமாக விடக்கூடாது. வடகம் பொரித்து எடுக்கும் போது சிவந்து விடும். அதுபோல் வடகம் மாவு கிளறும்போது சிறிது பாலை விட்டுக்கிளறினால் வடகம் வெண்மையாக இருக்கும்.

    * எந்தவித வடகக் கூழானாலும் அதில் சிறிது நெய் கலந்து விட்டால் பொரிக்கும்போது மணமாக இருக்கும்.

    * வடகம், வற்றல் வைக்கும் டப்பாக்களில் வெந்தயம் சிறிது போட்டு வைத்தால் அவை சீக்கிரமாக நமத்துப் போகாது.

    * வடகத்தில் பூச்சி வராமல் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க அதனுடன் மிளகாய் வற்றலையும் கொஞ்சம் போட்டு வைத்தால் போதும். மிளகாயின் காரத்தினால் பூச்சிகள் அண்டாது.

    * வடகம் பிழியும் அச்சின் உட்புறம் கொஞ்சம் எண்ணெய்யைத் தடவி வைத்தால், சிரமப்படாமல் வடகம் பிழியலாம்.

    * கொத்தமல்லி அதிகமாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும் நாட்களில் அதனுடன் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து வடகமாகத்தட்டி வெயிலில் காயவைத்து குழம்பு, ரசத்துடன் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

    * குழம்பு வடகம் உருட்டி வைக்கும்போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து உருட்டி வைத்தால் ஒரு வருடத்துக்கு கெட்டுப்போகாது.

    * ஜவ்வரிசி வடகம் முத்து முத்தாக இருக்க வேண்டுமென்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

    ×